Monday, 12 May 2014

வர்ணமும் வ(லி)ரிகளும்...

உருவக் குத்திய வாளோடும்
உயிர்வலியெடுப்பிலும்
உதிரச் சொரியலிலும்
உருவாகிய கனவுகள்
விடைபெற்றுக் கொள்கின்றன
வலியினை மட்டும் விட்டு விட்டு...

இருளிலிருந்து தூக்கப்பட்டு
கறுப்பு வர்ணத்தை மட்டுமே
வாழ்வின் பரிசாய் கொண்டு
வாழும் இதயங்களோடு இதயமாய்
துடித்துக் கொண்டு தான் இருக்கிறது
பிறந்து விட்டதற்கான தண்டனையாய்.... 

Thursday, 1 May 2014

முகமதிய காதலியும் நண்பனும் - தொடர்ச்சி....

நட்பு நெஞ்சங்களுக்கு சிநேகிதியின் அன்பான வணக்கங்கள்!
இனம், மதம் பாராமல் வரும் காதலில் பிரிவதால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை கடந்த வாரம் அலசினோம். இது பற்றி பதிவிலும், தனிப்பட்ட முறையிலும் பின்னூட்டம் தந்த உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தப் பதிவில் இனம் மதம் தாண்டி வரும் காதல்களில் ‘இணைதல்’ பற்றிப் பார்க்கலாமா நண்பர்களே.. தயாரா???
இக்கேள்வியை எனக்கு அனுப்பி வைத்த நண்பனே... நீங்க தயாரா.??
எண்ணும் போதே மலைப்பாகவும் பயங்கரமாகவும் இருக்கிறது.. ஆனாலும் இந்த விடயத்திலும் நான் ஆலோசனை கூற பின் நிற்கவில்லை. ஏனென்றால் இந்த நிலையை நான் கடந்து வந்திருக்கிறேன். எனக்கு அப்பொழுது அதீத துணிவு தேவைப்பட்டது. ஒரே இனத்தில், மதங்கள் மட்டும் வேறுபட்ட, அதுவும் அதிக கட்டுப்பாடற்ற மதங்களைச் சார்ந்திருந்த வேளையில் எனக்கநத்தகைய துணிச்சல் தேவைப்பட்டதென்றால், கடுமையான கட்டமைப்பையும் கட்டுப்பாடுகளையும் கொண்ட ஒரு மதத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு அசாத்திய துணிச்சல் அவசியமாக இருக்கிறது. எனவே இந்த முடிவுக்கு வருமுன் அதனால் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகளை எல்லாம் எதிர்கொள்ள உங்கள் நண்பனுக்கோ அல்லது அந்தப் பெண்ணுக்கோ பலம் இருக்கிறதா என்பதை நிச்சயம் அவர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
சரி இப்பொழுது விசயத்துக்கு வருவோம். முதலில் இந்த திருமணத்தால் ஏற்படக்கூடிய எதிர்மறையான விளைவுகளைப் பார்க்கலாம்.  இவர்கள் இருவரும் ஒன்று சேர்வதால், முதலாவது இவர்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சனை குடும்பத்திலிருந்து, அவர்கள் சார்ந்த சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவார்கள். இதனால் இவர்கள் ஊருக்குள் வாழும் போது பல பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டி வரும். அப்படியே ஊரை விட்டு வெளியே வந்து வாழ்வதாக இருந்தாலும் கூட யாருடைய உதவியும் இன்றி இவர்களுடைய வாழ்க்கையின் ஆரம்பம் மிகவும் தடுமாற்றம் காணும். பொருளாதார ரீதியாகவும் சில சமூக பாதுகாப்புகளும் கூட கிடைக்காமல் போகலாம். இந்த வேளையில் இவர்களில் ஒருவர் மனம் தளர்ந்தால் கூட சந்தோசமாக ஆரம்பிக்க வேண்டிய திருமண வாழ்க்கை ஆட்டம் காண ஆரம்பிக்கும்.

