Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

Monday, 15 April 2013

ஏழாண்டு நிறைவில் என்தந்தை நினைவில்....

(என் மூத்த சகோதரி நெலோமி அன்ரனிக்குரூஸ் என் தந்தையின் நினைவாக எழுதிய பாடல்.. )

பாட்டெழுதி நின்ற குயில்


பறந்து போய் ஏழாண்டு

கூட்டுக் குருவிகள் தேடியும் கிடைக்கல

குடும்பவிளக்காய் நின்ற தலைவனை..

எட்டில் சரித்திரம் ஆகிய தந்தையை

சரித்திரத்தில் மாமனிதனாய்

சிரிக்கும் வல்லவன்...

பலகலையும் தனக்குள் கொண்டும்..

பெருமை கொள்ளா நன் மனத்தான்

பலம் கொண்ட நாவினன்

பயம் அறியா நெஞ்சினன்

பெற்றவன் என்று சொல்ல நெஞ்சு

பெருமையில் மிதக்குது..

தந்தையே உங்கள் கனவுகளை

சிந்தையில் கொண்டோம் உம மக்கள்..

நிச்சயம் உங்கள் ஆசைப்படி..

நின்று உழைப்பேன் தமிழுக்காய்..

ஆண்டுகள் பல ஓடினாலும்

அகலாது உங்கள் நினைவு என்றும்..

Thursday, 21 March 2013

எழுத்துலகில் என் எண்ணச்சாரல்கள்..-2




வணக்கம் என் இனிய நட்பு நெஞ்சங்களே..

வாங்க... இன்றும் என் எண்ணச்சாரலில் நனைந்து பயணிப்போம். இன்றோடு இந்தப் பயணத்தை சத்தியமா முடிவுக்கு கொண்டு வந்துவிடுவேன். அதனால, கொஞ்சூண்டு பொறுமையையும் கையில எடுத்துக் கொண்டு பயணத்தை ஆரம்பிங்க...

ம்ம்.. எங்கே விட்டேன்... ஆங்...... எழுத்துலகில் நான் தவழ ஆரம்பித்தது மட்டும் தான்... இதன் பின்னர் நான் தொண்டு நிறுவனங்களில் முழுநேரமாகப் பணியாற்றியமையாலும், திருமணமாகி மன்னாரில் குடியேறியமையாலும் என் முயற்சிகள் மீண்டும் தொய்வடையத் தொடங்கின. ஏன்..... சோம்பேறித்தனமும் காரணம்னு சொல்லவேண்டியது தானே...

இதன் பின் என் பணிமாற்றல் காரணமாக மீண்டும் வன்னி மண்ணில், கிளிநொச்சியில் வாழ ஆரம்பித்திருந்தேன். ஆனால் என் வேலை காரணமாக, இந்தத்தடவை நான் முன்னர் போல் எழுத்துத் துறையில் அதிகம் ஈடுபட முடியவில்லை.

ஆனால் இந்தக் காலகட்டத்தின் இறுதிப்பகுதியில் 2008ல் , செஞ்சோலை வளாகத்தில் விமானக்குண்டுவீச்சுக்கு இரையான மாணவிகளின் நினைவாக ‘குருதிச்சுவடிகள்’ என்ற ஒரு சிறிய கவிதை நூலை அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வில் வெளியிட்டேன். என் எழுத்துலகில் நூல் வடிவிலான முதல் பிரசவிப்பு அது. ஆனாலும் இடப்பெயர்வின் ஆரம்பக் காலம் என்பதால், கருவிலிருந்து புறப்பட்டு பூமியைப் பார்த்த மாத்திரத்திலேயே மூச்சடங்கிப் போன குழந்தையாகிப் போனது அந்த நூல். இடப்பெயர்வின் காரணமாக அதன் ஒரு பிரதியைக் கூட என்னால் காப்பாற்ற முடியாமல் போனது.....

இதே இறுதிக் கட்டத்தில் தான், என் அலுவலகத்தில் என்னோடு பணிபுரிந்த என் நண்பி ஒரு நாள்....
“இஞ்ச, உமக்கு கவிதைகள் வாசிக்க விருப்பம் எல்லோ. நான் ஒரு வெப்சைட் காட்டுறன், பாரும்...” என்று எனக்கு ஒரு வலைப்பூவை அறிமுகப்படுத்தினாள்.  அது சாத்வீகன் என்ற ஒரு பதிவருடைய வலைப்பூ. மிகவும் அழகாக, மனதைக் கவரும் விதமாக வடிவமைக்கப் பட்டிருந்தது. கவிதைகளும் கூட மனதைத் தொடுவனவாக அமைந்திருந்தன. மவுஸை கவிதைக்கு அருகில் நகர்த்தும்போது அதற்கேற்ற திரைப்படப்பாடல் ஒலிக்குமாறு அது வடிவமைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த போது, நானும் ஒரு வலைப்பதிவராவேன் எனத் துளியளவும் நினைக்கவில்லை. அந்தளவுக்கு தொழில்நுட்பம்.... நமக்கு இந்தத் தொழில்நுட்பமெல்லாம் ஜீரோங்க.... இப்பொழுதும் கூட பல வேளைகளில் எனக்கு தொழில்நுட்பம் தான் பெரும் சவாலாக  அமைந்து விடுகிறது. (சாத்வீகனின் வலைப்பூவை இடப்பெயர்வுக் காலத்தின் பின் எத்தனையோ தடவைகள் தேடினேன்.. அது இணையத்தில் இருப்பதாகவே தெரியவில்லை. எனினும், என் வலைப்பூ உருவாக ஏதோ ஒருவிதத்தில் காரணமாக இருந்த அந்த வலைப்பதிவருக்கு என் மானசீகமான நன்றிகள்.)

