Tuesday, 26 November 2013

இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்தோமோ?? - அகவை 59
ஐயம் தகர்த்து அடிமை நிலையகற்ற
வையத்தில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்க
மெய்யாய் ஒரு உதயம் தோன்றிய
ஐம்பத் தொன்பதாம் அகவை இன்று

பொய்யாத மானமும் பொங்கிடும் வீரமும்
கைவினைத் தீரமும் கொண்ட நம் தலைவன்
இங்கிவனை யாம் பெறவே
என்ன தவம் செய்தோமோ????
              ***
சோதனை ஆயிரம் சுமந்து நடந்தவன்
வேதனை தாங்கியே வேகமாய் நடந்தவன்..
போதனை செய்துமே பேதமை தகர்த்தவன்- நம்
சாதனைத் தலைவனாய் சரித்திரம் சமைத்தவன்
இங்கிவனை யாம் பெறவே
என்ன தவம் செய்தோமோ????
              ***
மானத்தின் பொருளுணர்த்தி நின்ற
மாதவத் தலைவன் இவன் – நாம்
போதிமரம் கண்டதில்லை இவன்
போதனைகள் கொண்டோம்
நாதியற்று அலைந்த தமிழர்க்கு
நானிலத்தில் முகவரி கொடுத்தவன்
இங்கிவனை யாம் பெறவே
என்ன தவம் செய்தோமோ???
              ***
வற்றிப் போன குளத்து மீன்களாய்
வானம் பார்த்து நிற்கின்றோம்
வருண தேவன் அவன் வருகை தேடி…
கொடுங்கோன்மை இருளினிலே
கடுந்தவமாய் காத்திருக்கின்றோம்
சூரியத் தலைவனின் எழுகை தேடி…

உலகத் தமிழருக்கே ஓர் தலைவனாய்
உயர்ந்த கலங்கரை விளக்கம்…
ஒப்பில்லாப் பெரும் சுடர் இவன்

அகவை ஐம்பத் தொன்பதில்
அகிலத்தில் ஒளிரும் ஆதவன்..
உவகை பெருகுதையா எம்
ஒற்றைத் தலைவன் இவன் என்றே
ஓங்கி ஒலிக்கும் போது…

தீரமும் தியாகமும் தீர்க்க தரிசனமும்
தீராத விடுதலைத் தாகமும் நெஞ்சில்
தீயாகச் சுமந்தவன்- எம்
தேசியத்தின் பெரும் தலைவன்..
ஊரார் பேசவில்லை இன்று
உலகம் பேசுதையா- இவன்
ஒப்பற்ற மேன்மையை…
              ***
விடுதலைத் தாகம் சுமந்து நம்மை
கடுகதியாய் இயங்க வைத்த சக்தி இவன்…
செந்தமிழன் வரலாற்றில்
சக்தியும் இவனே, இயக்கமும் இவனே…
சக்தியும் இயக்கமும் அழிந்து போகும்
சாத்தியம் இல்லை அறிவியலில்…

பெண்களை வெறும் பூக்களல்ல
புயல்களென்று உலகுக்குப்
புரிய வைத்தவனும் இவனே..
பெண்ணினமே பெருமை கொள்ளுது -எம்
பெரும் தலைவன் இவனென்று சொல்லுதற்கு..
              ***
வளர்த்த கடா மார்பில் முட்டும்
வேதனைகள் சுமந்தவன் – எனினும்
வீரத்தில் குன்றாது விவேகமாய் நடந்தவன்..நேற்று
முளைத்த அரசியல் காளான்கள்- இவன்
மகத்துவம் அறிவாரோ….
பிழைப்புக்காய் அடி வருடும் பித்தர்களுக்கு- இவன்
பெருமை புரியாது…
விலை போகமுடியாத விண்விளக்கு
தலை வணங்கா நம் தானைத் தலைவன்
              ***
தமிழ் வளர்க்கச் சங்கம் வளர்த்தார்
அன்றய மன்னவர்கள்.. இவன்
தமிழ் வளர்க்க உயிர்கொடுக்கும்
தனிப்படை வளர்த்த மன்னவன் இவன்..
தன் வாழ்வை முற்றிலுமாய்த்
தமிழுக்காய், தமிழர்க்காய் தானே ஈந்தவன்

மாதச் செல்வன்.. எம் சூரியத் தலைவன்
இங்கிவனை யாம் பெறவே
என்ன தவம் செய்தோமோ???

