Friday, 14 June 2013

தவறவிட்ட தருணங்கள்...


மாலை 6 மணியாகியும் வீதியில் பரப்பு அடங்கவில்லை. வேலை முடிந்து வீட்டுக்குப் போகிறவர்களும், கடையில் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் செல்பவர்களுமாக, பொழுதுபட முதல் போய் சேர்ந்துவிட வேண்டுமென்ற அவசரத்தைக் காலகளில் பூட்டிக் கொண்டிருந்தார்கள். என்னைத் தாண்டிச் செல்லும் எந்த வாகனத்தையும் சட்டை செய்யாமலே என் சைக்கிளை மிகவும் மெதுவாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன். குருமன்காட்டுச் சந்தியையும் தாண்டி என் துவிச்சக்கரவண்டியின் இரண்டு சில்லுகளும் சாவகாசமாக சுழன்று கொண்டிருக்கின்றன.  வயல்வெளியூடாக வந்து வருடிய காற்று என் சிந்தனையின் உஷ்ணத்தைத் தணிப்பதாக இல்லை. 

ஏன் அப்படி வாழ்ந்துவிட்டேன்???... சில நாட்களாகவே எனக்குள் அந்தக் குற்ற உணர்வு தாக்கிக் கொண்டே இருக்கிறது. பின்னால் வேகமாக வந்து நிறுத்திய மோட்டார் சைக்கிளின் சத்தத்தில் திடுக்குற்ற போது தான் நடுத்தெருவில் நான் சைக்கிள் ஓட்டிக் கொண்டு வந்திருப்பது தெரிந்தது. மன்னிப்புக் கேட்கும் பாவனையோடு மோட்டர் சைக்கிள் ஓட்டிக் கொண்டு வந்த அந்த வாலிபனைப் பார்க்கிறேன்.
“தம்பி, கொஞ்சம் ஓரமா பார்த்துப் போவன் ஐயா... வாகனங்கள் எல்லோ வருகுது...” பின்னால் இருந்த வயோதிபப் பெண் மிருதுவாக சொல்கிறார்.
“அம்மா, நீங்க சாறியை நல்லா ஒதுக்கிக் கொண்டு இருங்கோ..கவனம்.” என்று சொல்லிக் கொண்டே அந்த வாலிபன் மோட்டார் சைக்கிளைத் தொடர்ந்து ஓட்டிக் கொண்டே அவனைக் கடந்து செல்கிறா. நெஞ்சைத் துக்கம் அடைத்துக் கொள்கிறது. இப்படித்தான்... யாராவது தாயின் மேல் பாசம் காட்டுவதைக் கண்டால் என் மனம் பாரமாகிவிடும்.
நான் என் தாயை அப்படிக் கவனிக்கவில்லையே............ நாங்கள் எல்லோருமாக அம்மாவுக்கு வாழ்க்கையில் கொடுத்த பரிசு “புரிந்து கொள்ளப்படாத அவள்” என்ற நிலைதான்.
