Saturday, 28 September 2013

அவள் அப்படித்தான் – தொடர் 2



ஆவ்வ்வ்... மச்சான் டேய்.... மழை தொடங்கிட்டுது.. கொஞ்சம் வேகமா ஓடடா...பின்னாலிருந்தவனின் குரலைக் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் அவன் அந்தக் குளிர்ந்த சாரலை அனுபவித்துக் கொண்டிருந்தான்.
 “டேய்.......
என்று மீண்டும் அதட்டியவனைப் பார்த்து நக்கலாகச் சிரித்தான்.
 மச்சான் நீ என்ன உப்புக் கட்டியோ சக்கரைக் கட்டியோ??? கரைய மாட்டாய் கொஞ்சம் இரு... இயற்கையை ரசிக்க விடு...
என்ற படியே இரு மருங்கிலும் காற்றின் வேகத்துக்கேற்ப அலையலையாக அசைந்துகொண்டிருந்த கடல்நீரைப் பார்த்தான் சுகிர்தன்.
ஊ.. என்ற காற்றின் அட்டகாசத்தையும் மழை இரைச்சலையும் பொருட்படுத்தாது சுகிர்தனையும் அவன் நண்பன் புதியவனையும் ஏற்றிக் கொண்டு வட்டுவாகல் பாலத்தின் மேல் ஊர்ந்து கொண்டிருந்தது அந்த ஸ்ப்ளெண்டர்ரக மோட்டார்வண்டி. அவர்கள் இருவரும் சந்தித்தது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் தான். ஆனாலும் முன்ஜென்மத்து தொடரோ என்று ஆச்சரியப்படும் வகையில் அவர்களிடம் இருந்த ஒற்றுமை எல்லோரையும் வியக்க வைத்தது. பார்ப்பவர்கள் இரட்டையர்கள் என்றோ அண்ணன் தம்பி என்றோ எண்ணும்படியான முக ஒற்றுமை அவர்களிடையே இருந்ததுவும் கடவுளின் திருவிளையாடல்களில் ஒன்று போலும். நண்பர்கள் இருவருமே மிகுந்த திறமைசாலிகள். ஆனால் புதியவன் மிகவும் அமைதியான சுபாவம். சுகிர்தன் அதற்கு எதிர்மாறானவன். எப்போதும் புதியவனைச் சீண்டிக்கொண்டே இருப்பான்.
மச்சான், கனநாளா உன்னட்ட ஒண்டு கேட்க வேணும் எண்டு நினைச்சனான்...
வழக்கம் போலவே அமைதியான புதியவனின் குரல் கூடவே தயக்கத்தையும் சேர்த்துக் கொண்டு வெளிவந்தது.
என்ன?........”
ஆச்சரியத்தோடு மோட்டார்வண்டியின் கண்ணாடியில் நண்பனின் முகத்தை பார்த்தான் சுகிர்தன்.
இரண்டு பக்கமும் கடல் நீரின் மேல், காற்றின் வேகத்தினால் ஏற்பட்ட மெல்லிய அலைகளின் அசைவைப் பார்த்துக் கொண்டே வந்தவன் சுகிர்தன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து முறுவலித்தான்.
மச்சான், உனக்காக யாரும் வீட்டில வெயிட் பண்ணுகினமோ
“எனக்காக ஆர் வெயிட் பண்ணப் போகினம்… என்னடா.. விளங்கிற மாதிரிக் கேளன்...சுகிர்தனின் குழப்பமான குரலைப் பார்த்து சிரித்தான் புதியவன்.
இல்லடா...... பழைய காதல் கீதல் எண்டு...
என்று இழுத்தவனைப் பார்த்துச் சிரித்தான் சுகிர்தன்.
இன்னும் இந்த மூஞ்சி அதுக்குத் தகுதியாகேலடா... அது சரி திடீரென என்ன அந்தக் கேள்வி... உனக்கு ஏதும்.??”
என்றபடி மீண்டும் கண்ணாடியில் புதியவனைப் பார்க்க, அவனது பார்வையைத் தவிர்த்துவிட்டு இரண்டு மருங்கிலும் எதிர்த்திசை நோக்கி ஓடிக் கொண்டிருந்த காட்டு மரங்களை நோக்கினான் புதியவன். இன்று தான் இந்த விடயம் பற்றி நண்பனிடம் பேச அவனுக்கு போதிய அவகாசம் கிடைத்திருக்கிறது.
என்ன சத்தத்தைக் காணேல்ல...என்றவனிடம்
ம்... இருக்கினம் தான். நடக்காத ஒண்டுக்காகக் காத்துக் கொண்டிருக்கினம்
ஓ.. மச்சானுக்குள்ளயும் ஒருத்தி இருக்கிறா...ஹா..ஹா..
அவன் சிரிப்பை ஒரு முறைப்பாலே நிறுத்திவிட்டுத் தொடர்ந்தான் .
என்ர சொந்த மச்சாள்தான். அவ ஒரு பிள்ளை தான். சின்னனில இருந்து ஒண்டா தான் வளர்ந்தனாங்கள். நான் பெரிசா அப்படியொண்டும் நினைச்சதில்ல. ஆனால் இந்த பெரிய ஆட்கள் எல்லாம் சேர்ந்து அவளின்ர மனசில ஆசையை வளர்த்திட்டினம். இப்ப நாங்கள் இருக்கிற நிலமையில இதெல்லாம் சாத்தியமாடா..?”
அவனது கேள்வியில் நியாயம் இருக்கத்தான் செய்தது. சுகிர்தனும் புதியவனும் பயணித்துக் கொண்டிருப்பது சாதாரணமான பாதையில் அல்லவே. இலட்சியப்பாதையில் சாதிக்கவென்று பறந்து கொண்டிருப்பவர்கள். சுகிர்தனால் எதுவும் சொல்ல முடியவில்லை. ஆனாலும் ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காக சொன்னான்.
எங்கட ஆட்களுக்குள்ள இப்ப திருமணங்கள் கனக்க நடக்குது தானேபிறகென்ன யோசிக்கிறாய்வசி அண்ணைக்கு ஒரு அறிக்கை எழுதி அனுப்பினால் சரி.. அவர் ஏதாவது பதில் சொல்லுவார் தானே….”
ம்.. நீ சொல்றது சரிதான். அதைத்தான் அவளும் சொல்லுறாள். ஆனால்…. எனக்கு ஒரே யோசனையா இருக்கு. அதுவும், இப்ப நிலமை இறுகிப் போயிட்டுது… ஆமி கிட்டக் கிட்ட வந்துகொண்டிருக்கிறான். ஒருவேளை கலியாணத்துக்கிடையில எனக்கு ஏதாவது ஆகிட்டுதெண்டால்... அவளின்ர வாழ்க்கை பாழாகி போயிடும்...” சிறிது அமைதியைப் உகுத்தி மீண்டும் சொன்னான். “ஆனால் அவளோட அண்டைக்கு கதைச்ச நேரம் அவள் கொஞ்சம் தீவிரமா இருக்கிறாள் போல தெரியுது… நான் இல்லாத வாழ்க்கை தன்னால வாழ முடியாது எண்டுறாள்…”