வாழ்வாங்கு வாழ்ந்த இவன்
வாழ்க என்றும் நம் தலைவனாய்!!!
              ***
      

Saturday, 16 November 2013

பருவ வயதில் சில்மிஷ சிக்கல்கள்! சிநேகிதியுடன்.. தொடர் - 2

வணக்கம் நட்பு நெஞ்சங்களே...
இன்றும் உங்கள் சிநேகிதி ஒரு புதிய கேள்வி பதிலுடன் வந்திருக்கிறேன்... சிறு வயதிலும் கூட தம் பிரச்சனைகளை மற்றவர்களிடம் கூறித் தீர்வு காண விரும்பும் ஒரு தங்கையின் கேள்வியோடு பயணிப்போம். பயணம் சற்று நீண்டது என்பதால் நேரடியாக கேள்விக்குள் செல்லலாம் வாங்க...

சிநேகிதியுடன்.......
அக்கா, எனது பெயர் சாமினி. எனக்கு 15 வயதாகிறது. அம்மா இல்லை. அப்பா தனியாக போய்விட்டார். இப்போது அத்தை வீட்டில் நின்று தான் படிக்கிறேன். வீட்டு வேலைகளை செய்வதிலேயே படிக்க முடியாமல் போகிறது. அத்தை கொடுமைப்படுத்தவில்லை என்றாலும் அவர்கள் வீட்டில் நிற்பதால் நானாகவே வீட்டு வேலைகளை செய்து வருகிறேன். அத்தை பையனுக்கு 16 வயதாகிறது. அவன் செய்யும் கிண்டல் கேலிகளை சகித்து வரவேண்டியுள்ளது. சில நேரம் அது எல்லை மீறி செல்லும் போது தனியாக அழுகிறேன். அவன் கேலி செய்தாலும் என் மீது பாசம் வைத்திருப்பது புரிகிறது. இதனால் என் மனமும் சில நேரம் தடுமாற்றம் கொள்கிறது. எங்கள் இருவருக்கும் தான் திருமணம் நடக்கும் என்பது நிச்சயமில்லை. அதனால் தான் ஒதுங்கியே இருக்கிறேன். அத்தையும் அவனை கண்டிப்பதில்லை. இதனால் அத்தையிடம் சொல்லவும் பயமாக இருக்கிறது. என்ன மாதிரி முடிவெடுப்பது என்றே தெரியவில்லை அக்கா.. ஏதாவது ஆலோசனை சொல்லுங்க..

