Monday, 11 February 2013

இலட்சியப்பாதையில்.. தொடர் 4


இலட்சியப்பாதையில்.. தொடர் 4

ராஜி... உண்மையா.. இப்ப உன்ர மனசில பழைய விசயங்கள் ஒண்டும் இல்லையோ.....அது.. நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் விரும்பின காலத்தைப் பற்றிக் கேட்கிறன்...”

அவன் அப்படிக் கேட்கவும், அதிலும் அவன் முன்பு எப்போதும் ஆசையாக அழைப்பது போல ராஜி என்று அழைத்ததும், நாணம் குப்பெனப் பற்றிக் கொள்ள .. அவனிடமிருந்து பார்வையை வெளியே திருப்பிக் கொண்டாள்.. வீசிக் கொண்டிருந்த மெல்லிய காற்று சூடேறிய அவள் கன்னத்தை மென்மையாய் தழுவிச் சென்றது.
...அது மறக்க ஏலுமோ சுமன்... நீங்கள் தான் ஒண்டும் வேண்டாமெண்டு... விட்டிட்டு போனீங்கள்..” ராஜினியின் வார்த்தைகள் அவனுக்குள் ஏதோ ஆறுதலைக் கொடுத்தது போல, அவனிடமிருந்து ஒரு பெருமூச்சு புறப்பட்டது....
உண்மைதான்.... என்ர இலட்சியத்துக்கு முன்னால அது ஒன்றும் இல்லை தான்... ஆனால் என்னால உன்னையும் மறக்க முடியேல்ல... நேற்று உன்னைக் கண்ட பிறகு .. இரவு முழுக்க எனக்கு நித்திரை வரல்ல... அதுக்குப் பிறகு ஒரு முடிவெடுத்தன்... அது தான்.. அதை சொல்றதுக்கு முதல் உனக்குள்ள நான் இன்னுமிருக்கிறனா எண்டு பார்க்கத்தான் அப்பிடிக் கேட்டனான்...” என்று கூறிவிட்டு அவளையே பார்த்தான்... அவள் விழிகள் ஆவலுடன் அவனையே மொய்த்துக் கொண்டிருந்தன... அவளது ஆவலைக் கண்டதும் நிதன் தொடர்ந்து சொன்னான்.

ராஜி... நாங்கள் லவ் பண்ற விசயத்தை இயக்கத்துக்கு மறைக்கக் கூடாது. பொறுப்பாளருக்கு அறிக்கை குடுப்பம்... அவயின்ர அனுமதியோட எப்பவாவது ஒரு நாள் சந்திக்கலாம்... இன்னும் நாங்கள் போராட்டத்தில செய்யவேண்டியது நிறைய இருக்கு...  கொஞ்ச காலம் போகட்டும்....என்ன நடக்குதெண்டு பார்ப்பம்...”  இந்த வார்த்தைகளை இறக்கைகளாகக் கொண்டு மகிழ்மதி உச்சிவானில் பறந்தாள்.. இதன் பின் சில நிமிடங்கள் பேசிவிட்டு தனது சந்திப்பை முடித்துக் கொண்டு விரைவாகப் புறப்பட்டான் நிதன்...
தொடர்ந்த நாட்களில் இலட்சியமும் காதலும் ஒன்றையொன்று சிதைக்காமல் ஒருங்கே பயணித்துக் கொண்டிருந்தது... தோழியின் சீண்டல்களும் கேலிகளும் மகிழ்மதியை மகிழ்வூட்டினாலும் பொய்யாகக் கோபிப்பாள்.. அவளுடைய அந்தப் பொய்க்கோபத்தைப் பார்ப்பதற்காகவே தமிழ்மதி மீண்டும் மீண்டும் சீண்டுவாள்.