சிறுவயதில் இருந்து நான் அத்தையோடு வளர்ந்தவன். அப்பா கணேஸ் தன் மூத்த அக்கா பரமேஸ்வரி மேல் உயிராகப் பாசம் வைத்திருந்தார். சிறுவயதில் தன் தாயை இழந்த அப்பாவுக்கு அம்மாவாக இருந்தவள் அத்தை தான். அத்தையும் அப்பாவைத் தன் உயிரைக் கொடுத்தேனும் வளர்ப்பேன் என்ற பிடிவாதத்தோடு வளர்த்தவள். அத்தை மேல் பாசம் வைத்திருந்த அப்பாவுக்கு, அம்மா மேல் எப்படியோ காதல் வந்து தொலைத்துவிட்டது. என்ன செய்வது... அத்தையின் சம்மதத்தை ஒற்றைக் காலில் நின்று பெற்றுக் கொண்டாலும் அப்பாவின் அப்போதைய சிந்தனையும் தன்னைத் தாயாக வளர்த்த அத்தையின் மனம் நோகாதபடி வாழ வேண்டும் என்பதே. இது அத்தைக்கு சற்றே பெருமையைக் கொடுத்தது. இவர்களின் பாசத்துக்கிடையில் சிக்கிக் கொண்டது என் அம்மா சாந்தா தான்.
இவையெல்லாம் எனக்கு அத்தை சொல்லியிருக்கிறா. ஆனால் அம்மாவைப் பற்றி அத்தை நல்லதாக சொல்லி ஞாபகம் இல்லை.   அப்பொழுதெல்லாம், அத்தையின் பாசம் தான் எனக்கும் பெரிதாகத் தெரிந்தது.
“நந்துக் குட்டி, பிள்ளைக்கு என்ன சாப்பாடு செய்து தர? ஹ்ம்... தாய்க்காரிக்கு என்ன அக்கறை பிள்ளைகளில.. வேலையும் தானும் எண்டு திரியுது...”
இப்படி அன்பும் விஷமுமாக அத்தை ஊட்டியவை தான் என் மனதில் விதையாக ஊன்றி விட்டிருந்தது.. அம்மா கச்சேரியில் ஒரு எழுதுவினைஞராகப் பணி புரிந்து கொண்டிருந்ததால், வேலைக்குப் போகும் நேரங்களில் எல்லாம் அத்தை தான் உலகம் என்று வாழ்ந்து விட்டதால், அத்தை அம்மா மீது வேண்டுமென்றே அவதூறு சொல்கிறாள் என்பது என் சின்ன மூளைக்குப் புரிய மறுத்தது.
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வரும்.. அநேகமாக நான் தான் அதன் கருப்பொருளாக இருப்பேன்.
“என்னப்பா.. நந்து வீட்டில தங்கிறான் இல்ல... சனி ஞாயிறில எண்டாலும் நான் சமைக்கிறதை சாப்பிடலாம் தானே...அத்தை அத்தையெண்டு அங்கேயே இருக்கிறான்” அம்மா வேதனையோடு ஆரம்பிப்பாள்,
“உனக்கு பிள்ளை வளர்க்கத் தெரியுமே.. பிள்ளைகளை நீ கவனிச்சால் தான் அதுகள் உன்னோட சேரும்...” என்று திரி மூட்டுவான் கணேஸ்...
பின்னர் தர்க்கம் வலுத்து, பட்டாசுகள் வெடித்து இறுதியில். சாந்தாவின் கண்ணீரில் முடியும், சில வேளைகளில் கணேசின் கைவரிசைகள் சாந்தாவைப் பதம் பார்த்திருக்கும். அப்பொழுதெல்லாம் அத்தை,
