Thursday, 26 September 2013

அவள் அப்படித்தான்….. - சிறுகதை

அழகாக அடுக்கப் பட்டிருந்த பொருட்கள் கலைக்கப்  படுவதும் மீண்டும் நேர்த்தியாக அடுக்கப்படுவதுமாக ஒரே செயற்பாடு அந்த சமையலறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நீண்ட நேரமாக... அவள் அப்படித்தான்...
யன்னலுக்கூடாகத்
தெரியும் பச்சைப் பசேலென்று புல்வெளியோ, வெளியின் மீது அங்கும் இங்கும் குதித்துத்தாவும் அணில் ஒன்றின் அழகிய நடமாட்டத்தையோ , அல்லது அவ்வப்போது புல்வெளியில் வந்திறங்கி இரை தேடுவதும் திரும்ப பறந்து போவதுமாக இருந்த அந்த அழகிய சாம்பல் நிறப் புறாவையோ அவள் கவனித்ததாகத் தெரியவில்லை. 
ஒரே செயற்பாட்டை திரும்பத் திரும்ப அலுக்காமல் ஏன் செய்கிறாள் என்பது யாருக்கும் புரிந்ததில்லை. அவளுக்கும் புரிந்ததில்லை. ஏனென்றால் .. அவள் அப்படித்தான்..
பொருட்களை
அடுக்குவது மட்டுமல்ல, சில வேளைகளில் கை கழுவுவது, அலமாரியில் இருக்கும் உடைகளைக் கலைத்துக் கலைத்து அடுக்குவது, உடைகளுக்கு ஸ்திரி போடுவது, இப்படி அன்றாட செயற்பாடுகளில் அநேகமானவை அவள் மீண்டும் மீண்டும் செய்யும் செயற்பாடே. அவள் அப்படித்தான்.

திடீரென ஏதோ நினைவு வந்தவளாய் சுவர்க்கடிகாரத்தை நோக்கினாள்.  காலை 11.50 காட்டிக் கொண்டிருந்த கடிகார முட்களும் கூட அவளைப் போலவே ஒரே வட்டத்துக்குள் மீண்டும் மீண்டும் நகர்ந்து கொண்டிருந்தன.
நேரத்தைப் பார்த்ததும் அவள் கண்கள் பிரகாசமாகின...  இன்னும் சில நிமிடங்களில் அவன் வந்து விடுவான். அடுக்கப்பட்ட பொருட்கள் நேர்த்தியாக இருக்கின்றனவா என்று மீண்டும் சரிபார்த்து விட்டு வரவேற்பறைக்குள்  வந்தாள். நீலக் கம்பளங்களைப் போர்த்துக் கொண்டிருந்த இருக்கைகளைத் தட்டி அதன் பஞ்சணைகளை சரியாக வைத்து விட்டு அங்குமிங்கும் நடந்தாள். அவளால் சில மணித்துளிகள் கூட அமைதியாக அமர முடியவில்லை.. இன்று மட்டுமல்ல, இதுவும் தினந்தோறும் நடக்கும் செயற்பாடுதான்... நான்கு மணி நேரம் மட்டுமே அவன் வெளியில் சென்றிருப்பான்.. அந்த நான்கு மணித்தியாலங்களும் அவன் வருகைக்காக ஆயத்தம் செய்வாள்..
வாசலில் காலடி ஓசை கேட்க, சடாரெனப் பாய்ந்து சென்று அருகில் இருந்த சாய்மனைக் கதிரையில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டு தூங்குவது போலப் பாவனை செய்தாள். கதவு திறக்கப் பட்டதும்  ''ஹாய் மீனும்மா.. அதுக்குள்ளே நித்திரையா'' என்றபடி குனிந்து அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான். அவள் பாசாங்கு செய்வதை அவன் அறிந்திருந்தாலும் தெரியாதது போல, அவளது எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதில் அவனுக்கு ஒரு ஆத்மார்த்த திருப்தி. இதுவும் ஒன்றும் புதிதல்ல..வாரத்தின் ஐந்து வேலை நாட்களிலும் இது நடப்பது தான்... அவள் ஏன் அப்படி நடந்து கொள்கிறாள்... அவள் அப்படித்தான்... 