அடுத்து இவர்களில் ஒருவருடைய பெற்றோராவது மிகவும் தீவிரமான மதவாதிகளாகவோ அல்லது சாதிய பற்று உடையவர்களாகவோ இருந்தால் உயிராபத்துக்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் இருக்கிறது. இன்னமும், பெற்றோர் அல்லது சகோதரர்கள் இவர்களின் திருமணத்தை பெருத்த அவமானமாக எதிர்நோக்க வேண்டி இருக்கலாம். இந்த விடயங்களில் தமது பெற்றோர் எப்படி என்பது பற்றி உங்கள் நண்பனும் அவர் காதலியும் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். அதை அவர்கள் அவசியம் புரிந்துகொள்ள முயல வேண்டும்.
என்ன நடந்தாலும் சரி, காதல் மட்டும்தான் முக்கியம் என்றோ, அல்லது நாம் இணைந்து வாழ்வது மட்டும் தான் வாழ்க்கை என இருவரும் முடிவெடுக்கும் பட்சத்தில், மேற்குறிப்பிட்ட எல்லா எதிர்மறையான பிரச்சனைகளையும் சமாளிக்கப் போதுமான அசாத்திய துணிச்சலும் பலமும் இவர்களுக்கு இருக்குமானால், திருமணம் செய்ய முடிவெடுக்கலாம். ஆனால் அப்படி ஒரு முடிவுக்கு வரும் போது, நிறைய தியாக மனப்பான்மையும் சகிப்புத்தன்மைகளையும் இவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். மதம் இவர்களுக்குள் நிச்சயம் செல்வாக்கு செலுத்தக் கூடாது. மதத்தை விட்டு விட்டு உங்களுக்குள் இருக்கும் கடவுளைப் பற்றிக் கொள்ள வேண்டும். அப்படியென்றால் மட்டுமே இந்தத் திருமணங்கள் வெற்றியாக அமையும். ஒருவருடைய அனுஷ்டானங்களுக்கு ஒருவர் தடையாக இருக்க முடியாது. பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் இங்கு மிக அவசியம். நிச்சயம் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு சிறு பிரச்சனையையும் தமக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும். ஏனென்றால் எதிர்ப்புத் திருமணத்தின் பின்னர் இரு தரப்பினருடைய பெற்றோரும் உறவினர்களும் உங்கள் பிரச்சனைகளை தூர நின்று மட்டுமே பார்ப்பார்கள். நீங்களாகத் தேர்ந்தெடுத்த வாழ்க்கை என எல்லோரும் ஒதுங்கிப் போவார்கள். இவை எல்லாவற்றையும் எதிர்கொண்டு ஒரு ஆரோக்கியமான குடும்ப வாழ்வை இவர்கள் அன்பினால் கட்டியெழுப்ப முடியுமென்றால், அந்தக் காதலுக்கு நான் தலை வணங்குகிறேன்.
சகோதரா,
உங்கள் நண்பருடைய வயதையோ அந்தப் பெண்ணுடைய வயதையோ நீங்கள் குறிப்பிட்டிருக்கவில்லை. இவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தால், மேற்குறிப்பிட்ட எந்தப் பிரச்சனைகளையும் பற்றி அவசர அவசரமாகத் தீர்மானிக்க வேண்டியதில்லை. அவர்களுக்கு திருமணத்திற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. குறைந்த பட்சம் பெண் வீட்டிலோ அல்லது உங்கள் நண்பரின் வீட்டிலோ வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கும் கட்டம் வரும் வரைக்கும் அவகாசம் இருக்கிறது. ஆறுதலாக சிந்தித்து ஒரு முடிவுக்கு வரலாம்.
இரண்டு விதமான முடிவுகளைப் பற்றி அலசியிருக்கும் இந்தப் பதிவில் என் தனிப்பட்ட பார்வை மட்டுமே இருக்கிறது. எனவே உங்கள் நண்பரும் அந்தப் பெண்ணும் இவை குறித்து உங்கள் ஊர் சூழல், கட்டமைப்பு, கலாச்சாரம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு அவற்றை அடிப்படையாக வைத்தே இந்த முடிவுகளின் சாத்தியப்பாட்டைத் தீர்மானிக்க வேண்டும். எனவே இறுதித் தீர்வை அவர்களின் கையிலேயே ஒப்படைக்கிறேன். இது பற்றி வாசகர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன். எனது ஆலோசனையில் உள்ள தவறுகளையும் சுட்டிக் காட்டுங்கள். அத்துடன், இங்கு ஆலோசனை கேட்டு வருபவர்களின் மனம் புண்படாதவாறு உங்கள் ஆலோசனைகளைக் கொடுக்கும்படி பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்..
நீங்களும் உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் எழுதி கீழ்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்:

நண்பர்களே. அடுத்த வாரம் இன்னுமொரு கேள்வி பதிலோடு உங்கள் சினேகிதியை எதிர்பாருங்கள்....

Tuesday, 29 April 2014

முகம்மதிய காதலியும் நண்பனும்!

வணக்கம் நட்பு நெஞ்சங்களே.. இன்றும் ஒரு புதிய கேள்வி பதிலோடு உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. இன்று நண்பர் ஒருவர் எழுதி அனுப்பிய ஒரு வில்லங்கமான கேள்வியோடு வந்திருக்கிறேன்.. வாருங்கள் கேள்விக்குள்ளே பயணிக்கலாம்...

சிநேகிதியுடன்.......
என நண்பன் சுதன் என்பவன் ஓரு முகமதிய பெண்ணை கடந்த 3 ஆண்டு காலமாக காதலித்து வருகிறான். அவன் பழகிகொண்டிருப்பது அந்த பெண் வீட்டாருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது, அதனால் அந்தபெண்ணை படிக்க அனுப்பாமல் வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டார்கள். இப்போது என்னன்னா அந்த பெண் வீட்ல திருமணத்துக்குக்கு சம்மதித்துவிட்டார்கள், ஆனால் அவன் முகமதிய மதத்திற்கு மாற வேண்டும் என்றும் மாறினால் பெண் கொடுப்போம் என்றும் கூறிவிட்டனர், பையன் வீட்டில் அதுபிடிக்காமல் அந்த பெண்ணை உனக்கு திருமணம் செய்துவைக்க முடியாது, உனக்கு இந்து பெண்ணைத்தான், அதுவும் நம் சாதி பெண்ணைத்தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் இனி அவளிடம் பேசக்கூடாது,பழகக்கூடாது என்றும் கூறிவிட்டனர். அவனும் அந்த பெண்ணிடம் தன் வீட்டார்கள் சொன்னதை கூறி இன்மேல் நாம் காதலர்களாக பேசிக்கொள்ளவோ பழகவோ வேண்டாம் என்றும் சொல்லிவிட்டான். ஆனால் அந்த பெண் நான் மணந்தால் உன்னைத்தான் மணப்பேன் இல்லையென்றால் செத்து போய்விடுவேன் என்று சொல்கிறது. இவனும் அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்திய பாடில்லை அவனது வீட்டில் உள்ளவர்களும் ஒத்துகொள்வதுபோல் தோணவில்லை, ஓரு முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு நல்லதொரு தீர்வு சொல்லுங்கள்.

