தொடர் 4
இந்தியாவுக்கு போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் கனகம் வீட்டுக்கே சென்று விட்டான் சுகிர்தன்.
அன்று தான் மீண்டும் மீனுவை நேருக்கு நேர் சந்தித்தான். அப்பொழுதும் சுந்தரி அவளை இழுத்துப் பிடித்து வைத்திருந்தாள். ஒரு முடிவுக்கு வந்தவனாக சுந்தரியிடம் தன் கருத்தைச் சொன்னான்.
“அம்மா, மீனுவை நீங்கள் விடுங்கோ. நான் ஒண்டும் பிழையா நினைக்கிறதுக்கு இல்லை. அது மட்டுமில்லாமல், எனக்கு அவளைப் பார்க்கேக்குள்ள ஒரு வித்தியாசமான நினைப்பும் வரல்ல... அவள் ஒரு குழந்தையா தான் எனக்கு தெரியிறாள். எப்படியோ இந்தியா வரைக்கும் அவளோட நானும் வரப்போறன். எவ்வளவுக்கெண்டு உப்பிடித் தடுப்பியள்?” அவன் கேட்டது நியாயம் என்று பட்டாலும் சுந்தரிக்கு அயலவர்களின் விமர்சனத்தை நினைத்துப் பயந்தாள்.
“ஒண்டுக்கும் பயப்படாதேங்கோ அம்மா... சில விசயங்களில சமூகத்தை நினைச்சுப் பயந்தால், நாங்கள் வாழ ஏலாது...மீனுவின்ர நிலையில இருந்து சமூகத்தால சிந்திக்க முடியாது...” என்ற அவனது வார்த்தைகளுக்கு பிறகு, வயிற்றில் நெருப்பைச் சுமந்தவாறே மீனுவை அவள் போக்குக்கு விட்டாள் சுந்தரி.
“பூஸ்.. பூஸ்...என்னை விட்டிட்டு போகதடா... பாருடா இந்த அம்மாவை, உனக்கு கிட்ட வரவே விடுறா இல்ல...” என்று அழுதபடியே அவனிடம் ஒட்டிக் கொண்டிருந்தவளிடம் இப்பொழுது சுகிர்தன் பூவரசனாகவே பேசத்தொடங்கினான்.
“மீனு, நீ நான் சொல்றபடி நடந்தால் தான் உன்னை பார்க்க வருவேன். நீ என்னோட தாராளாமா கதைக்கலாம். ஆனால் நீ சின்னப் பிள்ளை இல்லையெல்லோ. அது தான் அம்மா கிட்ட வர விடேல்ல. நீ இந்தக் கதிரையில இரு. அம்மா ஒண்டும் சொல்ல மாட்டா.” என்று அருகில் இருந்த கதிரையில் அமர்த்தினான்.
சிறுவயதில் இருந்து பூவரசனோடு ஒன்றாகப் பழகிய மீனு எப்படி சுகிர்தனை பூவரசனாக நம்புகிறாள் என்பது அவனுக்குப் புரியாத ஒன்று. தன்னைப் பூவரசன் என்று அவள் நம்பினாலும் அப்படிச் சொல்லி அவளோடு பழகுவது அவனுக்கு பெரும் சங்கடமாகவே இருந்தது. ஆனால் பூவரசனாக அவன் நடந்து கொண்டபடியால் தான், தொடர்ந்து வந்த நாட்களில், இந்தியப் பயணங்களில் எல்லாம் அவளைக் கட்டுப்படுத்த முடிந்தது. சுந்தரி சமூகத்துக்குப் பெரிதும் பயந்தாலும், சுகிர்தனை தப்பாக நினைக்கும்படி அவன் நடத்தையில் எந்தக் குறையையும் காணவில்லை. மாறாக அவனை ஆபத்தில் கை கொடுக்கும் தெய்வமாகவே எண்ணினாள்.
