Thursday, 21 March 2013

எழுத்துலகில் என் எண்ணச்சாரல்கள்..-2




வணக்கம் என் இனிய நட்பு நெஞ்சங்களே..

வாங்க... இன்றும் என் எண்ணச்சாரலில் நனைந்து பயணிப்போம். இன்றோடு இந்தப் பயணத்தை சத்தியமா முடிவுக்கு கொண்டு வந்துவிடுவேன். அதனால, கொஞ்சூண்டு பொறுமையையும் கையில எடுத்துக் கொண்டு பயணத்தை ஆரம்பிங்க...

ம்ம்.. எங்கே விட்டேன்... ஆங்...... எழுத்துலகில் நான் தவழ ஆரம்பித்தது மட்டும் தான்... இதன் பின்னர் நான் தொண்டு நிறுவனங்களில் முழுநேரமாகப் பணியாற்றியமையாலும், திருமணமாகி மன்னாரில் குடியேறியமையாலும் என் முயற்சிகள் மீண்டும் தொய்வடையத் தொடங்கின. ஏன்..... சோம்பேறித்தனமும் காரணம்னு சொல்லவேண்டியது தானே...

இதன் பின் என் பணிமாற்றல் காரணமாக மீண்டும் வன்னி மண்ணில், கிளிநொச்சியில் வாழ ஆரம்பித்திருந்தேன். ஆனால் என் வேலை காரணமாக, இந்தத்தடவை நான் முன்னர் போல் எழுத்துத் துறையில் அதிகம் ஈடுபட முடியவில்லை.

ஆனால் இந்தக் காலகட்டத்தின் இறுதிப்பகுதியில் 2008ல் , செஞ்சோலை வளாகத்தில் விமானக்குண்டுவீச்சுக்கு இரையான மாணவிகளின் நினைவாக ‘குருதிச்சுவடிகள்’ என்ற ஒரு சிறிய கவிதை நூலை அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வில் வெளியிட்டேன். என் எழுத்துலகில் நூல் வடிவிலான முதல் பிரசவிப்பு அது. ஆனாலும் இடப்பெயர்வின் ஆரம்பக் காலம் என்பதால், கருவிலிருந்து புறப்பட்டு பூமியைப் பார்த்த மாத்திரத்திலேயே மூச்சடங்கிப் போன குழந்தையாகிப் போனது அந்த நூல். இடப்பெயர்வின் காரணமாக அதன் ஒரு பிரதியைக் கூட என்னால் காப்பாற்ற முடியாமல் போனது.....

இதே இறுதிக் கட்டத்தில் தான், என் அலுவலகத்தில் என்னோடு பணிபுரிந்த என் நண்பி ஒரு நாள்....
“இஞ்ச, உமக்கு கவிதைகள் வாசிக்க விருப்பம் எல்லோ. நான் ஒரு வெப்சைட் காட்டுறன், பாரும்...” என்று எனக்கு ஒரு வலைப்பூவை அறிமுகப்படுத்தினாள்.  அது சாத்வீகன் என்ற ஒரு பதிவருடைய வலைப்பூ. மிகவும் அழகாக, மனதைக் கவரும் விதமாக வடிவமைக்கப் பட்டிருந்தது. கவிதைகளும் கூட மனதைத் தொடுவனவாக அமைந்திருந்தன. மவுஸை கவிதைக்கு அருகில் நகர்த்தும்போது அதற்கேற்ற திரைப்படப்பாடல் ஒலிக்குமாறு அது வடிவமைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த போது, நானும் ஒரு வலைப்பதிவராவேன் எனத் துளியளவும் நினைக்கவில்லை. அந்தளவுக்கு தொழில்நுட்பம்.... நமக்கு இந்தத் தொழில்நுட்பமெல்லாம் ஜீரோங்க.... இப்பொழுதும் கூட பல வேளைகளில் எனக்கு தொழில்நுட்பம் தான் பெரும் சவாலாக  அமைந்து விடுகிறது. (சாத்வீகனின் வலைப்பூவை இடப்பெயர்வுக் காலத்தின் பின் எத்தனையோ தடவைகள் தேடினேன்.. அது இணையத்தில் இருப்பதாகவே தெரியவில்லை. எனினும், என் வலைப்பூ உருவாக ஏதோ ஒருவிதத்தில் காரணமாக இருந்த அந்த வலைப்பதிவருக்கு என் மானசீகமான நன்றிகள்.)