“பார், பிள்ளைகளுக்கு முன்னால புருசனுக்கு வாய் காட்டுறதை.. அவன் சொல்லுறதில என்ன பிழை, கிழமை முழுக்க கச்சேரி கச்சேரி எண்டு அலையுறது.. சனி ஞாயிறில அவனோட சண்டை பிடிக்கிறது.. அவனுக்கு நிம்மதி இல்லாத வாழ்க்கை...” என்று கூறும் போது அம்மாவில் ஆத்திரம் தான் வரும்.
சைக்கிள் முருகன் கோயிலை நெருங்கியதும், ஓரமாக நிறுத்திவிட்டு சைக்கிளை விட்டு இறங்காமலே, இடதுகாலைத் தரையில் ஊன்றிக் கொண்டே கோயிலைப் பார்க்கிறேன். அங்கேயும் ஒரு தாய் கைகளைக் கூப்பிக் கண்களை மூடிக் கொண்டு, உருக்கத்தோடு கோயிலைச் சுற்றிக் கொண்டிருக்கிறாள்.. பாவம் எந்தப் பிள்ளைக்காக வேண்டுகிறாளோ.. அவளுக்கும் என்னைப் போல ஒரு பிள்ளை இருந்திருக்குமோ?... நெஞ்சில் இருந்த துக்கம் தொண்டைக்குள் உருண்டு வந்து அடைப்பது போலிருந்தது. அம்மாவும் தெய்வபக்தி உடையவள் தான். எத்தனை தடவை, “இறைவா என் பிள்ளையை எனக்கு மீட்டுக் கொடு” என்று புலம்பியபடி கோயிலை வலம் வந்திருப்பாளோ.. ஆனால் இப்பொழுதெல்லாம் அம்மா கோயிலுக்குப் போவதில்லை. ஏன் போவதில்லை என்பதைப் பற்றி யாரும் சிந்திப்பதும் இல்லை, கேட்பதும் இல்லை. நிச்சயமாக கடவுள் தன்னைக் கைவிட்டதன் விரக்தியாகத் தான் இருக்கும் என்று இப்பொழுது உள்மனது கதறுகிறது.
காற்று வீசும் போது உடல் உஷ்ணமாவது போல் தோன்றியது. மீண்டும் என் சைக்கிளை மிதிக்க ஆரம்பிக்கிறேன். என் கால்களைப் போலவே அம்மாவின் நினைவுகளும் விடாமல் சுற்றிக் கொண்டிருக்கின்றன. என்னைத் தாண்டி ஒரு பெண் ஸ்கூட்டியில் வேகமாகச் செல்கிறாள். வேலை முடிந்து செல்கிறாள் போலும்...
அம்மாவும் ஒரு சார்ளி மோட்டார்சைக்கிள் வைத்திருந்தாள். அம்மாவுக்கு பயந்தசுபாவம். அவளுக்கு நம்பிக்கை ஊட்டவும் துணிவைக் கொடுக்கவும் யாரும் இருக்கவில்லையே. ஆரம்பத்தில் நடுங்கிக் கொண்டுதான் வண்டியோட்டுவாள். நான் கூட எத்தனை தடவை அம்மாவைப் பார்த்து கேலி செய்து இருக்கிறேன்...
“ஏன் உங்களுக்கு உந்த ஏலாத வேலை? பேசாமல் சைக்கிளில போக வேண்டியது தானே..?” என் கேலிக்கு அம்மா கோபிக்க மாட்டா.
என்னடா செய்யிறது.. ஒவ்வொரு நாளும் சைக்கிள் உழக்க ஏலாதாம்.. கொஞ்ச நாளைக்கு தானே.. அதுக்கு பிறகு நீ வளர்ந்திடுவாய்.. அம்மாவை ஏத்திக் கொண்டு போவாய் தானே...” சிரித்துக் கொண்டே குழந்தை மாதிரி கேட்பா.