தனிமையில் சில நிமிடங்கள்.....
வணக்கம் தங்கையே,
15 வயதேயான நீங்கள் உங்கள் பிரச்சனையைக் கூறி அக்காவிடம் ஆலோசனை பெற வேண்டும் என நினைச்சீங்களே.. அதற்கு முதலில் எனது பாராட்டுக்கள். இது உங்களிடம் உள்ள தெளிந்த சிந்தனையைக் காட்டுகிறது. இந்த வயதிலேயே தன் பிரச்சனைகளைத் தீர்க்க பெரியவர்களிடம் ஆலோசனை கேட்கும் நீங்கள் நிச்சயம் எதிர்காலத்தில் ஒரு சிறந்த வாழ்க்கை வாழ்வீர்கள் என்பதில் எனக்கு கடுகளவும் சந்தேகம் இல்லை. அதற்கு இப்பொழுதே என் வாழ்த்துக்கள்
சாமினி, படிக்கும் வயதில் அம்மா இல்லாமல், புரிந்துணர்வற்ற அத்தை, எப்பொழுதும் நச்சரிக்கும் அத்தை பையன்.. இப்படியான சூழலில் நீங்கள் எதிர்நோக்கும் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறதம்மா. ஆனாலும் இந்த பிரச்சனையில் இருந்து மீளுவதற்கான புத்திசாதுரியம் உங்களிடம் நிறையவே இருக்கிறது என்று நம்புகிறேன். அதனால், உங்களுக்கு ஆலோசனை தர இந்த அக்கா மகிழ்வோடு முன்வருகிறேன்.
முதலில் உங்கள் அத்தை பற்றிப் பேசுவோம். அத்தை உங்களைக் கொடுமைப் படுத்தவில்லை என்று நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது, அத்தையிடம் ஒரு அறியாமை அல்லது புரிந்துணர்வு இன்மை தான் அங்கு நிலவுகிறது எனப் புரிகிறது.
தங்கையே, பொதுவாக பெண் பிள்ளைகள் வீட்டில் பெரியவர்களுக்கு வேலை செய்து கொடுப்பது சாதாரணமானது தான். அது நல்ல பண்பும் கூட. ஆனால் அது உங்கள் படிப்பைப் பாதிக்கும்படி அமையக் கூடாது. அதனால், நீங்கள் எந்த நிலை வரும்போதும் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர் இல்லாமல் அத்தையுடன் வாழும் நீங்கள் எப்பொழுதும் அடுத்தவர் கைகளை எதிர்பார்க்க முடியாது. அதனால், குறிப்பிட்ட வயது வரும்போது உங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்றால், கல்வியில் நீங்கள் அதிக கவனம் செலுத்துங்கள். நீங்களாகவே வீட்டு வேலைகளைச் செய்வதால் இந்தப் பிரச்சனையை நீங்கள் கையாள்வது மிகவும் இலகுவாக இருக்கும். அதாவது, நீங்கள் அத்தைக்கு செய்து கொடுக்கக் கூடிய வேலைகளை உங்களுக்குள் திட்டமிடுங்கள். உங்கள் கல்விக்காக நேரத்தை ஒதுக்குங்கள். அதிகாலையிலும், மாலையிலும் அதிகம் கல்வியில் கவனத்தை செலுத்துங்கள். அதிகாலையில் தூக்கத்தில் இருந்து எழுந்தவுடன் கற்பது மிகவும் நல்லது என பலர் சொல்லுவார்கள். ஏனென்றால் அந்த வேளையில் எங்கள் மனமும் உடலும் ஓய்வுக்குப் பின் நல்ல புத்துணர்ச்சியோடு இருக்கும். சிந்தனை ஓட்டம் அதிகமாக இருக்கும்.
அதுபோல வீட்டுப்பாட வேலைகளை அதிகமாக இரவு அல்லது மாலை வேளையில் செய்யலாம். இதை விட பகலில் பாடசாலைக்குப் போய் வந்த பின் சிறிது நேரம் ஓய்வெடுக்கவும், வேறு உங்களுக்குப் பிடித்த காரியங்களில் ஈடுபடவும் பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள். இந்த நேரங்கள் தவிர்ந்த ஏனைய நேரங்களில் உங்களால் இயன்ற வேலைகளை அத்தைக்கு செய்து கொடுக்கலாம். நீங்களாக வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தால், அத்தைக்கு உங்களைப் பற்றிய அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இதனால் என்றாவது உங்களால் வேலை செய்ய முடியாமல் போகும் போது அது அத்தைக்கு பெரிய குறையாகத் தெரிய வாய்ப்பு இருக்கிறது. எனவே, இப்பொழுதே வேலைகளையும் கல்வியையும் திட்டமிட்டு செய்யப் பழகுங்கள். இது எதிர்காலத்திலும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

