Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, 12 May 2014

வர்ணமும் வ(லி)ரிகளும்...

உருவக் குத்திய வாளோடும்
உயிர்வலியெடுப்பிலும்
உதிரச் சொரியலிலும்
உருவாகிய கனவுகள்
விடைபெற்றுக் கொள்கின்றன
வலியினை மட்டும் விட்டு விட்டு...

இருளிலிருந்து தூக்கப்பட்டு
கறுப்பு வர்ணத்தை மட்டுமே
வாழ்வின் பரிசாய் கொண்டு
வாழும் இதயங்களோடு இதயமாய்
துடித்துக் கொண்டு தான் இருக்கிறது
பிறந்து விட்டதற்கான தண்டனையாய்.... 

Tuesday, 15 April 2014

சதுரங்க வாழ்க்கை

பற்றியிருந்த கரங்கள் பார்த்திருக்க விலகும்...
எதிர்காலம் தெரியா இருண்ட வழி நெடுக
இடறிச் செல்லும் பாதங்கள்
ஓய்வுக்காய் ஏங்கும்...
ஓய நினைக்கும் போது ஏந்துகிறார்
ஓட நினைக்கும் போது மோதுகிறார்
பாயவும் விடாமல் படுக்கவும் விடாமல்
பந்தாடும் நியாயம் என்ன?
பாசத்திற்குப் பலவழியில் ’செக்’ வைக்கும்
பொல்லாத சதுரங்க வாழ்வு..அதில்
எதையும் தாண்டி வந்து மோத நிற்கும்
விதியென்ற குதிரைப்படை..
நேசக்கரம் நீட்டும் நல்லவரெல்லாம்...
நூல் கட்டி ஆடும் பதுமைகளாய்....
முடிவு யார் கையிலோ........

Monday, 31 March 2014

இருண்ட நினைவுகளாய் நீ...


Thursday, 13 February 2014

வாடீ என் தோழி....

வாடி என் தோழி நட்பின்
வாசனை மலரடி நீயே
வாடிப் போகிறேன் மேலும் -உன்
வாதைகள் கண்டுமே நானும்
தோளில் சாயவும் நீயடி-என்னை
தோளில் தாங்கவும் நீயடி
தாள்கள் தளர்ந்திடும் வேளையில்- என்
தோள்கள் வருடவும் நீயடி..
எங்கு நீ சென்றாலும் தோழி
உன்னோடு நானிருப்பேன் நாடி
தூரப் போகாதே வாடி-என்னை
துயரத்தில் தள்ளாதே போடி...

பொம்மைச் சண்டையெல்லாம் போச்சு
வெம்மை நெஞ்சில் பரவலாச்சு
பொய்மையில் தொலைந்தவள் நானடி-இனி
புவியினில் வாழ்வெனக்கேதடி.
சொல்லியழ முடியவில்லை - நான்
சொல்லிப் புரியும் ரகமுமில்லை
மெல்லும் வழி தெரியவில்லை
மெல்லாதுமிழத் தோன்றவில்லை
ஊர் உறங்கிப் போனதடி தோழி -என்
உசிர் உறங்க மறுக்குதடி  தோழி
பாவி இவ கொண்ட சொந்தம்  தோழி
பாதியிலே  தவிக்குதடி தோழி...
எத்தனை தான் வந்தாலும்  வாழ்வில்
எந்தன் அன்பு மாறாது தோழி
நட்பு வானில் இன்றுபோல் என்றும்
கைகோர்த்துப் பறந்திடுவோம் வாடி....

Tuesday, 14 January 2014

பொங்கடா தம்பி பொங்கு!



கால்வயிற்று கஞ்சியுண்டு


கால்மிதித்து சேற்றினிலே
நாள் முழுதும் உழைப்பவர்க்கு
நன்றி சொல்லும் திருநாளாம்!


உதிரத்தை வியர்வையாக்கி
உரமாக்கி பயிர் செழிக்க
புதிரெடுத்து பொங்கலாக்கி
பகிர்ந்துண்ணும் திருநாளாம்!


பெருமைதரும் தமிழர்க்கோர்
பெருநாளாய்இது இருக்க
பலருக்கு மறந்து போச்சு
பண்பாடும் தொலைந்து போச்சு!