“ஐயோ.. உங்களை ஆர் ஏத்திக் கொண்டு போறது. நீங்கள் பயத்தில என்னையும் பிடிச்சு விழுத்திடுவீங்கள். அத்தை எண்டால் ஆடாமல் அசையாமல் இருப்பா...” பல நாட்கள் இது போன்ற பதில்கள் அம்மாவின் சிரித்த முகத்தைச் சுருங்கிப் போக வைக்கும். அப்பொழுதெல்லாம் அதைப் பற்றி நான் வருந்தியதும் கிடையாது. மொத்தத்தில் அம்மாவுக்குள் ஒரு ஜீவன் இருப்பதை நான் சிந்தித்ததே இல்லை. அம்மாவைப் பொறுத்தவரையில் நான் எதை சொன்னாலும் செய்தாலும் அடுத்த கணமே என்னை சின்னப் பிள்ளை என்ற போர்வையைப் போர்த்தி அணைப்பவள். அவள் அணைப்பிற்குள்ளும் தேளாகக் கொட்டியவன் நான்.
ஒருநாள் அம்மா வேலை முடிந்து வரும் போது மிகவும் குழப்பமாகவும் கோபமாகவும் வந்தா. உள்ளே அப்பாவிடம் புலம்புவது கேட்டது. “மனேஜர் அப்படி கதைச்சிருக்க கூடாது.. அவர் வேணுமெண்டே என்னை அவமானப்படுத்துறாரப்பா...”
“இஞ்ச... உந்த வேலைப் பிரச்சனை எல்லாம் வீட்ட கொண்டராதையெண்டு எத்தின தரம் சொல்லுறது.. உனக்கு ஆட்களோட கதைக்கப் பேசத் தெரியாது... சும்மா வேலையை விட்டிட்டு நில் எண்டால் ஏதோ பெரிய உழைப்பாளி மாதிரி போறாய்...” அப்பாவின் குரல் கர்ச்சித்தது.
“என்னப்பா, நான் உங்களிட்ட சொல்லாமல் வேற ஆரிட்ட சொல்லுறது... கன்டவனும் என்னை அவமானப்படுத்துறான் எண்டதுக்காக வேலையை விட்டிட்டு நிற்க ஏலுமே. நான் வேலை செய்யிரது உங்களுக்கும் உதவியாத்தானே இருக்குது...”
இஞ்ச உன்ர காசு வேணுமெண்டு ஆர் கேட்டது... சும்மா இருக்கேலாமல் போறது. அவனுகளுக்கு முன்னால இளிச்சுக் கொண்டு நிண்டால், அப்பிடித் தான் கதைப்பாங்கள்...”
இதர்கு மேல் அம்மா எதுவும் பேசவில்லை. போய்ப் படுத்துவிட்டா. மறுநாள் அம்மாவின் வீங்கிய முகம், இரவு முழுதும் அழுதிருக்கிறா என்று காட்டியது. அன்று, அப்பாவின் வார்த்தைகளை விட அந்த மேலதிகாரி கொடுத்த அவமானம் பரவாயில்லை என்று தோன்றியிருக்கும் அம்மாவுக்கு. அதற்குப் பிறகு இன்று வரை வேலைத்தளத்தில் வரும் பிரச்சனைகளை அம்மா எப்படி சமாளிக்கிறா என்று யாருக்கும் தெரியாது....