இப்படி சில தடவைகள் அந்த வலைப்பூவைத் திறந்து அதிலுள்ள கவிதைகளை மட்டும் சுவைத்து வந்த நான் ஒரு நாள் அதன் முகவரியை மறந்துவிட்டதால், கூகிளில் Blog/Blogger என்று தேடப்போக Create your own blogger என்று ஒரு தலைப்பு வந்தது. அதைப் பார்த்ததும் சும்மா முயன்று பார்ப்போமே என நினைத்து அதற்குள் நுழைந்து எப்படியோ எனக்கு ஒரு வலைப்பூவை தயாரித்து விட்டேன். பொதுவா கணனியில் எதைப் பார்த்தாலும் நோண்ட ஆரம்பிக்கிறது.. இதனால் மாட்டிக் கொண்ட சந்தர்ப்பங்கள் நிறைய்ய்ய்ய...  இது தற்செயலாக நடந்தது தான். ஆனால் தமிழ் யுனிக்கோட் எழுத்து முறை எனக்கு நீண்டகாலமாகத் தெரியாது. அதனால் அதில் பாமினி எழுத்துருவில் தட்டச்சு செய்து ஒரு கவிதையைப் பதிவிட்டேன். எல்லாம் வெறும் பெட்டி பெட்டியாகத் தெரிந்தது. என்ன செய்யலாம் என்று இல்லாத மூளையைக் கசக்க ஆரம்பித்தேன். அப்பொழுது தான் என் அலுவலகத்தில் எங்கள் ஆலோசகராகப் பணிபுரிந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனக்குத் தெரிந்த முறையில் உதவ முன்வந்தார். அவருக்கும் அதிகம் தெரியாவிட்டாலும் என்னைவிடத் பல விடயம் தெரிந்திருந்தார்.

அவர் செய்தது என்னவென்றால் HTML ல் போய் எங்கெல்லாம் எழுத்துருவுக்கான இடம் வருகிறதோ அங்கெல்லாம் பாமினி என்று மாற்றி விட்டார். இப்பொழுது எனது கணனியில் நான் பதிவிட்டவை தமிழ் எழுத்தில் தெரிந்தது. இதன் பின் இடப்பெயர்வு.. அதிகம் பதிவு எழுதவில்லை. இடப்பெயர்வுக்குப் பின்னர் பல கவிதைகளை எழுதி அதே பாமினி எழுத்துருவிலேயே எனது பதிவுகளைப் போட்டேன். ஆனால் நீண்ட நாட்களின் பின் தான் ஒரு உண்மையைத் தெரிந்து கொண்டேன். எனது பதிவுகள் யாருடைய கணணியில் எல்லாம் பாமினி எழுத்துரு இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே தமிழில் தெரியும். மற்றவர்களுக்கு வெறும் பெட்டி தான்......ஹீ...ஹீ.... J நான் என்ன தான் செய்ய முடியும்.. அப்படியே விட்டு விட்டேன்.

ஏனென்றால் நான் இந்த வலைப்பூவை ஒரு சேமிப்பிடமாக மட்டுமே கருதி வந்தேன். என் பழைய படைப்புகளைப் பார்த்தீர்களானால், பல கவிதைகளுக்கு பின்னூட்டங்களே இருக்காது. அந்தக் கவிதைகளை யாரும் வாசித்திருக்கக்கூட மாட்டார்கள். எனக்கு எப்போது என் உணர்வுகள் தூண்டப்பட்டுக் கவிதை பிறக்கிறதோ அப்போது அதை இங்கே பதிந்து வைப்பேன். அவ்வளவு தான். யாராவது படிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் அதிகமாக இருக்கவில்லை.

இப்படியாக என் உணர்வுகளை மட்டுமே சேமித்து வந்த வலைப்பூவில், ஒரு சிறந்த பதிவரான தம்பி யாதவனின் (கவியழகன்) ‘பிளாக்கர் தொடங்கிய கதை’ மூலமாகவும் அவருடைய 100வது பதிவினூடாகவும் சில பதிவர்களின் காலடி பட ஆரம்பித்தது. அதில நம்ம பக்கம் கொஞ்சம் காற்று அடிச்சுவிட்டிருக்கிறார்.... அதே வேளை தம்பி யாதவன் இன்ட்லியில் இணைக்கும் முறையையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். தம்பி யாதவனுக்கு இந்த வேளையில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நான் தொடர்ச்சியாக பதிவிடுவதில்லை என்பதால் அதுவும் நாளடைவில் நின்று போனது.