ஆங்கிலேயன் புத்தாண்டு
அனைவருக்கும் பொதுவாச்சு
தங்கத் தமிழன் தைத்திருநாள்
தனி மதத்தின் சடங்காச்சு!


சங்கடமே இல்லாமல்
இங்கிலீசில் பொங்கல் வாழ்த்து
எங்களுக்கும் பொங்கலோ என
சந்தேகத்தில் பலருண்டு!


கருத்துணர்ந்து பொங்கல் பொங்கும்
காலமின்று மாறிப்போச்சு !
பெருமையோடு பொங்கல் வைத்த
பெரும் பண்பு மறைந்து போச்சு!


அடுத்தவீட்டு பொங்கல் உண்ண
என்பிள்ளை போகுமென்று
அதற்காக சிறுபானை
அடுப்பினிலே ஏறலாச்சு!


ஆங்கிலேயப் புத்தாண்டில்
சரக்கடித்து செலவு போச்சு
அடுத்துவரும் பொங்கலுக்கு
அரிசி வாங்க பணமில்லை!


வந்தவரின் கால்தொழுதோம்
வந்தவழி மறந்து போனோம்
செந்தமிழன் மதிகலங்க
சொந்தநிலை தளர்ந்து போனோம்?


வேட்டி கட்டி வாடா தம்பி
பொங்கல் வைக்க வேண்டுமென்றால்
வெட்கப்பட்டு வெளியில் வரானாம்
பிள்ளைக்காரன் பேரனோஇவன்?


பொங்கடா தம்பி பொங்கலைப்பொங்கு !
பொய்த்திடாப் பண்பை காத்திடப்பொங்கு! - தை
திங்களில் முதல் நாள் முற்றத்தில் பொங்கு !
தங்கத்தமிழ் தினம் நாவிலே பொங்கு !


தமிழர் பண்பு மறைத்த கங்குல்
தானாய் விலகும் துணிந்து பொங்கு !
மானமும் வீரமும் நெஞ்சில் கொண்டு
அறத்தமிழ் உரைத்த நெருப்பாய் பொங்கு !


அன்னை மண்ணிலும் அன்னியம் போர்த்து
தன்னிலை மறந்தவர் பேடிமை போக்க
உண்மைத்தமிழனின் உயர்வினைக்காட்ட
உயிர்ப்புடன் மாபெரும் அலையெனப்பொங்கு!


நெஞ்சுதனை நிமிர்த்து நின்று
நான் தமிழனென்று பொங்கு !


வஞ்சம் கொண்டு அழித்த பகைவர்
வாய்பிளந்து வியக்கப்பொங்கு!


இமயம் முதல் ஈழம் வரை
இசைத்த தமிழ் வாழப்பொங்கு!
இனியும் எங்கள் பெருமைப்பேண
இன்றே உறுதி கொண்டு பொங்கு!


மாண்டு போகிலும் மானம் பெரிதென
மாண்டவர் மேன்மை உணர்த்தப்பொங்கு!
ஆண்ட பரம்பரை அடிமை ஆனதால்
சீண்டிய சிறுத்தையாய் சினந்து பொங்கு!


தங்களைத்தமிழராய் எண்ண மறந்தவர்
கண்கள் திறக்க தரணியில் பொங்கு!
மங்கலம் இழந்த தமிழனின் வாழ்வில்
மங்கள ஒளியை ஏற்றப்பொங்கு!
கங்குல் = இருள்

வாழ்த்துக்களுடன்
பூங்கோதை

Tuesday, 26 November 2013

இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்தோமோ?? - அகவை 59




ஐயம் தகர்த்து அடிமை நிலையகற்ற
வையத்தில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்க
மெய்யாய் ஒரு உதயம் தோன்றிய
ஐம்பத் தொன்பதாம் அகவை இன்று