அத்தையோடு வழக்கமாக நீங்கள் எப்படிப் பேசுவீர்கள்? சாதாரணமாக பேசுவீர்களா? அல்லது அமைதியான, பயந்த சுபாவம் உள்ளவரா? சாதாரணமாகப் பேசுபவராக இருந்தால், உங்களுக்கு இன்னும் இலகு. அத்தையோடு பேசும் போது, பேச்சுவாக்கில் உங்கள் கல்வியைப் பற்றி அத்தையுடன் பேசுங்கள். பாடசாலை விடயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். அத்தோடு, உங்களுக்கு இருக்கக்கூடிய பாடச் சுமைகளைப் பற்றியும் பேசுங்கள். இது சாதாரணமாகப் பேசும் போது, அதே பேச்சுவாக்கில் சொன்னால், சில வேளைகளில் அத்தையாலும் புரிந்துகொள்ளமுடியும்.  அமைதியான சுபாவம் உள்ளவராக இருந்தால், ஓரளவுக்கேனும் பேச முயற்சி செய்யுங்கள்.
அடுத்து அத்தைப் பையனைப் பற்றிப் பார்ப்போம்...
அத்தைப் பையன் உங்களை கேலி செய்வதும் அத்தை அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும் உங்களுக்கு வேதனையைத் தருகிறதென்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இங்கும் நீங்கள் அத்தை பையனோடு பேச வேண்டியது அவசியம். அவரது பேச்சுக்கள், நச்சரிப்புகள் உங்களுக்கு கஸ்ரத்தைக் கொடுக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளாமலே அவர் அதை செய்து கொண்டிருக்கக் கூடும். அதனால் நீங்கள் பேச வேண்டும். தங்கையே, என்னைப் பொறுத்தவரையில் பெரும்பான்மையான பிரச்சனைகள் பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடியவையே. நாம் பேசாது இருப்பதால் தான் பிரச்சனையைப் பூதாகரமாக்கி விடுகிறோம். அமைதி காப்பது நல்ல பண்பு. ஆனால் பேச வேண்டிய இடத்தில் பேசாது விட்டால் நாம் பலவீனர்களாகி விடுவோம்.
அடுத்து, உங்கள் மனதில் சிறு தடுமாற்றம் ஏற்படுவதைக் காண முடிகிறது. சாமினி, 15 வயது என்பது மிகவும் முக்கியமான வளர்ச்சிக் கட்டத்தின் வயது. இது கட்டிளமைப் பருவம் (டீன் ஏஜ்) என்பார்கள்.  இந்தப் பருவத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் சுரப்புக்களால் உடலிலும், மன நிலையிலும் பல மாற்றங்கள் நிகழும் பருவம் இது. இதனால் தான் எதிர்ப்பால் கவர்ச்சியும் தடுமாற்றங்களும் ஏற்படுகிறது. ஆனால் அதை சரியாகப் புரிந்து கொண்டால், இந்த நிலையை உங்களால் கையாள முடியும். இப்பொழுது நீங்கள் எதைப்பற்றியும் கண்டு கொள்ளாமல் படிப்பை மட்டும் முனைப்புறுத்துவதே சிறந்தது. அத்தைப் பையனின் பேச்சுக்களைக் கண்டும் காணாதது போல் இருந்து விடுங்கள். அதை எல்லாம் கவனித்து உங்கள் கவலை, சந்தோசங்களை வெளிப்படுத்தினால் தான் உங்கள் அத்தைப் பையனும் அதைத் தொடர்ந்து செய்து கொண்டிருப்பார். எதையும் கவனிக்காதது போல, அல்லது அதைப் பற்றிக் கவலைப்படாதது போல் இருந்து விட்டால் அவர்கள் தாமாகவே நிறுத்திக் கொண்டு விடுவார்கள்.
முடிந்தவரை வீட்டில் இருக்கும் போது தனிமையில் இருப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அத்தையின் கண்ணில் படக்கூடியவாறு அல்லது, நீங்கள் பேசுவது அத்தைக்குக் கேட்கக் கூடிய வகையில் இருந்து கொள்ளுங்கள். இது அத்தைப் பையனின் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்க்க உதவியாக இருக்கும். பொதுவாக ஆண்கள் தமது அம்மாவுக்கு முன்னால் மோசமாக நடந்து கொள்ள மாட்டார்கள். அப்படியே நடந்து கொண்டாலும் தாய் அதைக் கண்டிப்பாள். அத்தை அவனைக் கண்டிப்பதில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படிக் கண்டிக்கா விட்டாலும், அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவவால் அவதானிக்கக் கூடியதாக இருக்கும். அதனால், உங்களைப் பற்றித் தேவையற்ற அபிப்பிராயங்கள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
இறுதியாக இந்த அக்கா உங்களுக்கு திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்ல விரும்புவது...
# என்ன பிரச்சனை வந்தாலும் என் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்... உங்களது எந்தத் தடுமாற்ற உணர்வும் படிப்பில் தாக்கம் செலுத்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அது ஒன்றே உங்களுக்கு இறுதி வரை கை கொடுக்கும்...

