Sunday 22 January 2012

சங்கூதக் காத்திருக்கும் உறவுகளிடம் ஒரு கேள்வி...

வடபகுதியில் போர் முடிந்து விட்டதா?
வடிவா பார்த்துச் சொல்லுங்கோ..
தொலைந்த போனது ஆயுதப் போர்தான்- ஆனால்
தொடங்கியிருப்பது என்ன?
வாழ்வுக்கும் சாவுக்குமான போர்..
வறுமைக்கும் வெழிப்புக்குமான போர்..
தனிமைக்கும் வெறுமைக்குமான போர்..
தாழ்வுக்கும் தரத்துக்குமான போர்..
விருப்புக்கும்  வெறுப்புக்குமான போர்..
விரக்திக்கும் சினத்துக்குமான போர்..


சங்கீதா நிரஞ்சன் ஆயிரத்தில் ஒன்றாய்
சான்று சொல்லிச் சென்றவர்கள்...இன்னும் எத்தனை
சங்கீதாக்களும் நிரஞ்சன்களும் உண்டோ?...இவர்க்கு
சங்கூதக் காத்திருக்கும் உறவுகளுக்களிடம் ஒரு கேள்வி...


சாவின் பின் சங்கூதல் கடமையா -அவர்
சாவு வரை துடித்த போது நீரெல்லாம் எங்கு போனீர்?
காவு கொடுத்த பின் கண்ணீர் ஒரு கேடா?- அவர்க்கு
கரம் கொடுக்க மறந்தீரே உம் மேல் 
காறி உமிழக் கூடாதோ?
ஐயகோ நெஞ்சு வெடிகுதே இந்த
அர்த்தமற்ற சாவுகளை நினைக்கையிலே-இவர்
யுத்தத்தில் வீழ்ந்திருக்கலாம் -இப்படி
சித்தம் சிதைந்து மாண்டதை விட...


மாமிசக் கண்களால் மட்டும் பார்த்து
மனக்கண்களைக் குருடாக்குவீரோ...
சாவுக்காய் முடிவெடுக்கும் வகையில்
அயலவன் நெஞ்சும் வயிறும் புகையும் போது..
சலனம் எதுவுமின்றி மனச்சாட்சியை பூட்டிவிட்டு
சாமிக்கு விளக்கேற்றி சாம்பிராணி புகைப்பீரோ?..
ஏனிந்த பாரா முகம்? ஏனிந்த வன்மம்?
எதற்கிந்த அலட்சியம்? 
முள்ளிவாய்க்காலிலும் முல்லைத்தீவிலும்
மனித உடல்களையும் மட்டுமன்றி உம்
மனிதத்தையும் புதைத்தீரோ?


என் இனிய தமிழ் உறவுகளே...
என் ஆதங்கத்தால் வந்த சினம் பொறுப்பீர்...
அன்பும் ஆதரவும் உம் உறவுகட்கு நீர்தான்
அவர் வேதனைக்கு செவிசாய்க்க மாட்டீரோ?
அதிகம் ஒன்றும் வேண்டாம் கொஞ்சம்
ஆறுதலும் நம்பிக்கையும் கொடுத்தால் போதும்
அவர் தாமாகத் தம் துன்பம் வெல்வார்..

Monday 16 January 2012

பொங்கல்



எங்கும் ஆரவாரம் தங்குகின்ற திருநாள்
எங்கள் உழவர்களின் எக்காளத் திருநாள்
தங்கத் தமிழரொலாம் மகிழ்கின்ற திருநாள்
பொங்கும் உவகையுடன் பொங்குகின்ற திருநாள்

அங்கு இருந்த போது அப்படித் தான் பொங்கல்
அவளருகில் இருந்த போது அப்படித் தான் பொங்கல்
அன்னை மடியினிலே அப்படித் தான் பொங்கல்-அதற்கின்று
அத்தனை உறவுகளும் தொலைந்ததனால் தடங்கல்.

பானை ஏற்றிவிடும் அப்பன் இன்று இல்லை
பக்தியோடு தேவாரம் பாடத் தங்கை இல்லை
இலை விரித்துப் பொங்கலிட அன்னை இன்று இல்லை
இடை விடாது வெடி வெடடிக்கும் தம்பி கூட இல்லை

ஆதவன் எம் வாழ்க்கையிலே அஸ்த்தமித்து நாளாச்சு
ஆனந்தமாய் புதிர் எடுக்கும் காலமெல்லாம் போச்சு
பாதகரின் கரங்களிலே பசுமையெல்லாம் போச்சு
பாpதவித்து வேதனையால் விழி பொங்கலாச்சு

ஆனாலும் நம்பிக்கைத் தீ பரவலாச்சு
அடுப்பினிலே விரக்திகளைச் சுட்டரிக்கலாச்சு
தாழ்வற்ற தமிழனாக வாழ எழுந்தாச்சு
தளர்ந்தவர்க்குக் கரம் கொடுக்கும் உணர்வு பொங்கலாச்சு