Thursday 15 December 2011

அவர் கனவுகளைச் சுமந்து …..


தாயகக் கனவை நெஞ்சிலே தாங்கி
தம்மையே ஈந்த எம் தியாகதீபங்களுக்கும்…
தாயகப் போரிலே கொல்லப்பட்ட
பல்லாயிரம் பொதுமக்களுக்கும் என்
தலை சாய்த்து அஞ்சலிகள் செய்து…

தாயக வீரரை நினைவுகூர இங்கு
தாகத்தோடு வந்திருக்கும் -எம்
தமிழ் உறவுகட்கு என் மாலை வந்தனங்கள்
இந்த வேளையிலே எம் தாயக மண்ணிலே
இன்றய நாளிலே.. தம்
வீரக் குழந்தைகட்கு ஒரு
விளக்கேனும் ஏற்ற முடியாது
வெம்பி மனம் வெதும்பிக் கொண்டிருக்கும் எம்
பாசத் தமிழ் உறவுகளை ஒரு கணம் நினைவிலிருத்தி…
தொடர்கிறேன்…

அவர் கனவுகளைச் சுமந்து…..
யாரவர்கள்…
விண்ணில் புலிக் கொடியேந்தி நின்றவர்
மண்ணின் பெருமையைப் பேணி நின்றவர்
பெண்களும் புயலெனப் பொங்கி எழுந்தவர்
திண்ணிய தோள்களில் துப்பாக்கி சுமந்தவர்…
அவர் கனவுகளைச் சுமந்து….

விடுதலைத் தாகம் சுமந்து
விதையாகிப் போனவர்;..
தீரமும் தியாகமும் கொண்டு
தரணியில் தலை நிமிர்ந்து நின்றவர்..
குன்றா வீரமும் கொதிக்கும் மானமும்- இவர்
குருதி அணுக்களுள் ஊறிக்கிடந்ததே…
அவர் கனவுகளைச் சுமந்து…

எத்தனை கனவுகள்…எத்தனை தாகம்…
மக்களின் வாழ்வு.. மண்ணில் வீசும்
சுதந்திரக் காற்று…
தமிழரின் அரசு..தரணியே போற்றும்
தமிழ் மொழி பெருமை… என..
எத்தனை கனவுகள்….
புத்தனின் பேரரால் இரத்தச் சகதிக்குள்
புதையுண்டு போயினவோ…இல்லை இல்லை அவை
விதையாகிப் போயின…..
மீண்டும் துளிர;த்து அவை விழுதெறியும்…அது வரை
அவர் கனவுகளைச் சுமந்து..

இத்தனை கனவுகள் சுமந்தும் இவர் அமைதியானது எப்படி?
வேகமும் விவேகமும் தீரமும் தியாகமும் கொண்டு -நம்
வேங்கைகள் நடத்திய வேள்வி தணிந்து போனது எப்படி?

விதைத்த விடுதலை விதைகளிடையே சில
வீணாண நெருஞ்சிகள் முளைத்ததனால்…
கூடலாய் நின்ற விடுதலை விருட்சங்கள் நடுவே சில
கோடரிக் காம்புகள் முளைத்ததனால்…

காட்டிக் கொடுப்பினாலும் கடமை மறந்ததாலும்-சுடு
காடாய் மாற்றினாரே நம் தாயக மண்ணை…

எத்தனை தூரம் கண்ணீர் விட்டோம்…
பால்கேட்டு அழுத குழந்தைக்காக
பால் மா வாங்கப் போனவர்கள் தசைப்
பிண்டங்களாய் சிதறினாரே…கண்ணீர் விட்டோம்…

இருண்ட பதுங்கு குழிக்குள்ளே
பல நாளாய் இருந்த என்பிள்ளை -அம்மா
முற்றத்தில் நின்று எப்போ நான் விளையாடுவேன்
என்று கேட்ட என்பிள்ளையின் முகத்தின்
ஏக்கம் கண்டு கண்ணீர் விட்டேன்..
தமிழர்க்கேதையா முற்றம்…

நிறை மாதக் கர்ப்பிணியான என் தங்கை-வெறும்
அரிசிக் கஞ்சியை குடித்தும் குடிக்காமலும்
சுருண்டு கிடந்த போது என்
நெஞ்சு வெடிக்கக் கண்ணீர் விட்டேன்

அக்கா… சாப்பிட்டு நாளாச்சு
அம்மா வீட்டில.. நடக்க முடியல..
அரிசிக் கஞ்சி குடுக்கிற இடத்தில
அடிக்கிறான் செல் அதனால்
அது கூட கிடைக்கவில்லை..
அhpசி இல்லாட்டியும்.. கொஞ்சம்
சீனி தாங்கோ..அம்மாக்கு தேத்தண்ணி குடுக்க எண்டு
இரந்து நீட்டிய பிஞ்சுக் கரங்களின்
வரண்டுபோன விழிகள் பார்த்துக்
கண்ணீர் விட்டேன்...