தனிமையில் சில நிமிடங்கள்.....
வணக்கம் சகோதரன்..
இன்று நீங்கள் ஒரு சர்ச்சைக்குரிய விடயத்தைக் கேள்வியாகக் கொண்டு வந்து என் கைகளில் தந்திருக்கிறீர்கள், நிச்சயமாக என் பதில் உங்களைத் திருப்தியடையச் செய்யுமா என்பதில் எனக்கு ஒரு தயக்கம் இருக்கவேசெய்கிறது. ஆனாலும், எடுத்த பொறுப்பை நான் நிறைவேற்றுவதாயின் என்னால் இயன்ற ஆலோசனையைத் தருகிறேன் (நான் தீர்வு சொல்வதில்லை... ஆலோசனை மட்டுமே.. J ).
பருவ வயதினருக்குள் காதல் பெரும்பாலும் ஒரு சிக்கலைத் தருவதாகவே இருக்கிறது. இந்த வயதில் காதல் மட்டும் தான் ஒரு மகிழ்ச்சியான வாழ்வு என்று நாம் எண்ணி விடுகிறோம். ஆனால், காதலைக் கடந்தும் சில விடயங்களை நாம் அவதானிக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம்.
உங்கள் நண்பனுடைய காதல் 3 வருடங்கள் தொடர்வது எனக் கூறியிருக்கிறீர்கள். அப்படியாயின் ஆரம்பத்தில் இவர்கள் இதைப்பற்றி சிந்தித்திருக்கவில்லையா என் ஒரு கேள்வி எனக்குள் எழுகிறது. நிச்சயம் சில தடவைகளாவது இது பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்பொழுதெல்லாம் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதில் எல்லாம் இதற்குரிய முடிவு தங்கியுள்ளது.
பொதுவாகவே காதல் என்றால் அதில் இரண்டே முடிவுகள் தான். ஒன்று திருமணம் அல்லது பிரிவு. எடுத்த எடுப்பிலேயே இது தான் முடிவு என்று தீர்மானிக்காமல், பிரிவு - இணைவு  இரண்டையுமே நாம் ஆராய்வோம்.
உளரீதியாகப் பார்க்கும் போது பிரிவு கடினமானதாகவும், திருமணம் இலகுவானதாகவும் தோன்றும். ஆனால் செயன்முறையில் பார்க்கும் போது பிரிவு இலகுவானதாகவும் திருமணம் மிகவும் கடினமாகவும் பல சவால்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. எனவே முதலில் இலகுவானதை ஆராய்வோம்.
சகோ. என்னைக் கேட்டால், காதலுக்கு இனம் மதம் சாதி எதுவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. அப்படி ஏற்படுத்தினால் அது பலமான காதல் இல்லை. ஆனால் இன்னொரு வகையில் பார்க்கும் போது, காதலுக்காக நீ உன் மதத்தை விட்டு வா என்று உங்கள் நண்பனோ அல்லது அவன் காதலியோ கேட்டால் அங்கேயும் உண்மைக் காதல் இல்லை என்றே கூறுவேன். அந்த இருவரில் ஒருவராக நான் இருந்திருந்தால், மதம் மாற்றும் காதல் தேவையே இல்லை என்று நிராகரித்திருப்பேன்.

