ஸ்ஸப்ப்ப்பா..... ஒரு வழியா வந்திட்டேனுங்க... எவ்வளவு தூரம் வர வேண்டியிருக்கு ஒரு கொண்டாட்டத்துக்கு..ம்ம்... நான் ரொம்ப ஸ்லோதான்......
அட.... வாங்க.. வாங்க.... என் நட்பு நெஞ்சங்களே... அடுத்த பதிவில் என் வலைப்பூவில் ஒரு கொண்டாட்டம் என்று சொல்லியிருந்தேனே... அது வந்துட்டுது.... வாங்க.. சந்தனம் வைச்சுக்கோங்க... பன்னீர் தெளிச்சுக்கோங்க....
ஆங்..நீங்க திட்டுறது கேட்குது... சரி விசயத்தை சொல்லிடுறேன்...
இன்றைக்கு நான் இடும் பதிவு எனது நூறாஆஆஆஆஆவது பதிவு..... 2008ம் ஆண்டின் இறுதிப் பகுதியில ஆரம்பிச்ச பயணம்.. ஒரு மாதிரி தட்டுத் தடுமாறி ஐந்து வருசத்துக்குப் பிறகு தான் நூறை எட்டிப் பிடிச்சிருக்கிறேன்... ஆமா... பெரீய சாதனைல்ல...ஹ்ம்ம்... ஆகவே இண்டைக்கு விசேசமான இந்தப் பதிவில நான் பேசப் போறதில்ல...... என் வலைப்பூவின் உறவுகள் பேசப் போறாங்க.. அதாங்க..... இவ்வளவு தூரம் கஸ்ரப்பட்டு வந்திருக்கிறேன்ல... அதுக்கு அவங்க எல்லாம் என்ன சொல்றாங்கன்னு பார்க்கலாம்..
இப்பொழுது என் தந்தை உயிரோடு இருந்திருந்தால், அவர் தான் என்னை முதன்முதல் ஆசீர்வதிப்பவர்..... அவர் இல்லாதது என் துரதிர்ஸ்டம்..... அவர் உயிரோடு இல்லாவிட்டாலும் அவர் சார்பில், என் குடும்பத்தின் சார்பில்.... என் தந்தையின் கடைசி முத்து... என் தங்கை என்னை எப்படி வாழ்த்தியிருக்கிறாங்கன்னு பார்க்கலாமா...~
பசுந்தமிழைக் குழைத்து
பவளக் கவி வடித்து
பேசும் இதயங்கள் நெகிழ்ந்து
குவலயமே குளிர்ந்து
வீசு புயலென சதிராடுதே,..
தொப்புள் கொடியில் பூத்த
முல்லைகளில் எந்தனுக்கு
முன்னதாய் பிறந்தவளே
தப்பில்லாக் கவி புனையும்
நல்லதோர் வீணையென
ஒப்பில்லா புகழ் ஓங்க
நல்கினேன் வாழ்த்துக்கள்....
எப்பவும் அன்புள்ள தங்கையிவள்....
இளையவளாய் இருந்தாலும்
இதமான ஆசிதந்தாய்
என்றும் என் நன்றிகள் தங்கையே..
இணைந்தே தமிழ் செய்வோம்..
அடுத்து என் வலையுலகம் எனக்குப் பல உறவுகளைப் பிறப்பித்து தந்திருக்கிறது.. எல்லோருமே என் பதிவுகளைப் படித்து பாராட்டியும் நெறிப்படுத்தியும், உண்மையான தங்கள் விமர்சனங்களை தந்தும், எனக்கு ‘ஓட்டு’ப் போட்டும் என்னை உற்சாகமூட்டுபவர்கள். எல்லோருடைய தொடர்பும் எனக்கு பெற முடியாமையாலும், பதிவை அதிகம் நீட்டி விடாமலும் இருக்க, சிலரிடமிருந்து மட்டும் அவர்களது ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டேன்.
அந்த வகையில்... முதலில்,
வலைப்பூவில் எனக்கு ஒரு அன்னையாக தன் வார்த்தைகளால் என்னைத் தன் மார்போடு அணைத்துக் கொண்ட அம்மா இளமதி இளையநிலா வலைப்பூவின் உரிமையாளர் என்ன சொல்லியிருக்கிறாங்கன்னு பாருங்க...