அதற்குள் முகாம் வாயிலை மோட்டார் வண்டி அடைந்து விட்டதைக் கண்டதும்.. கவலைப் படாத மச்சான்.. எல்லாம் வெல்லலாம்..சுகிர்தன் சிரித்துகொண்டே லேசாக சாத்தியிருந்த கேற்றை வண்டியின் முன்சக்கரத்தால் மெதுவாக இடிக்க கேற்திறந்து வழி விட்டது.
அன்றுதான் புதியவன் தன் நண்பனிடம் கூட தன் காதலைப்பற்றி வெளிப்படுத்தியது. அதற்குப் பிறகெல்லாம் அவன் அவளைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருந்தான். வன்னியின் போர்ச்சூழல் இன்னும் மோசமாகிவிட்டிருந்தது. தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் ஆரம்பித்து விட்டன. மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக்குறியாகிக் கொண்டிருந்தது. மக்கள் புதுக்குடியிருப்பையும் தாண்டி அம்பலவன் பொக்கணை, வலையன்மடம் பக்கம் ஒதுக்கப்பட்டுவிட்டனர். எல்லோர் முகத்திலும் சாவின் பயம் சாயமாக ஒட்டிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் உயிரைக் காக்கும் சிந்தனையைத் தவிர வேறு எதுவும் யாருக்கும் நினைவில் இல்லை. ஆனால்... அவள் மட்டும்.. தன் உயிரை விடவும் சிறுவயது முதல் தனக்குள்ளேயே காதலை ஊட்டி வளர்த்துக்கொண்டிருக்கும் தன் பூவரசனைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது.
                             *********
 மனம் என்பது கடவுளின் வினோதமான படைப்புத்தான். எவ்வளவு தான் வலிமையுடையதாக இருந்தாலும் எங்கோ ஒரு விடயத்தில் ஆட்கொள்ளப் பட்டுவிடுவது மட்டுமல்லாமல், அதற்காகத் தோற்று போகவும் தயாராகி விடுகிறது. மீனுவைப் பொறுத்தவரையில் பூவரசனின் நினைவுகளுக்குள் அடிமையாகிப் போனாள் என்று தான் சொல்ல வேண்டும். சிறுவயது முதல் ஒன்றாக வளர்ந்திருந்தாலும், எப்போது அவன் தன் வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணிக்கத் துணிந்து குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றானோ, அப்பொழுதுதான் அவன் இல்லை என்ற வெற்றிடம் அவன் மீதான காதலை உணர்த்தியது. நாளாக நாளாக அந்தக் காதலை ஊட்டி வளர்ப்பதே அவள் நாளாந்த வேலையாகிப் போனது.
அவனைப் பார்க்காமலே பல வருடங்கள் இருந்து விட்டாலும், அவனை நினைக்காமல் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது என்றே அவளுக்குத் தோன்றியது. இடப்பெயர்வுகளால் அவள் அவனைப் பார்க்கக் கூட முடியவில்லை... அவள் விழிகள் பார்க்கும் திசையெல்லாம் பூவரசனையே தேடிக்கொண்டிருந்தன... ஏக்கங்களோடு தேடிய அவள் விழிகளில் அவனது தரிசனம் அன்று அவளுக்கு கிடைத்தது, கர்ப்பக்கிரகத்திலிருந்த சாமியே உயிர் பெற்று பக்தையின் முன் தோன்றினாற்போல, அப்படியொரு உவகை....
‘’மீனு.. என்ன செய்றாய் இதில நிண்டு...
அவன் குரலைக் கேட்டுத் திரும்பிய அவள் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது... படபடவென்று இமைகள் பட்டாம் பூச்சியாக...
“பூஸ்... எங்கயடா இருக்கிற? உன்னைக் காணாமல் நான் எப்படி தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா? நீ எப்பிடியடா இருக்கிற? எங்களை நீ தேடவே இல்லையா? இப்படி அடுக்கடுக்காய் எழுந்த கேள்விகளை மனதுக்குள்ளேயே அடக்கிவிட்டு...
“பூஸ்... இங்க எப்ப வந்தனி?” என்றவளைப் பார்த்து முறுவலித்தான் புதியவன் என்ற பெயரைத்தாங்கிக் கொண்டிருந்த பூவரசன்...
“நான் இஞ்சால ஒரு விசயமா வந்தனான். இஞ்ச.. பக்கத்தில தான் இருக்கிறன்... அம்மா என்னடி செய்யிறா?”
“ம்ம்... அத்தை சுகமா இருக்கிறா....” சொல்லிக்கொண்டிருக்கும் போதே தலைக்கு மேலால் துப்பாக்கி ரவைகள் விஸ்... விஸ்... எனக் கீசிக் கொண்டு வந்தன.
“ஏய்.. ரவுண்ட்ஸ் வருது... குனி.. தலையக் குனி மீனு..” கத்திக் கொண்டே அவள் தலையை பிடித்து அழுத்தினான்.  இருவரும் தலையைக் குனிந்து கொண்டு அருகில் இருந்த பதுங்குகுழி வாசலில் அமர்ந்தார்கள்.
“பூஸ்... ஏன்டா எங்களுக்கு இந்த நிலமை.. இது எப்ப முடியும்?..” ஏக்கத்தோடு கேட்ட அவளைக் கனிவாகப் பார்த்தான்.
“முடிஞ்சிடும் மீனு... கவலைப் படாத...” என அவன் கூறிய பல ஆறுதல் வார்த்தைகள் அவளைச் சமாதானப்படுத்த மறுத்தன.
 சில நிமிடங்களில் சத்தம் ஓய்ந்ததும் “ சரி மீனு நான் போக வேணும். அம்மாவைக் கவனமா பார்த்துக் கொள். நான் திரும்பவும் நேரம் கிடைக்கும் போது வருவன்..” என்று கூறி அவன் விடைபெற்ற போது அவள் கலங்கிய விழிகள் மட்டுமே அவனுக்கு விடை கொடுத்தன.