அவனுடைய அந்த மென்மையான முத்தத்தின் ஸ்பரிஸத்தால் ஏற்பட்ட ஆனந்தக் கிளர்ச்சியை அடக்க முடியாமல் ஹேய்.. பூஸ்…” என்றபடி துள்ளி எழுந்தாள் மீனு. மீனு..ஏய்.. கள்ளி.. நீ தூங்கலையா??” என பொய்யாக ஏமாற்றம் காட்டினான் பூவரசன்.
பூஸ்சாப்பிடுவோம் வா…” என்று பூவரசனின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டே சமையலறைக்குள் சென்றாள்.

சற்றே விசாலமான சமையலறையில் ஒரு ஓரத்தில் அடக்கமான சிறிய ஒரு சாப்பாட்டு மேசை வைக்கப் பட்டிருந்தது. அதைச் சுற்றிலும் நான்கு சாதாரண மரக்கதிரைகள், மின்னடுப்பு, சிறிய குளிர்சாதனப் பெட்டி என ஓரளவு வசதிகளைக் கொண்டதாகவே காட்சியளித்தது. அவளுக்கு பிடித்த நீல பெயிண்ட் அடிக்கப் பட்ட சுவரிலே தன் கையாலேயே ஏதேதோ புத்தகங்களில் வெட்டியெடுக்கப்பட்ட அழகிய படங்களைப் பொருத்தமாக ஒட்டியிருந்தாள் மீனு.
அவன் இல்லாத அந்த நான்கு மணித்தியாலங்களுக்குள் அவனுக்காகப் பார்த்துப் பார்த்து சமைத்த இறால் குழம்பு, கீரை மசியல், வாழைக்காய் பொரியல் எல்லாம் மேசையில் எடுத்து வைத்து விட்டு அவனுக்கு பரிமாறினாள். அவன் அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.
என்ன?” அவள் வாய் கேட்கவில்லை. இமைகள் இரண்டும் சுருங்கி உயர்ந்து கேள்விக்குறியாகியது.
உனக்கு?” ….
எனக்கு பசிக்கல….”
பொய் சொல்லாத மீனு. நீ சாப்பிடேல்ல எண்டால் நானும் சாப்பிடல….”
ம்ஹீம்…”
அப்போ நான் சாப்பிடல…”
பொய்க்கோபத்தோடு அவன் எழுந்ததும் மீனுவின் முகம் வாடியதைக் கண்டதும் உடனே தன் தொனியை மாற்றினான்.
மீனும்மாமருந்து குடிக்க வேணுமெல்லோஅப்ப நான் தீத்தி விட்டால் சாப்பிடுவீங்களோ…” அவன் கெஞ்சும் குரலில் கேட்டதும் மெதுவாய் தலையாட்டினாள். அவன் தனக்கு பரிமாறப்பட்ட உணவை அவளுக்கு ஊட்டிவிட்டு பின்னர் தான் உண்ண ஆரம்பித்தான். முதல் வாய் உணவை உண்டதுமே
ஆவ்.. சூப்பர் சூப்பர்.. எப்படி மீனும்மா இப்படி டேஸ்ட்டா சமைக்கிற? மீனும்மா.. இந்த சண்டேஇந்த றால் குழம்பு எப்படி வைக்கிறது எண்டு எனக்கு சொல்லித் தாறியா..