அன்புமகள் பூங்கோதை! வலையுலகில் நூறு பதிவுகளைப் பதிந்து உனக்கென ஒரு இடத்தினை பெற்றிருக்கும் உன் திறமை மேலும் மேலும் சிறந்து பலநூறு பதிவுகளை நீ பெற்றிட வாழ்த்துகிறேன்...
பதிவு நூறு படைத்திட்டாய் தமிழணங்கே
பொதிந்திட்ட பதிவுகள் இங்கு பெருமைதருதே
விரிந்திந்திட்ட வலையுலகில் உன் பெருமை மேலும்
விண்ணோக்கி வீறுகொண்டு உயரட்டுமே...
மண்வாழும் மனைவாழும் தமிழும்வாழும் நம்
பண் வாழும் பழமைவாழும் பகையதுவீழும் - உன்
சொல் வாழும் சுயம்வாழும் எந்நாளும்
நல்வாழ்வு நனிவாழ வாழுமெம் நட்புக்களுமே
அடுத்து எனக்கு சில அண்ணன்கள் இந்த வலையுலகில்...
எல்லாரையும் தொடர்பு கொள்ள முடியல.. அதனால் மூன்று அண்ணன்களிடம் பெற்றுக் கொண்ட ஆசிகள்.. அவர்களே வயதில் மூத்தவர்களாகவும் இருக்கிறதால அவர்கள் ஆசிகளை பெற்றுக் கொண்டு தொடரலாம் வாங்க... .
முதலில், அருமை அண்ணா பதிவர் பால கணேஷ் 'மின்னல் வரிகள்' மற்றும் 'மேய்ச்சல் மைதானம்' வலைப்பூக்களின் உரிமையாளர் என்ன சொல்லியிருக்கிறார் என்று சேர்ந்தே படிக்கலாம் வாங்க....
தமிழ்ப் பத்திரிகைகளில் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் சிலரது படைப்புகளை விட ஆகச்சிறந்த படைப்புகளை நான் வலையுலகில் கண்டு பலமுறை வியந்ததுண்டு. என் அன்புக்குரிய தங்கை பூங்கோதை செல்வனும் அவர்களில் ஒருவர்- முக்கியமானவர். தமிழ்மணத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது ஒருமுறை இந்தப் பெயரையும், அதற்கான ப்ரொபைல் படத்தையும் கண்டு படிப்பதற்கு ஈர்க்கப்பட்டேன். (சரித்திர விரும்பியான எனக்குப் பிடிக்காமல் போனால்தான் வியப்பு!)
புதிய தளங்களில் நுழைந்து படிக்கும் போது, அந்தப் பதிவுக்கு மட்டும் கருத்திடாமல், முன்பு அவர்கள் எழுதிய ஒன்றிரண்டு பதிவுகளையும் படித்துக் கருத்திடுவது என் வழக்கம். அப்போதுதான் எழுதுபவரை ஓரளவு மதிப்பிட இயலும்! அப்படித்தான் பூங்கோதைக்கும் கருத்திட்டு வந்தேன். அதைக் கண்டு என் தளத்துக்கு வருகைதந்த முதல் முறையிலேயே வாய்நிறைய, மனம் நிறைய ‘அண்ணா’ என்று அழைத்து மகிழ்வு தந்தார். அரக்கர்களால் துன்பங்களை அனுபவித்த எம் உறவுகளுக்காக மனம் வலிக்க கண்ணீர் சிந்தியவன் நான். அந்தத் துன்பங்களி்ன் மத்தியில் வாழ்பவர்களாயினும் சரி, புலம்பெயர்ந்து வாழ்பவர்களாயினும் சரி... அவர்களின் படைப்புகளினூடாக அந்த சத்திய உணர்வுகளும், வேதனையும் வலியும் இருக்கும். அது பூங்கோதையிடமும் இருக்கிறது!
தங்கையின் கவிதைகளும், சீரிய சிந்தனைகளும் என்னை மிகவும் ரசிக்க வைக்கின்றன. இவை யாவற்றுக்கும் மேலாக... இந்தத் தளத்தில் பூங்கோதையின் மனசும் இருக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது. அனைவரையும் மதிக்கும், நேசிக்கும் மனம்! அதுதான் அவர்தம் எழுத்தைச் சிறக்க வைக்கிறது என்பது என் கணிப்பு. இன்று 100 பதிவுகள் என்ற மைல்கல்லைத் தொட்டிருக்கும் பூங்கோதை, இன்னும் பல ஆயிரம் மைல்கற்களைத் தாண்டியும் வெற்றியுடனும் மகிழ்வுடனும் தொடர வேண்டுமென்பதே என் வேண்டுகோள், ஆசை எல்லாமே! -இது நிச்சயம் பேராசை அல்ல! என்றும் உடன்வந்து வழிநடத்த, உற்சாகம் தர நாங்களனைவரும் உண்டு...! அசத்தும்மா கோதை! என் மனம் நிறைய நல்வாழ்த்துக்கள்!
