Showing posts with label விடுதலை. Show all posts
Showing posts with label விடுதலை. Show all posts

Tuesday, 26 November 2013

இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்தோமோ?? - அகவை 59




ஐயம் தகர்த்து அடிமை நிலையகற்ற
வையத்தில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்க
மெய்யாய் ஒரு உதயம் தோன்றிய
ஐம்பத் தொன்பதாம் அகவை இன்று

பொய்யாத மானமும் பொங்கிடும் வீரமும்
கைவினைத் தீரமும் கொண்ட நம் தலைவன்
இங்கிவனை யாம் பெறவே
என்ன தவம் செய்தோமோ????
              ***
சோதனை ஆயிரம் சுமந்து நடந்தவன்
வேதனை தாங்கியே வேகமாய் நடந்தவன்..
போதனை செய்துமே பேதமை தகர்த்தவன்- நம்
சாதனைத் தலைவனாய் சரித்திரம் சமைத்தவன்
இங்கிவனை யாம் பெறவே
என்ன தவம் செய்தோமோ????
              ***
மானத்தின் பொருளுணர்த்தி நின்ற
மாதவத் தலைவன் இவன் – நாம்
போதிமரம் கண்டதில்லை இவன்
போதனைகள் கொண்டோம்
நாதியற்று அலைந்த தமிழர்க்கு
நானிலத்தில் முகவரி கொடுத்தவன்
இங்கிவனை யாம் பெறவே
என்ன தவம் செய்தோமோ???
              ***
வற்றிப் போன குளத்து மீன்களாய்
வானம் பார்த்து நிற்கின்றோம்
வருண தேவன் அவன் வருகை தேடி…
கொடுங்கோன்மை இருளினிலே
கடுந்தவமாய் காத்திருக்கின்றோம்
சூரியத் தலைவனின் எழுகை தேடி…

உலகத் தமிழருக்கே ஓர் தலைவனாய்
உயர்ந்த கலங்கரை விளக்கம்…
ஒப்பில்லாப் பெரும் சுடர் இவன்

அகவை ஐம்பத் தொன்பதில்
அகிலத்தில் ஒளிரும் ஆதவன்..
உவகை பெருகுதையா எம்
ஒற்றைத் தலைவன் இவன் என்றே
ஓங்கி ஒலிக்கும் போது…

தீரமும் தியாகமும் தீர்க்க தரிசனமும்
தீராத விடுதலைத் தாகமும் நெஞ்சில்
தீயாகச் சுமந்தவன்- எம்
தேசியத்தின் பெரும் தலைவன்..
ஊரார் பேசவில்லை இன்று
உலகம் பேசுதையா- இவன்
ஒப்பற்ற மேன்மையை…
              ***
விடுதலைத் தாகம் சுமந்து நம்மை
கடுகதியாய் இயங்க வைத்த சக்தி இவன்…
செந்தமிழன் வரலாற்றில்
சக்தியும் இவனே, இயக்கமும் இவனே…
சக்தியும் இயக்கமும் அழிந்து போகும்
சாத்தியம் இல்லை அறிவியலில்…

பெண்களை வெறும் பூக்களல்ல
புயல்களென்று உலகுக்குப்
புரிய வைத்தவனும் இவனே..
பெண்ணினமே பெருமை கொள்ளுது -எம்
பெரும் தலைவன் இவனென்று சொல்லுதற்கு..
              ***
வளர்த்த கடா மார்பில் முட்டும்
வேதனைகள் சுமந்தவன் – எனினும்
வீரத்தில் குன்றாது விவேகமாய் நடந்தவன்..நேற்று
முளைத்த அரசியல் காளான்கள்- இவன்
மகத்துவம் அறிவாரோ….
பிழைப்புக்காய் அடி வருடும் பித்தர்களுக்கு- இவன்
பெருமை புரியாது…
விலை போகமுடியாத விண்விளக்கு
தலை வணங்கா நம் தானைத் தலைவன்
              ***
தமிழ் வளர்க்கச் சங்கம் வளர்த்தார்
அன்றய மன்னவர்கள்.. இவன்
தமிழ் வளர்க்க உயிர்கொடுக்கும்
தனிப்படை வளர்த்த மன்னவன் இவன்..
தன் வாழ்வை முற்றிலுமாய்த்
தமிழுக்காய், தமிழர்க்காய் தானே ஈந்தவன்

மாதச் செல்வன்.. எம் சூரியத் தலைவன்
இங்கிவனை யாம் பெறவே
என்ன தவம் செய்தோமோ???