கேரளாவில் மருத்துவரை ஒழுங்குபடுத்திக் கொடுத்த நண்பன், அவனுக்கு தங்குமிடத்தோடு, அவனுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்ய ஒருவரையும் அறிமுகப்படுத்தியிருந்தான். அதனால் அவன் எந்த விடயத்திலும் அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கவில்லை. ஆனால் சுந்தரிக்கு எல்லாமே பயமாக இருந்தது. புதிய இடம், புதிய மொழி புதிய ஆட்கள் என எல்லாம் அவளுக்கு குழப்பமாகவே இருந்தது. கையில் பணாம் இல்லை. யாரோ ஒருவர் உதவ முன்வந்தார் என்பதற்காக அவரின் செலவிலேயே எப்படிக் காலம் தள்ளுவது என்று சங்கடமாக இருந்தது. அதைவிட சுந்தரிக்கு எப்போதும் இருந்துவந்த ஆஸ்துமா அவளை வாட்டியெடுக்க ஆரம்பித்தது.
ஆறுமாதங்கள் கடந்துவிட்டது. விரைவிலேயே ஊருக்குப் போய்விடலாம் என்றால், சிகிச்சைகள் நடந்துகொண்டிருக்கின்றபடியால், மீனு தொடர்ச்சியாக தங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்று மருத்துவர் சொல்கிறார். என்ன செய்வதென்று புரியாமல் குழம்பிய போது, சுகிர்தன் அந்தத் திட்டத்தை முன்வைக்கவும், அதிர்ந்து போனாள்.
“அம்மா, உங்களுக்கு கஸ்ரமா இருந்தால் நீங்கள் ஊருக்குப் போங்கோ. மீனுவை நானே பார்த்துக் கொள்ளுறன்..”
“தம்பி, இதுவரைக்கும் நீங்கள் சொன்னபடி கேட்டிருக்கிறன். ஆனால் இந்த விசயத்தில நான் உடன்பட மாட்டன். ஒரு பொம்பிளைப் பிள்ளையை இந்த நிலமையில உங்களிட்ட விட்டிட்டு போனால்…”
“அம்மா, என்னில உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? இவ்வளவு செய்த நான் அவளுக்கு பாதுகாப்பு கொடுக்க மாட்டனா?”
“அப்படி இல்லை தம்பி. நீங்கள் நல்லவர் இல்லை எண்டு நான் சொல்லேல்ல... ஆனால், எங்களுக்கெண்டு ஒரு கலாச்சாரம், கட்டுப்பாடு இருக்கெல்லோ… அதை எப்படி மீற முடியும்.. கலியாணமாகாத ஒரு குமரை ஒரு இளம் பெடியனிட்ட எந்த தாய் விட்டிட்டு போவா?.. அதைவிட அந்தப்பிள்ளை பைத்தியம் எண்ட பெயரோட இருக்கட்டும். ” குமுறிக் கொண்டு வந்தன சுந்தரியின் வார்த்தைகள்.
சுந்தரியின் விவாதம் சரியாகப் பட்டாலும், மீனுவின் சிகிச்சையைக் குழப்ப விரும்பவில்லை சுகிர்தன். இந்த ஆறு மாதத்துக்குள் மீனுவிடம் பல முன்னேற்றங்கள் தெரிந்தன. அவள் தன் வேலைகளைத் தானே செய்யுமளவுக்கு முன்னேறியிருந்தாள். சில சில விடயங்கள் அவளது ஞாபகத்துக்கு வந்திருந்தன... சில விடயங்களாஇ அறிவுபூர்வமாக சிந்திக்க ஆரம்பித்திருந்தாள்.
“அம்மா, இப்ப மீனுவுக்கு வைத்தியம் நடக்கும்போது குழப்ப ஏலாது. இடையில குழப்பினால் அது அவளுக்கு இன்னும் கனக்க பாதிப்பைக் கொண்டு வரக்கூடும்.... உங்களால இங்க இருந்து சமாளிக்க முடியாமல் இருக்குதெண்டு தான் நான் போகச் சொன்னன். உங்களுக்கு வருத்தம் வந்தால் இங்க யார் பார்க்கிறது.. அங்கயெண்டாலும் பூவரசன்ர அம்மா உங்களைக் கவனிப்பா..”
“இல்ல… குமர்ப்பிள்ளையை…” சுந்தரி ஆரம்பிக்கும்போதே தடுத்தான்.