வீட்டை அண்மித்ததும் சைக்கிளை ஒரு பக்கம் சாத்தி வைத்து விட்டு, என்னை ஊடுருவிப் பார்க்கும் சித்தியின் பார்வையைத் தவிர்த்துக் கொண்டு அறைக்குள் போய் கட்டிலில் சாய்ந்தேன். இன்னும் இரண்டு நாட்களில் நேர்முகத் தேர்வு.. தெரிவு செய்யப்பட்டால், வெளிநாட்டில் மேற்படிப்பு. அதற்காக ஆயத்தப் படுத்துவதற்காக ஒருவாரம் முதலே வந்து சித்தி வீட்டில் தங்கியிருக்கிறேன். இப்பொழுது தான் அம்மாவின் அருகாமையைத் தொலைத்தது போல ஒரு உணர்வு. அத்தையின் னினைப்பு எழும்போதெல்லாம் அத்தையின் சிரித்த முகம் நினைவில் வருகிறது. ஆனால் அம்மாவின் நினைவு வரும்போது, அவளது சோர்ந்துபோன விழிகள் தான் நினைவை அழுத்துகிறது...
கதவைத் தட்டிவிட்டு சித்தி உள்ளே வந்தா..
“நந்து.. என்ன பிரச்சனை உனக்கு.. வந்து ரெண்டு நாள் தான் சந்தோசமா இருந்தனி.. நாளண்டைக்கு இன்ரவ்யூ.. நீ இப்பிடி சோர்ந்து போயிருக்கிறது எனக்கு என்னவோ மாதிரி இருக்கு.. நான் அண்டைக்கு தவறா ஏதும் சொல்லிட்டன் எண்டால் மனசில வைச்சிருக்காதயப்பன்..” கெஞ்சும் குரலில் கேட்ட சித்தியப் பார்க்கும் போது என் கண்கள் குளமாகிப் போக சித்தி பதறினாள்.. “ஐயோ... நந்து.. ஏன் அழுகிறாய்... கடவுளே.. ஏது ஏலாமல் இருக்கிதோ..”
“இல்லை சித்தி.. நீங்களும் அண்டைக்கு என்னோட மனம் திறந்து கதைக்காட்டில் எனக்கு எதுவும் புரிஞ்சிருக்காது... எவ்வளவு காலம் அம்மாவின்ர உணர்வைப் பற்றி கொஞ்சம் கூட நான் யோசிக்காமல் இருந்திட்டன்...”
சித்தி கண்களில் கசிந்த கண்ணீரோடு மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சித்தி.. அண்டைக்கு உங்களை சித்தப்பா உங்களை சும்மா எதுக்கோ நக்கலடிக்க, சுதனுக்கு எவ்வளவு கோபம் வந்தது. எங்கட அப்பா அம்மாவுக்கு வார்த்தைகளால மட்டும் இல்ல.. கையாலையும் காலாலையும் கூட எத்தனை தரம் அடிச்சிருப்பார். நான் ஒருநாளும் ஏனெண்டு கூடக் கேட்டதில்ல... அம்மா ஒரு நாள் அழுதிட்டு அடுத்த நாள் அதை மறந்தது போல வழக்கம் போல வேலைக்குப் போவா...”
விசும்பி அழுத என் தலையை சித்தி கோதிவிட்டது ஆறுதலாக இருந்தது.
“சே.. நந்து, இதென்ன சின்னப் பிள்ளை மாதிரி... நீ அக்காவைப் பற்றி விளங்கிக் கொண்டதே போது. சும்மா மனசைப் போட்டுக் குழப்பாமல் நாளண்டைக்கு இன்ரவ்யூக்கு ரெடி பண்ணு...”
இல்ல சித்தி... நான் இன்ரவ்யூக்குப் போகேல்ல...”
சித்தி அதிர்ச்சியோடு பார்த்தாள்..
“சித்தி, நான் இதில தெரிவு செய்யப்பட்டால், வெளிநாட்டுக்குப் போய்டுவன். பிறகு எத்தனை வருசத்தால வருவனோ தெரியாது. அம்மா இத்தனைகாலமும் பட்ட வேதனைகள் இனியும் பட வேண்டாம். நான் மட்டும் தான் அம்மாவுக்கு துன்பம் எண்டால், பெரிசுபடுத்த மாட்டா. குஞ்சு மிதிக்கிறது கோழிக்கு நோகாது எண்டுவினம். ஆனால் அம்மாவுக்கு எத்தனை பக்க நெருக்கடி... அத்தையால பிரச்சனை, அப்பாவிர புரிந்துணர்வின்மை, வேலை செய்யிற இடத்தில பிரச்சனை... இப்பிடி எல்லாத்தையும் எதிர்நோகிற அம்மாவுக்கு தைரியம் குடுக்க ஆராவது வேணுமெல்லோ... அது நானா இருந்தால் அம்மாவுக்கு எவ்வளவு சந்தோசமா இருக்கும்..”
சித்தி இப்பொழுது கண்ணீரோடு என்னை அணைத்துக் கொண்டா. “உன்னைப் பிள்ளையா பெத்ததுக்கு அக்கா எவ்வளவு குடுத்து வைச்சிருக்கிறாடா நந்து..” சித்தியின் ஆனந்தக் கண்ணீரில் அம்மாவின் சிரிப்பு தெரிந்தது... இனி அம்மாவின் வாழ்க்கையில் தொங்கிக் கொண்டிருந்த “புரிந்து கொள்ளப்படாத அவள்” என்ற பெயர்ப்பலகையை கழற்றி தூர வீசி விடலாம்...
முற்றும்
(கச்சேரி = அரச அலுவலகம்)