என் புலப்பெயர்வின் பின், 2011ன் நடுப்பகுதியில் தான் எனக்கு யுனிக்கோட் எழுத்து முறையை ஒருவர் நல்ல மனதோடு அறிமுகப்படுத்தி வைத்தார். என் பதிவுலகில் ஒரு படி முன்னேற்றம் இது தான்.. அவர் வேறு யாருமில்லை. என் அன்புத்தம்பி பிரபல பதிவர் மதியோடை- மதிசுதா தான். அன்று அவர் சொல்லித்தராவிட்டால், ஒருவேளை இன்று வரையும் யுனிக்கோட் முறை தெரியாமலே இருந்திருக்குமோ என நான் நினைப்பதுண்டு. ஹ்ம்ம் இதனால நீண்ட நாட்களாக பாமினி எழுத்துரு தட்டச்சு முறை பழக்கத்தில் இல்லாமல் போனதால் அதை அறவே மறந்து போனேன் என்பது வேறு கதை...  இவர் தன்னுடைய வலைப்பூவிலும் என்னை அறிமுகப்படுத்தியிருந்தார். தம்பி சுதாவுக்கு இந்த வேளையில் என் அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே வேளை, கடந்த கார்த்திகை மாதத்தில் இருந்து அவ்வப்போது என் படைப்புக்கள், நீண்டகாலத்தின் பின் மீண்டும் ஒலிவடிவம் பெற்று வானலையில் வலம் வர ஒரு நண்பர் காரணமாக இருக்கிறார். அவர் தான் பிரபல பதிவரும் புரட்சி வானொலியின் அறிவிப்பாளருமான ஆர் ஜே நிருபன். இதற்காக நண்பர் நிருபனுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து...... அண்மைக் காலமாகத் தான் நான் அதிகம் முகநூலினூடாக என் பதிவுகளை பகிர ஆரம்பித்திருக்கிறேன். இதைவிடவும், என் பதிவுகளை சில வாரங்களாக பல புதிய பதிவர்கள் பார்வையிட இன்னுமொரு நண்பர் காரணமாக இருந்திருக்கிறார். அவர் தான் பிரபல பதிவர் நண்பர் மாத்தியோசி மணி அவர்கள். இவர் செய்த காரியம் என்னவென்றால், தமிழ்மணத்தில் என் பதிவுகளைப் பகிரும் முறையை அறிமுகப்படுத்தியது தான். தமிழ்மணம் பற்றிய இவருடைய அறிமுகப் பதிவின் தொடரும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த வேளையில் நண்பர் மணிக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்மணத்தில் அண்மையில் இணைந்து கொண்டமையால் ஓட்டுப் பட்டை சரியாக செயற்படவில்லை. இதற்கு என் வலைப்பூவின் தொழில்நுட்பக் கோளாறு ஏதாவது காரணமாக இருக்கலாம்... ஆனாலும், ஓட்டுப் பதிவிற்கான இணைப்பை என் பதிவுகளில் தொடுத்து வைத்திருக்கிறேன். அது வழக்கத்துக்கு மாறானது என்பதால், என் வலைத்தளத்துக்கு வரும் பதிவர்களின் கண்களில் அந்த இணைப்பு தவறுப்பட்டுப் போகிறது. இதனால், பதிவைப் படித்து இரசித்து, ஆக்கபூர்வமான பின்னூட்டங்களைக் கொடுப்பவர்கள் கூட எனக்கு ஓட்டுப் போடாமல் ஓடி விடுகிறார்கள்.... :(( இனிமேல் கவனியுங்கோ நண்பர்களே.... இனி ஒழுங்கா ஓட்டுப் போடுற ஆட்களுக்கு நான் குட்டிக் குட்டிப் பரிசுத்திட்டம் எல்லாம் கொண்டு வரப்போறன்...ஹீ..ஹீ..ஹீ...

இந்நாள் வரைக்கும் என் பதிவுகளைப் படித்து கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்தி வந்த அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்..... எங்க கிளம்பிட்டீங்க.... கொஞ்சம் பொறுங்க... நன்றி சொல்லி விட்டேன் என்பதால் இது முடிவுரை இல்லை... ஆரம்ப உரை... அதனால் ஒவ்வொரு பதிவிலும் உங்கள் ஊக்குவிப்பு எனக்கு அவசியம்... எனவே தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களையும், மறக்க்க்க்காமல் தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டுக்களையும் போட்டு என்னை ஊக்குவிப்பீங்க என்று நம்புகிறேன்..
எல்லாவற்றிற்கும் மேலால், என் பெற்றோருக்குப் பின் என் எழுத்துப்பணியில் என் சுதந்திரத்துக்கு எந்தவித இடையூறுமின்றி, அதே வேளையில் தன் முழு ஊக்குவிப்பையும் கொடுத்தவரும் கொடுத்துக் கொண்டிருப்பவரும் என் கணவர் தான். என் அன்புக் கணவருக்கு இந்த வேளையில் என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
இவ்வளவு தானுங்க என் எழுத்துலகப் பின்னணி... இரண்டு பதிவுகளில் ரொம்பவே அறுத்திட்டேன்... அப்படின்னு நீங்க நினைச்சால்.... மன்னிச்சிடுங்க... வைத்திய செலவுகள் பொறுப்பேற்கப்பட மாட்டாது..... :))
அடுத்த பதிவில், வலைப்பூவில் எனக்கு ஒரு கொண்டாட்டம்.. எல்லாரும் சேர்ந்து கொண்டாடுவோம்... காத்திருங்க...