பாதுகாப்பென்றெண்ணிப் பதுங்கு குழியிலிருந்தவர்கள்-அப்படியே
புதையுண்டு போனாரே.. அப்போது கண்ணீர் விட்டோம்..
கயவரின் குண்டுகளால் கர்ப்பிணிகள்
கருவிலிருந்த சிசுவும் கூட வயிறுபிளந்து
தரையைப் பார்த்ததே.. அப்போது கண்ணீர் விட்டோம்
இன்னும் எத்தனையோ எத்தனையோ..
நாய்களும் மாடுகளும் வீதியில்
நாறிக்கிடப்பதைக் கண்டிருப்பீர்..நாமோ
நம் உறவுகளின் சிதைந்த உடல்களைக்
கண்ணீரோடு கடந்து வந்தோமையா...

ஏன்… ஏன் இவை நடந்தன?...
துரோகக் காற்று எம் மண்ணில்
மோதியதால் நடந்தன..
அழுதோம் புரண்டோம் அலறினோம்…

அங்கே என்ன உண்டெமக்கு...
சுவாசிப்பது சுதந்திரக் காற்று அல்ல
வசிப்பது நிம்மதியான சூழல் அல்ல
காவிய நாயகரின் கல்லறைகள் இல்லை-எம்
வீரர்கள் வாழ்ந்ததாய் சுவடே இல்லை
கட்டிக் காத்து வந்த கலாச்சாரத்தின் மேல்
கட்டவிழ்த்து விடப்பட்டசீரழிவுகள்…
முப்பது வருடங்கள் பாடுபட்டு சேர்த்த பெருமை
மூன்றே வருடங்களில் முற்றிலும் மாறியதோ?...

என் இனிய தமிழ் உறவுகளே -உம்மிடம்
தாயக மக்களின் சார்பில்.. இந்தக்
கல்லறை வீரர் மேல் ஆணையிட்டுக் கேட்கின்றேன்

வீரம் உமக்கில்லையென்றால் விலகி நில்லும்
தன் மானம் இல்லையென்றால்
தனியே ஒதுங்கி நில்லும்…துரோகம் செய்யாதீர்
தாமாய் முன் வந்து உழைப்பவர்க்குத்
தடையாய் நில்லாதீர்..
வீணாய் நேரம் செலவிட்டு விமர்சனம் செய்யாதீர்.
புறம் படைத்த வீரரின் பெயர் சொல்லி
பணம் சுருட்ட முயலாதீர்.. தூய
பற்றுள்ள நெஞ்சங்களைப் பகடைக் காயாக்காதீர்..

பூவோடு சேர்ந்து நாரும் கமழ்வது போல்-எம்
புண்ணியவீரர;கள் தமையீந்தபோது- தமிழன் என
பெயர் கொண்டதாலே சிலர்
பெருமை பெற்றனர் இங்கே..- இன்று
நாரோடு சேர்ந்ததாலே பூவும் நாறுதையா..
நமக்குள்ளே பிளவு பண்ணி எம்
நாயகரின் தியாகத்தை தூசிக்கிறார்கள்..
இதற்கும் பெயர் துரோகம் தான்.. எம்
இதயத்திதனுள் தூங்கும் கல்லறைக் வீரரின்
கனவைக் கலைக்கின்ற துரோகம்…

தேசப்பற்றோடும் தாகத்தோடும் காத்திருக்கும் எம்
தமிழ் நெஞ்சங்களிடம் தனிப்பட்ட முறையில் நான்
தயவாய்க் கேட்பது..

ஆயுதப் போர் எமக்கு வேண்டாம்…
ஆயுதப் போர் எமக்கு வேண்டாம்…
அநாதைகளாய் எம் குழந்தைகள் அலைய வேண்டாம்
அவர் கனவுகளைச் சுமந்து
அறிவுப் போர் தொடுப்போம்…

உன்னத வீரரின் கனவுகளை நெஞ்சில் சுமந்து
உலக அரங்கிலே நிமிர்ந்து நில்லுங்கள்…
உங்கள் குழந்தைகட்கும் அதையே உணவோடு ஊட்டுங்கள்
தமிழ் மானமும் வீரமும் எப்போதும் இருக்கட்டும்
தமிழரின் பொருளாதாரம் தரணியில் உயரட்டும்
நாடு மட்டும் தான் நமக்கில்லை..
நல்ல அறிவு வளமுண்டு
துப்பாக்கிசெய்யும் புரட்சியை விட- நீ
தூக்கும் பேனாவும் புத்தகமும்
பல புரட்சி செய்யும்.. எனவே
அவர் கனவுகளைச் சுமந்து…
அறிவுப் போர் தொடுப்போம்…

(27/11/2011 அன்று தனிப்பட்ட இடத்தில் மாவீரர் நினைவு நாளில் நான் வாசித்த கவிதை)