                             *************
வாழ்க்கையே போராட்டமாக மாறிக்கொண்டிருந்தது. சுகிர்தனுக்கும் புதியவனுக்கும் இரண்டு வாரத்துக்கொரு இடமாற்றங்களில் தமது முகாமுக்கான பதுங்குகுழிகள் அமைப்பதிலேயே நேரம் கடந்துகொண்டிருந்தது.
அன்றும் அப்படித்தான்சுகிர்தனும் புதியவனும் தாங்கள் புதிதாக மாறியிருக்கும் முகாமுக்கு அவசர அவசரமாக பதுங்குகுழி அமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வெட்ட ஆரம்பித்து 10 நிமிடங்கள் கூட ஆகியிருக்காது... கண்ணிமைக்கும் நேரத்துக்குள் ஏவுகணைகள் வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின.. முதற்குண்டு விழுந்ததுமே அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசையாக ஓடிப்போய்ப் பதுங்கினார்கள். சுகிர்தன் பொருட்கள் குவித்திருந்த இடத்தில் ஓடிப்போய் விழுந்து படுத்துக் கொண்டான். அவனுக்கு தெரியக்கூடிய தூரத்திலேயே வெறும்தரையில் புதியவன் குப்புறப்படுத்திருந்தான்.
சில கணங்களுக்குள்ளாகவே அடுத்து இரண்டு ஏவுகணைகள் கூவிகொண்டு வந்தன. இந்தத் தடவை ஏவுகணை விழுந்து வெடித்தபோது சுகிர்தனால் கண்களைத் திறக்க முடியவில்லை. எங்கும் ஒரே புகை மண்டலம்... காதுக்குள் அடைத்து விட்டாற்போல ‘நங்...’ என்று ஒலி எழுப்பியது. அருகில் தான் விழுந்துவிட்டது என்று உள்ளுணர்வு உந்த பதைப்போடு நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்தான்....

