Wednesday, 20 February 2013

நெஞ்சு பொறுக்குதில்லையே....



அரக்கரும் வெறியரும் கொண்டு
அமைந்ததோர் அரசோ ..
உரக்கவும் அழுதிட முடியா
குரல்வளை இழந்தவர் நாமோ..
விடுதலை கீதம் எப்படிப் பாடுவோம்..
விழியற்ற துப்பாக்கி முனைகளில் நின்று..

ஆறுதில்லை நெஞ்சு இவர்
அரக்கத் தனம் கண்டு..
கொத்துக் கொத்தாய் கொன்று எம்
குழந்தைகள் சதைகளை ருசித்தவர்
பாலகன் பாலச் சந்திரனை
புசிக்க கொடுத்து உயிர் பறித்தவர்..

கூவும் எறிகணைகளால்
கர்ப்பிணிகள் கருவறுத்தவர்..
காமவெறியராய் என் கன்னியரைக்
கதறக் கதறக் குதறியவர்...
குழந்தைகள் குமரிகள்

கூன் விழுந்த முதியவர் என
யாரையும் விட்டு விடவில்லையே
கருவிலே குருதி குடித்து பிறந்த
கருமனம் கொண்டவரோ..
போரென்று எம் வாழ்வைப்
புதைத்துப் போட்டவர்...

உலக நாடுகள் இன்னும் மௌனமா ..
உதவி கேட்டு கதறினோமே
உருக்குலையும் எம்மினத்தை
உரமூட்ட யார் வருவார்..
கரம் கூப்பிக் கரம் கூப்பி
கறை படிந்த அரசியல்கள்
நிறம்மாறிப் போனதால் நாம்
நிம்மதி இழந்தோமே -சூரிய
தேவனைத் தொலைத்து விட்டு
தடுமாறினோம் காரிருளில்
தாகம் தீர்த்தெம் துயர் துடைத்து
தூக்கி நிறுத்த யார் வருவார்...


விருட்சத்தின் வித்து இவன்
விதைக்கவே பட்டிருக்கிறான்.. பாலா
வீழ்ந்தும் தன்னினத்துக்கு
விடிவு தேடுகிறாயோ -
சிங்களப் பேரினவாதிகளுக்கு
சிம்ம சொப்பனமாகி

....உன்
விழிகளில் தேங்கிய ஏக்கம் கண்டு
வலிக்குதடா நெஞ்சு..
இறுதிக் கணம் வரை உன்
இளம் பிஞ்சு உள்ளம்
எப்படித் தவித்திருக்கும் ...

மனித நேயம் அறியாத மூடர்
புனித குழந்தையின் குருதி குடித்தரோ
நெஞ்சு பொறுக்குதில்லையே இவர்
நினைவால் எரிகிறதே