இந்த வேளையில் தான் நிதனுக்கு பணி மாற்றம் கொடுக்கப்பட்டது...  அதே ஊரில் தான் இருந்தாலும் சற்று கடினமான பணி வழங்கப்பட்டதால் அவனால் மகிழ்மதியைக் காணமுடியவில்லை.. ஆனாலும் இருவருமே ஒரே இலட்சியப் போக்குடையவர்களாக இருந்த படியால் அவர்களது பணிகளை சீராகவே செய்துகொண்டிருந்தனர். மகிழ்நிலாவுக்கு சில நாட்களாக அவனைப் பார்க்க வேண்டும் போல உள்மனம் தவித்துக் கொண்டிருந்தது.. அவன் இருக்கும் முகாமுக்கு போகமுடியாது. அது இரகசிய வேலைத்திட்டங்கள் நடக்கும் இடம் என்பதால் யாரும் அங்கு போக அனுமதிக்கப்படமாட்டார்கள். நிதனின் தற்போதைய பணியைப் பற்றி அதிகம் நிதன் பகிர்ந்து கொள்ளமாட்டான். என்ன தான் காதலியாக இருந்தாலும் அவன் ஒரு விசுவாசமுள்ள போராளியாக இரகசியம் காத்தலை அவளிடம் கூடக் கடைப்பிடித்தான்.

அன்று காலையில் ஏனோ மகிழ்மதிக்கு நிதனின் நினைவு வந்து கொண்டே இருக்க, அவன் தன்னை வந்து சந்திக்கும் அந்த சந்திப்பு இடத்துக்கு சென்று சற்று நேரம் அமர்ந்துகொண்டாள். இரவு முழுவதும் கண்விழித்து வேலை பார்த்ததால் களைப்பாக இருந்தது.... சுற்றிலும் பார்த்தவளின் கண்ணில் அன்றய செய்தித்தாள் கண்ணில் பட, அதை எடுத்துப் பிரித்த மகிழ்மதிக்கு.. பூமி காலுக்கடியில் நழுவுவதைப் போலத் தோன்றியது... பூமியின் சுழற்சியை முதன்முதல் அப்பொழுதுதான் உணர்வதுபோல தள்ளாட... அப்படியே மயங்கிச்சரிந்தாள்...... தூரத்தில் ஏதோ வேலையாக நின்ற தமிழ்மதி தன் தோழி விழுவதைக் கண்டதும் ஓடிப்போய் அவளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்...

மகிழ்...மகிழ்.... என்ன செய்யுது.... கலை.... ஓடிவா... கொஞ்சம் தண்ணி கொண்டு ஓடிவா...”

என்ற தமிழ்மதியின் பதட்டமான குரல் அந்தச் சூழலை நிறைத்தது... அப்பொழுது அவளது கையிலிருந்து நழுவியிருந்த அந்த செய்தித்தாளைப் பார்த்தபோது தான் தமிழ்மதிக்குக் கூட அந்தப் பதட்டம் ஏற்பட்டது.. ‘மேஜர்.நிதன்` என்று பெயர் போடப்பட்டு வரிச் சீருடையோடு ஒரு வேவுப்புலி வீரனாக சிரித்துக் கொண்டிருந்தான் நிதன்....

நிதன் நேற்று வேவுக்காக சென்றபோது எதிரியின் தாக்குதலுக்குள்ளாகி வீரசாவடைந்திருந்தான். அவனது பருவக் கனவான காதல் தன்னை இலட்சியத்துக்குள் புதைத்துக்கொள்ள, இப்பொழுது அந்த இலட்சியம் மேஜர் நிதனாக சிரித்துக்கொண்டிருந்தது.
அடக் கடவுளே...” என ஏங்கிய தமிழ்மதிக்கு இதயமே நிற்பதுபோல் அதிர்ச்சி..... பாவம்... தமிழ்.. இதை எப்படித் தாங்குவாள்... அவளது வண்ணக் கனவுகள் எல்லாம் ஒரே நாளில் இப்படிச் சிதைந்ததே... எனத் தன் தோழியை எண்ணிக் கண்ணீர் விடத் தொடங்கினாள் தமிழ்மதி. அதற்கிடையில் தண்ணீர் கொண்டு வரப்பட்டதும் மகிழ்மதியின் முகத்தில் தெளித்துத் துடைத்து விட்டாள். மகிழ்மதி சுய உணர்வுக்கு வந்ததவுடன் தேம்பித் தேம்பி அழுதாள் மகிழ்மதி... எப்போதும் மற்றவர்களுக்கு முன் அழுவதை அசிங்கமாக எண்ணுபவள், இப்பொழுது இதயமே வெடித்துச் சிதறியது போல் சில நிமிடம் கதறினாள்..