இப்படி சில தடவைகள் அந்த வலைப்பூவைத் திறந்து அதிலுள்ள கவிதைகளை மட்டும் சுவைத்து வந்த நான் ஒரு நாள் அதன் முகவரியை மறந்துவிட்டதால், கூகிளில் Blog/Blogger என்று தேடப்போக Create your own blogger என்று ஒரு தலைப்பு வந்தது. அதைப் பார்த்ததும் சும்மா முயன்று பார்ப்போமே என நினைத்து அதற்குள் நுழைந்து எப்படியோ எனக்கு ஒரு வலைப்பூவை தயாரித்து விட்டேன். பொதுவா கணனியில் எதைப் பார்த்தாலும் நோண்ட ஆரம்பிக்கிறது.. இதனால் மாட்டிக் கொண்ட சந்தர்ப்பங்கள் நிறைய்ய்ய்ய...  இது தற்செயலாக நடந்தது தான். ஆனால் தமிழ் யுனிக்கோட் எழுத்து முறை எனக்கு நீண்டகாலமாகத் தெரியாது. அதனால் அதில் பாமினி எழுத்துருவில் தட்டச்சு செய்து ஒரு கவிதையைப் பதிவிட்டேன். எல்லாம் வெறும் பெட்டி பெட்டியாகத் தெரிந்தது. என்ன செய்யலாம் என்று இல்லாத மூளையைக் கசக்க ஆரம்பித்தேன். அப்பொழுது தான் என் அலுவலகத்தில் எங்கள் ஆலோசகராகப் பணிபுரிந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனக்குத் தெரிந்த முறையில் உதவ முன்வந்தார். அவருக்கும் அதிகம் தெரியாவிட்டாலும் என்னைவிடத் பல விடயம் தெரிந்திருந்தார்.

அவர் செய்தது என்னவென்றால் HTML ல் போய் எங்கெல்லாம் எழுத்துருவுக்கான இடம் வருகிறதோ அங்கெல்லாம் பாமினி என்று மாற்றி விட்டார். இப்பொழுது எனது கணனியில் நான் பதிவிட்டவை தமிழ் எழுத்தில் தெரிந்தது. இதன் பின் இடப்பெயர்வு.. அதிகம் பதிவு எழுதவில்லை. இடப்பெயர்வுக்குப் பின்னர் பல கவிதைகளை எழுதி அதே பாமினி எழுத்துருவிலேயே எனது பதிவுகளைப் போட்டேன். ஆனால் நீண்ட நாட்களின் பின் தான் ஒரு உண்மையைத் தெரிந்து கொண்டேன். எனது பதிவுகள் யாருடைய கணணியில் எல்லாம் பாமினி எழுத்துரு இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே தமிழில் தெரியும். மற்றவர்களுக்கு வெறும் பெட்டி தான்......ஹீ...ஹீ.... J நான் என்ன தான் செய்ய முடியும்.. அப்படியே விட்டு விட்டேன்.

ஏனென்றால் நான் இந்த வலைப்பூவை ஒரு சேமிப்பிடமாக மட்டுமே கருதி வந்தேன். என் பழைய படைப்புகளைப் பார்த்தீர்களானால், பல கவிதைகளுக்கு பின்னூட்டங்களே இருக்காது. அந்தக் கவிதைகளை யாரும் வாசித்திருக்கக்கூட மாட்டார்கள். எனக்கு எப்போது என் உணர்வுகள் தூண்டப்பட்டுக் கவிதை பிறக்கிறதோ அப்போது அதை இங்கே பதிந்து வைப்பேன். அவ்வளவு தான். யாராவது படிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் அதிகமாக இருக்கவில்லை.

இப்படியாக என் உணர்வுகளை மட்டுமே சேமித்து வந்த வலைப்பூவில், ஒரு சிறந்த பதிவரான தம்பி யாதவனின் (கவியழகன்) ‘பிளாக்கர் தொடங்கிய கதை’ மூலமாகவும் அவருடைய 100வது பதிவினூடாகவும் சில பதிவர்களின் காலடி பட ஆரம்பித்தது. அதில நம்ம பக்கம் கொஞ்சம் காற்று அடிச்சுவிட்டிருக்கிறார்.... அதே வேளை தம்பி யாதவன் இன்ட்லியில் இணைக்கும் முறையையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். தம்பி யாதவனுக்கு இந்த வேளையில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நான் தொடர்ச்சியாக பதிவிடுவதில்லை என்பதால் அதுவும் நாளடைவில் நின்று போனது.