உண்மையில் உங்கள் நண்பன், அல்லது அவர் காதலி தன் மதத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருந்தால் இந்தக் காதலை முறித்துக் கொள்வதே சிறந்தது என்றே நான் கூறுவேன். ஏனென்றால், இவர்கள் உண்மையில் மிகுந்த மதப்பற்றுள்ளவர்களாக இருந்தால், காதலுக்காக மதத்தை தியாகம் செய்து திருமணத்தில் இணைந்து கொண்டாலும் அவர்களது வாழ்க்கையில் இந்த உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும். அது நிம்மதியற்ற வாழ்க்கையையே உருவாக்கும். பல கருத்து முரண்பாடுகளை உருவாக்கும். எனவே எதிர்கால நலனைக் கருத்தில் கொள்வதாயின் ஒவ்வாத சேர்க்கையை விட, வேதனை கொடுக்கும் பிரிவு நன்மை தரும். வாழ்க்கை ரோஜாப்படுக்கை என்றால் அதில் முட்களின் உறுத்தல்களையும் ஏற்றுக் கொள்ளவே வேண்டியிருக்கிறது. காதலர்கள் இருவருமே துன்பப்படுவதை விட, பிரிவதால் அடுத்தவருக்கு நல்ல வாழ்க்கை அமையும் என நினைத்தால் அதை செய்ய முன்வர வேண்டும். அது தான் உண்மையான நேசிப்பின் அடையாளமும் கூட.
உங்கள் நண்பர் ///இனி மேல் நாம் காதலர்களாக பேசிக்கொள்ளவோ பழகவோ வேண்டாம் என்றும் சொல்லிவிட்டான்/// என்று கூறுகிறீர்கள். ஆனால் இப்பொழுதும் பேசிக் கொண்டிருக்கிறார் என்கிறீர்கள். உங்கள் நண்பன் உண்மையில் அப்படி முடிவெடுத்திருந்தால் அவர் பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏனென்றால், நாம் காதலர்களாக பேசவேண்டாம், இனி நண்பர்களாக இருப்போம் என்று சொல்லிவிட்டு, எல்லாவற்றையும் மறந்து, தொடர்ந்து பழகுவதற்கு இது சினிமா அல்ல. வாழ்க்கை. அதுவும் அந்தப் பெண் அதை ஏற்றுக் கொள்ளாதபட்சத்தில், உங்கள் நண்பர் அப்படி தொடர்ந்து அவளை சந்திப்பதும் பேசுவதும் பொருத்தமற்றதாகவே தோன்றுகிறது. அந்தப் பெண்ணை பார்ப்பதையும் பேசுவதையும் தவிர்ப்பதால், பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் அந்தப் பெண் தன்னைப் பிரிவுக்கு தயார் செய்ய சந்தர்ப்பம் கொடுக்க முடியும். அது அந்தப் பெண் பிரிவை ஏற்றுக் கொள்ளும் அல்லது தாங்கிக்கொள்ளும் பக்குவத்தைக் கொடுக்கும். எனவே தன் காதலிக்கு நன்மை செய்வதாக எண்ணினால் உங்கள் நண்பர் அவளை சந்திப்பதை நிறுத்தும்படியான அறிவுரைகளை உங்கள் நண்பனுக்கு கொடுங்கள். இதற்கு உங்கள் நண்பன், சிறிது காலம் ஊரை விட்டு சற்று தூரத்தில் எங்காவது போய் ஏதாவது கல்வியைத் தொடரவோ, அல்லது தொழில் ஏதாவது செய்யவோ அல்லது சும்மாவேனும் நண்பர்கள் அல்லது உறவினர்களின் வீட்டில் தங்கிவிட்டோ வரலாம். இது மிகச் சிறந்த முறையாக எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அவருக்கு இது சாத்தியமற்ற ஒன்றாக இருந்தால், அதாவது இப்பொழுது அவர் ஊரில் தொழில் செய்து கொண்டிருப்பவராக இருந்தால் அவர் வேலையை விட்டு அப்படிப் புறப்பட முடியாது. எனவே அவர் அத்தகைய நிலையில் இருந்தால், மனம் அலைபாய்வதைத் தடுக்க, அவருடைய நேரத்தை முடிந்த வரையில் ஏதாவது பிரயோசனமான வழியில் செலவழிக்கலாம். அது உங்கள் ஊருக்கும் உங்கள் நண்பனுக்கும் பொருத்தமானதாக நீங்கள் தான் தெரிவு செய்ய வேண்டும்.
மேற்கூறிய அனைத்துமே, அந்தப் பெண்ணுக்கும் நான் கொடுக்கும் ஆலோசனைதான். அந்தப் பெண்ணுக்கு இந்தப் பதிவைப் படிக்க சந்தர்ப்பம் இல்லையென்றால், அந்தப் பெண்ணின் தோழிகள் மூலமாக இந்த ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கூற முயற்சிக்கலாம்.
நண்பர்களே, இதுவரையும் பிரிவதைப் பற்றி ஆராய்ந்த நாம் அடுத்த பதிவில் இணைவதைப்  பற்றியும் அதன் சாதக பாதகங்களைப் பற்றியும் ஆராயலாம். அடுத்த பதிவு இதன் தொடர்ச்சி என்பதால், ஒரு வாரம் வரை நீடிக்காமல் இரண்டு நாள் இடைவெளியின் பின்னரே பதிவிடலாம் என நினைக்கிறேன். அந்த இரண்டு நாட்களுக்குள் மேற்குறிப்பிட்ட 'பிரிதல்' தொடர்பான உங்கள் காத்திரமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
இது பற்றி வாசகர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன். எனது ஆலோசனையில் உள்ள தவறுகளையும் சுட்டிக் காட்டுங்கள். அத்துடன், இங்கு ஆலோசனை கேட்டு வருபவர்களின் மனம் புண்படாதவாறு உங்கள் ஆலோசனைகளைக் கொடுக்கும்படி பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்..
நீங்களும் உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் எழுதி கீழ்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்:
இதன் அடுத்த தொடர்ச்சியோடு இந்த சிநேகிதியை எதிர்பார்த்திருங்கள் நட்பு நெஞ்சங்களே....

Monday, 28 April 2014


உலர்ந்து போன நினைவுகள்
உயிரூட்டபட்டுக் கொண்டிருக்கின்றன
ஈர விழிகளின் இரவுப்பொழுதுகளால்...
பூச்சூட எண்ணுகையில்
கடந்து போகும் வசந்தகாலம்
கார்கால மேகங்களாய்..
தீ பரவும் நரம்புகளைத் தீண்ட நினைத்து
தோற்றுப் போகும் ஈரக்காற்றையும்
தொட்டுப் பார்க்க எண்ணும்
நிஜங்களைத் தொலைத்த உள்ளம்..

Tuesday, 15 April 2014

சதுரங்க வாழ்க்கை

பற்றியிருந்த கரங்கள் பார்த்திருக்க விலகும்...
எதிர்காலம் தெரியா இருண்ட வழி நெடுக
இடறிச் செல்லும் பாதங்கள்
ஓய்வுக்காய் ஏங்கும்...
ஓய நினைக்கும் போது ஏந்துகிறார்
ஓட நினைக்கும் போது மோதுகிறார்
பாயவும் விடாமல் படுக்கவும் விடாமல்
பந்தாடும் நியாயம் என்ன?
பாசத்திற்குப் பலவழியில் ’செக்’ வைக்கும்
பொல்லாத சதுரங்க வாழ்வு..அதில்
எதையும் தாண்டி வந்து மோத நிற்கும்
விதியென்ற குதிரைப்படை..
நேசக்கரம் நீட்டும் நல்லவரெல்லாம்...
நூல் கட்டி ஆடும் பதுமைகளாய்....
முடிவு யார் கையிலோ........

