இன்று அன்னையர் தினம்...
உலகெங்கும் அன்னையர் மகிழும் நாள்..
உதரத்தில் சுமந்தவரை போற்றும் நாள்...
உத்தமத் தாய்களின் நாளிதனில்
உண்மை மகிழ்வைத் தொலைத்துவிட்டு
உலகுக்காய் தினம் சிரிக்கும்- தாய்
உள்ளங்களை நினைக்கின்றேன்....தாம்
ஈன்ற பிள்ளைகளின் நிலையறியா
ஈழத்து அன்னையரை நினைக்கின்றேன்..
வருவேன் என்று சென்றவன் வரவில்லை...
யார் கொண்டு சென்றாரோ?....
பருவ மங்கையாய் பார்த்துப் பார்த்து வளர்க்க
பாதகர்கள் சீரழித்தாரே என் பாசக்கிளியை......
கைது செய்து கொண்டு சென்றார்
காலங்கள் கடந்தும் விடுதலை இல்லை..
குருதி வெளியேற, தண்ணீர் கேட்டு
கதறித் துடித்து என் மடியில் மரித்தானே.....
கண்மூடித் திறக்கும் முன்னே என்
கண்முன்னே சிதறிச் செத்தானே ....
களத்திலே வீரனாகி மடிந்தான்.. அவன்
கனவுகள் மெய்ப்படுமா இல்லையா.. – இன்னும்
ஓடித் திரிந்தவன் அங்கமிழந்து
ஓய்ந்து போனானே...
இப்படி
ஒரு போதும் ஆறாத வடுக்களோடு
இன்னும் தன் பிள்ளைகளை நினைத்தேங்கும்
ஈழத்துத் தாய்மாரை நினைக்கின்றேன்....
இவர்களும் மகிழும் ஒரு அன்னையர் தினம்
இனியும் வருமா? எப்போது?
| Tweet | |||