பொய்யாத மானமும் பொங்கிடும் வீரமும்
கைவினைத் தீரமும் கொண்ட நம் தலைவன்
இங்கிவனை யாம் பெறவே
என்ன தவம் செய்தோமோ????
              ***
சோதனை ஆயிரம் சுமந்து நடந்தவன்
வேதனை தாங்கியே வேகமாய் நடந்தவன்..
போதனை செய்துமே பேதமை தகர்த்தவன்- நம்
சாதனைத் தலைவனாய் சரித்திரம் சமைத்தவன்
இங்கிவனை யாம் பெறவே
என்ன தவம் செய்தோமோ????
              ***
மானத்தின் பொருளுணர்த்தி நின்ற
மாதவத் தலைவன் இவன் – நாம்
போதிமரம் கண்டதில்லை இவன்
போதனைகள் கொண்டோம்
நாதியற்று அலைந்த தமிழர்க்கு
நானிலத்தில் முகவரி கொடுத்தவன்
இங்கிவனை யாம் பெறவே
என்ன தவம் செய்தோமோ???
              ***
வற்றிப் போன குளத்து மீன்களாய்
வானம் பார்த்து நிற்கின்றோம்
வருண தேவன் அவன் வருகை தேடி…
கொடுங்கோன்மை இருளினிலே
கடுந்தவமாய் காத்திருக்கின்றோம்
சூரியத் தலைவனின் எழுகை தேடி…

உலகத் தமிழருக்கே ஓர் தலைவனாய்
உயர்ந்த கலங்கரை விளக்கம்…
ஒப்பில்லாப் பெரும் சுடர் இவன்

அகவை ஐம்பத் தொன்பதில்
அகிலத்தில் ஒளிரும் ஆதவன்..
உவகை பெருகுதையா எம்
ஒற்றைத் தலைவன் இவன் என்றே
ஓங்கி ஒலிக்கும் போது…

தீரமும் தியாகமும் தீர்க்க தரிசனமும்
தீராத விடுதலைத் தாகமும் நெஞ்சில்
தீயாகச் சுமந்தவன்- எம்
தேசியத்தின் பெரும் தலைவன்..
ஊரார் பேசவில்லை இன்று
உலகம் பேசுதையா- இவன்
ஒப்பற்ற மேன்மையை…
              ***
விடுதலைத் தாகம் சுமந்து நம்மை
கடுகதியாய் இயங்க வைத்த சக்தி இவன்…
செந்தமிழன் வரலாற்றில்
சக்தியும் இவனே, இயக்கமும் இவனே…
சக்தியும் இயக்கமும் அழிந்து போகும்
சாத்தியம் இல்லை அறிவியலில்…

பெண்களை வெறும் பூக்களல்ல
புயல்களென்று உலகுக்குப்
புரிய வைத்தவனும் இவனே..
பெண்ணினமே பெருமை கொள்ளுது -எம்
பெரும் தலைவன் இவனென்று சொல்லுதற்கு..
              ***
வளர்த்த கடா மார்பில் முட்டும்
வேதனைகள் சுமந்தவன் – எனினும்
வீரத்தில் குன்றாது விவேகமாய் நடந்தவன்..நேற்று
முளைத்த அரசியல் காளான்கள்- இவன்
மகத்துவம் அறிவாரோ….
பிழைப்புக்காய் அடி வருடும் பித்தர்களுக்கு- இவன்
பெருமை புரியாது…
விலை போகமுடியாத விண்விளக்கு
தலை வணங்கா நம் தானைத் தலைவன்
              ***
தமிழ் வளர்க்கச் சங்கம் வளர்த்தார்
அன்றய மன்னவர்கள்.. இவன்
தமிழ் வளர்க்க உயிர்கொடுக்கும்
தனிப்படை வளர்த்த மன்னவன் இவன்..
தன் வாழ்வை முற்றிலுமாய்த்
தமிழுக்காய், தமிழர்க்காய் தானே ஈந்தவன்

மாதச் செல்வன்.. எம் சூரியத் தலைவன்
இங்கிவனை யாம் பெறவே
என்ன தவம் செய்தோமோ???

வாழ்வாங்கு வாழ்ந்த இவன்
வாழ்க என்றும் நம் தலைவனாய்!!!
              ***
      

Wednesday, 28 August 2013

தேவனுக்கொரு தயவான விண்ணப்பம்…



பாசம் என்றொரு உணர்வை தந்து
புவியில் வாழ வைத்த தேவா
நேசத் திருக்கரம் கொண்டென்னை
நித்தமும் அணைக்கும் நாதா

நெஞ்சம் களைத்துப் போயிற்று
நீளும் துயர்களைத் தாங்கி
கொஞ்சம் எனக்கு செவிசாய்ப்பீர்
கொண்ட என் வேண்டுதல் கேட்பதற்கு