Monday, 31 March 2014

Friday, 28 February 2014

அம்மாவுக்கு பிறந்த நாள்

நீ பிறந்த நாள்
நான் மலர்ந்த நாள்
நான் பிறக்க நீ மலர்ந்தாய்
நீ பிறந்த நாளாகிய இன்று
நான் மலர்கிறேன்
முத்தான இந்நாளில்
முத்தாக நீ மலர்ந்தாய்
சிறிதான என் நெஞ்சில்
தாயெனும் இடம் பிடித்தாய்..

என் அம்மாவிற்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
-அனங்கன்

Thursday, 13 February 2014

வாடீ என் தோழி....

வாடி என் தோழி நட்பின்
வாசனை மலரடி நீயே
வாடிப் போகிறேன் மேலும் -உன்
வாதைகள் கண்டுமே நானும்
தோளில் சாயவும் நீயடி-என்னை
தோளில் தாங்கவும் நீயடி
தாள்கள் தளர்ந்திடும் வேளையில்- என்
தோள்கள் வருடவும் நீயடி..
எங்கு நீ சென்றாலும் தோழி
உன்னோடு நானிருப்பேன் நாடி
தூரப் போகாதே வாடி-என்னை
துயரத்தில் தள்ளாதே போடி...

பொம்மைச் சண்டையெல்லாம் போச்சு
வெம்மை நெஞ்சில் பரவலாச்சு
பொய்மையில் தொலைந்தவள் நானடி-இனி
புவியினில் வாழ்வெனக்கேதடி.
சொல்லியழ முடியவில்லை - நான்
சொல்லிப் புரியும் ரகமுமில்லை
மெல்லும் வழி தெரியவில்லை
மெல்லாதுமிழத் தோன்றவில்லை
ஊர் உறங்கிப் போனதடி தோழி -என்
உசிர் உறங்க மறுக்குதடி  தோழி
பாவி இவ கொண்ட சொந்தம்  தோழி
பாதியிலே  தவிக்குதடி தோழி...
எத்தனை தான் வந்தாலும்  வாழ்வில்
எந்தன் அன்பு மாறாது தோழி
நட்பு வானில் இன்றுபோல் என்றும்
கைகோர்த்துப் பறந்திடுவோம் வாடி....