மகிழ்... மகிழ்... அழாதயடி... எனக்கு எப்பிடி உனக்கு ஆறுதல் சொல்றதெண்டு தெரியேல்ல.... அழாத...” என்று தானும் சேர்ந்து அழுதாள்... அன்று மதியமே அவளுக்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டு நிதனின் வித்துடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக அவன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். மகிழ்மதி. வாகனத்தில் இருந்து இறங்கிய போது அத்தை தான் ஓடோடி வந்து அவளைப் படலையிலேயே வைத்துக் கட்டிப் பிடித்துக் கதறினாள்.. அவளுக்கும் கதற வேண்டும் போல் இருந்த்து. ஆனால் `நான் போராளி .. உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொள்ள` எனத் தன் கண்ணீருக்குத் தானே வேலி போட்டுக் கொண்டாள்.

படலையில் இருந்து பார்த்த போதே முற்றத்தில் பந்தலிடப்பட்டு அங்கே அவனது வித்துடல் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது... ஊதுவத்திப் புகை எங்கும் நிறைந்து நறுமணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது. தலைமாட்டில் இருபக்கமும் இரண்டு போராளிகள் தங்கள் துப்பாக்கிகளைத்  தலை கீழாகக் காலில் குத்தியபடி நிமிர்ந்து நின்று அவனுக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருந்தனர். ராஜினியின் நெஞ்சு படபடத்தது...

எப்படியிருப்பான் என் சுமன்?? என்னை வசீகரிக்கும் அழகான அவன் கண்கள்.. அவற்றை இப்பொழுது பார்க்கமுடியாது.. அவை மூடியிருக்குமே... இப்பொழுதும் அழகாக இருப்பானா? அல்லது... விகாரமாக.. முகங்களில் காயங்கள் பட்டு.... நெருங்க நெருங்க அவளது சிந்தனைகள் அவளைக் கிலியடய வைத்தன. ஒருவேளை அவனது முகம் விகாரமாகியிருந்தால் அந்த முகத்தை மறக்க முடியாதே.. அவளது எண்ணத்துள் தலையைச் சரித்து, புருவங்களை நெருக்கி... அழகாகச் சிரிக்கும் சுமன் அல்லவா இருக்கிறான்... ஆனாலும் உள்ளதை உள்ளபடி ஏற்கவேண்டும்... ஜதார்த்தத்தில் வாழவேண்டும் என்ற அவளது கொள்கை அவளது பயத்தை மேற்கொள்ள நேரே வித்துடலை அணுகினாள்.

அம்மாவும் மற்றவர்களும் உள்ளே இருந்து அழுதுகொண்டே இருந்தார்கள்... அக்கா மகிழ்மதியைக் கண்டதும் பெருகுரலெடுத்து அலறினாள்....
“ஹையோஓஓ.. ரெண்டு கிழமைக்கு முதல் வந்திட்டுப் போனானே... சுமன் கலியாணம் காட்சி எல்லாம் எப்பயெண்டு நக்கலா கேட்டேனே...... நான் ராஜி மச்சாளைத் தானே கட்டப்போறன் எண்டு சொன்னானே.... எல்லாத்தையும் விட்டிட்டு போட்டானே......” என்று அலற.. அம்மாவும் அத்தையும் அக்காவை நோக்கி ஓடினார்கள்...
அதற்குள் மகிழ்மதி ஓடிப்போய் அக்காவின் வாயைப் பொத்தினாள். அவள் கண்ணில் கண்ணீர் கடகடவென பொழிந்தது.

