இரண்டாயிரத்து பதின்மூன்றே
இன்மகளே வாராய்...
இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!
இருவிழி மேல் ஓளியேற்றி
வரவேற்றோம் வாராய்
செழுமையும் இனிமையும்
எங்கள் வாழ்வில்
குளிர்மையோ டிதமாய் நிறைய விரைந்து வாராய்
பட்டுத் தமிழ் புனைந்து
சொட்டும் அமுது கலந்து -திசை
எட்டும் தெளித்திட்டோம்
வான் மட்டும் முழங்கிட்டோம்
மொட்டாகி நிற்கும்
புத்தாண்டு புது மலரே உனை
கொத்து மலர் கொண்டு
வரவேற்றோம்.. எம்
கொட்டும் விழிநீர்க்கு
அணை கட்டும் நிலை கொணர்வாய்..
பழமைகள் கழிந்து போகப்
புதுமையைப் புனைய வாராய்...
இளமையோ கரைந்து போகா
இன்தமிழ் போற்ற வாராய்..
மடமைகள் போக்கி நல்ல
மனிதரை ஆக்க வாராய்...
கடனென வாழ்வைப் போக்கும்
கயவரை மாற்ற வாராய்..
ஆண்டவனைத் தேடித்
தேடி அலுத்துப் போனோம் -எம்மை
ஆண்ட வனையும் தேடித்
தேடி அசதியானோம்...இனி
மாண்டவரை மனங்களிலே
வாழ வைப்பாய்
மீண்டவரை மேதினியில்
நிமிர வைப்பாய்...
வேண்டுமடி புதுமகளே
உன் நல்வரவு.. புது
ஆண்டுமகளே அடியெடுத்து
மெல்ல வாராய்...
மனிதத்தை இனியேனும்
வாழ வைப்பாய்
கனிவான உளத்தோடு நாடவைப்பாய்
இனிவேண்டாம் நாம்
பட்ட இன்னல்கள்..
இனிதான புது வாழ்வு
வாழ வாராய்....
கலையோடு எழில் பொங்கும்
திருநாடாய்...
களிப்போடு ஒரு தேசம்
காண வைப்பாய்...
இணையற்ற தொரு தேசம்
அது எங்கள்
ஈழமெனப் பறைசாற்ற
வாகை தாராய்...
தமிழர்க்கோர் விடிவெள்ளி
ஏந்தி வாராய்
தரணியிலே நிமிர்கின்ற
தோள்கள் தாராய்...
புவி மீது பொற்பாதம்
நாட்டி வாராய்...
புத்தாண்டே வரவேற்றோம்
வாராய் வாராய்...
இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!
Tweet | |||
அருமையான படைப்பு.
ReplyDeleteவாழ்த்துக்கள் தோழி.
நன்றி சகோதரி
ReplyDelete