தொடர் 1
வதனிக்கு ஒரே குழப்பமாக இருந்தது... இவளுக்கு என்ன நடந்தது... அந்தப் பெண்ணுக்கும் இவளுக்கும் என்ன தொடர்பு... ஏன் இப்படி சோர்ந்து போயிருக்கிறாள்...
கேள்விகள் அவளைத் துளைத்தெடுத்துக் கொண்டிருந்தன... மாதுரியைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தாள்..
நேரம் காலை 10 மணியைத் தாண்டிக்கொண்டிருந்தது.. வதனியின் பிள்ளைகள் பாடசாலைக்கும், கணவன் வேலைக்கும் போய் விட்டால் வீடு நிசப்தமாகிவிடும். வீட்டுக்குள்ளே நிரம்பிக் கொண்டிருந்த குளிர், அறையின் நிசப்தத்தை உறுதிப்படுத்தும் கடிகாரத்தின் துடிப்பொலி, எப்பொழுதும் அந்த வீட்டில் கமழ்ந்து கொண்டிருக்கும் மல்லிகை வாசனை, அந்த அறையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் அழகிய பூங்கொத்துக்கள்... சிறிய மேசை மீது அமைதியாகவே அமர்ந்திருக்கும் சிறிய மீரா சிலை... என மாதுரிக்குப் பிடித்த, .... அவள் எப்போதுமே இரசித்துக் கொண்டிருந்த எல்லாமே இப்போது அவளை எந்த விதத்திலும் ஈர்ப்பதாகவே தெரியவில்லை... நேற்று மாவீரர்தின நிகழ்வுக்குப் போய் வந்ததிலிருந்து மாதுரி அப்படித்தான் இருக்கிறாள்...
மாதுரி வதனியின் குறுகியகாலத் தோழி... சில மாதங்கள் தான் அவள் வதனியின் வீட்டில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருந்தாள். சில மாதங்களே என்றாலும், அவள் பல விடயங்களில் வதனியைக் கவர்ந்து விட்டதில், ஒரு நீண்டகாலத் தோழி போன்ற ஒரு உணர்வையே ஏற்படுத்தியிருந்தது... பொதுவாக மாதுரியின் தனிப்பட்ட வாழ்க்கையை வதனி அறிந்திருக்கவில்லை தான்.. ஆனால் மாதுரி எப்போதும் சிரித்துக்கொண்டு உற்சாகமாக வளைய வருபவள்..அவளுக்குள்ளும் ஏதோ சில வேதனைகள் புதைந்துகொண்டிருப்பதை நேற்றுத்தான் வதனியால் அவதானிக்க முடிந்தது.
வதனியின் கணவனுக்கு அலுவலகத்தில் வேலை.. லீவு எடுக்க முடியவில்லை, அத்தோடு இளையவனுக்கும் பாடசாலை வேலைகள் அதிகமாக செய்து முடிக்க வேண்டியிருந்தமையாலும் வதனி குடும்பத்தோடு மாவீரர்
தின நிகழ்வில் கலந்துகொள்ளும் தீர்மானத்தை விட்டுவிட, நேற்று வதனியும் மாதுரியும் தான் நிகழ்வுக்குச் சென்றிருந்தனர். நிகழ்வு தொடங்கி மௌன வணக்கம் செய்த போது மாதுரி கண்களை இறுக்க மூடிக் கொண்டிருந்தாள்... அவள் முகம் விம்மி வெடிப்பது போல இருந்தது... அவள் எதையோ அடக்க முயல்கிறாள் என்பதை வதனி புரிந்து கொண்டாள்.... அங்கிருந்த பலரும் உணர்வுப் பிழம்புகளுக்குள் சிக்கி கனன்று கொண்டிருந்ததாகவே பட்டது... அடுத்து எல்லோரும் மலர் வணக்கம் செய்ய நிரையாகச் சென்று கொண்டிருந்தனர்... மாதுரியும் வதனியும் கார்த்திகை மலர்களை ஏந்திக் கொண்டு அந்த நிரையோடு சேர்ந்து நின்றனர்... மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்துகொண்டு பாடல்கள் காற்றில் நிறைந்துகொண்டிருந்தது...
