நட்பு நெஞ்சங்களுக்கு சிநேகிதியின் அன்பான வணக்கங்கள்!
இனம், மதம் பாராமல் வரும் காதலில் பிரிவதால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை கடந்த வாரம் அலசினோம். இது பற்றி பதிவிலும், தனிப்பட்ட முறையிலும் பின்னூட்டம் தந்த உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தப் பதிவில் இனம் மதம் தாண்டி வரும் காதல்களில் ‘இணைதல்’ பற்றிப் பார்க்கலாமா நண்பர்களே.. தயாரா???
இக்கேள்வியை எனக்கு அனுப்பி வைத்த நண்பனே... நீங்க தயாரா.??
எண்ணும் போதே மலைப்பாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது.. ஆனாலும் இந்த விடயத்திலும் நான் ஆலோசனை கூற பின் நிற்கவில்லை. ஏனென்றால் இந்த நிலையை நான் கடந்து வந்திருக்கிறேன். எனக்கு அப்பொழுது அதீத துணிவு தேவைப்பட்டது. ஒரே இனத்தில், மதங்கள் மட்டும் வேறுபட்ட, அதுவும் அதிக கட்டுப்பாடற்ற மதங்களைச் சார்ந்திருந்த வேளையில் எனக்கநத்தகைய துணிச்சல் தேவைப்பட்டதென்றால், கடுமையான கட்டமைப்பையும் கட்டுப்பாடுகளையும் கொண்ட ஒரு மதத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு அசாத்திய துணிச்சல் அவசியமாக இருக்கிறது. எனவே இந்த முடிவுக்கு வருமுன் அதனால் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகளை எல்லாம் எதிர்கொள்ள உங்கள் நண்பனுக்கோ அல்லது அந்தப் பெண்ணுக்கோ பலம் இருக்கிறதா என்பதை நிச்சயம் அவர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
சரி இப்பொழுது விசயத்துக்கு வருவோம். முதலில் இந்த திருமணத்தால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளைப் பார்க்கலாம். இவர்கள் இருவரும் ஒன்று சேர்வதால், முதலாவது இவர்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சனை குடும்பத்திலிருந்து, அவர்கள் சார்ந்த சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவார்கள். இதனால் இவர்கள் ஊருக்குள் வாழும் போது பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி வரும். அப்படியே ஊரை விட்டு வெளியே வந்து வாழ்வதாக இருந்தாலும் கூட யாருடைய உதவியும் இன்றி இவர்களுடைய வாழ்க்கையின் ஆரம்பம் மிகவும் தடுமாற்றம் காணும். பொருளாதார ரீதியாகவும் சில சமூக பாதுகாப்புகளும் கூட கிடைக்காமல் போகலாம். இந்த வேளையில் இவர்களில் ஒருவர் மனம் தளர்ந்தால் கூட சந்தோசமாக ஆரம்பிக்க வேண்டிய திருமண வாழ்க்கை ஆட்டம் காண ஆரம்பிக்கும்.
அடுத்து இவர்களில் ஒருவருடைய பெற்றோராவது மிகவும் தீவிரமான மதவாதிகளாகவோ அல்லது சாதிய பற்று உடையவர்களாகவோ இருந்தால் உயிராபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் இருக்கிறது. இன்னமும், பெற்றோர் அல்லது சகோதரர்கள் இவர்களின் திருமணத்தை பெருத்த அவமானமாக எதிர்நோக்க வேண்டி இருக்கலாம். இந்த விடயங்களில் தமது பெற்றோர் எப்படி என்பது பற்றி உங்கள் நண்பனும் அவர் காதலியும் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அதை அவர்கள் அவசியம் புரிந்துகொள்ள முயல வேண்டும்.