“அக்கா.. தயவு செய்து ஒண்டும் கதைக்காதையக்கா... இது அவற்ற வீரச்சாவு நடக்கிற இடம்... எல்லாரும் இருக்கினம்... அவற்றை வீரத்தைப் பற்றி மட்டும் நினைப்பம் அக்கா... சத்தம் போடாதையக்கா..” அக்காவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மெல்லிய குரலில் கூறினாள்... அக்கா புரிந்து கொண்டவள் போல தன் ஒப்புச் சொல்வதை நிறுத்தி விட்டு தொடர்ந்தும் பெருங் குரலில் அழுது கொண்டிருந்தாள். இப்பொழுது மகிழ்மதி முகத்தைத் துடைத்துவிட்டு, மீண்டும் வித்துடலை நெருங்கி சுமனின் முகத்தைப் பார்த்தாள்...
“இல்லை.... சுமன் அழகா தான் இருக்கிறான்... அமைதியாக தூங்குகிறவன் போல... எல்லாவற்றையும் சாதித்துவிட்டு அமைதியடைந்தது போல அப்படியே படுத்திருக்கிறானே... நிச்சயமாக அவனது முகத்தில் வீரம் தெரிகிறது..” என தன் நெஞ்சுக்குள் ஒரு காதலியாகக் கதறி உருகினாள்... ஆனால் வெளியில் அழவில்லை. இறுகிய முகத்துடன் கண்களை வெட்டாமல் சுமனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.....

“சுமன்... என்னை மட்டும் இப்படி ஏங்க வைச்சிட்டு நீங்க அமைதியாகிட்டீங்களே.. கடைசி நேரத்தில என்ன நினைச்சீங்கள்... என்னட்ட ஏதாவது சொல்ல.. ம்ம்.. நிச்சயமா என்னைக் கலங்காமல் இலட்சியத்தில உறுதியா இரு எண்டு சொல்ல நினைச்சிருப்பீங்கள்.. “ என மனதுக்குள் பிதற்றியவளுக்கு.. சுமனின் முகத்தில் புன்னகை நெளிவது போன்ற பிரம்மை...

எல்லாம் முடிந்துவிட்டது... எதிர்பாராத நிதனின் வீரச்சாவு மகிழ்மதியை எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதோ அந்தளவுக்கு அவளுடைய இலட்சியத்தில் இன்னும் உறுதியையும் ஏற்படுத்தியது. நிதனின் ஆசைப்படி போராட்டத்தில் நிறைய சாதிக்க வேண்டுமென்பது ஒரு வெறியாகவே ஏற்பட்டது. காதலியின் உள்ளத்துள் இலட்சிய விதையாகி விழுந்து வேரூன்றிய அவனது காதல், இப்பொழுது முளைவிட்டுக் கிளை பரப்பத் தொடங்கியது...

-இலட்சியத்தின் பாதையில் தொடரும்....




முன்னய தொடர் படிக்காதவர்களுக்காக.............................


இலட்சியப்பாதையில் தொடர்  2 இற்கு இங்கே கிளிக்குக

இலட்சியப்பாதையில் தொடர்  3 இற்கு இங்கே கிளிக்குக


இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

3 comments:

  1. அருமையான எழுத்துநடை உரையாடல்கள் எல்லாம் நம்ஊர் பாணியிலே சிறப்பாக இருக்கு.ஒரு தொடர்கதை எப்படி எழுதவேண்டும் என்று உங்கள் தொடரில் இருந்து கற்றுக்கொள்ள கூடியதாக இருக்கின்றது

    அடுத்த பகுதி எப்படி இருக்கும் ராஜி என்ன செய்திருப்பாள் என்று ஊகிக்கமுடிந்தாலும் சுவாரஸ்யமாக இருக்கு பாராட்டுக்கள்.

    தொடருங்கள் தொடர்க்கின்றோம்.

    ReplyDelete
  2. நாட்டுக்காக போராட்ட வேள்வியில் உள்ளவர்களுக்கும் காதல், திருமணம் போன்ற அந்தந்த பருவத்தில் ஏற்படும் அவர்கள் உணர்வுகளை மதித்து அதே நேரம் கட்டுக்கோப்புகளுடனும் அவர்கள் நடந்தவிதத்தினை நீங்கள் இங்கே சுட்டிக்காட்டியது என்னைக்க கவர்ந்தது.

    மனதை நெருடும் சம்பவத்தை மிகமிக தத்ரூபமாக எழுதியிருக்கின்றீர்கள் கோதை. உண்மையில் கொடுமையான தருணம் அது.
    மிக நேர்த்தியாக கதையை நகர்துகின்றீர்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்!

    ReplyDelete
  3. ஆக்கம் அருமை.தொடருங்கள்

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!