என் புலப்பெயர்வின் பின், 2011ன் நடுப்பகுதியில் தான் எனக்கு யுனிக்கோட் எழுத்து முறையை ஒருவர் நல்ல மனதோடு அறிமுகப்படுத்தி வைத்தார். என் பதிவுலகில் ஒரு படி முன்னேற்றம் இது தான்.. அவர் வேறு யாருமில்லை. என் அன்புத்தம்பி பிரபல பதிவர் மதியோடை- மதிசுதா தான். அன்று அவர் சொல்லித்தராவிட்டால், ஒருவேளை இன்று வரையும் யுனிக்கோட் முறை தெரியாமலே இருந்திருக்குமோ என நான் நினைப்பதுண்டு. ஹ்ம்ம் இதனால நீண்ட நாட்களாக பாமினி எழுத்துரு தட்டச்சு முறை பழக்கத்தில் இல்லாமல் போனதால் அதை அறவே மறந்து போனேன் என்பது வேறு கதை...  இவர் தன்னுடைய வலைப்பூவிலும் என்னை அறிமுகப்படுத்தியிருந்தார். தம்பி சுதாவுக்கு இந்த வேளையில் என் அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே வேளை, கடந்த கார்த்திகை மாதத்தில் இருந்து அவ்வப்போது என் படைப்புக்கள், நீண்டகாலத்தின் பின் மீண்டும் ஒலிவடிவம் பெற்று வானலையில் வலம் வர ஒரு நண்பர் காரணமாக இருக்கிறார். அவர் தான் பிரபல பதிவரும் புரட்சி வானொலியின் அறிவிப்பாளருமான ஆர் ஜே நிருபன். இதற்காக நண்பர் நிருபனுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து...... அண்மைக் காலமாகத் தான் நான் அதிகம் முகநூலினூடாக என் பதிவுகளை பகிர ஆரம்பித்திருக்கிறேன். இதைவிடவும், என் பதிவுகளை சில வாரங்களாக பல புதிய பதிவர்கள் பார்வையிட இன்னுமொரு நண்பர் காரணமாக இருந்திருக்கிறார். அவர் தான் பிரபல பதிவர் நண்பர் மாத்தியோசி மணி அவர்கள். இவர் செய்த காரியம் என்னவென்றால், தமிழ்மணத்தில் என் பதிவுகளைப் பகிரும் முறையை அறிமுகப்படுத்தியது தான். தமிழ்மணம் பற்றிய இவருடைய அறிமுகப் பதிவின் தொடரும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த வேளையில் நண்பர் மணிக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்மணத்தில் அண்மையில் இணைந்து கொண்டமையால் ஓட்டுப் பட்டை சரியாக செயற்படவில்லை. இதற்கு என் வலைப்பூவின் தொழில்நுட்பக் கோளாறு ஏதாவது காரணமாக இருக்கலாம்... ஆனாலும், ஓட்டுப் பதிவிற்கான இணைப்பை என் பதிவுகளில் தொடுத்து வைத்திருக்கிறேன். அது வழக்கத்துக்கு மாறானது என்பதால், என் வலைத்தளத்துக்கு வரும் பதிவர்களின் கண்களில் அந்த இணைப்பு தவறுப்பட்டுப் போகிறது. இதனால், பதிவைப் படித்து இரசித்து, ஆக்கபூர்வமான பின்னூட்டங்களைக் கொடுப்பவர்கள் கூட எனக்கு ஓட்டுப் போடாமல் ஓடி விடுகிறார்கள்.... :(( இனிமேல் கவனியுங்கோ நண்பர்களே.... இனி ஒழுங்கா ஓட்டுப் போடுற ஆட்களுக்கு நான் குட்டிக் குட்டிப் பரிசுத்திட்டம் எல்லாம் கொண்டு வரப்போறன்...ஹீ..ஹீ..ஹீ...

இந்நாள் வரைக்கும் என் பதிவுகளைப் படித்து கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்தி வந்த அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்..... எங்க கிளம்பிட்டீங்க.... கொஞ்சம் பொறுங்க... நன்றி சொல்லி விட்டேன் என்பதால் இது முடிவுரை இல்லை... ஆரம்ப உரை... அதனால் ஒவ்வொரு பதிவிலும் உங்கள் ஊக்குவிப்பு எனக்கு அவசியம்... எனவே தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களையும், மறக்க்க்க்காமல் தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டுக்களையும் போட்டு என்னை ஊக்குவிப்பீங்க என்று நம்புகிறேன்..
எல்லாவற்றிற்கும் மேலால், என் பெற்றோருக்குப் பின் என் எழுத்துப்பணியில் என் சுதந்திரத்துக்கு எந்தவித இடையூறுமின்றி, அதே வேளையில் தன் முழு ஊக்குவிப்பையும் கொடுத்தவரும் கொடுத்துக் கொண்டிருப்பவரும் என் கணவர் தான். என் அன்புக் கணவருக்கு இந்த வேளையில் என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
இவ்வளவு தானுங்க என் எழுத்துலகப் பின்னணி... இரண்டு பதிவுகளில் ரொம்பவே அறுத்திட்டேன்... அப்படின்னு நீங்க நினைச்சால்.... மன்னிச்சிடுங்க... வைத்திய செலவுகள் பொறுப்பேற்கப்பட மாட்டாது..... :))
அடுத்த பதிவில், வலைப்பூவில் எனக்கு ஒரு கொண்டாட்டம்.. எல்லாரும் சேர்ந்து கொண்டாடுவோம்... காத்திருங்க...

