Wednesday 25 November 2009

பணம்

பாதாளம் மட்டுமென்ன
பரலோகமும் பாயும்
பிணங்கள் மட்டுமல்ல
கருங்கல்லும் வாய் பிளக்கும்
"ஐந்து காசு" கவிஞன்
அழகாகச் சொன்னது போல்
புட்டு விற்கும் ஆச்சி கூட
பசியோடிருக்கிறாள்.. பணம்...
பட்ட கடன் பெற்ற கடன்
தொட்ட கடன் எல்லாமே...
பணம் வேண்டும் ஈடு செய்ய- அன்றேல்
வசவுகள் வட்டியாகி.. குட்டி போட்டு...
வாழ்க்கை நரகமாகும்

Thursday 19 November 2009

சாக்கடை



சாக்கடைச் சமூகமே என்னைச்
சீர்தூக்க நீ யார்?
சாதனைகள் செய்த போது
சத்தமின்றி இருந்தாயே
வேதனை மட்டுமென்ன நீ தரும்
வேதனமா தலையாட்டி நான் வாங்க??
எனக்குத் தெரியும்- நான்
காட்டிய அமைதி உனக்குள்
காட்டுத்தீயாய் எரிந்திருக்கும்
என் சிரிப்பு உன் நெஞ்சில்
பொறாமைத் தீயாய் பற்றியிருக்கும்
என் திறமைகள் உன்னைத்
திண்டாட வைத்திருக்கும்-உன்
சாக்கடை நெஞ்சுக்குள் என் நினைவு
சந்தணமாகவா கமழும்!!?
அதனால் தான் என்னைக்
களங்கப் படுத்த முனைகிறாய்- என்
கற்பை மதிப்பீடு செய்
நீ கண்ணகியாய் இருந்தால் மட்டும்
கவிழ்த்து விடலாம் என்று எண்ணாதே நான்
கவரி மானாய் மாய்பவள் அல்ல
நீறு பூத்த நெருப்பு...
நினையாத நேரத்தில் வெகுண்டெழுந்து
கருக்கி விடுவேன் உன் தீ எண்ணத்தை

Tuesday 17 November 2009

நம்பிக்கை

அன்பே...
என் மீது நீ கொண்ட தூய நம்பிக்கையில்
துளி கறை பட்டால் கூட நான்
துடிதுடித்துப் போவேன்....
நான் சுவாசிப்பதே
உன் நம்பிக்கையைத் தான்....

Monday 16 November 2009

சங்கமம்..???

செல்லுலராய் நள்ளிரவில் என்னைப்பற்றி
செல்லமாய் செந்தூரமாய்
என் மீது உன் விரல்களின் நர்த்தனம்...
என் உணர்வு மெஸேஜ்களை
எழுத்து விடாமல்...
உற்றுப்படித்து இன்புற்று....
என் நரம்புகளில் றிங் ரோணை
மாற்றி மாற்றி மீட்டி மகிழ்ந்து....
உனக்குள்ளேயே என்கேஜ்
ஆகிக் கிடந்தேனே....
விடிந்ததும் கேட்கிறாய்
உனக்குள் எத்தனை மிஸ்கோள் என்று....
ஓ... நீ சங்கமித்தது
என் உடலோடு தானா....??

Friday 13 November 2009

ஐயகோ உறவுகளே…..