வாழ்வாங்கு வாழ்ந்த இவன்
வாழ்க என்றும் நம் தலைவனாய்!!!
              ***
      

Saturday, 9 March 2013

பெண்ணே குரல் கொடு...

தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டுக்களைப் பதிவிட இங்கே கிளிக்குங்க

International Women's Day -2013

பாதுகாப்பும் சுதந்திரமும் இருக்குதென்றே
பேசாது மௌனியாய் இருக்கும்
பெண்ணே...
பாமரப் பெண்ணுக்கு அவள்
படுக்கையும் அடுக்களையும் சொல்லும்
அடக்குமுறை என்னவென்று....
படித்த பெண்ணுக்கு அவள்
பணியிடம் சொல்லும் அடக்குமுறை...

ஆகாரம் ஆக்கவும் உண்ணவுமன்றி
ஆகாது அவள் வாய் திறத்தல்..
மாமியார் என்றொரு அதிகாரம் கொண்டு
மருமகளை ஆட்டுவிக்கும் அடக்குமுறை
உயரதிகாரி முதல் அத்தனை பேரிடமும்
உதைபட்டுப் பந்தாகும் இழி வாழ்க்கை...
பெண்களே போர்க் கைதிகள் என்றால்
புணர்வதே தண்டனை என வழங்கும்
புல்லர்கள் வாழும் பொல்லாத உலகு..
திராவகம் வீசும் இழிசெயலும்
திரைமறைவில் தாக்குவதும்
தீச்செயல்கள் செய்வதுவும் உன்
தங்கைகளுகெதிராய் என்றுணர்வாய்

பெண்ணே..
காயம் உனக்கில்லை என்றாலும்
காமம் கொண்டலையும் நீசர்மேல்
காறி உமிழ்ந்து விடு
காப்பாற்று உன் சோதரியை..
கடமை உனக்கு அது..
பூவைக்குள் மென்மை மட்டுமல்ல
பூகம்பமும் பூக்கும் எனக்காட்டு
நெஞ்சில் நெருப்பேந்து
கொஞ்சம் விழியில் சினமேந்து
மஞ்சம் உந்தன் தனி வாழ்வை
மட்டுறுத்தும் நிலை மாற்று-விழி
ஈரம் தனைத் துடைத்து – உள
வீரம் தனைப் போர்த்து
பெண்ணாய் பூவுலகில் பிறந்தது உன்
பெருமை என்றே எண்ணம் கொள் -பிற
பெண்களுக்காகக் குரல் உயர்த்து
பெருமை பெறும் உன் பிறப்பு

சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய மகளீர் தின நல்வாழ்த்துக்கள்!!!

Sunday, 24 February 2013

நான் தமிழச்சி என்பதால்...



கண்கள் அக்கிரமம் கண்டும்
மூடிக் கொள்கின்றன.......
காட்சிகளைக் கண்களுக்குள் படமாக்கி
கண்ணீரில் கழுவிப் பின் உலர்விக்கின்றன
தவிப்போடு என் நாவு பேச எழுந்து
துடித்துப் பின் துவழ்கிறது..
முறுக்கேறி என் கரங்கள்
முயல்கின்றன ஏதோ ஒன்றை.....
எல்லாமே தோற்றுப் போகின்றன..
நான் தமிழச்சி என்பதால்...
முள்வேலிக்குள் முடங்கிப் போகிறேன்..
பேசினால் ஒருவேளை அது தான்
என் இறுதிப் பேச்சு....- இது
கோழைத்தனம் என்று எனக்குள்
குறுகிப் போகிறேன்....ஆனாலும்
இன்றே நான் அழிந்து விட்டால்..
எனக்குள் சேமித்து வைத்திருக்கும்
நம்மவர் தியாகங்களும்..
நம் இனத்தின் அவலங்களும்
என் சந்ததிக்கு யார் பகிர்வார்...
ஆனாலும்
குமுறி எழுகின்ற யாவையும்
கொட்ட முடியா வேதனை...
பிரசவிக்க முடியாக் கருபோல்
பேரவலமாய் உள்ளிருந்து எழும்
மரண வலியோடு நான்......