Sunday, 17 March 2013

எழுத்துலகில் என் எண்ணச்சாரல்கள்..-1

தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டுக்களைப் பதிவு செய்ய இங்கே கிளிக்குங்க..

வணக்கம் என் இனிய உறவுகளே..
நலம் தானே...
ஒரு புதிய படியில் காலடி வைப்பதற்கு முன், என்னைப் பற்றியும், எழுத்துலகில் என் பின்னணி பற்றியும் சிறு அறிமுகம் செய்யலாம் என்பது தான் இந்தப் பதிவின் நோக்கம்.

என்னடா இது.. எல்லாருமே ஆரம்பத்தில் தானே அறிமுகம் செய்வார்கள்.. இடையில் வந்து இது என்ன ஒரு அலப்பறை.... என்று நீங்க முணு முணுக்கிறது எனக்கு நல்லாவே கேட்குது... நான் இனித்தான் எழுதவே ஆரம்பிக்கப் போறேனுங்க... அது தான் இந்த அறிமுகம்.

இது கொஞ்சம் நீண்ட பயணம் என்பதால் இரண்டு தொடராக பதிவு செய்யலாம் என எண்ணுகிறேன்.. எனவே இதை தொடர்ச்சியான சுய தம்பட்டம் என்று யாரும் எண்ணிடாதீங்க... இந்த வலைப்பூ என் உணர்வுகளின் சேமிப்பிடம். இந்த சில பதிவுகளினால், என்னைப் பற்றிய சில தகவல்களையும் சேமிக்கலாம் என நினைக்கின்றேன். எப்பொழுதாவது என் பிள்ளைகளுக்கோ அல்லது வேறு யாருக்கோ நான் யார்? எப்படி ஏன் எழுத ஆரம்பித்தேன் என்ற கேள்விகளுக்கு இது விடையாகலாம்...  (ஆமா.. பெரீய இவ... ஹீ..ஹீ..ஹீ..)
ம்ம்.. நம்ம மைண்ட் வாய்ஸே நம்மள விட மாட்டேங்குதே.. மற்றவங்களை எப்படிக் குற்றம் சொல்றது...

சரி வாங்க நண்பர்களே என் எண்ணச் சாரலில் நனையலாம்..
முதலில் என்னைப்பற்றிய ஒரு அறிமுகம்:
நான் பூங்கோதை... அதான் தெரியுமே..
இது என் தந்தை என் 17வது வயதில் எனக்கு சூட்டிய புனை பெயர். ஈழத்தில், வன்னியின் சில பகுதிகளில் நான் இந்தப் பெயரால் அறியப்பட்டவளாகவே இருக்கிறேன். அப்பா, அம்மா இரண்டு பேருடைய மூலவேர்களும் - மன்னார்தான். ஆனாலும் நான் பிறந்ததும், வளர்ந்ததில் பாதிக்காலமும் யாழ்ப்பாணம் தான். என் வாழ்வின் முக்கியமான மிகுதிப் பகுதியில்.. அதாவது நான் வளர்ந்த மீதிக் காலம் வன்னி. இடப்பெயர்வுகளால் வன்னியில் மல்லாவி, புதுக்குடியிருப்பு, ஆகிய இடங்களில் கல்வி கற்றிருந்தாலும், என் பாடசாலைக் காலத்தின் இறுதிப்பகுதி, நான் மிகவும் நேசிக்கும் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியே. இங்கு தான் நான் மாணவர்களிடையேயும் ஆசிரியர்களிடையேயும் ஓரளவு அறியப்பட்டவளாகவும் வாழ்ந்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் என்னைத் தேடாதீங்க.... இதில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கும் எனக்கும் இடையில் ஒரே பாடசாலையில் படித்திருக்கிறோம் என்பதைத் தவிர, வேற ஒரு சம்பந்தமும் கிடையாதுங்க.. என் பாடசாலை முகப்பில் இரு புறமும் அந்த அழகிய தேமா மரங்கள் பூத்துக்குலுங்கிய படியே நிழல் கொடுக்கும். அண்மையில் எடுத்த படங்களில் இந்த மரங்கள் காணாமல் போயிருக்கின்றன. அதனால தான் கூகிளில் தேடி யாரோ பழைய மாணவர்களின் படத்தைப் போட்டிருக்கிறேன்.




