Monday 8 September 2008

பரிசு

இன்று உன் பிறந்த தினம்..
இன் தமிழ் வார்த்தை தேடி
உன்னை நான் வாழ்த்தவென
உள்ளத்தில் ஆசை கோடி

ஆனாலும் நெஞ்சில் ஏனோ
ஆழமாய் சோக கீதம்
நித்தமும் மகிழ்வாய் வாழும்
நிரந்தரம் இல்லை இங்கு

யுத்தமும் போர்க்களமும்
ரத்தமும் சதையுமென்று
நித்திரை தானுமின்றி
நித்தமும் வேகுகின்றோம்

யாழ் குடா நாடு தன்னில்
பாழ் பட்ட ஊரடங்கு
காழ்ப்புடை போர்ப்படைகள்
காட்டிடும் காடைத்தனம்

பிஞ்சுடல்கள் பிளக்கின்ற
பெரும் குண்டின் ஓசைகளும்
பெற்றவர் அருகிருந்து
புலம்பிடும் காட்சிகளும்

தொலைவினில் வெடியோசை
தொலைந்தது நிம்மதியும்
தலைவிதியை நொந்து தினம்
தலைமோதி அழுகின்றார்

இத்தனைக்கும் மத்தியிலும்
எப்படி நான் உனை வாழ்த்த
என் அன்பு சகோதரனே
என் உணர்வு புரிகிறதா

இனம் மதம் யாவும் தாண்டி
இன்னுயிர் எண்ணிப்பார்
இளைய நம் தலைமுறையின்
இன்னல்கள் எண்ணிப்பார்

வன்முறை வாழ்வு தன்னில்
வதங்கிடும் குருத்துக்களின்
வருங்காலம் எண்ணுகையில்
வருத்தமே தோன்றுதடா

சிந்தை நான் கலங்கியதால்
சிந்திடும் விழி நீர்கள்
தந்தேன் பரிசாக -உன்
சிந்தனைக்கு ஏற்றுக் கொள்




நீ வருவாய்

சென்று வருகிறேனென்று
குறிப்பெழுதிச் சென்றவனே
வந்த தடம் அறியாது - நீ
சென்ற இடம் தெரியாது
என்று இனி மீண்டும் வருவாய்
என்றும் புரியாது..


ஏனிப்படி செய்தாய்?..
ஏதுமறியாது இருந்திருப்போமே
எங்கேயோ எப்படியோ என நீ
இங்கு வரும்வரை நினைத்திருப்போம்
வெடியோசை வானெழும்போதெலாம்
இடிபோன்று உன் நினைவு - உன்
மென்நகையும் மெதுநடையும்
இன்முகமும் முன்தோன்ற
என்னவானாயோ என நெஞ்சு
எண்ணி வெதும்புதடா..
ஏனிப்படி செய்தாய்?..
முடிந்தால் மறுபடியும் சந்திப்போம் என்று
முடிவில் கிறுக்கி எழுதியிருந்தாயே
உறவுகளை இழந்து இழந்து
உணர்வுகள் மரத்துப்போக
இனியும் வேண்டாம் என்று
இதயம் துடிக்குதடா
இல்லை...இல்லை..
நாம் மறுபடியும் சந்திப்போம்
நீ வருவாய்..
மறவனாய் போர்க் களத்திடையோர்
புறம்பாடி நீ வருவாய்..
குறுகுறுக்கும் சிறு மீசையினடியில்
குறுநகை நெளிய நீ வருவாய்..
வெறுங்கையோடன்றி வீறுநடைபோட்டு
வெற்றிச் சேதியோடு நீ வருவாய்..
அறம் வெல்லும் என்று நான்
அமைதியாய் காத்திருப்பேன்
ஆனால்.....
உறவிழந்தோம் என்ற சேதி மட்டும்
இனியெமக்கு வேண்டாம்
நீ வருவாய்....
என் வீட்டு முற்றத்தில்
நாற்காலி போட்டமர நீ வருவாய்..
என் குழந்தைகள் உன் கழுத்தை
எட்டி வளைத்து சித்தப்பாவென
தொங்கி விளையாட
நீ வருவாய்......




நல்ல நாள்

நல்ல நாள் பார்த்து
 
நல்லவை தொடங்கென்றார்கள்

 
நலன் விரும்பும் நண்பர்கள்

 
நல்ல நான் ஏதெமக்கு

 
நாள் தோறும் அச்சத்துடன்

 
நாளங்கள் தெறிக்க

 
நாங்கள் பதுங்கு குழிகளில்......


Sunday 31 August 2008

இலக்கியம் பேசலாம் ...ஆனால்

அன்னிய நாட்டிலிருக்கும் 
என் உளமறியா உறவுக்கு..
அன்பான வணக்கங்கள்,
இந்த உறவு ஒரு எழுத்துலகின் உறவு
இதற்கு மேல் எதுவும் அல்ல...
நல்ல உறவுகள் நட்புக்கள் யாவும்
நயவஞ்சகத்தின் இன்னொரு முகங்கள்
நம்பி நின்றவர் அடிவாரும் அழுக்கு முகங்கள்
தேவை வந்திடத் தேடி வருவதும்
தீர்ந்ததும் திரும்பிப் பார்க்க மறப்பதும்
தாகம் என்றழத் தவிக்க விடுகின்ற
தயவற்ற உலகம்...
இவை வேண்டாம்... இனியும் உறவினை தேடுகின்ற
இம்சை எதுவும் வேண்டாம்
இலக்கியம் பேசலாம் இதயங்களை மூடிக்கொண்டு...
நன்றி

Thursday 28 August 2008

வரவேற்பீரா ???


வடித்த கவி மலர்கள்
வாடிப் போன பின்னர்
வழியிது கண்டேன்
வரையும் என் கவிவரிகள்
உரைக்கும் சேதியினை
உலகம் அறிவதற்காய்
வலைப் பின்னலூடாக
வந்தேன் உம் வையம் நாடி
வண்ணத் தமிழ் ஆர்வலரே
வரவேற்பீரா???