அன்பான ஆர்வலரே.. உங்கள் தமிழ்மண வாக்குப் பதிவுகளுக்காக இங்கே கிளிக்குங்க..






Thursday, 21 February 2013

பரமசிவன் கழுத்தில் இருந்து.......

வணக்கம் நண்பர்களே!
இது ஒரு வித்தியாசமான பதிவு...
பதிவுக்கு போறதுக்கு முன்னாடை ஒரு கதை சொல்றன் கேளுங்க...

சிவனின் கழுத்தில் ரொம்பநாளாகவே இருக்கும் பாம்புக்கு ஒரு கவலை... தன் இனத்துப் பாம்புகள் எல்லாம் ஊர்ந்து தரையில் திரிகின்றனவே.. எவ்வளவு கஸ்ரப்பட்டு இரை தேடுகிறார்களே என்று வேதனைப் பட்டுச்சாம்.. தனக்கு கிடைத்த நல்ல வாழ்க்கையைப் பற்றி சந்தோசமும் பெருமையும் இருந்தாலும் தன் இனத்து பாம்புகளைப் பற்றி மிகவும் கவலை அதை வாட்டிக்கிட்டே இருந்துச்சாம்.. அது கூட சிவனின் கழுத்துக்கு வருவதற்கு முன் இதை எல்லாம் அனுபவித்தது தானே...

அப்படியான வேதனை மிகுந்த உணர்வுகளோடு காத்திருந்த பாம்பு.. ஒருமுறை வேலியில் ஊர்ந்து கொண்டிருந்த பாம்பிடம் கேட்டதாம்... நண்பா எப்படியிருக்கிறாய்??? உங்களை நினைத்து நான் வேதனைப்படுகிறேன்... என்று ஆரம்பித்து தன் வேதனை உணர்வுகளைக் கொட்டிச்சாம்...
உடனே அந்த வேலிப் பாம்பு சீறிச்சாம் பாருங்க.....
ஆமா.... பரமசிவன் கழுத்துல இருக்குற உனக்கு எங்களுடைய கஸ்டம் புரியுமா???? நீலிக் கண்ணீர் வடிக்கிறாயா??? உனக்கான லாபம் தேடுகிறாயா??? எத்தனை கழுகுகளுக்கு நாங்கள் இரையாகியிருப்போம்... எத்தனை இழப்பை சந்தித்தோம் நாங்கள்... சிவனின் கழுத்தில் இருக்கும் தைரியம்.... உன்னைப் பேசவைக்கிறது.. எங்களுக்காக கவலைப்படக்கூட உனக்கு உரிமை இல்லை...”..   இப்படி வார்த்தைகளைக் கொட்டோ கொட்டென்று கொட்டிச்சாம்....
இதுல என்னங்க நியாயம்???


ஏன் இவங்க எல்லாம் இப்படி இருக்குறாங்க...
சில நாட்களாக மனதுக்குள் கொதித்துக் கொண்டிருந்த விடயம்.. இன்று தம்பி ராஜ் (Kss.Rajh) இன் முகநூல் கருத்து என் உள்ளே குமுறிக் கொண்டிருந்ததை வெடித்து வெளிக் கொணர வைத்தது.

அதாவது ராஜ்ன் கருத்துக்கும் இதற்கும் தொடர்பு இல்லை நண்பர்களே.. தப்பா புரிஞ்சுக்காதீங்க... அவருடைய கருத்துக்கு அதிலயே பின்னூட்டம் போட்டிருந்த இன்னொரு நண்பரின் பரமசிவன் கழுத்துப் பாம்பு என்றா சொல் எனக்கு இதை ஞாபகமூட்டிச்சுன்னு சொல்ல வந்தேன்...