நல்லது நட்பு நெஞ்சங்களே... இந்த சிநேகிதியுடன் ஒரு நீண்ட பயணம் செய்து வந்திருக்கிறீர்கள்.. உங்கள் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறேன்.  
உங்கள் கருத்துக்களையும் கேள்விகளையும் வழக்கம் போலpoongothaichelvan8@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்... காத்திருக்கிறேன்...
நட்புடன் உங்கள் சிநேகிதி...

Tuesday, 5 November 2013

தனிமையில் பெண்ணும் நட்பின் தொல்லைகளும்.... சிநேகிதியுடன் - தொடர் 1

வணக்கம் அன்புத் தோழிகளே....

எனது இந்த புதிய தொடர்  தமிழ்நண்பர்கள் தளத்தில் இணைந்திருக்கும் உங்களுக்குப் பலவிதங்களில் உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு ஆரம்பிக்கிறேன்... இவை என்னோடு அன்பாகப் பழகிய சில தோழிகள் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளை என்னோடு பகிர்ந்து கொண்ட போது அவர்களுக்கு நான் கூறிய ஆலோசனைகளும் வழிகாட்டல்களும்...
நான் மிகப்பெரிய அனுபவம் வாய்ந்தவள் இல்லையெனினும், என் தோழிகள் என்னுடன் மனம்விட்டுப் பேசும் தருணங்களில் அவர்களுக்குப் பயனுள்ளவளாக இருந்திருக்கிறேன்.. இனியும் இருக்க விரும்புகிறேன்... அது மட்டுமன்றி என் வாழ்க்கைக்கும் கூட இந்த தேடல் பயன்படும் என நம்புகிறேன்.
இங்கே பகிரப்படும் கேள்வி பதில்களில் பெயர்களும் இடங்களும் மாற்றம் செய்யப்பட்டே பதிவு செய்யப்படுகின்றன என்பதை அன்புத் தோழிகளுக்கு தெரிவிக்கிறேன்.... எனவே இத்தொடரைப் படிப்பவர்கள், இதனால் தாங்கள் அடையும் பயன்களையும், தங்கள் கருத்துக்களையும் மட்டுமன்றி, என் ஆலோசனையில் உள்ள தவறுகளையும் சுட்டிக் காட்டும்படி அன்போடு கேட்டுக் கொள்கிறேன்...