Wednesday, 5 February 2014

மதங்களின் பிடியில்... 1


“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
உலகப் பொதுமறை கொடுத்த பெருந்தகையோன், பொய்யாமொழிப் புலவனின் மறைவாக்கியத்தோடு இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கின்றேன். இது என் அறிவுக்குட்பட்ட புரிதலுடனான கட்டுரையே. எனவே, உள்ளே பயணிக்குமுன் வாசகர்களுக்கு என்னைப் பற்றி சில விடயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
நான் கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்தவள். எனினும் கத்தோலிக்கம் என்ற பாரம்பரியத்தைக் களைந்து, என் நம்பிக்கையின் அடிப்படையிலும், சில கொள்கை அடிப்படையிலும் ‘கிறீஸ்தவள்’ என்ற பொதுப்படையான பெயரோடு வாழ முற்பட்டவள். எது எப்படியோ, அன்றும் இன்றும் என்றும் கிறீஸ்துவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவள்.
எனினும், மதங்கள் பற்றிய எனது பார்வை முற்றிலும் வேறானது என்பதை இந்தக் கட்டுரை நிதர்சனமாக்கும். ஆகவே எந்த மதத்தவராக இருந்தாலும், இந்தக் கட்டுரையைப் படிக்கும் போது, இங்கே கூறப்பட்டிருக்கும் கருத்துக்கள் யாவும் நான் மதங்களுக்கு வெளியே நின்று, ஒரு பார்வையாளராக, அல்லது அவதானிப்பாளராகவே நின்று கூறியிருக்கிறேன் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டுகிறேன். யாரையும் தாக்கும், புண்படுத்தும் நோக்கத்துடன் எந்தக் கருத்தும் கூறப்படவில்லை. நான் எதிலும் பாண்டித்தியம் பெற்றவள் இல்லை என்பதால் இங்கே கூறப்படும் தவறான கருத்துக்களை சுட்டிக் காட்டுங்கள்.. மதவாதம் தவிர்ந்த ஆரோக்கியமான கருத்துக்கள் மூலம் உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள ஆவலாயிருக்கிறேன்.
கடவுள் பற்றிய எனது புரிதல்….
கடவுள் என்று நினைக்கும் போது என் தந்தை தன்னுடைய ஒரு கலைப் படைப்பு ஒன்றில் சொல்லியிருந்த உதாரணம் தான் என் நினைவில் வருகிறது.
அதாவது, நீரை நாம் எம்முடைய மொழி வழக்குக்கேற்ப தண்ணீர் என்றும், ஜலம், வெள்ளம், வோட்டர் (வாட்டர்), பத்துறு… இப்படி பல பெயர்களில் அழைக்கிறோம். ஆனால் பொருள் ஒன்றுதான். இது என் தந்தையின் கலைப்படைப்பில் வெளியான உதாரணம் தான். இது என் இளம் வயதில் மனதைத் தொட்ட ஒரு உதாரணமாக இருந்தது. இன்னும் என் சிந்தனை இதனையே கொஞ்சம் அதிகமாக விரிவுபடுத்தி தனக்கான வியாக்கியானங்களைத் தொகுத்தெடுத்துக் கொண்டது. அதையே என் புரிதல் என்கிறேன். அதையும் நோக்கலாம்.
முழுமுதற்பொருளான இறைவனை முழுமையாகப் புரியவைப்பதென்பது முடியாதகாரியம். ஏனென்றால் இறைவன் கற்பிக்கப்பட வேண்டியவர் அல்ல, உணரப்பட வேண்டியவர். ஆனாலும் ஒரு சிறு பிள்ளைக்குச் சொல்வது போல் புரியவைக்க இந்த நீரை விடச் சிறந்த உதாரணம் இல்லை என்றே நினைக்கிறேன். நீரைப் பல்வேறு பெயர்களில் அழைப்பது போலவே, அந்த நீரை உங்கள் வசதிக்கேற்றபடி விதவிதமான வடிவங்களையுடைய கண்ணாடிக் குவளைகளில் ஊற்றிப் பாருங்கள். அது அந்தப் பாத்திரத்தின் வடிவத்தை ஏற்றுக் கொள்ளும். ஆனாலும் அது இறுதி வரைக்கும் நீர்தான்.
கடவுள் அகில உலகுக்கும், உலகத்தின் எல்லை தாண்டிய அனைத்துக்கும் பொதுவான ஒரு மாபெரும் சக்தி. அந்த சக்தியைப் புரிந்து கொண்டு, அதன் வழியில் அதை நோக்கி பயணிப்பவனால், அந்த சக்தியைத் தன்வசப்படுத்த முடியும். அதனால் தான் எதனாலும் கட்டுப்படுத்த முடியாத இறைவனை மனிதன் தன் அன்பினால் கட்டுப்படுத்த முடியும் என்று எல்லா மதங்களும் ஏற்றுக் கொள்கின்றன. அதாவது, மனிதன் இறைவனை அன்பு செய்கிறான் எனில் இறைவனுக்கேற்ற வழி எதுவென நம்புகிறானோ அந்த வழியில் தன் கவனத்தைக் குவிப்பான். இதனால் அவனுடைய மாபெரும் இறையன்பு வெளிப்படுகிறது மட்டுமன்றி இறைவனின் சக்தி (அருள்) அவனுக்கு சாதகமாக்கப்படுகிறது. 
அறிவியலாளர்கள் எல்லோரும் உலகம் இயங்குவது அணுக்களால், அதற்கும் கடவுளுக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று அடித்துக் கூறும் அதே வேளையில் எனக்கு அடிக்கடி ஒரு கேள்வி எழுகிறது. அப்படியானால் அந்த அணுக்கள் எப்படித் தோன்றின? அவை எப்படி இயங்குகின்றன? அல்லது எப்படி இயக்கப்படுகின்றன? அதே போன்று, எத்தனையோ சாதனை படைத்த அறிவியலால், ஒரு குழந்தையின் பிறப்பையோ, அல்லது ஒருவனின் இறப்பையோ முற்கூட்டியே துல்லியமாக நேரம் குறிக்க ஏன் முடியவில்லை? அப்படியானால் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறதே… இத்தகைய என் கேள்விகளுடனான தேடலுக்கு சிறியதொரு மனச்சாந்தி கொடுப்பது போல அங்கும் இங்குமாய் எதேச்சையாய் சிறு தகவல் கிடைத்தது. அது தான் ஆராய்ச்சியின் வெளிப்பாடாய் அறிவியலாளர்கள் கண்டு கொண்ட ‘கடவுள் துகள்’ (ஹிக்ஸ் போஸான்). இதுவே அணுக்களின் மூலம் என்கிறார்கள். இதைக் கண்டுபிடித்திருக்கிறார்களே தவிர இன்னும் காணவே முடியவில்லையாம். அதனால் தான் அறிவியலாளர்களே இதற்கு கடவுள் துகள் என்று பெயரிட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன். இது அறிவியல் சார்ந்ததா அல்லது கடவுள் சார்ந்ததா என்ற தெளிவான முடிவை அறிவியலாளர்கள் கண்டுபிடித்து சாதாரண பாமரமக்களுக்கும் புரியும் வண்ணம் நிருபனமாக்கும் வரை ஆத்திகர்களின் நம்பிக்கையில் கடவுள் வாழ்ந்து கொண்டு தான் இருப்பார்.
கடவுளுக்கெதிரான தீய சக்தி
இன்னொரு விதத்தில் சாதாரண வார்த்தையில் சொல்வதானால் பேய், பிசாசு, சைத்தான் அல்லது சாத்தான் இப்படிப் பல பெயர்களில் உலாவும் ஒரு சக்தி… நவீனகாலத்தில் பரபரப்பான முன்னேற்றம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில், இன்று பலர் மத்தியில் இப்படி ஒன்று இருக்கிறதா என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது. சில வாரங்களுக்கு முதல் தமிழகத்தின் விஜய் தொலைக்காட்சி நிகழ்வான ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் இதுபற்றி ஒரு அலசலும் கூட நடைபெற்றது. ஆனால் இருக்கிறது என்பதே என்னுடைய எண்ணம். எந்த ஒரு தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் இருக்கிறது என்று விஞ்ஞானம் சொல்கிறது. அது போலவே கடவுள் என்ற மாபெரும் சக்திக்கு எதிராக ஒரு தீய சக்தியும் இருக்கிறது என்றே நம்புகிறேன்.  ஆனால் எப்படி? எங்கே?
பொதுவாக கடவுள் எங்கும் வியாபித்திருப்பர் என்பது தான் ஆத்திகர்களின் நம்பிக்கை. அப்படியானால் எதிரான சக்தியும் கடவுள் இருக்கும் இடங்களில் எல்லாம் நுழைய முற்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால் கடவுள் வாழும் இல்லம் எமது உள்ளமே என்று அநேகமானவர்கள் கூறுகிறார்கள். அதே உள்ளத்தில் தீயசக்திகளும் இருக்கின்றன. எப்படி கடவுளை நோக்கிப் பயணித்து கடவுளின் சக்தியை/அருளைப் பெற முடியுமோ, அது போலவே இந்த தீய சக்தியை நோக்கிப் பயணிப்பவர்கள் அதன் தீய எண்ணங்களுக்கான சக்தியைப் பெற்றுக் கொள்கிறார்கள் என்பது எனது நம்பிக்கை.
ஆன்மீகத்தைக் கடந்து சிந்தித்தால், இதைத்தான் ஒரு சாரார் உள்ளத்தில் இருக்கும் நல்லெண்ணம், மனச்சாட்சி, நேர்மறை (பொஸிட்டிவ்) எண்ணம் என்றும் அதற்கெதிரான சக்தியை தீய எண்ணம், தீய மனச்சாட்சி, எதிர்மறை எண்ணங்கள் (நெகட்டிவ்) என்று வகைப்படுத்துகிறார்கள் என்று  நினைக்கிறேன்.
எது எப்படியாயினும் கடவுள் என்பது தூய, நல்ல சக்தி என்றும் பேய்,பிசாசு போன்ற சொற்களால் குறிக்கப்படுபவை தீய, கெட்ட சக்தி என்றும், இந்த இரண்டில் ஒன்று இருக்கும் இடத்தில் அடுத்த சக்திக்கு இடம் இல்லை என்றும் நான் நம்புகிறேன். இதையே ஆத்திகர்கள் பலரும் நம்புகிறார்கள்.