வித்தியாசமாய் ஒரு வேண்டுதல் தான்
வித்தகன் உன் தயவு வேண்டுமப்பா
உத்தம அன்பினைப் புரியாதோர்
உள்ளங்கள் உணர்ந்திட அருள் செய்

மிதிக்கவும் அழிக்கவும் நினைப்பவர் நிழலில் என்
மிதியடியேனும் அமர்ந்திட வேண்டாம்
மதித்திடா மாந்தர்கள் முன்னிலை யில்நான்
மண்டியிடும் நிலை மடிவிலும் வேண்டாம்

தேவை கொண்டிவர் உறவைத் தேடா
தனித்துவம் கொண்டவள் என்பதை இவர்
தாமே உணரும் நிலை வர வேண்டும்
பாலும் பழமும் அறுசுவை விருந்தும்
பசிக்கு இவர்கள் அருந்திடும் வேளை
பற்றி எரியும் என் வயிற்றுப் பசிக்கு
பச்சைத் தண்ணீர் பருகிட வேண்டும்- அதைப்
பார்த்து இவர்கள் பரிவுடன் அணுகிட-ஒரு
பருக்கையேனும் இரவாதென் கரம்
பார்த்து இவர்கள் வியந்திட வேண்டும்

தேவைக்கதிக செல்வம் இவரிடம்
தேங்கிக் கிடக்க வேண்டும்- எனக்கு
தேவை பலவும் இருப்பினும் இவர்களை
தேடா மானம் தந்திட வேண்டும்

பொங்கியெழும் என் மானம் கண்டு
புயலும் என்னைப் பணிந்திட வேண்டும்
ஆர்த்தெழும் வேகம் என்னில் கண்டு
ஆழியும் என்முன் அடங்கிட வேண்டும்

தேவைகளோடெனை அணுகிடுவோரைத்
தேற்றிடும் கரங்கள் தந்திட வேண்டும்
குறையா தென்றும் கொட்டிக் கொடுத்திட
குளிர்விக்கும் அன்பே செல்வமாய் வேண்டும்

உயர்விலும் எந்தன் நிலையது மாறா
உறுதியும் தீரமும் குறைவறத் தந்திடு
மரணம் என்னை மூடிடும் வரையிலும்
மனிதனாய் என்னை வாழ விடு

Saturday, 10 August 2013

பயத்தில் பயணிக்கும் நம்மூர்

தமிழுக்கு அமுதென்று பேர் - அந்த


தமிழ் பேசும் தமிழர்க்கு அகதியென்று பேர்


தமதுரிமை கேட்டவர்க்கு புலியென்று பேர்

தர்மத்தைத் தயவின்றிப் பலி கொண்ட போர்

பரிநாசம் செய்தவர்க்கு புகழ் வெற்றித் தேர்


பயம் கொண்ட அமைதிக்குள் பயணிக்கும் நம்மூர்



படம்: கூகிள் தேடல்

Thursday, 20 June 2013

எனக்குள் விசேசித்தவன்!


பாலகனைப் போல் பரிசுக்கடை முழுதும்
பரவி அலையும் என் விழிகளுடன்
உனக்கான ஒன்றைத் தேடி என்
உள்ளத்தை உணர்த்தும் பரிசு எதுவென்று
இயற்கையை  ஊடறுத்து தேடுகிறேன்
ஏதேனும் கிடைக்குமா என்று!
நிச்சயமற்ற  பயணத்தின் முடிவில்
மிச்சமாகின்றன  பெருமூச்சுக்கள்  மட்டும்!
பூச்செண்டுகளும் புதுமைப் பொருட்களும்
பேச்சிழந்து  போகின்றன என் பேராசை கண்டு  - எனக்குள்
நீச்சலடிக்கும்   உன்   நினைவுகள் மட்டும்
நியாயத்தைப் புரிந்து கொள்ளும்
நீ எனக்குள்   விசேசித்தவன் என்பதை...

நட்புடன் 
பூங்கோதை

Monday, 15 April 2013

ஏழாண்டு நிறைவில் என்தந்தை நினைவில்....