என்று கெஞ்சும் பாணியில் கேட்டதும், சற்று வெட்கம் அவளைச் சூழ்ந்து கொள்ள.. போடாபொய் சொல்லாதடா…” என்று செல்லமாக அவன் தலையில் தட்டினான். இல்ல உண்மையாத்தான் சொல்லுறன்என்று கூறி விட்டு உண்மையிலேயே அந்த உணவை ருசித்து உண்டான் அவன். இப்பொழுதெல்லாம் அவனுக்கு மீனுவின் ஒவ்வொரு செயற்பாடும் இரசனை மிக்கதாகத்தான் தெரிகிறது. சாப்பிட்டு முடிந்ததும் தட்டை எடுத்துக் கொண்டு போய் கழுவிவிட்டு அவன் நகர அவள் மீண்டும் அந்த தட்டை எடுத்துக் கழுவ ஆரம்பித்தாள்

அவள் அப்படித்தான் என்று தெரிந்தாலும், இதனால் அவளது கைத் தோலில் ஏற்கெனவே பாதிப்பு வர ஆரம்பித்து விட்டதால் அவளை நிறுத்தும் நோக்கில்
 மீனும்மாஅதைப் பிறகு கழுவலாம்.. இப்போ ஒன்று காட்டுறன் வா… “ என்று அவளை இழுத்துக்கொண்டு போனான் அவளுடைய பூவரசன்.
விடுடா.. எனக்கு வேலை இருக்கு ..

என்று இழுபறிப் பட்டுக் கொண்டவள், இயலாமல் அவனோடேயே வரவேற்புக் கூடத்தைத் தாண்டி கணனி அறைக்குள் சென்றாள். கணனிக்கு முன்னால் இருந்த நாற்காலியை நகர்த்தி வைத்து அதனோடே இன்னுமொரு நாற்காலியையும் வைத்து விட்டு அவளை அங்கே அமர்த்தினான். பின்னர் கணனியை இயக்கிவிட்டு சில வினாடிகள் காத்திருந்த பின் அதில் சில படங்கள் உள்ள கோப்புகளை திறந்து அவளுக்குக் காட்டியதும் அவளது முகம் செந்தாமரையாய் மலர்ந்தது. மீனுவின் பல புகைப்படங்களை அழகுற வடிவமைத்து இருந்தான் அவளது பூவரசன். ஒவ்வொரு படத்தையும் கேள்விக்கு மேல் கேள்விகேட்டபடியே இரசித்தவளுக்கு சமையலறையில் தான் கழுவ வைத்திருந்த பாத்திரங்களைப்பற்றி மறந்தே போனது.

அவன் கைத்தொலைபேசி சிணுங்க ஆரம்பித்ததும்,... அதனை எடுத்து அழுத்தியவாறே...
ஹலோ..என்ற அவன் குரலைத் தொடர்ந்து மறுமுனையில்,
ஹலோ... மிஸ்டர் இந்திரனா?” என்ற பெண்குரலைக் கேட்டதும்.. சற்று சங்கடத்துடன் திரும்பி மீனுவைப் பார்த்தான்... எதுவும் புரியாதவளாக அவன் முகத்தையே மீனு பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும்...

ஹலோ... ஹலோ.... இங்க சிக்னல் தெளிவா இல்ல.. நீங்கயாரு... ஹலோ...
என்றபடி தொடர்பைத் துண்டித்தான். அவள் முகத்தில் படர்ந்திருந்த கேள்வியைக் கண்டதுமே,
 “யாரெண்டு தெரியேல்ல... ஒண்டும் விளங்கேல்ல.. கட் ஆகிட்டுது...என்ற படியே சுவர்க்கடிகாரத்தைத் திரும்பிப் பார்த்தவன்,

அடடா... நேரம் போட்டுது, இப்ப மீனுக்குட்டி மருந்து குடிக்க வேணும்..