அம்மா அப்பா ஐந்து பெண்கள், ஒரு ஆண்பிள்ளை என  எட்டு அங்கத்தவர்கள் அடங்கிய ஒரு கலகலப்பான குடும்பத்தில் நான் ஐந்தாவதாகப் பிறந்தவள்.. இதனால் நல்ல பெற்றோர், வழிகாட்ட அக்காமார், நட்புக்கு அண்ணா, செல்லத்துக்கு தங்கை..என குதூகலமாக கட்டியெழுப்பப்பட்ட ஒரு குடும்பத்தில் இறைவன் என்னைத் தோற்றுவித்திருந்தான்.
இத்தனைக்கும் மேலால், என் குடும்பத்தில் நான் பெற்ற மிகப் பெரிய வரப்பிரசாதம் தான் இந்த எழுத்தாற்றல். என் தந்தை ஒரு கலைஞனாக, கவிஞனாக, எழுத்தாளானாக வாழ்ந்தவர். (நிச்சயம் என் இன்னொரு பதிவில் என் தந்தையைப் பற்றிய விரிவான வரலாறு ஒன்றைப் பதிவிட எண்ணுகிறேன்.) 

என் தந்தையிடம் பரம்பரையாகக் கடத்தப்பட்ட எழுத்தாற்றல் அவரது பிள்ளைகளுக்கும் கடத்தப்பட்டிருக்கும் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.
அந்த வகையில் எனக்குள் முளை விட்டது தான் இந்த ஆர்வம். ஆனாலும் என் முயற்சியின்மையால் இன்னும் வெறும் சாரலாக மட்டுமே தூவிக்கொண்டிருக்கிறது.

எனக்குத் தெரிந்து முதன் முதலாக நான் எனது 13 வது வயதில் லெப். கேணல் திலீபனின் நினைவு நாளில் “பார்த்தீபா.. பார்” என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதினேன். இது என் பாடசாலையில் மாணவர் நிகழ்வில் வாசித்தேன். எப்போதும் சிறுவர்கள் பாடசாலையில் கவிதை வாசித்தால், அது பெரியவர்கள் எழுதிக் கொடுத்தது என்று தான் நினைப்பார்கள். அதனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. நானும் நான் எழுதிய கவிதையை சில மாணவிகள் முன் வாசித்துவிட்ட சந்தோசத்தால், மற்றவர்களின் பாராட்டைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் அதை என் தந்தையிடம் காட்டிய போது என்னை மிகவும் பாராட்டினார். அன்றே “நீ கொஞ்சம் கவிதைகள் எழுதித்தா.. ஒரு நூல் வெளியிடுவோம்” என்றார். ஆனால் அதற்குப் பின் நான் எழுதிய மிகச்சில கவிதைகளைக் கூட சேமித்து வைத்ததில்லை. ஆங்காங்கே தேவைக்காக எழுதுவேன்.. பின்னர் அது எப்படியோ தொலைந்து போய்விடும். என்னுடைய இந்த அலட்சியப் போக்கால் என் வாழ்வில் தொலைத்தவை ஏராளம். ஆனால் ‘நான்’ தொலைந்து போகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற வரையில் சந்தோசமே....

இடையில் சில கால மாற்றங்களால்.. குடும்பத்தினருடன் வாழமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எழுத்துத் துறையில் என் முயற்சி குன்றிப் போனதற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். மீண்டும் என் 17 வது வயதில் தான் என் பெற்றோருடன் இணைந்து வாழும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்பொழுது நான் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் மாணவியாக இருந்தேன்.

இந்தக் காலத்தில் என் தந்தையோடு இணைந்து சில கவியரங்கங்களிலும், வானொலி நிகழ்வுகளிலும் என் கவிதைகளை அரங்கேற்றினேன். எனக்கு ஓரளவு குரல் வளம் இருந்தமையால் வானொலியில் ஏனைய நிகழ்ச்சிகளிலும் குரல் கொடுக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இதுவே எனக்குள் நான் ஒரு அறிவிப்பாளராக வேண்டும் என்ற கனவைத் தோற்றுவித்தது எனலாம். ஆனாலும் அது கால மாற்றங்களால் கைகூடாமல் போனது மட்டுமன்றி, இப்பொழுது அது காலங் கடந்துவிட்ட கனவாகவும் ஆகிவிட்டது.

அதே வேளை வானொலியில் எனது சில சிறுகதைகளும் கூட ஒலிபரப்பப்பட்டன.
சிறுகதை பற்றி நான் பேச விழையும் போது என் ஞாபகத்தில் நின்று சிரிப்பவர்... நான் என்றும் மதிக்கும், நேசிக்கும் என் தமிழ் ஆசிரியர்... திரு. விஜயன் ஆசிரியர் அவர்களே. என் பாடசாலையில் அவர் எனக்கு தமிழாசிரியராகவும், பாடசாலைக்கு வெளியே பல வழிகளிலும் நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்து என்னை வழிநடத்தியவர். இவர் ஒரு எழுத்தாளாரும் கூட. ஒரு கண்டிப்பான ஆசானாக மட்டுமன்றி ஒரு தோழமையோடும் என்னை அணுகிய ஒரே ஆசிரியர் இவர் தான் என்றால் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. என் தந்தைக்கு அடுத்ததாக என் எழுத்து துறையில் என்னை ஊக்குவித்தவர் விஜயன் ஆசிரியரே. குறிப்பாக என்னிடம் சிறுகதை எழுதும் ஆற்றலும் இருக்கிறது என என் தந்தைக்கு முன்பதாக இனங்கண்டவர் இவர்தான். ஏனென்றால், பாடசாலையில் அனைத்து தமிழ் பரீட்சையிலும் கட்டுரைக்குப் பதிலாக சிறுகதை தான் தேர்ந்தெடுத்து எழுதுவேன். இன்று எனக்கும் திரு.விஜயன் ஆசிரியருக்குமான தொடர்புகள் என் புலப்பெயர்வால் துண்டிக்கப்பட்டிருந்தாலும், எங்கோ ஒரு தொலைவில் இருந்து அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன் என்றே நம்புகிறேன்.

