Wednesday, 11 July 2012

என் தம்பி...



என் தம்பிக்குத் திருமணமாம்...
எப்படியோ கேள்விப்பட்டேன்..
கனிவான நாட்கள் கனவானபோது
கரைகின்றன கண்கள் மட்டும்
தொலை தூரமாகித்
தொலைந்து போன அன்பை எண்ணி...
அக்காஎன்றழைத்துச் சேதி சொல்ல
அவன் உறவு இன்றில்லை..
அக்காலம் இனி எங்கே..
ஊமைக்காயங்கள் உள்ளே வலிக்க..
உண்மையாய்த் திட்டினேன்...
ஒரு வார்த்தையேனும் அவன் பேசவில்லையே...
அமைதியாகிப் போனான்... அவன் உறவும் கூட..
அவன் மணமாலையின் மலராகவல்ல...
விருந்தின் பின் கை துடைத்து
வீசிவிடும் கடதாசியாகக்கூட
அங்கெனக்கு இடமில்லை... இருந்தாலும்
காயம் பட்டதெனிலும் இது கல் நெஞ்சல்ல...உள்ளே
கசிந்தூறூம் பாசம் ஒரு போதும் பொய்யல்ல..
அதனால்...
பாசத்துக்குரிய என் தம்பிக்கு...
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ...
என் மனதார வாழ்த்துகிறேன்... 
அன்புடன் அக்கா





இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!