(என் மூத்த சகோதரி நெலோமி அன்ரனிக்குரூஸ் என் தந்தையின் நினைவாக எழுதிய பாடல்.. )

பாட்டெழுதி நின்ற குயில்


பறந்து போய் ஏழாண்டு

கூட்டுக் குருவிகள் தேடியும் கிடைக்கல

குடும்பவிளக்காய் நின்ற தலைவனை..

எட்டில் சரித்திரம் ஆகிய தந்தையை

சரித்திரத்தில் மாமனிதனாய்

சிரிக்கும் வல்லவன்...

பலகலையும் தனக்குள் கொண்டும்..

பெருமை கொள்ளா நன் மனத்தான்

பலம் கொண்ட நாவினன்

பயம் அறியா நெஞ்சினன்

பெற்றவன் என்று சொல்ல நெஞ்சு

பெருமையில் மிதக்குது..

தந்தையே உங்கள் கனவுகளை

சிந்தையில் கொண்டோம் உம மக்கள்..

நிச்சயம் உங்கள் ஆசைப்படி..

நின்று உழைப்பேன் தமிழுக்காய்..

ஆண்டுகள் பல ஓடினாலும்

அகலாது உங்கள் நினைவு என்றும்..

Thursday, 4 April 2013

அனங்கனை வாழ்த்துகிறேன்!






இதே நாள் தான், இனிதான நாள், 

இன்றல்லவா நான் 
தாயெனும் முழுமை அடைந்தேன்
மகனே, உன்னால் தானே!



மனதில் பசுமையாக தவழ்கின்றன 

மகனாய் நீ பிறந்த இந்நாளில் - உன்
முகம் காண தவம் இருந்த நாட்களும்
முகம் கண்டு ஆனந்தம் கொண்ட நாளும்...



ஆயிரம் ஆசைகளை மனதில் அடக்கி

அனங்கன் உன்னை ஆசையுடன்
அள்ளி அணைக்க முடியாத தூரத்திலிருந்து
அழுதுகொண்டே வாழ்த்துகிறேன்!



அன்பு சிறந்து நீங்கள் அகிலம் போற்ற வாழ

அனங்கன் உன் நினைவில் 
ஆயிரம் முத்தங்களுடன்
இதயத்திலிருந்து வாழ்த்தும் உன் அம்மா!



Saturday, 16 March 2013

வாராதே வான் மகளே....








நீலவண்ண ஆடை பூண்டு
நிலவுப் பூச்சூடி
நின் அழகு காட்டும் வான்மகளே
நித்தமும் உன்னைப் பார்த்து நான்
ஏங்கிட வைப்பது தகுமோ.. உன்
பாதம் பற்றியழ என்
பக்கத்தில் நீ இல்லையடி..
பார்த்து விழி நீர் சொரிந்தேன்
பாதகம் செய்திடாதே...

போரென்று எம் வாழ்வு
போயாச்சு சீர் குலைஞ்சு.. வேறு
போக்கின்றி உனை நம்பி உன்
பொன்மடியில் கால் வைத்தோம்..
பொழிந்திடாதே காலம் தப்பி
பொறுத்திடுவாய்

கண்ணே மணியே என்றழைத்தால்
கடுகளவும் இரக்கமின்றி
திரும்பிப்பார்க்க மறுக்கின்றாய்...
வாவென்றால் வாராயாம்
வாராதே என இரந்தால்
வாசலில் வந்து நின்று
வந்தனம் சொல்லுகிறாய் ....
வேடிக்கை முழக்கம் போட்டு
வேண்டாத மின்னல் அழகு காட்டி
வெம்பியழ வைக்கின்றாய்

கால் வயிற்றுக் கஞ்சியுண்டு
கலப்பை பிடித்துழுது
வரப்பு வெட்டி நித்தமும்
வியர்வை சிந்தி நீர்பாய்ச்சும் போது
வாராயோ நீயென்று ஏங்கி நிற்பேன்...
வருவாய் போவாய் ...
வராமலும் போவாய்...

நிச்சயமற்ற உன் வரவால்
நெடுநாளாய் வாடிக் கிடப்பேன்..
கட்டியவள் தாலி அடகு வைத்து
களைகொல்லி உரங்களென்று
வகை வகையாய் செலவு செய்து
கடினமாய் உழைத்துப் பயிர் வளர்த்து
கதிர் முற்றி அசையக் கண்ட போது என்
கண்களில் மின்னும் கனவுகள்..