மதங்களின் பிடியில் கடவுள்.....


இது என்னுடைய சிந்தனையோடு கலந்த சிறு கற்பனையே.. இந்தக் கற்பனை மூலம் நான் கடவுளை மதங்களோடு இணைத்துப்பார்க்க முயன்றிருக்கிறேன்.
ஆரம்பத்தில் கடவுளை இயற்கை மூலம் உணர்ந்துகொண்ட மனிதன் இயற்கையை வழிபட்டான். அதாவது இயற்கையின் சீற்றங்களைக் கண்டு பயந்தும், இயற்கையால் மனிதனுக்கு கிடைக்கும் பயன்களைக் கண்டு நெகிழ்ந்தும் அங்கே தமக்கு மேலான சக்தி இருக்கிறதென்று உணர்ந்ததால் அந்த சக்தியை துதிக்க ஆரம்பித்திருப்பான் என்பது என் சிந்தனை. மெல்ல மெல்ல அந்தக் கடவுளுக்கு வடிவங்கள் கொடுக்க ஆரம்பித்து, பின்னர் தமக்கு வசதியாகப் பெயர்களையும் சூட்டியிருப்பான் போலும்.
எது எப்படியோ, ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த பெயர்களையும் உருவங்களையும் கடவுளுக்குக் கொடுத்து, கடவுள் பன்மைப் பொருளாகி விட்டார் என்றே நான் நினைக்கிறேன். ஒருவேளை மனிதன் நினைப்பது போல் கடவுளர்கள் பலராக இருந்தால், அவர்கள் எல்லோரும் இந்த மனிதனின் வேண்டுதல்களுக்கு தலையசைத்தால், அந்த மாபெரும் சக்திகளே ஒன்றுக்கொன்று சண்டை போட்டு இந்தப் பிரபஞ்சமே அதிர்ந்திருக்கும். ஆனால் கடவுள் ஒருவராக இருப்பதால் இப்பொழுது இந்த மனிதனுக்கு எப்படிப் புரிய வைப்பது என்று தெரியாமல் தலையில் தான் கை வைத்துக் கொண்டிருப்பார். அதனால் தான் காலத்துக்குக் காலம் மக்களிடையே இருந்து சில வழிகாட்டிகளை எழுப்பினார். அவர்களை சிலர் மகான்கள் என்றும், சிலர் தூதர்கள் என்றும் இன்னும் சிலர் தீர்க்கதரிசிகள் என்றும் தேவமனிதர்கள் என்றும் சொல்கிறார்கள். இவர்கள் தம்முடைய வார்த்தைகளால் மனிதனுக்கு இறைவனையும், இறைவனுக்குரிய பண்புகளையும், கூடவே மனிதன் இப்படி வாழ்வதைத்தான் இறைவன் விரும்புகிறார் என்பதையும் சொன்னார்கள். அதை எல்லாம் ஒரு காதில் எடுத்து மறுகாது வழியாக வெளியே விடுபவன் மனிதன் என்பதால் அவர்கள் தமது வாழ்க்கையில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். ஆனால் அப்போதும் கூட அதைப் புரிந்து கொள்ளாத மனிதன் அவர்களையும் கடவுள் ஆக்கிவிட்டான். ஆனால் இது கூட மனித இயல்பு தான். ஏனெனில் என்னால் இயலாத ஒரு காரியத்தை இன்னொருவர் செய்து விட்டால் அவர்களை உயர்ந்த இடத்தில் வைப்பது இயல்பே. மனிதனுக்கு கடவுள் தான் உயர்ந்த இடத்தில் இருப்பவர். அதனால் அந்த இடத்தில் இந்தப் புனிதர்களையும் வைத்து விட்டான்.
இவர்களால் வழங்கப்பட்ட வார்த்தைகள் அந்தந்தக் காலத்துக்கேற்ற போதனைகளாகவே இருந்தன. அதேவேளை சில விடயங்கள் எக்காலத்துக்கும் பொருந்துவனவாக அமைந்துள்ளன. அவை நீண்ட காலமாக பேணப்பட்டு வருவதால் இந்தக் காலத்தில் அந்தப் போதனைகளைப் பலரும் தாம் புரிந்து கொள்கின்ற விதத்தில், இந்தக் காலத்துக்கும் பொருந்தும் வகையில் சேர்த்தெடுத்துப் போதித்து வருகிறார்கள். தம்முடைய நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் கொள்கைகளையும் சேர்த்தெடுத்து அதை ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொருவரும் ஒரு குழுவாக இணைந்து செயற்பட ஆரம்பிக்கிறார்கள். அது ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தியாக உருவெடுத்து ‘மதம்’ என்ற பெயரோடு உலவ ஆரம்பிக்கிறது. கடவுள் இப்பொழுது மதங்களின் பிடிக்குள் சிக்கிக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். மதங்கள் இன்றும் உருவாகிக் கொண்டு தான் இருக்கின்றன. ஒவ்வொரு குழுக்களாக இணைந்து கடவுளைப் பற்றிச் சிந்திக்கவும், கடவுளுக்கேற்ற பண்புகளோடு வாழ முனைவதும் நல்ல விடயம் தான். தவறொன்றும் இல்லை. மனிதன் அப்படி வாழ்வது தானே ஆரோக்கியமும். அப்படியானால் எங்கே முரண்பாடுகள் தோன்றுகிறன?
மீண்டும் மதங்களுக்குள் பயணிப்போம்
அடுத்த தொடரில்