என் வாழ்வில் நான் பெற்ற மிகப்பெரும் பாக்கியம் என் தந்தையோடும், என் ஆசிரியரோடும் ஒரு சித்திரைப் புத்தாண்டில், ஒரே மேடையில் கவியரங்கம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது தான். அதுவும் இந்த நிகழ்வு நான் படித்துக் கொண்டிருந்த பாடசாலை மைதானத்திலேயே நடந்தது.
இப்படித்தான் என் எழுத்துலகில் நான் தவழ ஆரம்பித்திருந்தேன்...

இன்னும் வரும் என் எண்ணச்சாரல்கள்.... அடுத்த பதிவில் சந்திப்போம்....



Sunday, 9 December 2012

என் செல்ல வாயாடி...



என் இரண்டாவது பெண் யாகவி...

அவளுடைய சுட்டித்தனங்கள் என்று சொல்வதை விட.. அவர்கள் பேசும் பெரிய விசயங்கள் இருக்கே.. கொஞ்சம் அதிகமாவே தெரிந்தாலும் நான் வாயில் விரலை வைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இதுவரையும் பல விடயங்களை மறந்துட்டேன்.. ஆனால் இன்னைக்கிருந்து அவ பேசுற இந்த வாயாடித்தனமான பேச்சுக்களைப் பதிவு செய்யப் போறன்... எதுக்கு என்று கேட்கிறீங்களா? இந்த குழந்தைத் தனம் அவர்கள் வளர்ந்த பின்னர் அவர்களுக்கே இரசிக்கும்படியா இருக்கும்... அப்போ அவங்க படுற வெட்கத்தை நாங்களும் கண்டு இரசிக்கலாமில்ல...

இண்டைக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஸ்கைப்பில் தொடர்பு கொண்டேன்...

புது ட்ரெஸ் எடுத்திருக்கா..அதையெல்லாம் என்னட்ட காட்டினா. அதோட கலர் பற்றி பேசினோம்.. என்ன கலர் பிடிக்கும்  என்று கேட்டேன்.. எல்லாம் லைற் கலரா சொன்னா..

பிங்க் பிடிக்கும், வெளிர் நீலம், மெல்லிய பச்சை.. என்று சொல்லிட்டே போனா..

சரி எந்தக் கலர் பிடிகாது என்றதுக்கு படக்கென கருப்பு நிறம் பிடிக்காது என்றா.. 

உடனே நான் சொன்னேன் வளர்ந்ததும் கருப்பு மாப்பிளையைத்தான் கட்டித் தருவேன் என்று..

உடனே சொன்னா பாருங்க...

எனக்கு கருப்பு மாப்பிளையும் வேணாம் ஒண்ணும் வேணாம் என் அத்தான் `சாம்`ஐக் தான் 

கட்டித் தாங்க எண்டாள்...

சிரிப்பு அடக்கமுடியாமல் அடக்கிக் கொண்டே கேட்டேன்..’’ 
அதுக்கு அத்தை ஓம் எண்டு சொல்ல வேணுமே.. ஓமெண்டுவாவா?” என்று கேட்டேன்..
 5 வயசுப் பொண்ணுங்க... என்ன சொல்லுச்சுன்னு தெரியுமா?

அது எனக்குத் தெரியுமா? நீங்க தான் கதைக்க வேணும்... இப்ப நீங்க முடிவெடுக்கிறீங்களா இல்ல 

நான் முடிவெடுக்கவாண்ணு... ஹையோ.. ஹையொ... இதுக்கு மேல என்னால அடக்க முடியாம 

சிரிச்சு சிரிச்சு களைச்சிட்டேன்...

அப்படி ஒரு வாயாடிங்க..ஆனால் என் சிரிப்பைக் கண்டு அவ வெட்கப்படல்ல... தன் அத்தானைப் 

பற்றிப் பேசும் போது நான் சிரிச்சுட்டேன் என்று என்னுடன் கோபித்துக் கொண்டு எழுந்து 

போய்ட்டா.. பிறகு அவளை சமாதானப்படுத்தி கூப்பிட 5 நிமிசமாச்சு...


இதுங்களையெல்லாம் எப்படி வளர்க்கப்போறேனோ ஆண்டவா.....

 ****

அதற்கு முந்திய வாரம் (இரண்டு வாரங்களுக்கு முன்) பேசிய போது என்ன பேசினான்னா...

அவளது அக்கா முறையான பிள்ளை எங்கள் வீட்டில் பரீச்சைக்காக வந்து நின்று படிக்கிறாள். 

