Wednesday 28 August 2013

தேவனுக்கொரு தயவான விண்ணப்பம்…



பாசம் என்றொரு உணர்வை தந்து
புவியில் வாழ வைத்த தேவா
நேசத் திருக்கரம் கொண்டென்னை
நித்தமும் அணைக்கும் நாதா

நெஞ்சம் களைத்துப் போயிற்று
நீளும் துயர்களைத் தாங்கி
கொஞ்சம் எனக்கு செவிசாய்ப்பீர்
கொண்ட என் வேண்டுதல் கேட்பதற்கு

வித்தியாசமாய் ஒரு வேண்டுதல் தான்
வித்தகன் உன் தயவு வேண்டுமப்பா
உத்தம அன்பினைப் புரியாதோர்
உள்ளங்கள் உணர்ந்திட அருள் செய்

மிதிக்கவும் அழிக்கவும் நினைப்பவர் நிழலில் என்
மிதியடியேனும் அமர்ந்திட வேண்டாம்
மதித்திடா மாந்தர்கள் முன்னிலை யில்நான்
மண்டியிடும் நிலை மடிவிலும் வேண்டாம்

தேவை கொண்டிவர் உறவைத் தேடா
தனித்துவம் கொண்டவள் என்பதை இவர்
தாமே உணரும் நிலை வர வேண்டும்
பாலும் பழமும் அறுசுவை விருந்தும்
பசிக்கு இவர்கள் அருந்திடும் வேளை
பற்றி எரியும் என் வயிற்றுப் பசிக்கு
பச்சைத் தண்ணீர் பருகிட வேண்டும்- அதைப்
பார்த்து இவர்கள் பரிவுடன் அணுகிட-ஒரு
பருக்கையேனும் இரவாதென் கரம்
பார்த்து இவர்கள் வியந்திட வேண்டும்

தேவைக்கதிக செல்வம் இவரிடம்
தேங்கிக் கிடக்க வேண்டும்- எனக்கு
தேவை பலவும் இருப்பினும் இவர்களை
தேடா மானம் தந்திட வேண்டும்

பொங்கியெழும் என் மானம் கண்டு
புயலும் என்னைப் பணிந்திட வேண்டும்
ஆர்த்தெழும் வேகம் என்னில் கண்டு
ஆழியும் என்முன் அடங்கிட வேண்டும்

தேவைகளோடெனை அணுகிடுவோரைத்
தேற்றிடும் கரங்கள் தந்திட வேண்டும்
குறையா தென்றும் கொட்டிக் கொடுத்திட
குளிர்விக்கும் அன்பே செல்வமாய் வேண்டும்

உயர்விலும் எந்தன் நிலையது மாறா
உறுதியும் தீரமும் குறைவறத் தந்திடு
மரணம் என்னை மூடிடும் வரையிலும்
மனிதனாய் என்னை வாழ விடு

Saturday 10 August 2013

பயத்தில் பயணிக்கும் நம்மூர்

தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த


தமிழ் பேசும் தமிழர்க்கு அகதியென்று பேர்


தமதுரிமை கேட்டவர்க்கு புலியென்று பேர்

தர்மத்தைத் தயவின்றிப் பலி கொண்ட போர்

பரிநாசம் செய்தவர்க்கு புகழ் வெற்றித் தேர்


பயம் கொண்ட அமைதிக்குள் பயணிக்கும் நம்மூர்



படம்: கூகிள் தேடல்