அரிவு வெட்டி விட்டால் வீட்டில்
அடுக்களையும் சிரிக்கும்- என் மனைவி
அஞ்சலையும் காதில் ஐந்து கல்லுத் தோட்டோடு
அடுக்கடி நினைவில் வந்து சிரிப்பாள்
கட்டம்போட்ட பட்டுப் பாவாடையோடு
கடைக்குட்டி காட்டி நிற்பாள் தன் அழகு
ஆசிரியரிடம் இனிமேலும்
திட்டு வாங்கத் தேவையில்லை- என
ஆசையாய் வாங்கிய சப்பாத்தை
அடிக்கடி பார்க்கும் மகனும் வருவான்
ஆனாலும் வான் மகளே.. என்
கனவுத் தீ அவிந்து கண்கள் கசியும்படி
கேலிப் புன்னகை மின்ன...
பெரு முழக்கம் காட்டி
பெண்ணே நீ பொழிவதேனோ..
பேதையாய் நெஞ்சு தவிக்குதடி.. என்
குஞ்சுகளுக்கிரை கொடுக்கும்
கடமையெனக்குள்ளதடி.. அவர்
கஞ்சியையும் பறித்திடாதே
கரம் கூப்பி வேண்டுகிறேன்...
வேண்டிய போது வந்துவிடு தாயே..என்
வேண்டாதவளாய் மட்டும் வந்திடாதே...

Sunday, 10 March 2013

ஈழத்து அன்னையர்....



இன்று அன்னையர் தினம்...
உலகெங்கும் அன்னையர் மகிழும் நாள்..
உதரத்தில் சுமந்தவரை போற்றும் நாள்...
உத்தமத் தாய்களின் நாளிதனில்
உண்மை மகிழ்வைத் தொலைத்துவிட்டு
உலகுக்காய் தினம் சிரிக்கும்- தாய்
உள்ளங்களை நினைக்கின்றேன்....தாம்
ஈன்ற பிள்ளைகளின் நிலையறியா
ஈழத்து அன்னையரை நினைக்கின்றேன்..

வருவேன் என்று சென்றவன் வரவில்லை...
யார் கொண்டு சென்றாரோ?....
பருவ மங்கையாய் பார்த்துப் பார்த்து வளர்க்க
பாதகர்கள் சீரழித்தாரே என் பாசக்கிளியை......
கைது செய்து கொண்டு சென்றார்
காலங்கள் கடந்தும் விடுதலை இல்லை..
குருதி வெளியேற, தண்ணீர் கேட்டு
கதறித் துடித்து என் மடியில் மரித்தானே.....
கண்மூடித் திறக்கும் முன்னே என்
கண்முன்னே சிதறிச் செத்தானே ....
களத்திலே வீரனாகி மடிந்தான்.. அவன்
கனவுகள் மெய்ப்படுமா இல்லையா.. – இன்னும்
ஓடித் திரிந்தவன் அங்கமிழந்து
ஓய்ந்து போனானே...

இப்படி
ஒரு போதும் ஆறாத வடுக்களோடு
இன்னும் தன் பிள்ளைகளை நினைத்தேங்கும்
ஈழத்துத் தாய்மாரை நினைக்கின்றேன்....
இவர்களும் மகிழும் ஒரு அன்னையர் தினம்
இனியும் வருமா? எப்போது?

Saturday, 9 March 2013

பெண்ணே குரல் கொடு...

தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டுக்களைப் பதிவிட இங்கே கிளிக்குங்க

International Women's Day -2013

பாதுகாப்பும் சுதந்திரமும் இருக்குதென்றே
பேசாது மௌனியாய் இருக்கும்
பெண்ணே...
பாமரப் பெண்ணுக்கு அவள்
படுக்கையும் அடுக்களையும் சொல்லும்
அடக்குமுறை என்னவென்று....
படித்த பெண்ணுக்கு அவள்
பணியிடம் சொல்லும் அடக்குமுறை...

