Showing posts with label அம்மா நான். Show all posts
Showing posts with label அம்மா நான். Show all posts

Wednesday, 27 February 2013

தலைசாய்த்தேன் தாய்மடியே.. தருகின்றேன் வாழ்த்துப் பல..


கருவில் என்னை உருவாக்கி
உருவமாய் உலகுக்குத் தந்தவள் இன்று
தரணியில் உதித்த நாள்..
தலைசாய்த்தேன் தாய்மடியே..
தருகின்றேன் வாழ்த்துப் பல..
உயிர் கொடுத்து ஊன் கொடுத்து
உலகில் உலவ விட்ட
தாய்மைக்கு என் வணக்கம்...

பெற்றவளே என் தாயே- என்னைப்
பெண்ணாக ஈன்றதனால் தான்
பெருமைமிகு தாய்மை உணர்ந்தேன்..
பிஞ்சு விரல்களைப் பற்றி நீ முத்தமிட்டிருப்பாய்
பால் வழியும் கடைவாயைத் துடைத்து
பதித்திருப்பாய் உன் பாச இதழ்..
பிறிதொருநாளில் இவையெல்லாம்
பழைய நினைவுகளாகிப் போம்...
பசுமையாய் நிற்பதுன் பாச நினைவுகள் மட்டுமே
கற்பனையில் என்னை மேதையாய்
கண்டிருப்பாய்.. நானோ உனக்கு
சான்றோள் எனும் உவகை தந்தேனில்லை- தாயே
நல்லதொரு சேயாய் இல்லையென்றாலும்
நல்லதொரு தாயாய் வாழ முனைகின்றேன்
தாய்மைக்கு என் சேய்களும் தலை வணங்குமாறே...
அதுவரை உன்னை எனக்குள்
அன்புச் சேயாக்கிக் கொண்டேன்...
தொடர்கின்ற வாழ்நாள் முழுதும்- எண்ணத்
தொட்டிலிலே நீயாட வேண்டும்
சோர்ந்து போய்விழும் வேளையிலெல்லாம்
சின்னச் சிரிப்பினால் உயிர்மீள வேண்டும்

-என்
வழி முழுதும் வண்ணமாக உன்
வாடாத பாதமலர்கள் வேண்டும்
என்னோடு கொஞ்சி மகிழும் உன்
இன்மழலை மொழி வேண்டும்...
என்னோடு நீ வேண்டும்..
எனக்குள்ளே நீ வேண்டும்..
என் தேவனிடம் மண்டியிட்டுக் கேட்டேன்
என் தேவதை நீ நீடு வாழ வேண்டும்..

அன்புடன்
உன் மகள் பூங்கோதை