எப்படியோ.. சொல்லாமல் போக இருந்த கருத்தை சொல்வதற்கு.. தான் அறியாமலே தூண்டுதலா இருந்த தம்பி ராஜ்க்கு என் நன்றிகள்..

எமது முகநூல் பக்கம் காண்பிப்பது தற்போது நாம் வாழும் இடத்தையும் எமது நிழற் படங்களையும் மட்டும் தான். எங்கள் உள்ளங்களின் படங்களையோ அல்லது எங்கள் கடந்தகால அனுபவங்களின் படங்களையோ அல்ல...
முகநூலில் வாழிடம் புலம்பெயர் தேசம் என்று இருந்துவிட்டால், அவர்களுக்கு எம் தேசம் பற்றிய உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை தாயக வாழ் மக்களில் சில புரிந்துணர்வற்றவர்களால் தாக்கப்படுகிறது.
கீழ்வரும் பதிவை இரண்டு நாட்களுக்கு முன்னரே தயாரித்து விட்டேன். இப்பொழுது போடனும் என்ற தூண்டுதல்... போட்டுவிட்டேன்....
*********
செம கடுப்பிலே தான் இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்குறன்...

என்னங்க இது அநியாயம்... ஒரு விசயத்தை பேசுறதுக்கு சிங்கள அரசாங்கத்தின்ர ஆட்சிக்கு கீழ தான் கருத்து சுதந்திரம் இல்லையென்றால் இந்தப் பதிவுலகத்தில அழுகிறதுக்கு கூடவா சுதந்திரம் இல்ல...

இதுக்குன்னே சுத்திக் கிட்டிருக்காங்க சில பேர். இவங்களுக்கு ஒரு வித நோயாம்... (யாரப்பா அது.. அந்த நோய்க்கு ஒரு பேரு வையுங்கப்பா...)

ஒரு பக்கம் ஈழமக்களைப் பகடைக்காய்களாக வைத்து கீழ்த்தர அரசியல் செய்பவர்கள் இருக்கிறார்கள் தான்.. இன்னும் சில புல்லுருவிகள் விடுதலைப் போருக்கு எதிரான கருத்துக்களை சொல்லிக் கொண்டு திரியுதுகள்... சிலர்.. ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற கட்சி... இப்படி பல விதமானவர்கள் இருக்கவே இருக்கிறார்கள் அதில் மறுப்பேதும் இல்லை.

ஆனால் இந்தப் புது வித நோய் பிடிச்சு அலையுற ஆட்கள் ஒரு வித்தியாசம்... என்னெண்டால்.. மேல சொல்லியிருக்கிற அத்தனை விதமானவர்களையும் கண்ணுக்குள்ளயே வைச்சுக்கிட்டு... அப்படியே காமாலைக் கண் மாதிரி... எல்லாரையுமே அதே பார்வையில பார்க்கிறது தான் இவங்களோட நோயின்ர அறிகுறி... எல்லாரும் ஒரே மாதிரியாவே தெரியுதாம்...

ஈழம் தொடர்பான எந்தச் சொல்லை யார் பேசினாலும் அது சுயலாபமா தான் இவங்கட கண்ணுக்கு தெரியுதாம்... மற்றவங்க என்ன சொல்லியிருக்கிறாங்க எண்டதை பொறுமையா கருத்து விளங்கி வாசிக்க பொறுமையும் கிடையாது, அறிவும் கிடையாது.. சரி.. அந்தப் பதிவை போட்டவங்க யார்.. அல்லது பதிவாளாரின் ஏனைய பதிவுகள் மூலம் அந்தப் பதிவர் எப்படிப்பட்ட கருத்து கொண்டவர் என்றெல்லாம் ஆராயவும் இவங்களுக்கு முடியுறேல்ல.. அல்லது விருப்பமில்ல...

ஈழதேசத்து செய்திகளைப் பார்த்து என் உணர்வுக் கொந்தழிப்பால் எழுந்த ஓர் கவிதைக்கு அடையாளத்தோடும், அடையாளம் இன்றியும் சில பேர் வந்து என்னைக் கடுப்பேத்திட்டாங்க.