இது அருமை அண்ணா விச்சு 'அலையல்ல சுனாமி' வலைப்பூவின் சொந்தக்காரன் என்ன சொல்லியிருக்கார் என்று பார்ப்போமா?..
உன் கவிதைகள்
உலகத்தின் மற்றொரு
ஆச்சரியம்
ஆக்கம் உண்டு
அழிவில்லை
கல்வித்தெய்வம்
உனக்கு மட்டுமே
வாரி வழங்கிய
அற்புத எழுத்துக்களின்
கோர்வை உனது பதிவுகள்
எல்லோரது மனதிலும்
நனைந்து மலர்ந்த
பூக்கள்
உனது படைப்புகள்
வேசமில்லாத உனது
எழுத்துக்களுக்கு
முகமூடியற்ற என் இதயம்
சொல்லும் ”நூறாயிரம்”
வாழ்த்துக்கள்..!
அடுத்து, அருமை அண்ணா பாவலன் மகேந்திரன் 'வசந்த மண்டபம்' வலைப்பூவின் உரிமையாளர் தந்த வாழ்த்துக்கள் இரசிப்போம்..
பூஞ்சோலை வார்த்தெடுத்த
பூபாளமே இசைத்து வா!!
பொதிகை தவழ் தென்றல் தவமே
மூங்கிலினுள் குடியேறி
காம்போதி இசைத்து வா!!
கோமகள் கோதையாம்
கோப்பெருந்தேவியாம்
உறைவிட்டு உருவிய வாளாய்
வீசுமொழி பேசிடும் கவிப் பேரரசியாம்!
எம் தங்கையை போற்றி வா!
நாமகளே! பாமகளே!
நூறென்ன இருநூறென்ன
ஆயிரமாயிரம் கருவீன்றிடு!
காவியம் போற்றட்டும் - உனது
கவியின் பேராண்மையை!!
அடுத்து வலையுலகில் நான் கொண்ட சகோதரிகள் நண்பிகள் ஏராளம். எனினும் வாழ்த்தைப் பெற்றுக் கொண்டேன் சிலரிடமே.. அவர்களுள்... முதலில் சதா அக்கா என நான் அன்போடு அழைக்கும் சதாலட்சுமி பாஸ்கர், இந்தத் தங்கைக்கு என்ன சொல்லியிருக்கிறாங்க என்று பார்க்கலாமா?...
பூங்கோதை போன்ற இளம் எழுத்தாளர்கள் இணையம் தந்த வரப் பிரசாதம் எமக்கு. அவர் தனது 100 ஆவது பதிப்பில் காலூன்றி உள்ளார். இவர் வாசகர்களுக்கு படிக்கும் போது மேலும் ஆவலைத்தூண்டும் பல கதைகளையும், கட்டுரைகளையும், கவிதைகளையும் தந்துள்ளார். அவை மேலும் படிக்க சுவையாகவும், இனிமையாகவும், ஆக்கபூர்வமாகவும், அறிவூட்டுபவையாகவும், எமது தாயக உணர்வுடன், பரிவும் பற்றும் நிறைந்து உணர்வுகளைச் சுண்டி இழுக்கும் வல்லமையோடு, ஏனைய புலம்பெயர் தேசத்தினருக்கும் புரியும் படி எழுதும் திறன் எம்மை மெய் சிலிக்க வைக்கிறது. அவை பாராட்டுதற்குரியதே.
எந்த ஒரு சிறிய வழுவையும் சுட்டிக் காட்டினால் பெருந்தன்மையோடு ஏற்கும் மனப்பக்குவம் எந்தவொரு எழுத்தாளனுக்கும் வராது. அந்தப் பக்குவம் உடைய ஒரே தகுதி பூங்கோதைக்கே உண்டு. எனக்கும் இவ்வளவு திறமையான படைப்பாளிக்கு விமர்சனம் எழுதத் தகுதி இருக்குமோ தெரியாது. அவர் பேசும் விதம் நாம் சுட்டிக் குறிப்பிட்டது சரியோ என்று சிந்திக்க வைக்கும். எமது அறிவுத்திறனை வளர்க்கும் இவர் போன்ற படைப்பாளிகள் நாட்டில் கண்களே. மென்மேலும் பல்லாயிரம் படைப்புகளோடு நீடூழி நெடுகாலம் வாழ அவரது நூறாவது பதிவில் வேண்டுவோம்!