தொடரும்....

11 comments:

  1. அவள் அப்படித்தானோ?:)) தலைப்பே அசத்தலாக இருக்கு பூங்கோதை.. இன்னும் படிக்கவில்லை.. விரைவில் வந்து படித்துக் கருத்திடுறேன்ன்ன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அதிரா... வாங்கோ...
      தலைப்பை இரசித்ததற்கு நன்று... சீக்கிரம் கதையைப் படிச்சு சொல்லுங்கோ...

      Delete
  2. மேலே இருக்கும் படம் நீங்க கீறியதோ?.. ஆவ்வ்வ் நல்லா வந்திருக்குது முகம்.

    ReplyDelete
    Replies
    1. ஓம் நான் கீறியதுதான்... ஏதோ தப்பித்தவறி நல்லா வந்திட்டுது.. :p

      Delete
  3. உங்க கதை இருந்தகாலங்களை ஞாபகப்படுத்துகிறது.கதையை நன்றாக எழுதியிருக்கிறீங்க‌. அடுத்த பகுதி எப்ப வரும் என்ற ஆவலையும் ஏற்ப்டுத்துகிறது. நான் அன்றே பாராட்டவேணுமென்றிருந்தேன். கதையின் சுவாரஸ்யத்தில் நீங்க வரைந்த படத்தை சொல்லமற்ந்துவிட்டேன். அழகாக உள்ளது கோதை. பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி பிரியசகி. :) :) உங்களை அதிகம் காக்க வைக்காமல் அடுத்த தொடரை இரண்டு நாட்களில் பகிர்ந்துகொள்வேன்..

    ReplyDelete
  5. அடடா அழகா நகருது கதை. மீனைப் பெண்ணாகவும் பூஸை ஆணாகவும் மாத்திட்டீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. சஸ்பென்சோட தொடரை வச்சிட்டீங்க... ஹையோ பூஸுக்கும் மீனுக்கும் ஒண்ணும் ஆகிடாமல்:) நல்லபடி தொடரோணும் என ஆண்டவனை வேண்டுகிறேன்ன்

    ReplyDelete
  6. ம்ம் கடந்த காலத்தை இலக்கிய ஆவணப்படுத்தும் செயலுக்கு நெஞ்சர்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. . மக்கள் புதுக்குடியிருப்பையும் தாண்டி அம்பலவன் பொக்கணை, வலையன்மடம் பக்கம் ஒதுக்கப்பட்டுவிட்டனர். எல்லோர் முகத்திலும் சாவின் பயம் சாயமாக ஒட்டிக் கொண்டிருந்தது. இந்த நிலையில் உயிரைக் காக்கும் சிந்தனையைத் தவிர வேறு எதுவும் யாருக்கும் நினைவில் இல்லை. ஆனால்... அவள் மட்டும்// ம்ம் இதை கொஞ்சம் இன்னும் இதயத்தில் இடி போல வலையுலகில் சுதந்திரமாக இறக்கி வைத்து இருக்கலாம் நிஜத்தின் சுழலை !ம்ம் அவசரம் ஏனோ!!!!!!!,?

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!