இன்னும்... தோழிகள், இளவயதுப் பருவத்தினர் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் அல்லது சந்தேகங்களை எனக்குத் தெரிவிக்கும்பட்சத்தில் அக்கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் கூட இப்பகுதியில் வெளியிட நினைத்துள்ளேன்.. எனவே உங்களிடமும் இருந்து கேள்விகளை எதிர்பார்க்கிறேன். இதன் மூலம் தங்களைப் போன்ற பிரச்சனைகளை எதிர்நோக்கும் ஏனைய பெண்களுக்கும் உதவியாக இருக்கும்.... ஆண்கள் கூட தங்கள் மனைவி, பிள்ளைகள், மற்றும் தெரிந்தவர்களின் சார்பில் கேள்விகளைக்  கேட்கலாம்... வாரம்  ஒரு கேள்விக்கான பதிலையே பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.
தங்கள் கேள்விகளை அனுப்புகிறவர்கள் கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்...
 
மின்னஞ்சல்: poongothaichelvan8@gmail.com

உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்...
தொடர்ந்து இன்றைய கேள்விக்குள் பயணிப்போமா???சிநேகிதியுடன்....

தோழி, எனக்கு 40 வயதாகிறது, வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியூரில் தனியாக வசிக்கிறேன். அன்பான கணவர், மக்கள் இருவர்.
இங்கு நான் வேலைக்கு வந்த இடத்தில் ஒருவருடன் நட்பு ஏற்பட்டது.
அது சாதாரண நட்பாகவே இருந்தது. தனியாக இருக்கும் எனக்கு இந்தப் புதிய ஊரில் பல உதவிகள் செய்துள்ளார், ஆனால் அவர் இப்போது என்னை மிகவும் விரும்புகிறார் என்பதை சொன்னார். அவருக்கு மனைவி இல்லை. பல உதவிகளை அவரிடம் இருந்து பெற்ற எனக்கு அவரை எதிர்கொள்ள முடியவில்லை.
மிகவும் தர்மசங்கடத்தில் உள்ளேன்.. இந்த நிலையில் நான் என்ன செய்யலாம்... ஒரு ஆலோசனை சொல்லுங்களேன்...

தனிமையில் சில நிமிடம்.....

பெயர் குறிப்பிட விரும்பாத தோழிக்கு!
சிநேகிதியின் அன்பான வணக்கம்..
தங்கள் பிரச்சனை அறிந்து கொண்டேன்.
வெளியூரில் தனியாக வேலை நிமித்தம் வாழும் பெண்களுக்கு இத்தகைய பிரச்சனைகள் வருவது. இயல்பு.
உங்கள் சங்கடத்துக்கு நான் தரும் சில ஆலோசனைகள் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.
உங்களுக்கு உதவி செய்த அந்த நண்பருடன் எவ்வளவு காலம் உங்களுக்கு நட்பு இருந்துள்ளது என்பதைப் பொறுத்து நீங்கள் செயற்பட வேண்டிய அவசியம் இங்கே இருக்கிறது.

  1. அந்த நண்பர் உங்களுக்கு குறுகியகாலமாகத்தான் நண்பரா? அப்படியானால் உடனடியாக அவரிடம் இருந்து விலகி விடுங்கள். அவர் உங்களுக்கு உதவி செய்ததன் பிரதான நோக்கமும் இதுவாகவே இருக்கும்.
  2.  
  3. அந்த நண்பர் நீண்டகாலம் நண்பராக இருந்து பல உதவிகளைச் செய்து வந்த பின் அவருக்கு அப்படி ஒரு மன நிலை ஏற்பட்டிருக்கிறது என்றால், அதுவும் மனித இயல்பே. இங்கே எம்முடைய நெறிப்படுத்தலும் மன உறுதியும் அவசியமாக உள்ளது.