என்று கூறிக்கொண்டே அவசர அவசரமாக அவன் மீனுவுக்கான மருந்துகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு வந்து குடிக்கக் கொடுத்தான். மருந்துகளைக் குடித்த சில நிமிடங்களிலேயே அவள் கண்களைத் தூக்கம் பற்றிக் கொள்ள ஆரம்பித்ததும், பூவரசனை இழுத்துக் கொண்டு வரவேற்பறையில் அந்த நீண்ட சொகுசு ஆசனத்தில் அமர வைத்தாள். முகத்தில் சற்றேனும் புன்னகை மாறாமலே அமர்ந்துகொண்டவனின் அருகில் இருந்து அவன் மடியில் தலை சாய்த்தாள் மீனு. அவளது நெற்றியில் புரண்ட மென்மையாக கேசங்களை நீவிக் கொடுத்தபடியே அவளது முகத்தை ஒரு தாய்க்குரிய பரிவுடன் பார்த்துக் கொண்டே தன் உடலை நன்றாகப் பின்னோக்கி சாய்த்துக் கொண்டான்.

மனத்தின் விந்தைகளை ஆய்ந்தறிந்து கொள்ள முடிவதில்லை. பலவேளைகளில் ஏனென்று கேளாமலே அதன் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து விடுகிறோம். அதனால் தானோ என்னவோ சிறுவயது முதல் தமது சின்ன சின்னக் கட்டளைகளால் வழிகாட்டி வளர்த்தவர்களைக் கூட தட்டிக் கழித்துவிட்டு மனத்தின் கட்டளைக்கு மட்டும் தலைசாய்த்து வாழ்கிறான் இவன். இந்த இரண்டு வருடங்களுக்குள் அவனது வாழ்க்கை முழுவதையும் மீனுவே ஆக்கிரமித்துவிட்டாள். ஆரம்பத்தில் அதைத் தன் கடமையாக ஏற்றுக் கொண்டு ஆரம்பித்த நாடகம் இன்று அவன் வாழ்க்கையாகவே மாறிபோனது.... ஒவ்வொரு நிமிடங்களும் அவளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் அவன் அவளில்லாத வாழ்க்கையை நினைத்து அவ்வப்போது கலங்குவதுண்டு. அவளுக்காக அவன் கற்றுக் கொண்டவை ஏராளம். இணையத்தளத்தில் அவன் அவளுக்காக உளவியல்  தொடர்பான அத்தனை விடயங்களையும் தேடித் தேடிக்கற்றுக் கொண்டிருக்கிறான்.

அந்த நாடகத்தின் ஆரம்பத்தை அவன் மனச்சிதறல்கள் ஒன்று சேர்த்துக் கோர்க்க ஆரம்பித்துவிட்டன.....


தொடரும்.....

11 comments:

  1. Replies
    1. நன்றி முகுந்தன்.. :)

      Delete
  2. இதயத்தை வருடுகின்றது....தொடர்ச்சி எப்போது தொடரும்????

    ReplyDelete
  3. கற்பனையை அள்ளிக் கையில் வரைந்த கதைவரிகள் மகளே!

    காட்சிப்படுத்தலில் ஒன்றியது மனம்.

    அழகு! அருமை! தொடரட்டும்...

    வாழ்த்துக்கள் கோதை!

    ReplyDelete
  4. மனம் கவர்ந்தது கதை.. தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

    ReplyDelete
  6. அருமையான கதை ..பாராட்ட்டுக்கள்..!

    ReplyDelete
  7. அடிக்கடி அவள் அப்படித்தான் என்பது கொஞ்சம் சிந்திக்க வைக்கின்றது !

    ReplyDelete
  8. அவள் அப்படித்தான் குறுந்தொடர் என்று சொல்லி இருக்கலாம் சிறுகதை என்றுவிட்டு தொடர் போடும் உத்தியை இனி பூங்கோதையிடம் தான் கற்க வேண்டும்!ஹீ

    ReplyDelete
  9. கதை நன்றாகப் போகிறது.
    தொடரட்டும்...

    ReplyDelete
  10. வணக்கம்
    இன்று தங்களின் வலைத்தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது.. வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/04/blog-post_27.html?showComment=1398555253279#c183587270891311459

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!