வன்னிப் பெரு மண்ணில்
வன்முறைக்குள் அகப்பட்டு
உயிரைக் கையேந்தி
உருக்குலைந்த போது
ஊடகங்களுடாக எம்
வெளிநாட்டு உறவுகள்
ஓலமிட்டு அழுதார்கள்..
விம்மி வெதும்பினார்கள்…
வழியொன்று கிடைத்த போது
விதி நம்மை விட்டதென்று
உயிர் மட்டும் போதுமென்று
ஓடோடி முகாம்களுக்குள்
வந்து அடைந்த போது
முட்கம்பிகளுக்கிடையே நாம்
மூச்சைப்பிடித்து
முனங்கிக் கிடந்த போது….
அப்போதும் புலம்பினாhர்கள்…
அய்யகோ… எம் உறவுகளே
உயிரோடு வந்தீரே….இனி
காண்போமோ என்று
கலங்கிப் போனோமே….
இனி நீங்கள் கலங்க வேண்டாம்
இங்கே நாங்கள் இருக்கிறோம்…
விடுதலையாகி வாருங்கள்….
வெளியில் நாங்கள் இருக்கிறோம்…
விம்மலும் புலம்பலும் நீண்டன…
விடுதலை நாள் வந்தது…
வெறுங்கையராய் வெளியில் வந்தோம்…
மூலதனம் ஏதுமின்றி….
முதலில் இருந்து புது வாழ்வா..
மலைத்துப் போய் நின்ற நாம்
தொலைபேசியை நாடினோம்….
அந்நியநாட்டு உறவுகள்
இப்போதும் புலம்பினார்கள்…
“அய்யகோ என் உறவுகளே…-எனக்கு
அங்கு கடன்… இங்கு கடன்…
அஞ்சு காசு கூட என்னால்
இங்கு புரட்ட முடிவதில்லை…
கையில நகையிருந்தா.. அடகு வையுங்கோ…
தையில பார்ப்பம்…. முயற்சி செய்யுறன்..”
மரண பயம் வந்தபோது
உயிர் தப்ப எண்ணினோமே…
உயிர் தப்பி வந்த பின்னர்…
உய்ய வழி ஏதுமின்றி… இதைவிட
உயிர்விட்டே இருக்கலாமே…
இப்போது தான் புலம்புகிறோம்…
வானத்தை அண்ணார்ந்து பார்க்கிறோம்….
இருள் விலகுகிறது..
நட்சத்திரங்களின் கண்சிமிட்டல்கள்
மறைந்து போயின…
சூரியனின் நம்பிக்கை ஒளி மட்டும்
மெல்லிய படலமாக….
இனியும் விழமாட்டோம்…..

(இது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு எழுதப்பட்டதல்ல. அந்நிய நாட்டில் துன்புறும் உறவுகள் மன்னிக்க வேண்டும். எல்லோரும் இப்படி நடப்பவர்கள் அல்ல. இது எனக்குள் விம்மி வெடித்த வேதனைச் சிதறல்கள். இது என் சொந்த உணர்வு மட்டுமே.)

Thursday 12 November 2009

வில்லன்

உன் மென் சிரிப்பால் மெய்மறந்து
கண்கள் மயங்க....
உன் மென் ஸ்பரிசங்கள்...
உணர்வுக்குள் ஊடுருவி
உலுப்பி நிறுத்த...
நாளங்களின் அதிர்வுகள்
நாதங்களாக.... இன்ப சங்கீதமாக...
என் உதிரத்தை உன்
இதழ்களுக்கிடையே சுரக்க...
உயிருக்குள் இன்பமாய் வலிக்க..
தமிழ் சினிமாவில்
தந்தையே வில்லனாவது போல்....
நமக்கிடையேயும் ஒரு வில்லன்....
தட்டி உலுப்புகிறான்
“ஏய் ஊட்டிக் கொண்டே உறங்கி விடாதே...
பிள்ளைக்குப் புரைக்கேறும்..”
அது உன் அப்பா...

Wednesday 11 November 2009

நிலா

எப்போதும் சிரிக்கிறாய் நான்
அழும் போது கூட- ஓ..
பல்லாயிரம் பேரின் வேதனையை
பலகோடி மைல்களுக்கப்பாலிருந்து
பார்த்ததனால் ஏற்பட்ட விரக்தியா…
குளிர்மையாய் தோன்றுகிறாயே…
குமுறுகின்ற உள்ளங்களைத் தேற்றவா…
உன்னால் முடியாது
இந்தக் குமுறல்கள்….
எரிமலையை வென்றவை
உணர்வுகளைச் சாம்பலாக்கி
உயிருக்குள் தெளிப்பவை…
அதனால்தான் நீ அருகிலேயே வரவில்லையோ???