சகோதரி, உங்கள் நண்பருக்கு  மனைவி இல்லை என்பதைப் பற்றி துளியேனும் நீங்கள் சங்கடப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவர் மீது எழும் பச்சாத்தாபம் உங்களைத் தவறான முடிவுக்கு கொன்டு செல்லும். அதை விடுத்து எத்தனையோ வாழ்விழந்த பெண்களும் முதிர்கன்னிகளும் காத்திருக்கிறார்கள் என்பதை அவருக்குத் தெளிவு படுத்துங்கள். அவர் அன்பு செய்வது இன்னொருவனின் மனைவியை என்பதை, அதாவது நீங்கள் மாற்றானின் மனைவி என்பதை அவருக்கு தெளிவாகவும் உறுதியோடும் கூறுங்கள்.  ஒருவர் செய்யும் உதவிகளுக்கு பிரதியுபகாரமாக எந்த உதவியையும் செய்யலாம். ஆனால் வாழ்க்கையைக் கொடுக்க முடியாது. அப்படி அந்த நண்பர் எதிர்பார்த்தால், அவர் உங்களுக்கு செய்த உதவிகளுக்கு அர்த்தமே மாறிவிடும். அவரிடம் “நமக்கிடையே இருந்தது வெறும் நட்பு மட்டுமே” என்று வலியுறுத்துங்கள். உங்கள் குடும்பத்தை, முக்கியமாக உங்கள் கணவனை நீங்கள் எவ்வளவு தூரம் அன்பு செய்கிறீர்கள் என்பதையும், கணவருக்கும் குழந்தைகளுக்கும் நீங்கள் துரோகம் செய்ய முடியாது, அவர்களை மறந்து வாழ முடியாது என்பதையும் தெளிவாக அவருக்கு வெளிப்படுத்துங்கள்,

சில வேளைகளில் இது தற்கொலை செய்துவிடப் போவதான மிரட்டலுக்கும் மாற வாய்ப்பு உண்டு. ஒருவேளை அப்படியொரு சந்தர்ப்பம் ஏற்படுமாயின், அந்த நேரம் நீங்கள் பிடித்து வைத்திருக்க வேண்டியது உங்கள் மன உறுதியைத் தான். பெண்களின் இளகிய மனதைப் பயன்படுத்தப் பிரயோகிக்கும் ஆயுதம் இது. அந்த நண்பரை தனிமையில் சந்திப்பதை நிறுத்திவிடுங்கள். முடிந்தவரையிலும் நண்பிகளோடு அல்லது யாராவது நம்பிக்கைக்குரிய பெண்களோடு சேர்ந்திருக்க ஆரம்பியுங்கள்.

இன்னும், உங்கள் மனதில் தடுமாற்றம் ஏற்படாமல் இருக்க, உங்கள் கணவன் பிள்ளைகளோடு அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் கணவனுடனான இனிமையான வாழ்க்கையின் நினைவுகளை மீட்டும் வகையில், திருமணப் புகைப்படங்களோ அல்லது கணவன் பிள்ளைகளோடு நின்று எடுத்த நிழற்படங்களைப் பார்த்துக் கொள்ளலாம். மனதுக்கு இதமளிக்கும் நல்ல நூல்களை வாசிக்கவோ. அல்லது, மனதுக்கு இதம் தரும் மெல்லிசைப் பாடல்களை இரசிக்கவோ ஆரம்பியுங்கள், உங்கள் கணவன், பிள்ளைகளுடனான எதிர்கால வாழ்க்கை பற்றித் திட்டமிடுங்கள்.
மொத்தத்தில், நீங்கள் உங்களைப் பலப்படுத்திக் கொண்டு அந்த நண்பரிடம் முழு மன உறுதியோடு அவரின் விருப்பத்தை நிராகரித்து விடுங்கள்.

எப்படியும் வாழலாம் என்று வாழாமல், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற எண்ணதை உறுதியாக உங்களுக்குள் பதித்துக் கொள்ளுங்கள். அது உங்களை நெறிப்படுத்தும்... 

நண்பிகளே, நண்பர்களே.... இந்த வாரம் தனிமையில் சில நிமிடங்கள் இனிதே என்னோடு பயணித்தீர்களா.. உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள மறக்காதீர்கள்.. காத்திருக்கிறேன்..

அன்புடன் சிநேகிதி