அம்மா, வைத்தியத்துக்கும் குமர்ப்பிள்ளைக்கும் முடிச்சு போடாதேங்கோ. இப்ப என்ன… மீனுவுக்கு கலியாணத்தில பிரச்சனை வரும் எண்டு பார்க்கிறீங்களோ??? மீனுவுக்கு சுகமாகி, கலியாணம் செய்ய சம்மதிச்சால்.... நானே கட்டுறன்… இதை நீங்க நம்புறதுக்கு நான் என்ன செய்ய வேணுமோ செய்யிறன்…. என்ர உயிர்நண்பன் மேல சத்தியம்….”
மூச்சுவிடாமல் உணர்ச்சிவசப்பட்டுப் பேசிய சுகிர்தனை அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தாள் சுந்தரி. சுகிர்தனும் கூட எப்படி இந்த வார்த்தைகள் தன் வாயில் இருந்து வெளிவந்தன என்று தன்னைத் தானே ஆச்சரியமாக நோக்கினான். அதற்கு மேல் சுந்தரியால் எதுவும் பேச முடியவில்லை. மீனு குணமாகிய பின்னரும் அவளுக்கு திருமணமென்பது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியாத நிலையில், இன்று இவனே இப்படி ஒரு முடிவை எடுத்தது சுந்தரிக்கு உள்ளூர பாரம் குறைந்தது போல இருந்தாலும் கலக்கமாகவே இருந்தது. இன்னும் இரண்டு மாதங்கள் தங்கிவிட்டு, மிகுந்த மனப்போராட்டத்தின் பின்னர் சுந்தரி இலங்கைக்குத் திரும்பிப்போனாள்.
இந்த விடயம் தெரிந்து குழம்பியவர்கள் சுகிர்தனின் பெற்றோர் தான். சுந்தரியிடம் கூட போய் சத்தம் போட்டார்கள். ஆனால், தன் நண்பனுக்காக சுகிர்தன் தான் எடுத்த முடிவில் உறுதியாய் இருந்ததன் விளைவு தான் இன்றுவரை எந்த உறவுகளின் உதவியும் இன்றி மீனுவைத் தொடர்ந்து பராமரித்து வருகிறான். நண்பர்களின் உதவியோடு தனக்கேயான திறமையினால் வீட்டில் இருந்தே வலைத்தள வடிவமைப்பாளராக வேலை செய்வதோடு, தினமும் காலையில் 4 மணிநேரம் ஒரு தனியார் கல்வி நிலையத்தில் பாடசாலை முடித்து கல்லூரிக்கு போகக் காத்திருக்கும் மாணவர்களுக்கு டியூசன் சொல்லிக் கொடுப்பான். தன்னுடைய தனி முயற்சியால், தன் காலைப் பலப்படுத்தி அவன் வைத்திருப்பது அத்தனையும் மீனுவுக்காக. நண்பனுக்காக மீனுவைக் காப்பாற்றவும் பின்னர் வாழ்வு கொடுக்கவும் நினைத்த சுகிர்தனின் உள்ளத்தில் இப்பொழுது மீனுவே முழுவதுமாய் நிரம்பியிருக்கிறாள்.
அமைதியாக சலனமின்றி உறங்கிக்கொண்டிருக்கும் மீனுவின் மிருதுவான அந்த முகத்தைப் பார்க்கும் போது அவனுள் ஒரு ஏக்கம் கொப்பளிக்கிறது. மெல்ல அசைந்த மீனுவின் உதடுகள் “பூஸ்....நீ என் காதல்டா...” என்று முணுமுணுத்தன. அதைக் கேட்டதும் திடுக்குற்றான் சுகிர்தன். ஏனென்றால், அவளுடைய மீட்கப்பட்ட நினைவுகளின் சிதறலே அது. அன்றொரு நாள் புதியவன் சுகிர்தனிடம் சொல்லியிருந்தான்..
“மச்சான், என்ர ஆள் தமிழ்ல எவ்வளவு பற்று எண்டு சொல்லுறன் கேள்... ஐ லவ் யூ எண்டு இங்கிளீஸ்ல சொல்ல மாட்டாவாம்... அதுக்குப் அதிலா தமிழ்ல “நீ என் காதல்டா” என்று சொல்லுறா....”