வரிசையாக அடுக்கப் பட்டிருந்த மாவீரர்களின் படங்களை அமைதியாக பார்த்துக்கொண்டே, பலவித உணர்வுகள் தொண்டைக்குளிக்குள் பந்தாகி அடைக்க வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தாள் மாதுரி.. கரும்புலி கப்டன் மகிழ்மதி எனப் பெயர் குறிப்பிட்டிருந்த அந்தப் பெண் போராளியின் படத்தைக் கண்டதும் அவள் கால்கள் நகர மறுத்தன.... நடுங்கும் கரங்களால் அந்தப் போராளியின் முகத்தை மெல்ல வருடினாள்.. அவள் கண்கள் தாரை தாரையாக நீரை இறைக்கத் தொடங்கியது.... ”மகிழ்.. மகிழ்” என்ர அவளது முனகலும் அவளது நிலைகுலைந்த தோற்றமும் வதனியை திக்குமுக்காட வைத்தது... தமக்குப் பின்னால் வரிசையில் பலர் தொடர்ந்து நகர்வதற்காகக் காத்துக் கொண்டிருப்பதை அறிந்தவளாக மாதுரியை வரிசையை விட்டு வெளியே அழைத்து வந்தாள் வதனி... கொஞ்ச நேரம் இருக்கையில் அமர்ந்திருந்தால் அமைதியாகி விடுவாள் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகிப் போய்விடவே.... அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டாள்... மாதுரியின் விழிகள் உடைப்பெடுத்துப் பாய்ந்த வெள்ளம் போல ஓடிக்கொண்டிருந்தது.. உதடுகள் வேதனையில் நெளிந்து துடித்துக் கொண்டிருந்தது... ஆனால் எதுவுமே பேசவில்லை... வதனியும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை... எல்லாம் நாளைக்குப் பேசலாம் என அமைதியாக இருந்து விட்டாள்....
விடிந்து 10 மணியைத் தாண்டி விட்டது.. இந்த நிமிடம் வரைக்கும் மாதுரி அந்த நிலையிலிருந்து மீளவில்லை...
அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கிறாள்.. வதனிக்கு அவள் மனக்குறையை எப்படியாவது அறிந்து கொள்ள வேண்டுமென்று மனம் துடித்துக் கொண்டிருந்தது...
கதவை மெல்லத் தட்டி விட்டு சில செக்கன் தாமதத்தில் தானே திறந்து கொண்டு உள்ளே சென்றாள்... மாதுரி கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள்.. அவள் முகம் களையிழந்து போய் கண்கள் அழுது காய்ந்து, சோர்வாகத் தெரிந்தது...
”மாதுரி.. ஒரு அக்காவா நினைச்சு எனக்கு சொல்ல முடியுமெண்டால் சொல்லும்மா... யாரது? கப்டன் மகிழ்மதி..
உன்ர சகோதரமா?”
சாய்ந்திருந்த மாதுரி தலையை மேலும் பின்னால் சாய்த்துக் கொள்ள கண்கள் மீண்டும் உடைப்பெடுத்தது... “ம்ம்.. அக்கா.. அம்மா.. நண்பி...
எல்லாமே....”
”அப்ப உன்ர குளோஸ் ஃப்ரெண்ட்.. அப்படித்தானே..” வதனியின் கேள்விக்கு...
ம்ம்... என்றவள்.. கண்ணீர்த் துளிகளோடே அந்தக் கதையைச் சொல்ல ஆரம்பித்தாள்......
எழில்பொங்கும் அலைகள் தாலாட்டும் அழகிய கடற்பரப்பைக் கொண்ட பிரதேசம் தான் இன்பருட்டி... அது தான் ராஜினி ஓடித் திரிந்த மண்... அந்தக் கடற்கரை மண்ணில் தான் அவள் பிறந்த்து, தவழ்ந்த்து, கால்கள் புதைத்து நடந்தது, ஓடி விளையாடியது எல்லாமே....எப்போதும் துடிதுடிப்பாக இருக்கும் அவளின் துடுக்குத் தனங்களுக்கு அளவே இல்லை.. இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரனுமாக ஒரு கலகலப்பான வாழ்க்கை வாழ்ந்தவள்.. அவள் தன் பருவ வயதை எட்டிய போது ராஜினிக்குள்ளும் ஒரு பருவத் தென்றல் வீசியது.... அந்தத் தென்றலுக்கு முழுக் காரணமானவன் ...அவள் மனதைக் கவர்ந்த அவளது மாமன் மகனான சுமன்..... இருவருக்குள்ளும் அந்த வயதில் அனேகமாக எல்லாருக்கும் ஏற்படக்கூடிய அந்தக் காதல் மலர்ந்தது......