அடுத்து.. என் அருமை நண்பி, பதிவர், கவிதாயினி குழந்தை நிலா ஹேமா 'வானம் வெளித்த பின்னும்' வலைப்பூவின் உரிமையாளர். இங்கு கருத்து சொல்லியிருக்கிற எல்லோரிலும் முதன் முதல் எனக்கு வலைப்பூவில் அறிமுகமாகிய தோழி இவர் தான். ஆனா அதை அவங்க மறந்துட்டாங்கன்னு நினைக்கிறேன்... அப்புறம் தாயகத்தில் இருந்து நான் எழுதிய கவிதை ஒன்றிற்கு யாரோ ஒரு நண்பர் பெயரை மறந்துட்டேன்... என்னை ‘இன்னுமொரு ஹேமா’ என கருத்து சொல்லியிருந்தார்.. அதனால் அன்றிலிருந்தே இவங்க பெயர் என் மனசில ஆழமா பதிஞ்சிருச்சு.. ஆனால் அவவின் கவிதைகளின் தரத்தை என்னால் இன்னமும் நெருங்க முடியல... சரி அவங்க எனக்கு என்ன சொல்லியிருக்காங்கன்னு பார்ப்போம் வாங்க...
நல்ல பக்கமும் தீய பக்கமும் நிச்சயமாக ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உண்டு.
அவற்றில் எந்த பக்கம் மிகுதியோ அதை வைத்துத்தான் அவன் நமது 'நல்ல சமூகத்தில்' நல்லவன் அல்லது தீயவன் என்கிறோம்.....!
புதிதாக அண்மையில் முகப்புத்தகத்தில் அறிமுகமாகியவர்தான் பூங்கோதை. பாசாங்கு இல்லாமல் நாகரிகமாக எழுதுகிறார். கவிதைகளின் கருக்களில் ஆழம் தெரிகிறது. தலைசுற்ற வைக்காத எளிய தமிழ். சக மனிதர்களின் மீதும், நாட்டின் மீதும் அக்கறை கொண்டவர். கோதை நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ எங்கும் நிறைந்த இறையை வேண்டுகிறேன். கோதை என் நண்பி என்பதில் பெருமை கொள்கிறேன்.
நம் உரிமைகளுக்கு நாம்தான் போராட வேண்டும். நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு வீரன் இருக்கிறான். அவனை நாம் தான் இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.
உலக மக்கள் சுதந்திர சுவாசத்தை நுகர செயல்படுவோம். ஒருங்கிணைந்து செயல்படுவோம்!!!
அன்போடும் நட்போடும் ஹேமா !
அடுத்து என் அன்புத் தோழி.... நாங்கள் அன்பாக பூஸார் என்று அழைக்கும் என் பக்கம் வலைப்பூவின் ஏகபோக உரிமையாளர் அதிரா மியாவ்..
நான் முகநூலில் சந்தித்த உறவு இவள்... கடந்த சில மாதங்களாக எப்பொழுதெல்லாம் நான் மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருந்தேனோ அங்கெல்லாம் இவ இருந்திருக்கிறா .. அதிராவின் அன்பும், நகைச்சுவையான பேச்சும் என்னை அதிகம் ஈர்க்கிறது... என் நண்பிகள் மத்தியில் ஒரு தனியிடத்தைப் பெற்றுக் கொண்ட அன்புத் தோழி என்ன சொல்லியிருக்கிறா என்று பார்க்கலாம்...
100 ஆவது பதிவைத் தொடப்போகும் பூங்கோதைக்கு முதலில் என் இனிய வாழ்த்துக்கள்.
2008 இல் ஆரம்பித்த வலையுலக விஜயம்.. பல பல பல்சுவை அம்சங்களைச் சுமந்து 2013 இல் 100 வது பதிவில் அடியெடுத்து வைக்கப்போகிறது.. இன்னும் பல பல சுவையம்சங்களோடு பல நூறுகளைக் காண வாழ்த்துகிறேன் ...