எங்கள் குருதியில் நீங்கள் வெளிநாட்டிலிருந்து குளிர் காயாதீர்கள் என்று சண்டை போடுகிறார்... இவர்கள் எல்லாம் என்ன நினைத்துக் கொண்டு பேசுகிறார்கள் என்று புரியவில்லை.

நாங்கள் புலம்பெயர்ந்து விட்டோம் என்பதற்காக என் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் அழக்கூடாது என்று சட்டம் இயற்ற முனைகிறார்களா??? உங்களால் தன்னும் தாயகத்தின் பாதுகாப்பற்ற சூழலில் இருந்துகொண்டு உரக்கப் பேசமுடிகிறதா??? உங்களால் முடியவில்லை என்றால் அடுத்தவர்களை எதற்குத்  தடுக்கிறீர்கள்... இதை வயிற்றெரிச்சல் என்று எடுத்துக் கொள்ளலாமா??

தாயகத்தில் இருக்கும் உறவுகள் இழப்புகளைச் சந்தித்து உடைந்து போய் இருப்பவர்கள். அவர்கள் பல்வேறு மன அழுத்தங்களில் இருக்கிறார்கள் என்பதும் உண்மைன் தான்.. ஆனால் அதே இழப்புகளைச் சந்தித்தவர்கள் புலம்பெயர்நாடுகளிலும் இருக்கிறார்கள் என்பதை இவர்கள் நினைவிற்கொள்ள வேண்டும்... ஒருவன் புலம்பெயர் நாட்டில் இருந்து எழுதுகிறான் என்றால் அவன் அந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவன் என்றோ, அல்லது ஈழத்தை அறியாதவன் என்றோ இவர்கள் நினைத்தால் இவர்களின் அறியாமையை என்னவென்று சொல்வது...

எல்லா இடத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள்... கெட்டவர்களும் இருக்கிறார்கள். ஈழத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்கள் வேதனையைக் கண்ணால் கண்டு கொண்டே துரோகச்செயல்கள் செய்கிறவர்கள் இருக்கும் போது, புலம்பெயர் நாடுகளில் இல்லாமற் போகமாட்டார்கள்.. எனவே அதை விவாதிக்கவோ நியாயப்படுத்தவோ நான் முயலவில்லை. ஆனால் படைப்புகளை விமர்சிக்க முதல் பகுத்துணரப் பழகுங்கள்...  யாரால் யாருக்கு எழுதப்படுகிறது என்பதை கொஞ்சம் ஆராயுங்கள்.. படைப்பின் நோக்கத்தை உங்கள் பார்வையின்படி  பொதுமைப்படுத்த முனையாதீர்கள்...

என் நண்பர் ஒருவர் சொன்ன கருத்தையும் சொல்றன்... “பத்திரிகைகள் சுயலாபம் என்று கருதி செய்தி வெளியிடாவிட்டால் செய்தி எப்படி மக்களுக்குப் போகும்???” அட.. சரி தானேய்யா.. அப்படி என்றால், இந்த நோய் பிடிச்சவங்களை எல்லாம் இனி பத்திரிகை அலுவலகங்களுக்கு எல்லாம் போய்உங்க லாபத்துக்காக எங்க பிரச்சனையைப் பற்றி பேசாதீங்க..` என்று சண்டை போடச் சொல்லணும்... இவங்களோட இந்த மாலைக் கண்ணுக்கு சனல் 4 கூட எப்படித் தெரியுமோ தெரியலயே....

ஆனால் இந்த நோய்க்கு ஒரே மருந்து, பகுத்தாய்தலென்ற பவர்ஃபுல் கண்ணாடி போடுறது தான்... ஆனால் நீங்க போட்டாலும் போடலன்னாலும்... நாங்க பதிவு போட்டுட்டு தாங்க இருப்போம்...

# ஸ்ஸ்ஸப்பா... இவிய்ய்ங்ககூட கத்துறதுக்கே நம்ம தொண்டைத்தண்ணி வத்திடுதே... இனிமேல் இவங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லப் போறதில்லைங்க...

அடுத்த தடவை ஒரு நல்ல பதிவோட வர முயற்சிக்கிறேன்...
நன்றி...