கடற்கரை மணலில் தான் அந்தக் காதலர்களின் சந்திப்பு... ஆனாலும் அது கூட மிகவும் கடினமான சூழ்நிலையில்
தான் சந்திக்கவேண்டியிருந்தது... என்ன தான் மாமன் மகனாக இருந்தாலும் காதல் என்று வந்தால் பெரியவர்களுக்குப் பயந்துதானே ஆகவேண்டியிருந்தது... அவளது வீடு கடலை அண்டியே இருந்தது... சுமன் தன் நண்பர்களோடு கடற்கரைக்கு வருவான்... சுமனின் உயிர் நண்பன் கீதன் தன் தகப்பனை இழந்த பின் குடும்ப வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை இடை நிறுத்திவிட்டு கடற்தொழிலில் ஈடுபட ஆரம்பித்து விட்டதால், பல்கலைக்கழக கல்வியைத் தொடர்ந்துகொண்டிருந்த சுமன் தன் விடுமுறை நாட்கள் எல்லாம் கீதனோடு கடற்கரையிலேயே செலவழிப்பான்... அந்த நேரங்களில் ராஜினி தன் வீட்டின் பின்புரத்தில் உள்ள அந்த உயர்ந்த பாறை மீது அமர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பாள்... சந்தர்ப்பம் பார்த்து அவர்கள் இருவரும் பேசுவதோ அல்லது கடிதங்கள் பரிமாறுவதோ நடக்கும்... இருவரையும் பொறுத்தவரையில் அந்தக் காதல் இன்னும் உறுதியாக வளர்ந்துகொண்டே போனது... ராஜினியின் பருவக் கனவுகள் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன....
இப்படியாக இவர்கள் காதல் வளர்ந்து இரண்டு ஆண்டுகளைத் தாண்டிய போது தான்... ஒருநாள் அது நடந்தது...
-இலட்சியத்தின்
பாதையில் தொடரும்....
இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!
Tweet | |||
சுவாரஷ்யம்....
ReplyDeleteவலி நிறைந்ததாக இருக்குமோ..
எதிர்பார்க்கிறோம் தொடருங்கள்
முதன் முதல் பின்னூட்டம் கொடுத்து என்னை ஊக்குவித்திருக்கிறீங்க...
Deleteமிக்க நன்றி சகோ. ம்ம் உங்கள் எதிர்பார்புக்கு ஏற்ப என் படைப்பு அமிந்துள்ளதா என இறுதி வரை அவதானித்து பின்னூட்டம் கொடுங்க... :)
ஹும்... மாவீரர் நிகழ்விலிருந்து விரிகிறதே சிறகு... நிச்சயம் ஆழம் அதிகமாக இருக்கும். வலிக்கத் தொடங்குகிறது(கதையைச் சொன்னேன்)..
ReplyDeleteஆனாலும் வருவேன் தொடர்ந்து...
தொடருங்கள் கோதை. வாழ்த்துக்கள்!
ம்ம்.. நன்றி இளமதி.. சில வேளைகளில் ஜதார்த்தமான நிகழ்வுகள் மகிழ்வைத் தருவது போல வலிக்கவும் செய்கிறது... தொடர்ந்து வாசியுங்க.. கருத்தை சொல்லுங்க... :)
Deleteதொடக்கமே விறுவிறுப்காகவும், யதார்த்தமாகவும் இருக்கு பூங்கோதை! மாதுரிக்கும், மகிழுக்கும் என்ன சம்மந்தம்? அவர்கள் எப்படி தோழி ஆனார்கள் என்றெல்லாம் அறிய ஆவலா இருக்கு! நடுவே ஒரு காதல் கதையும் வருகிறதே! ஆகவே தொடர் இன்னும் இன்னும் சுவாரசியமாகவே இருக்கும்! வாழ்த்துக்கள்! தொடர்ந்து கலக்குங்கள்!
ReplyDeleteம்ம்... காதல் கதையா? காத்திருந்து பாருங்கள் மணி... உங்கள் ஆவலை பூர்த்திசெய்ய வேண்டுமென்பது தான் என் விருப்பம்... ஆனால் தொடர் முடிந்தபின் நீங்கள் தான் சொல்ல வேண்டும்...
Deleteபின்னூட்டத்திற்கு நன்றி மணி... :)
ஆரம்பமே நன்றாக இருக்கு, ஆனா கவலையைத் தருது.... அடுத்தவைகளையும் படிக்கிறேன்..
ReplyDelete