16 comments:

 1. குட் மோர்னிங் பூங்கோதை!

  அட நான் தான் மொத ஆளா? ஒகே இதோ படிச்சுட்டு வந்துடுறேன் !!

  ReplyDelete
 2. வாங்க வாங்க
  காலை வணக்கம் மாட்ஜியோஜ்ஜி மனீ மனீ.

  முதல் ஆளா படித்துவிட்டு கருத்து சொல்லுங்க, காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 3. அருமையான கதை
  முடிவு அதைவிடச் சிறப்பு
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க.. வணக்கம் சகோ.
   உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து பதிவுகளைப் படித்துக் கருத்து சொல்லுங்க....

   Delete
 4. என்னவொரு அக்கறை.... தீர்மானம்.... அருமையான முடிவு... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ. தொடர்ந்தும் என் பதிவுகளைப் பார்த்துக் கருத்து சொல்லுங்க.

   Delete
 5. உங்கட பாஷைல சொல்றா கதையை புரிஞ்சுக்க கொஞ்சம் கஷ்டப்பட்டாலும்.., கதை அருமை. இனி அந்த தாயின் வாழ்வில் மல்ர்ச்சி வந்தால் நல்லது

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ராஜி. என் பதிவுகள் ஈழத்துப் பேச்சு வழக்கில் அமைந்திருக்கும். அப்பப்போ உங்கள் மொழி நடையிலும் எழுதுகிறேன். எனினும் சிரமம் பாராமல் வாசித்துக் கருத்துப் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

   Delete
 6. அம்மாவின் வாழ்க்கையில் தொங்கிக் கொண்டிருந்த “புரிந்து கொள்ளப்படாத அவள்” என்ற பெயர்ப்பலகையை கழற்றி தூர வீசி விடத்துடிக்கும் பிள்ளை அருமையான வரம் ..சிறப்பான ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 7. அற்புதம் அக்கா,,,,அருமையான ஒரு உணர்வுப்பகிர்வினை சிறு கதையாக படைத்தமை சிறப்பு.... வாழ்த்துக்கள் அக்கா....!!!

  ReplyDelete
 8. அடடா.. நீண்ட காலத்தின் பின்பு ஒரு அழகிய கதையோடு தூசு தட்டியிருக்கிறீங்க புளொக்கை.. நில்லுங்க படிச்சிட்டு வாறேன்ன்ன்...

  ReplyDelete
 9. //குருமன்காட்டுச் சந்தியையும் தாண்டி என் துவிச்சக்கரவண்டியின் இரண்டு சில்லுகளும் சாவகாசமாக சுழன்று கொண்டிருக்கின்றன. //

  ஆவ்வ்வ்வ்வ் ஒரு காலத்தில, என் சைக்கிளும் ரெக்கை கட்டிப் பறந்த சந்தி:))

  ReplyDelete
 10. அழகிய கதை.. அப்படியே நிஜம்போல எழுதியிருக்கிறீங்க.. உண்மைதான் சிலர் அன்பாக பேசுவதுபோல நடித்து அப்படியே விஷத்தை திணிப்பார்கள்.. அப்படியானவர்களை கண்டுபிடிக்க காலம் எடுக்கும்.

  ReplyDelete
 11. நல்ல சிந்தனை. அருமையாக வர்ணனைகளுடன் சிறப்பாக இருந்திச்சு கோதை. சில இடங்களில் வர்ணனையைப் படிக்கும்போது காட்சியை நேரில் காண்பதுபோல உணர்வு.

  நன்றாக எழுதியுள்ளீர்கள். முடிவும் அருமை.

  நீண்டகாலத்தின்பின் நல்லதொரு ஆக்கத்துடன்... மகிழ்வாயிருக்கிறது மகளே!...
  தொடரவேண்டுகிறேன்...
  வாழ்த்துக்கள் கோதை!

  ReplyDelete
 12. கதையின் ஓட்டம் சிந்திக்க வைக்கின்றது என்றாலும் அத்தையின் காரணம் சொக்கி இருக்கு விடையில்லாமல் அன்பு அன்னையிடம் மட்டும் தானோ நந்துக்கு! அருமை நீஈஈஈஈஈஈஈண்ட் காலத்தின் பின் வலையில் வருவதில் மகிழ்ச்சி பூங்கோதையாரே!

  ReplyDelete
 13. சகோதரிகள் இராஜேஸ்வரி, அதிரா, இளமதி அம்மா, அரசி நிலவன் மற்றும் கண்ணும் நேசன்ணா... அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்... என் கணணி வசதியின்மையால் தனித்தனியாக பதில் போடவில்லை... மன்னிக்கவும்....

  ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!