அவள் என் மகளை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போயிருக்கிறா.. அப்படிப் போகும்போது யாரோ 

இரண்டு பையன்கள் சைக்கிளில் பின் கரியரில் இருந்த என் மகளைப் பார்த்து (சின்னப் பெண்ணை 

சீண்டலாம் என் நினைத்துப் போல...) கண் அடித்திருக்கிறார்கள்.


உடனே அக்காவிடம் சொல்லியிருக்கிறாள்... ”நான் இனிமேல் சைக்கிள்ல வரமாட்டேன்.. இந்தப் 


பெடியங்கள் கண் அடிக்கிறாங்கள்..” என்று.. அக்கா அதைப் பற்றிக் கேட்க அவள் 

சொல்லியிருக்கிறாள்... ”எனக்கு அவங்களைத் தெரியும்... ஒருத்தன் கறுப்பு மற்றவன் வெள்ளை... 

நான் இப்பவே பொலீசில போய் சொல்லப் போறன் எண்டு..”.


அப்பாடா.. என் பொண்ணு பொழைச்சிக்குவா... என்ன சொல்றீங்க?? J



இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?...

Wednesday, 11 July 2012

என் தம்பி...



என் தம்பிக்குத் திருமணமாம்...
எப்படியோ கேள்விப்பட்டேன்..
கனிவான நாட்கள் கனவானபோது
கரைகின்றன கண்கள் மட்டும்
தொலை தூரமாகித்
தொலைந்து போன அன்பை எண்ணி...
அக்காஎன்றழைத்துச் சேதி சொல்ல
அவன் உறவு இன்றில்லை..
அக்காலம் இனி எங்கே..
ஊமைக்காயங்கள் உள்ளே வலிக்க..
உண்மையாய்த் திட்டினேன்...
ஒரு வார்த்தையேனும் அவன் பேசவில்லையே...
அமைதியாகிப் போனான்... அவன் உறவும் கூட..
அவன் மணமாலையின் மலராகவல்ல...
விருந்தின் பின் கை துடைத்து
வீசிவிடும் கடதாசியாகக்கூட
அங்கெனக்கு இடமில்லை... இருந்தாலும்
காயம் பட்டதெனிலும் இது கல் நெஞ்சல்ல...உள்ளே
கசிந்தூறூம் பாசம் ஒரு போதும் பொய்யல்ல..
அதனால்...
பாசத்துக்குரிய என் தம்பிக்கு...
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ...
என் மனதார வாழ்த்துகிறேன்... 
அன்புடன் அக்கா





இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Wednesday, 18 April 2012

காத்திருப்பு

கர்ப்பதிலிருந்து தாயின்

கரங்களிலே தவழ்வதற்காய் காத்திருப்பு

பள்ளிப் பருவத்திலே 

பரீட்சை முடிவுகளுக்காய் காத்திருப்பு

கன்னிப் பருவத்திலே

காதல் கணவனுக்காய் காத்திருப்பு

கைப்பிடித்த பின்னர் ஒரு

குழந்தைக்காய் காத்திருப்பு

வன்னி மண்ணிலே உயிர்

வாழ்வதற்காய் காத்திருப்பு

மீண்ட பின்னர் வாழ்வில்

மீண்டும் எழுவதற்காய் காத்திருப்பு

வெளிநாடு செல்வதற்காய் காத்திருப்பு

விசாவுக்காய் காத்திருப்பு- நல்ல

வேலைக்காய் காத்திருப்பு... இவற்றிற்காய்

இறைபதத்தில் காத்திருப்பு

எப்போது முடியும் இந்த

இடைவிடாத காத்திருப்பு...?



இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Monday, 16 January 2012

பொங்கல்



எங்கும் ஆரவாரம் தங்குகின்ற திருநாள்
எங்கள் உழவர்களின் எக்காளத் திருநாள்
தங்கத் தமிழரொலாம் மகிழ்கின்ற திருநாள்
பொங்கும் உவகையுடன் பொங்குகின்ற திருநாள்

அங்கு இருந்த போது அப்படித் தான் பொங்கல்
அவளருகில் இருந்த போது அப்படித் தான் பொங்கல்
அன்னை மடியினிலே அப்படித் தான் பொங்கல்-அதற்கின்று
அத்தனை உறவுகளும் தொலைந்ததனால் தடங்கல்.

பானை ஏற்றிவிடும் அப்பன் இன்று இல்லை
பக்தியோடு தேவாரம் பாடத் தங்கை இல்லை
இலை விரித்துப் பொங்கலிட அன்னை இன்று இல்லை
இடை விடாது வெடி வெடடிக்கும் தம்பி கூட இல்லை

ஆதவன் எம் வாழ்க்கையிலே அஸ்த்தமித்து நாளாச்சு
ஆனந்தமாய் புதிர் எடுக்கும் காலமெல்லாம் போச்சு
பாதகரின் கரங்களிலே பசுமையெல்லாம் போச்சு
பாpதவித்து வேதனையால் விழி பொங்கலாச்சு

ஆனாலும் நம்பிக்கைத் தீ பரவலாச்சு
அடுப்பினிலே விரக்திகளைச் சுட்டரிக்கலாச்சு
தாழ்வற்ற தமிழனாக வாழ எழுந்தாச்சு
தளர்ந்தவர்க்குக் கரம் கொடுக்கும் உணர்வு பொங்கலாச்சு