என்ன நடந்தாலும் சரி, காதல் மட்டும்தான் முக்கியம் என்றோ, அல்லது நாம் இணைந்து வாழ்வது மட்டும் தான் வாழ்க்கை என இருவரும் முடிவெடுக்கும் பட்சத்தில், மேற்குறிப்பிட்ட எல்லா எதிர்மறையான பிரச்சனைகளையும் சமாளிக்கப் போதுமான அசாத்திய துணிச்சலும் பலமும் இவர்களுக்கு இருக்குமானால், திருமணம் செய்ய முடிவெடுக்கலாம். ஆனால் அப்படி ஒரு முடிவுக்கு வரும் போது, நிறைய தியாக மனப்பான்மையும் சகிப்புத்தன்மைகளையும் இவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். மதம் இவர்களுக்குள் நிச்சயம் செல்வாக்கு செலுத்தக் கூடாது. மதத்தை விட்டு விட்டு உங்களுக்குள் இருக்கும் கடவுளைப் பற்றிக் கொள்ள வேண்டும். அப்படியென்றால் மட்டுமே இந்தத் திருமணங்கள் வெற்றியாக அமையும். ஒருவருடைய அனுஷ்டானங்களுக்கு ஒருவர் தடையாக இருக்க முடியாது. பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் இங்கு மிக அவசியம். நிச்சயம் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சிறு பிரச்சனையையும் தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும். ஏனென்றால் எதிர்ப்புத் திருமணத்தின் பின்னர் இரு தரப்பினருடைய பெற்றோரும் உறவினர்களும் உங்கள் பிரச்சனைகளை தூர நின்று மட்டுமே பார்ப்பார்கள். நீங்களாகத் தேர்ந்தெடுத்த வாழ்க்கை என எல்லோரும் ஒதுங்கிப் போவார்கள். இவை எல்லாவற்றையும் எதிர்கொண்டு ஒரு ஆரோக்கியமான குடும்ப வாழ்வை இவர்கள் அன்பினால் கட்டியெழுப்ப முடியுமென்றால், அந்தக் காதலுக்கு நான் தலை வணங்குகிறேன்.
சகோதரா,
உங்கள் நண்பருடைய வயதையோ அந்தப் பெண்ணுடைய வயதையோ நீங்கள் குறிப்பிட்டிருக்கவில்லை. இவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால், மேற்குறிப்பிட்ட எந்தப் பிரச்சனைகளையும் பற்றி அவசர அவசரமாகத் தீர்மானிக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு திருமணத்திற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. குறைந்த பட்சம் பெண் வீட்டிலோ அல்லது உங்கள் நண்பரின் வீட்டிலோ வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கும் கட்டம் வரும் வரைக்கும் அவகாசம் இருக்கிறது. ஆறுதலாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வரலாம்.
இரண்டு விதமான முடிவுகளைப் பற்றி அலசியிருக்கும் இந்தப் பதிவில் என் தனிப்பட்ட பார்வை மட்டுமே இருக்கிறது. எனவே உங்கள் நண்பரும் அந்தப் பெண்ணும் இவை குறித்து உங்கள் ஊர் சூழல், கட்டமைப்பு, கலாச்சாரம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு அவற்றை அடிப்படையாக வைத்தே இந்த முடிவுகளின் சாத்தியப்பாட்டைத் தீர்மானிக்க வேண்டும். எனவே இறுதித் தீர்வை அவர்களின் கையிலேயே ஒப்படைக்கிறேன். இது பற்றி வாசகர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன். எனது ஆலோசனையில் உள்ள தவறுகளையும் சுட்டிக் காட்டுங்கள். அத்துடன், இங்கு ஆலோசனை கேட்டு வருபவர்களின் மனம் புண்படாதவாறு உங்கள் ஆலோசனைகளைக் கொடுக்கும்படி பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்..
நீங்களும் உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் எழுதி கீழ்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்:
நண்பர்களே. அடுத்த வாரம் இன்னுமொரு கேள்வி பதிலோடு உங்கள் சினேகிதியை எதிர்பாருங்கள்....
Tweet | |||
"இவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால், மேற்குறிப்பிட்ட எந்தப் பிரச்சனைகளையும் பற்றி அவசர அவசரமாகத் தீர்மானிக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு திருமணத்திற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது." என்ற மதியுரையை வரவேற்கிறேன்.
ReplyDelete