Tuesday, 14 January 2014

பொங்கடா தம்பி பொங்கு!கால்வயிற்று கஞ்சியுண்டு


கால்மிதித்து சேற்றினிலே
நாள் முழுதும் உழைப்பவர்க்கு
நன்றி சொல்லும் திருநாளாம்!


உதிரத்தை வியர்வையாக்கி
உரமாக்கி பயிர் செழிக்க
புதிரெடுத்து பொங்கலாக்கி
பகிர்ந்துண்ணும் திருநாளாம்!


பெருமைதரும் தமிழர்க்கோர்
பெருநாளாய்இது இருக்க
பலருக்கு மறந்து போச்சு
பண்பாடும் தொலைந்து போச்சு!


ஆங்கிலேயன் புத்தாண்டு
அனைவருக்கும் பொதுவாச்சு
தங்கத் தமிழன் தைத்திருநாள்
தனி மதத்தின் சடங்காச்சு!


சங்கடமே இல்லாமல்
இங்கிலீசில் பொங்கல் வாழ்த்து
எங்களுக்கும் பொங்கலோ என
சந்தேகத்தில் பலருண்டு!


கருத்துணர்ந்து பொங்கல் பொங்கும்
காலமின்று மாறிப்போச்சு !
பெருமையோடு பொங்கல் வைத்த
பெரும் பண்பு மறைந்து போச்சு!


அடுத்தவீட்டு பொங்கல் உண்ண
என்பிள்ளை போகுமென்று
அதற்காக சிறுபானை
அடுப்பினிலே ஏறலாச்சு!


ஆங்கிலேயப் புத்தாண்டில்
சரக்கடித்து செலவு போச்சு
அடுத்துவரும் பொங்கலுக்கு
அரிசி வாங்க பணமில்லை!


வந்தவரின் கால்தொழுதோம்
வந்தவழி மறந்து போனோம்
செந்தமிழன் மதிகலங்க
சொந்தநிலை தளர்ந்து போனோம்?


வேட்டி கட்டி வாடா தம்பி
பொங்கல் வைக்க வேண்டுமென்றால்
வெட்கப்பட்டு வெளியில் வரானாம்
பிள்ளைக்காரன் பேரனோஇவன்?


பொங்கடா தம்பி பொங்கலைப்பொங்கு !
பொய்த்திடாப் பண்பை காத்திடப்பொங்கு! - தை
திங்களில் முதல் நாள் முற்றத்தில் பொங்கு !
தங்கத்தமிழ் தினம் நாவிலே பொங்கு !


தமிழர் பண்பு மறைத்த கங்குல்
தானாய் விலகும் துணிந்து பொங்கு !
மானமும் வீரமும் நெஞ்சில் கொண்டு
அறத்தமிழ் உரைத்த நெருப்பாய் பொங்கு !


அன்னை மண்ணிலும் அன்னியம் போர்த்து
தன்னிலை மறந்தவர் பேடிமை போக்க
உண்மைத்தமிழனின் உயர்வினைக்காட்ட
உயிர்ப்புடன் மாபெரும் அலையெனப்பொங்கு!


நெஞ்சுதனை நிமிர்த்து நின்று
நான் தமிழனென்று பொங்கு !


வஞ்சம் கொண்டு அழித்த பகைவர்
வாய்பிளந்து வியக்கப்பொங்கு!


இமயம் முதல் ஈழம் வரை
இசைத்த தமிழ் வாழப்பொங்கு!
இனியும் எங்கள் பெருமைப்பேண
இன்றே உறுதி கொண்டு பொங்கு!


மாண்டு போகிலும் மானம் பெரிதென
மாண்டவர் மேன்மை உணர்த்தப்பொங்கு!
ஆண்ட பரம்பரை அடிமை ஆனதால்
சீண்டிய சிறுத்தையாய் சினந்து பொங்கு!


தங்களைத்தமிழராய் எண்ண மறந்தவர்
கண்கள் திறக்க தரணியில் பொங்கு!
மங்கலம் இழந்த தமிழனின் வாழ்வில்
மங்கள ஒளியை ஏற்றப்பொங்கு!
கங்குல் = இருள்

வாழ்த்துக்களுடன்
பூங்கோதை