Monday, 2 May 2011

குருதி தோய்ந்த நிலவு

தோழி... 
நினைவுச் சுழலுக்குள் அவ்வப்போது
நுழைந்து கொள்கிறாய்....
நிர்மூலமாக்கப்பட்ட என் கனவுகளில்
நிலவாக இடையிடையே....
கன்னக் குழி விழக் கதைகள் சொன்னதும்- உன்
மென்னகைக்குள் என் இரசனைச் சிறகுகள்
மெல்லப் புதைந்ததும்....
சின்னாபின்னமாய்ப் போன நினைவுகள்....
சின்ன இதயத்தை சிறுகச் சிறுகக் கொல்லும்
கிராதகர்கள்... எப்படி முடிந்தது உன்
சிவந்த மேனியைக் குதறித் தள்ள...
சட்டித் தொப்பிக்குள் சாக்கடையின் உறைவிடம்
தட்டிக் கேட்க நாதியின்றி நாணிக் குறுகி
தலை குனிகிறேன்... தணலாக
தகிக்கிறது குருதி தோய்ந்த நிலவு...



Friday, 18 February 2011

புத்த‌ம் புதிதாய் மீண்டும் நீ எழுவாய்

வாழ்வில் மகிழ்ச்சி பலமுறை வந்திடும்
தாழ்ந்து போகையில் வாழ்க்கையே வெறுத்திடும்
தாழ்விலும் மனிதா சிந்தனை செய்திடு‍ _நீ
தாண்டி வந்திட்ட மகிழ்ச்சியின் கணங்களை

சின்ன‌க் குழந்தையாய் தாயின் முலையிலே
சுரந்த‌ பாலினைக் குடித்த‌து ம‌கிழ்ச்சி
க‌ன்ன‌ம் ந‌னைந்திட‌ பெற்ற‌வ‌ள் நித்த‌மும்
தந்த‌ முத்த‌ங்க‌ள் தித்திக்கும் ம‌கிழ்ச்சி

ப‌ள்ளிப் ப‌ருவ‌த்தில் ப‌ற‌ந்து திரிந்த‌தும்
புள்ளி மான்க‌ளாய் பாய்ந்து திரிந்த‌தும்
ப‌ண்ணிய‌ குறும்புக‌ள் ஆயிர‌ம் ஆயிர‌ம்
எண்ணிப் பார‌டா எத்த‌னை ம‌கிழ்ச்சி

ப‌ருவ‌ வ‌ய‌திலே ம‌ங்கையாய் க‌ளையாய்
பாடித் திரிந்த‌தை ஆடி ம‌கிழ்ந்த‌தை
ந‌ட்புக்க‌ள் சூழ‌ வாழ்ந்த‌தை எண்ணு
நிச்ச‌ய‌ம் அதுவே ம‌கிழ்ச்சி என்பாய்

க‌ன்னிய‌ர் த‌மைக் க‌ண்ட‌தும் அவ‌ர்
க‌டைக்க‌ண் பார்வை ப‌ட்ட‌து ம‌கிழ்ச்சி
சின்ன‌தாய் புன்ன‌கை சிந்தினால் போதும்
ஐயகோ ஐய‌கோ ம‌கிழ்ச்சி மேல் ம‌கிழ்ச்சி

வ‌ண்ண‌க் க‌ன‌வுக‌ள் க‌ண்டு திழைத்த‌தும்
வாழ்க்கையில் இல‌ட்சிய‌ம் கொண்டு ந‌ட‌ந்த‌தும்
திண்ணிய‌ முடிவுக‌ள் ந‌ட‌த்தி முடித்த‌தும்
எண்ணிப்பார் ம‌கிழ்ச்சியில் எப்ப‌டி மூழ்கினாய்

எத்த‌னை ப‌சுமை நினைவுக‌ள் நெஞ்சில்
இத்த‌னை போதும் உன்னை நீ மீட்க‌
எத்த‌னை இட‌ர்க‌ள் வந்த‌ போதிலும்
புத்த‌ம் புதிதாய் மீண்டும் நீ எழுவாய்






Saturday, 7 November 2009

வேண்டாம்...வேண்டாம்

பாலிய நினைவுகள் பசுமையானதென
பலர் சொல்லக் கேட்டதுண்டு
பொறாமைகூடப்பட்டதுண்டு
நானும் திரும்பிப் பார்த்தேன்-அங்கே
கற்களும் முட்களும் தந்த இரத்தக்
கறைபடிந்த பாதச்சுவடுகள்...
தேம்பலும் விம்மலுமாய்த்
தள்ளாடி நடந்த அந்த
தளர் நடைச் சுவடுகள்...
விழுந்து எழுந்த போதெல்லாம்
விட்டு வந்த அந்த
வேதனைச் சிதறல்கள்....
வேண்டாம் வேண்டாம்
பாலிய நினைவுகள் வேண்டாம்
புதைக்க விரும்புகிறேன் அந்த
புழுத்துப் போன பிணத்தை