ஆகாரம் ஆக்கவும் உண்ணவுமன்றி
ஆகாது அவள் வாய் திறத்தல்..
மாமியார் என்றொரு அதிகாரம் கொண்டு
மருமகளை ஆட்டுவிக்கும் அடக்குமுறை
உயரதிகாரி முதல் அத்தனை பேரிடமும்
உதைபட்டுப் பந்தாகும் இழி வாழ்க்கை...
பெண்களே போர்க் கைதிகள் என்றால்
புணர்வதே தண்டனை என வழங்கும்
புல்லர்கள் வாழும் பொல்லாத உலகு..
திராவகம் வீசும் இழிசெயலும்
திரைமறைவில் தாக்குவதும்
தீச்செயல்கள் செய்வதுவும் உன்
தங்கைகளுகெதிராய் என்றுணர்வாய்

பெண்ணே..
காயம் உனக்கில்லை என்றாலும்
காமம் கொண்டலையும் நீசர்மேல்
காறி உமிழ்ந்து விடு
காப்பாற்று உன் சோதரியை..
கடமை உனக்கு அது..
பூவைக்குள் மென்மை மட்டுமல்ல
பூகம்பமும் பூக்கும் எனக்காட்டு
நெஞ்சில் நெருப்பேந்து
கொஞ்சம் விழியில் சினமேந்து
மஞ்சம் உந்தன் தனி வாழ்வை
மட்டுறுத்தும் நிலை மாற்று-விழி
ஈரம் தனைத் துடைத்து – உள
வீரம் தனைப் போர்த்து
பெண்ணாய் பூவுலகில் பிறந்தது உன்
பெருமை என்றே எண்ணம் கொள் -பிற
பெண்களுக்காகக் குரல் உயர்த்து
பெருமை பெறும் உன் பிறப்பு

சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய மகளீர் தின நல்வாழ்த்துக்கள்!!!

Thursday, 7 March 2013

காட்டுப்புறக் காதல்....


எங்கள் ஊர்ப் பேச்சுவழக்கில் ஒரு கவிதை... சேர்ந்தே இரசிக்கலாம் வாங்க... :))

படம்: யாரோ எப்பொழுதோ முகநூலில் பகிர்ந்தது....


அப்பு:
காட்டுப்புறத்தாலே காலையில மேயவிட்ட
மாட்டைக் கட்ட வந்தவளே.. பிள்ள...
பாட்டு பிறக்குதடி உன் புன்சிரிப்பு பார்க்கயிலே
மீட்டி விட்டாயடி என் வாலிப வயதினையே

ஆச்சி:
புலவுக்குப் போகாம இங்கெதுக்கு வந்தீய..
குலராசா காத்திருப்பான் காவலுக்கு போக
புலம்பாம போங்க புது மாப்பிள போல- நமக்கு
குலவும் வயசும் போச்சுதுங்க

அப்பு: 
காட்டுப் பூ பறித்து என் கைகளில தாடி பிள்ள
வீட்டுப்புறத்தாலே கொல்லையிலே செருகிடுவேன்
காட்டாறு வெள்ளமாய் என் காதல் ஓடுதடி
காட்டாதே வெட்கமடி கொஞ்ச நேரம் பேசிடலாம்

ஆச்சி:
கண்ட சினிமா பார்த்துப் பார்த்து- உங்க
கண்கெட்டுப் போச்சுதுங்க சும்மா
காதல் கீதல் எண்டு கதைக்காதீய...ஆரும்
கண்டால் சிரிக்கப் போறாக..


அப்பு:
சிங்காரி நீ தானாம் சின்ன வயசில் என்று
உங்கம்மா சொன்னாக மெய்யாத்தான் பிள்ள
தங்கம் உனக்கு எழுபதாய்ப் போயும் நீ
மங்காத வெள்ளியடி மரகதம் நீதானடி

ஆச்சி:
பகட்டினது போதுமுங்க புட்டவிக்க வேணுமுங்க                              
பசுமாட்டைப் பிடியுங்க பொழுதுபடப் போகுதுங்க
பார்த்திருந்த மருமகளும் மங்காத்தா ஆடுவாங்க
பாதையைப் பார்த்து வாங்க பால் கோப்பி போடுறேன்க..


புலவு= வயல்
பிள்ள = பிள்ளை (எந்த வயதிலும், தம்மை விட வயதில் இளைய பெண்களை   இப்படி அழைப்பர்)
பகட்டுதல் = பொய்யாகப் பேசுதல் (புழுகுதல்)/ பெருமை பேசுதல்