Saturday, 16 March 2013

வாராதே வான் மகளே....








நீலவண்ண ஆடை பூண்டு
நிலவுப் பூச்சூடி
நின் அழகு காட்டும் வான்மகளே
நித்தமும் உன்னைப் பார்த்து நான்
ஏங்கிட வைப்பது தகுமோ.. உன்
பாதம் பற்றியழ என்
பக்கத்தில் நீ இல்லையடி..
பார்த்து விழி நீர் சொரிந்தேன்
பாதகம் செய்திடாதே...

போரென்று எம் வாழ்வு
போயாச்சு சீர் குலைஞ்சு.. வேறு
போக்கின்றி உனை நம்பி உன்
பொன்மடியில் கால் வைத்தோம்..
பொழிந்திடாதே காலம் தப்பி
பொறுத்திடுவாய்

கண்ணே மணியே என்றழைத்தால்
கடுகளவும் இரக்கமின்றி
திரும்பிப்பார்க்க மறுக்கின்றாய்...
வாவென்றால் வாராயாம்
வாராதே என இரந்தால்
வாசலில் வந்து நின்று
வந்தனம் சொல்லுகிறாய் ....
வேடிக்கை முழக்கம் போட்டு
வேண்டாத மின்னல் அழகு காட்டி
வெம்பியழ வைக்கின்றாய்

கால் வயிற்றுக் கஞ்சியுண்டு
கலப்பை பிடித்துழுது
வரப்பு வெட்டி நித்தமும்
வியர்வை சிந்தி நீர்பாய்ச்சும் போது
வாராயோ நீயென்று ஏங்கி நிற்பேன்...
வருவாய் போவாய் ...
வராமலும் போவாய்...

நிச்சயமற்ற உன் வரவால்
நெடுநாளாய் வாடிக் கிடப்பேன்..
கட்டியவள் தாலி அடகு வைத்து
களைகொல்லி உரங்களென்று
வகை வகையாய் செலவு செய்து
கடினமாய் உழைத்துப் பயிர் வளர்த்து
கதிர் முற்றி அசையக் கண்ட போது என்
கண்களில் மின்னும் கனவுகள்..

அரிவு வெட்டி விட்டால் வீட்டில்
அடுக்களையும் சிரிக்கும்- என் மனைவி
அஞ்சலையும் காதில் ஐந்து கல்லுத் தோட்டோடு
அடுக்கடி நினைவில் வந்து சிரிப்பாள்
கட்டம்போட்ட பட்டுப் பாவாடையோடு
கடைக்குட்டி காட்டி நிற்பாள் தன் அழகு
ஆசிரியரிடம் இனிமேலும்
திட்டு வாங்கத் தேவையில்லை- என
ஆசையாய் வாங்கிய சப்பாத்தை
அடிக்கடி பார்க்கும் மகனும் வருவான்
ஆனாலும் வான் மகளே.. என்
கனவுத் தீ அவிந்து கண்கள் கசியும்படி
கேலிப் புன்னகை மின்ன...
பெரு முழக்கம் காட்டி
பெண்ணே நீ பொழிவதேனோ..
பேதையாய் நெஞ்சு தவிக்குதடி.. என்
குஞ்சுகளுக்கிரை கொடுக்கும்
கடமையெனக்குள்ளதடி.. அவர்
கஞ்சியையும் பறித்திடாதே
கரம் கூப்பி வேண்டுகிறேன்...
வேண்டிய போது வந்துவிடு தாயே..என்
வேண்டாதவளாய் மட்டும் வந்திடாதே...

6 comments:

  1. விரைவில் மும்மாரி பெய்யட்டும்... என்று சொல்ல முடியவில்லை... அவ்வாறு நடப்பதற்கு காரணங்கள்... நம்மிடமே உள்ளது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்..நிச்சயமாக...
      வருகைக்கு நன்றி சகோ.

      Delete
  2. அழகான வரிகள்..விவசாயியின் ஏக்கமும் வலிகளும் கூடிய அற்புதமான வரிகள். அருமை பூங்கோதை..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி விச்சு அண்ணா!

      Delete
  3. உழவன் படும் வேதனையை மிக உருக்கமாகச் சொல்லி உள்ளீர்கள்
    தோழி !..வாழ்த்துக்கள் அருமையான கவிதை இது மேலும் தொடரட்டும் .

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழி!

      Delete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!