Saturday 7 November 2009

வேண்டாம்...வேண்டாம்

பாலிய நினைவுகள் பசுமையானதென
பலர் சொல்லக் கேட்டதுண்டு
பொறாமைகூடப்பட்டதுண்டு
நானும் திரும்பிப் பார்த்தேன்-அங்கே
கற்களும் முட்களும் தந்த இரத்தக்
கறைபடிந்த பாதச்சுவடுகள்...
தேம்பலும் விம்மலுமாய்த்
தள்ளாடி நடந்த அந்த
தளர் நடைச் சுவடுகள்...
விழுந்து எழுந்த போதெல்லாம்
விட்டு வந்த அந்த
வேதனைச் சிதறல்கள்....
வேண்டாம் வேண்டாம்
பாலிய நினைவுகள் வேண்டாம்
புதைக்க விரும்புகிறேன் அந்த
புழுத்துப் போன பிணத்தை

Thursday 5 November 2009

பசுமரத்தாணி

பொருத்தும் துண்டங்களால் பிள்ளைகள்
பொருத்தினர் பல உருவம்
பெருமையாய் கூறினர்
இது மணிக்கூட்டுக் கோபுரம்
இது பைசாக் கோபுரம்
அவன் நிமிர்ந்து பாலாய் சிரித்தான்
இது எங்கள் ஊர் துயிலுமில்லம்..???

தமிழனாய் வாழுவோம்


வீதியில் கிடக்கத் தமிழா-நீ
வெறும் குப்பையல்ல
வதிவிடம் இன்றி வாழ
விதியென்ன உனக்கு
சாதி மத பேதம் எம்
சந்ததிக்கும் வேண்டாம்
சரித்திரத்தில் தமிழன் என்ற
இனம் ஒன்றே போதும்
போதி மரத்தவன் பேரனைத் திரும்பிப் பார்
பேதமை எம் பெருமை என்கிறான்
சாவதும் வாழ்வதும்
சகதியில் வீழ்வதும்
சனனித்த யாவருக்கும்
சமானமான நியதி
தளர்ந்து போனோம் என்று
உளம் நொந்து போகாதே
சாவினும் தமிழனாய் வாழுவோம் என
சபதம் எடுத்துக் கொள்
அந்நியன் காலடி இன்பத்தை
அருவெறுக்கக் கற்றுக் கொள்
அதுவே உன்னைத் தமிழனாய்
அவனியில் வாழ வைக்கும்

இம்சை

கணவனைப் பிரிந்தேன் என்று
கண்ணீர் மல்கி நின்றாய்
துணைக்கு வந்த என்னைத்
துணைவனாய் வரிந்து கொண்டாய்
காந்த விழிகளாலே என்னைக்
கவர்ந்து லீலை செய்தாய்
முதன் முதல் உனக்குள்ளே
மோகத்தை வளர்த்து விட்டாய்
சங்கீதமாய் என்னுள்ளே
சஞ்சாரம் செய்து நின்றாய்
வனப்புடைய உன் மகனிற்கு
வளர்ப்புத் தந்தையாய்
வனைந்து கொண்டாய்
தீராத மோக மயக்கத்தில்
கிறங்கிப் போய் கிடந்த போது
தீர்மானமாய் சொல்லிச் சென்றாய்
திரும்பி வருவேனென்று-இன்று

தொ(ல்)லைபேசியில் உன்குரல்..
குழந்தையின் நலனுக்காய்
கணவனிடம் போகின்றேன்
இனி என்னை இம்சிக்காதே
இன்னொரு வழியைப் பார் என்கிறாய்
பெண்ணெ... இம்சையைத் தந்தது
நானா... நீயா...?
மெல்லவும் முடியாது உமிழவும் முடியாது
தொடைக்குளிக்குள்ளே துயரப் பந்தை
தந்து சென்றது நானா.. நீயா...??

பிறவிப் பயன்

பெற்றவர் மடியினிலே

பிள்ளையென்று பெயர் பெற்றேன்
கணவன் கரம் பிடித்து
மனைவியென்று பெயர் பெற்றேன்
அழகிய குழந்தைகளால்
அன்னையென்று பெயர் பெற்றேன்
தமிழைப் பேசியதால்
தமிழன் என்று பெயர் பெற்றேன்
தமிழனாய் பிறந்ததனால்

அகதியென்று பெயர் பெற்றேன்

உள்ளமை

ஞாலம் எங்கணும் தமிழன் கொண்டது வறுமை
கோலம் ஏதிலி யானதால் சூழ்ந்தது கருமை
ஆலம் கொண்டவர் எண்ணிக் கொண்டனர் பெருமை
சாலச் சிறந்தவன் தம்முள் உள்ளது திறமை
காலம் வருமெனக் காத்துக் கிடப்பது சிறுமை
பாலம் ஒன்று சமை - பாரினில் பெறுவோம் உரிமை