அடுத்ததாக பல சந்தர்ப்பங்களில் எனக்கு நல்ல வழிகாட்டியாக, ஆலோசகராகத் திகழ்ந்த அருமை நண்பன் வினோத்
என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம்... வாங்க...
நூறாவது பதிவை எழுதி மகிழும் தங்களை வாழ்த்துவதில் நானும் மகிழ்கிறேன். உங்கள் எழுத்தில் தேர்ந்த எழுத்தாளரின் நடையை காண்கிறேன். எழுத்துகள் மேன் மேலும் வளர்ந்து புகழ் பெற வாழ்த்துகிறேன்.
என்னோடு சேர்ந்து மகிழும்
எனதருமை நண்பா
நன்றி உன் வாழ்த்துக்களுக்காய்..
அடுத்து.. என் வலையுலகில் அண்ணா அக்கா போன்ற சகோதர உறவுகள் மட்டுமன்றி பல அன்புத் தம்பிகளும் இருக்கிறார்கள். அவர்களில் இருவரிடம் மட்டுமே வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டேன்.. தம்பிங்க என்கிறதால வயசு அடிப்படையில கடைசியில வந்துட்டாங்க... ஆனால் பதிவுலகத்தின் சிங்கங்கள் என் தம்பிகள் என்பதைப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்...
முதலில் அருமைத் தம்பி நெற்கொழுதாசன் ‘இன்னும் இருக்கிறேன்’ வலைப்பூவின் உரிமையாளன் என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம்.....
வாழ்த்துரைக்கும் தகைமை
வாய்த்தவனில்லை யாதாலால்
வாசகனாயொரு மொழிபகிர்கிறேன்.
மொட்டவிழ்ந்து மஞ்சரியாய்
திகழ்ந்திடும் பூங்கோதை படைப்புக்கள்
நூறாகிடும் இன்நாளில்
அவருக்கும் அவர்தம் தமிழுக்கும்
உளம் நெகிழ்ந்த
அன்புப்பகிர்வுகள்.....
நெற்கொழுதாசன்...
அடுத்து... பல விதங்களிலும் என்னுள்ளத்தில் முன்னணியில் உயர்ந்து நிற்கும் என் அன்புத் தம்பி, பிரபல பதிவர் மதியோடையின் உரிமையாளன் மதி சுதா.. இந்த அக்காவுக்கு என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்க்கலாம் வாங்க...
ஒவ்வொரு பதிவர்களுக்கிடையிலும் ஒவ்வொரு விதமான தொடர்பிருக்கும் ஆனால் எனக்கும் பூங்கோதை அக்காவுக்கும் (புனைபெயர்) உள்ள உறவு சற்று வித்தியாசமானதே. அத்துடன் இருவருக்கிடையிலுமான சந்திப்புக்களும் சராசரி பதிவர்களின் சந்திப்பாக இருக்கவில்லை.
எனக்கு ஏதாவது பிரச்சனை என்று வந்தால் என்னுடைய அக்கா தான் ஆறுதல் சொல்லுவார். ஆனால் தந்தையாரின் பிரிவால் அவரும் உடைந்திருந்த போது எனக்கு இந்த அக்கா தான் அந்த இடத்தை நிரப்பினார்.
பலரிடம் எழுத்துக்கும் நடத்தைக்கும் வித்தியாசமிருக்கும். ஆனால் நெருங்கிப் பழகியவன் என்ற ரீதியில் இந்த அக்கா அதற்கு விதிவிலக்கானவர். அதற்கு ஈழ எழுத்துலகில் முத்திரையிட்டுச் சென்ற நாவண்ணன் ஐயாவின் புதல்வியான எச்சமும் இவருக்கு காரணமாகியதோ தெரியவில்லை.
அவர் இடத்தை ஈடுகட்டும் இவர் எழுத்துக்கள் வெற்றியடைய தம்பியாக என் ஆசியும் வேண்டுதலும் என்றும் இருக்கும்.
நன்றிச் செதுக்கலுடன்
ம.தி.சுதா
என் 100வது பதிவுக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த ஒவ்வொருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
இனிவரும் நாட்களில் ஆக்கபூர்வமான படைப்புகளைக் கொடுக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்துள்ளது. அதற்கு நீங்கள் அனைவரும் தோள்கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்... தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களையும் ஊக்குவிப்புக்களையும் எதிர்பார்க்கிறேன்...
நட்புடன் பூங்கோதை