இதைக் கேட்டதும்
“அட... இது நல்லா இருக்கே.. அதுக்கு நீ எப்படி பதில் சொல்லுவ??? அது தான் ‘ஐ லவ் யூ டூ...’ என்று சொல்லணுமே...”
என்று சிரித்தபடி கேட்க,
“ம்ம்.. அதுக்கும் சொல்லித் தந்தா... ‘என் காதல் நீ தாண்டா....’ அப்படி சொல்ல வேணுமாம்...”
என்ற புதியவனை ஆச்சரியமாகப் பார்த்தான்.
“தமிழில பற்று இருக்கத்தான் வேணும் மச்சான்... அதுக்காக இதில கூடவா???” என்று வினோதமாகப் பார்த்த சுகிர்தனிடம்...
“ம்ம்... அவள் அப்படித்தான் மச்சான்... அவள் அப்படித்தான்.....”
என்று சொல்லிவிட்டு புதியவன்... மீனுவின் பூவரசன்... விழுந்து விழுந்து சிரித்தது இன்று கண்முன் வந்து நின்றது....
மீனுவின் உடல் நிலை பெரிதும் தேறியிருக்கிறது. சில நினைவுகள் அவ்வப்போது மீண்டு கொண்டிருக்கின்றன. சில நினைவுகள் மட்டுமே திரும்பாமல் இன்னும் இருக்கிறது. அவள் உடல்நிலை வேகமாகத் தேறி வரும் இந்த நிலையில் அவளுக்கு எப்போதாவது பூவரசன் பற்றிய நினைவுகள் முழுமையாகத் தெளிவடையலாம்... அப்பொழுது பூவரசனின் முகத்திரையோடு வாழும் இவன் நிலை எப்படியும் ஆகலாம்....
அதுவரை ஏங்கங்களோடு காதலையும் சுமந்தபடி, ஒரு குழந்தைக்குரிய அன்பையும் பராமரிப்பையும் மட்டும் அவளுக்குக் கொடுத்துக் கொண்டே காத்திருக்கிறான் அவளுடைய பூவரசனாக....
மீண்டும் சற்றுப் பலமாகவே மீனு முணுமுணுத்தாள்..
“பூஸ்... நீ என் காதல்டா...”
“என் காதல் நீ தாண்டா..” என்று சொல்ல சுகிர்தனின் உதடும் மனமும் துடித்தது. ஆனால் அவனையும் முந்திக் கொண்டு விழிநீர் அணையுடைக்க.. கண்களை இறுக மூடிக் கொண்டான்...
அவள் நினைவுகள் மட்டும் பூவரசனையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கின்றன... இனி எந்த ஜென்மத்திலும் அவன் தன்னோடு இருக்க வேண்டும் என்ற வேண்டுதல்களோடே.. ஐ லவ் யூ அல்ல... நீ என் காதல்டா என்பது அவளது தாரகமந்திரமாக இருக்கலாம்.... ஏனென்றால் அவள் அப்படித்தான்...
முற்றும்.
பி.கு: இந்தக் கதை முழுவதும் கற்பனைக் கதையே... இந்தக் கதையில் ‘ஐ லவ் யூ’ என்ற ஆங்கில வார்த்தைக்குப் பதில் தமிழ் வார்த்தையை அறிமுகம் செய்ய வேண்டுமென்று அந்த வார்த்தைகளை ஆலோசித்த நண்பன் வினோத் கன்னியாகுமரி (tamilnanbargal.com) அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...
Tweet | |||
இருந்தது. கையில் பணாம் //ஹீ தனிமரம் படிக்காதவன் !பணம் இல்லாதவன் வெளிநாட்டில் !
ReplyDeleteஆஹா பால்க்கோப்பி எனக்கே எனக்கா !ம்ம் சூடாக
ReplyDeleteவேண்டும்!
ம்ம் அவள் அப்படித்தான் என்று இருந்து விடட்டும் சுகிர்தன் ஊடே !ம்ம் வலிகள் மிக்க கதை! வாழ்த்துக்கள் பூங்கோதை!
ReplyDelete