Wednesday 4 November 2009

உ(ன்)றவு

என்ன தவம் செய்தேனோ
எனதன்பு சகோதரனே...
உன்னையொரு தம்பியென
உலகினிலே கொண்டதற்கு
உடன் பிறவா உறவு நீ...
உண்மையான உறவும் நீ
அண்ணன் தம்பி இல்லையென்ற
குறை தீர்த்த சோதரனே...
ஒரு வயிற்றில் பிறக்கவில்லை
பரமன் எப்படி மறந்தான்...
இடம் மாறிப் புகுத்தி விட்டான்..
பரவாயில்லை... பந்தம் தொடர வேண்டும்
பாசம் மாறாத பசுமை வேண்டும்..
சுயநலமே இல்லாத உன்னன்பு..
வியக்கத் தோன்றுதடா..
பாசாங்கே இல்லாத
பாசம் பகிர்பவனே..
ஏமாற்றும் கலியுலகில்
எப்படி நீ இப்படி..?

இனியொரு பிறப்பிருந்தால்
ஒரே வயிற்றில் இல்லையென்றாலும்...
என் வயிற்றில் பிறந்து விடு.. உன்
பிஞ்சுக் கரம் பற்றி
விண்ணெங்கும் பறப்பதற்கு.....

Tuesday 3 November 2009

எப்போதும் என் இனியவனே

அன்புக்கு இலக்கணமாய்- என்

அகராதியில் இருப்பவனே
பதறிப் போன பொழுதெல்லாம்
பக்கமிருந்து பகிர்ந்தவனே
நம்பிக்கையிழந்த போதெல்லாம்- எனை
நிமிர்ந்து எழ வைத்தவனே- என்

நண்பர்களையும் அன்பர்களையும்
தன்னவராய் ஏற்பவனே
நம்பிக்கையின் முழு வடிவாய்
நாள்தோறும் திகழ்பவனே
காலத்தின் கடூரத்திலெல்லாம்
கண்ணிமையாய் காத்தவனே..
காதலித்த போது மட்டுமன்றி
கரம் பிடித்த பின்னாலும்
காதலின் சுவையுணர வைப்பவனே..
பெண்ணடிமைத் தனம் எதிர்த்து
பேசுகின்ற பெண்ணாயினும்
களங்கமற்ற உன் பாதம்
கண்ணிலொற்றல் தகுமென்று
கண்ணாளா உன்சார்பாய்
களமாட முன்வருவேன்
எப்போதும் என் இனியவனே
எனைப் புரிந்து நடப்பவனே...
நீயே என் துணைவன்..
நீ போதும் என் வாழ்வை
நித்தமும் பசுமையாக்க...

அந்தரங்கம்

அதிகாலை வேளையிலும்
அணைத்தபடி சிறு தூக்கம்
அதிராது மெல்லத் தட்டி
“எழும்புங்கோ விடிஞ்சாச்சு”
அன்பான கட்டளை…
வேளைக்கு வேளை பரஸ்பரம்
உண்மையான உபசரிப்பு…
என்ன சாப்பாடு… என்ன குடிக்கலாம்…
களைப்பாயிருக்கா… ஓய்வெடுக்கலாமா…
அடுத்த செயற்பாடு என்ன…
எப்படி செய்யலாம்…
நடந்து போகலாமா.. பஸ்ஸா ஆட்டோவா..
என்ன பொருள் வாங்கலாம்…
எந்தக் கடையில் வாங்கலாம்…
பிடிச்சிருக்கா…பணம் போதுமா…
சின்னச்சின்ன தீர்மானங்கள்
பரிச்சயமற்ற முகங்களின் நடுவே
சங்கடங்கள் ஏதுமின்றி
கரம்பற்றி வீதியிலே
மெல்ல நடைபோட்டு...
களைத்துப் போய் ஓயும்போது
மடி மீது தலை வைத்து
விழி மூடும் போது..
நெற்றியில் புரண்ட முடியை
நாசூக்காய் ஒதுக்கி விட்டு…
புரிந்தது….
உன்னோடு தனிமை எத்தனை சுகம்…
கூட்டு வாழ்க்கையில் பறிபோன
அந்தரங்கம் இதுதானோ…