Wednesday, 20 February 2013

நெஞ்சு பொறுக்குதில்லையே....



அரக்கரும் வெறியரும் கொண்டு
அமைந்ததோர் அரசோ ..
உரக்கவும் அழுதிட முடியா
குரல்வளை இழந்தவர் நாமோ..
விடுதலை கீதம் எப்படிப் பாடுவோம்..
விழியற்ற துப்பாக்கி முனைகளில் நின்று..

ஆறுதில்லை நெஞ்சு இவர்
அரக்கத் தனம் கண்டு..
கொத்துக் கொத்தாய் கொன்று எம்
குழந்தைகள் சதைகளை ருசித்தவர்
பாலகன் பாலச் சந்திரனை
புசிக்க கொடுத்து உயிர் பறித்தவர்..

கூவும் எறிகணைகளால்
கர்ப்பிணிகள் கருவறுத்தவர்..
காமவெறியராய் என் கன்னியரைக்
கதறக் கதறக் குதறியவர்...
குழந்தைகள் குமரிகள்

கூன் விழுந்த முதியவர் என
யாரையும் விட்டு விடவில்லையே
கருவிலே குருதி குடித்து பிறந்த
கருமனம் கொண்டவரோ..
போரென்று எம் வாழ்வைப்
புதைத்துப் போட்டவர்...

உலக நாடுகள் இன்னும் மௌனமா ..
உதவி கேட்டு கதறினோமே
உருக்குலையும் எம்மினத்தை
உரமூட்ட யார் வருவார்..
கரம் கூப்பிக் கரம் கூப்பி
கறை படிந்த அரசியல்கள்
நிறம்மாறிப் போனதால் நாம்
நிம்மதி இழந்தோமே -சூரிய
தேவனைத் தொலைத்து விட்டு
தடுமாறினோம் காரிருளில்
தாகம் தீர்த்தெம் துயர் துடைத்து
தூக்கி நிறுத்த யார் வருவார்...


விருட்சத்தின் வித்து இவன்
விதைக்கவே பட்டிருக்கிறான்.. பாலா
வீழ்ந்தும் தன்னினத்துக்கு
விடிவு தேடுகிறாயோ -
சிங்களப் பேரினவாதிகளுக்கு
சிம்ம சொப்பனமாகி

....உன்
விழிகளில் தேங்கிய ஏக்கம் கண்டு
வலிக்குதடா நெஞ்சு..
இறுதிக் கணம் வரை உன்
இளம் பிஞ்சு உள்ளம்
எப்படித் தவித்திருக்கும் ...

மனித நேயம் அறியாத மூடர்
புனித குழந்தையின் குருதி குடித்தரோ
நெஞ்சு பொறுக்குதில்லையே இவர்
நினைவால் எரிகிறதே

4 comments:

  1. என்ன என்று சொல்வது மிகவும் துயரமான விடயம் தலைவர் பிரபாகரனின் மகன் என்பதை தவிற இவன் வேறு ஒன்றும் செய்யவில்லை.இவனது மரணம் வேதனையானது

    முகப்புத்தகத்திலும் இனையதளங்களிலும் பலர் இரக்கப்படுக்கின்றேன் என்று இதை வைத்து தங்களுக்கு சுயலாபம் தேடுக்கின்றார்கள் அதை பார்க்கும் போது அவர்களை நினைத்து நொந்துகொள்ளத்தான் முடிக்கின்றது.

    ஒருவர் முகப்புத்தகத்தில் கேட்டு இருக்கார் கமல்ஹாசனும்,ரஜனிக்கும் படங்களில் பிரச்சனை என்றால் தமிழன் கொந்தளிக்கின்றானாம் இந்த சிறுவனின் மரணத்திற்கு ஏன் கமல்,ரஜனி கொந்தளிக்கவில்லை என்று இதுதான் நம்மவர்களின் தவறு அடுத்தவனை நம்பி நம்பிதான் இன்று நம்மவர்களுக்கு இந்த நிலை.

    சில தமிழக அரசியல் வாதிகளுக்கும்,சில ஈனர்களுக்கும் பிழைப்பு நடத்த நல்ல ஒரு விடயம் கிடைத்துவிட்டது இனி இதைவைத்தே பிழைப்பை சில காலத்துக்கு ஒட்டுவார்கள்.இப்படியானவர்களை பார்க்கும் போது அந்த சிறுவனின் மரணம் தந்த வலியைவிட இவர்கள் மேல் கோபம் தான் வருக்கின்றது.

    இந்த கருத்துக்கு உடனே எனக்கு ஈழப்பற்று இல்லை என்று தூற்றலாம்.அப்படி தூற்றுபவர்களுக்கு எல்லாம் என் பதில் உங்களைவிட இந்த சிறுவனை நான் நன்கு அறிவேன் எங்கள் பாடசாலையில் தான் இவன் படித்தான்.
    தலைவர் பிரபாகரனின் மகன் என்ற எந்த விதமான கர்வமும் இல்லாமல் ஒரு சராசரி சிறுவனைப்போலவே எல்லோறுடனும் சகஜமாக பேசிப்பழகுவான்.

    இவன் மரணம் எங்களுக்கும் வலிதான் ஆனால் இவன் மட்டுமா? இவனை போல எத்தனை அப்பாவிகளின் உயிர்களை யுத்தம் காவுவாங்கியது.
    தயவு செய்து எங்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்று யாரும் இப்படியான விடயங்களை வைத்து அரசியல் சுயலாபம் தேடாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. முகமறியாமல் வந்து சென்ற நண்பரே..
      உங்களுக்கு வலிக்கிறது என்பதை இங்கே சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா? அதை தான் நாங்களும் பதிவுகள் மூலமாக சொல்கிறோம்..
      எங்களுடைய வேதனையையும் இரங்கலையும் வெளிப்படுத்தும் வழி தான் எமது எழுத்துக்கள்... சுயலாபம் தேடுவது என்று நீங்கள் சொல்வது எதை வைத்து என்று புரியவில்லை. இது ஒரு அரசியல்வாதி பதிவிட்டதாக இருந்திருந்தால் கூட நீங்கள் கூறியிருப்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் இத்தகைய விமர்சனங்கள் மூலம் என் போன்ற சாதாரண பதிவர்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்துபவர்களாக நீங்கள் செயற்படுவது தான் வேதனைக்குரியது. சரி.. நீங்கள் இத்தனை கூறியிருக்கிறீர்களே... அப்படியானால் ஒரு பதிவர் என்ற முறையில் எப்படிப் பதிவிட வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என்பதையும் சொல்லிவிட்டுச் சென்றால் நலம்.. அது எங்களுக்கும் உதவியாக இருக்கும்..
      /// தயவு செய்து எங்களுக்காக குரல் கொடுக்கின்றோம் என்று யாரும் இப்படியான விடயங்களை வைத்து அரசியல் சுயலாபம் தேடாதீர்கள். ///
      இதை யாராவது அரசியல்வாதிகளுக்கு போய் சொன்னால் நல்லது.. ஏதாவது நன்மை கிடைக்கும் நண்பரே.. உங்களது அறியாமைக்காக வருந்துகிறேன். ஏனென்றால் இந்தப் பதிவு யாருக்காகவும் குரல் கொடுக்க எழுதப்பட்ட்தல்ல.. என் சீற்றத்தையும் என் வேதனையையும் நான் வடித்திருக்கிறேன்.. அவ்வளவு தான்...

      Delete
  2. Replies
    1. ம்ம்.. யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத கொடுமை..

      Delete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!