கால்வயிற்று கஞ்சியுண்டு
கால்மிதித்து சேற்றினிலே
நாள் முழுதும் உழைப்பவர்க்கு
நன்றி சொல்லும் திருநாளாம்!
உதிரத்தை வியர்வையாக்கி
உரமாக்கி பயிர் செழிக்க
புதிரெடுத்து பொங்கலாக்கி
பகிர்ந்துண்ணும் திருநாளாம்!
பெருமைதரும் தமிழர்க்கோர்
பெருநாளாய்இது இருக்க
பலருக்கு மறந்து போச்சு
பண்பாடும் தொலைந்து போச்சு!
ஆங்கிலேயன் புத்தாண்டு
அனைவருக்கும் பொதுவாச்சு
தங்கத் தமிழன் தைத்திருநாள்
தனி மதத்தின் சடங்காச்சு!
சங்கடமே இல்லாமல்
இங்கிலீசில் பொங்கல் வாழ்த்து
எங்களுக்கும் பொங்கலோ என
சந்தேகத்தில் பலருண்டு!
கருத்துணர்ந்து பொங்கல் பொங்கும்
காலமின்று மாறிப்போச்சு !
பெருமையோடு பொங்கல் வைத்த
பெரும் பண்பு மறைந்து போச்சு!
அடுத்தவீட்டு பொங்கல் உண்ண
என்பிள்ளை போகுமென்று
அதற்காக சிறுபானை
அடுப்பினிலே ஏறலாச்சு!
ஆங்கிலேயப் புத்தாண்டில்
சரக்கடித்து செலவு போச்சு
அடுத்துவரும் பொங்கலுக்கு
அரிசி வாங்க பணமில்லை!
வந்தவரின் கால்தொழுதோம்
வந்தவழி மறந்து போனோம்
செந்தமிழன் மதிகலங்க
சொந்தநிலை தளர்ந்து போனோம்?
வேட்டி கட்டி வாடா தம்பி
பொங்கல் வைக்க வேண்டுமென்றால்
வெட்கப்பட்டு வெளியில் வரானாம்
பிள்ளைக்காரன் பேரனோஇவன்?
பொங்கடா தம்பி பொங்கலைப்பொங்கு !
பொய்த்திடாப் பண்பை காத்திடப்பொங்கு! - தை
திங்களில் முதல் நாள் முற்றத்தில் பொங்கு !
தங்கத்தமிழ் தினம் நாவிலே பொங்கு !
தமிழர் பண்பு மறைத்த கங்குல்
தானாய் விலகும் துணிந்து பொங்கு !
மானமும் வீரமும் நெஞ்சில் கொண்டு
அறத்தமிழ் உரைத்த நெருப்பாய் பொங்கு !
அன்னை மண்ணிலும் அன்னியம் போர்த்து
தன்னிலை மறந்தவர் பேடிமை போக்க
உண்மைத்தமிழனின் உயர்வினைக்காட்ட
உயிர்ப்புடன் மாபெரும் அலையெனப்பொங்கு!
நெஞ்சுதனை நிமிர்த்து நின்று
நான் தமிழனென்று பொங்கு !
வஞ்சம் கொண்டு அழித்த பகைவர்
வாய்பிளந்து வியக்கப்பொங்கு!
இமயம் முதல் ஈழம் வரை
இசைத்த தமிழ் வாழப்பொங்கு!
இனியும் எங்கள் பெருமைப்பேண
இன்றே உறுதி கொண்டு பொங்கு!
மாண்டு போகிலும் மானம் பெரிதென
மாண்டவர் மேன்மை உணர்த்தப்பொங்கு!
ஆண்ட பரம்பரை அடிமை ஆனதால்
சீண்டிய சிறுத்தையாய் சினந்து பொங்கு!
தங்களைத்தமிழராய் எண்ண மறந்தவர்
கண்கள் திறக்க தரணியில் பொங்கு!
மங்கலம் இழந்த தமிழனின் வாழ்வில்
மங்கள ஒளியை ஏற்றப்பொங்கு!
கங்குல் = இருள்
வாழ்த்துக்களுடன்
பூங்கோதை
Tweet | |||
உங்களின் ஆதங்கம் தெரிகிறது... பொங்கும் வரிகளில் புரிகிறது...
ReplyDeleteமாறும்... மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்... வாழ்த்துக்கள்...
பொங்கு தமிழ்ப் புலவரே உம் நெஞ்சுருக்கும் சொற் பிரயோகம் வெறும் பொங்கலுக்குள் புதைந்து விடக்கூடாது பொங்லையும் தாண்டியொரு புதுமை படை
ReplyDeleteகாத்திருப்போம் உமது கனவுத்துளிகலுக்காய்
வாழ்துக்கலுடன் இவ்வெளிய வாசகன்.
This comment has been removed by the author.
ReplyDelete