Tuesday 29 April 2014

முகம்மதிய காதலியும் நண்பனும்!

வணக்கம் நட்பு நெஞ்சங்களே.. இன்றும் ஒரு புதிய கேள்வி பதிலோடு உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. இன்று நண்பர் ஒருவர் எழுதி அனுப்பிய ஒரு வில்லங்கமான கேள்வியோடு வந்திருக்கிறேன்.. வாருங்கள் கேள்விக்குள்ளே பயணிக்கலாம்...

சிநேகிதியுடன்.......
என நண்பன் சுதன் என்பவன் ஓரு முகமதிய பெண்ணை கடந்த 3 ஆண்டு காலமாக காதலித்து வருகிறான். அவன் பழகிகொண்டிருப்பது அந்த பெண் வீட்டாருக்கு எப்படியோ தெரிந்துவிட்டது, அதனால் அந்தபெண்ணை படிக்க அனுப்பாமல் வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டார்கள். இப்போது என்னன்னா அந்த பெண் வீட்ல திருமணத்துக்குக்கு சம்மதித்துவிட்டார்கள், ஆனால் அவன் முகமதிய மதத்திற்கு மாற வேண்டும் என்றும் மாறினால் பெண் கொடுப்போம் என்றும் கூறிவிட்டனர், பையன் வீட்டில் அதுபிடிக்காமல் அந்த பெண்ணை உனக்கு திருமணம் செய்துவைக்க முடியாது, உனக்கு இந்து பெண்ணைத்தான், அதுவும் நம் சாதி பெண்ணைத்தான் நீ திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும் இனி அவளிடம் பேசக்கூடாது,பழகக்கூடாது என்றும் கூறிவிட்டனர். அவனும் அந்த பெண்ணிடம் தன் வீட்டார்கள் சொன்னதை கூறி இன்மேல் நாம் காதலர்களாக பேசிக்கொள்ளவோ பழகவோ வேண்டாம் என்றும் சொல்லிவிட்டான். ஆனால் அந்த பெண் நான் மணந்தால் உன்னைத்தான் மணப்பேன் இல்லையென்றால் செத்து போய்விடுவேன் என்று சொல்கிறது. இவனும் அந்த பெண்ணிடம் பேசுவதை நிறுத்திய பாடில்லை அவனது வீட்டில் உள்ளவர்களும் ஒத்துகொள்வதுபோல் தோணவில்லை, ஓரு முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு நல்லதொரு தீர்வு சொல்லுங்கள்.

தனிமையில் சில நிமிடங்கள்.....
வணக்கம் சகோதரன்..
இன்று நீங்கள் ஒரு சர்ச்சைக்குரிய விடயத்தைக் கேள்வியாகக் கொண்டு வந்து என் கைகளில் தந்திருக்கிறீர்கள், நிச்சயமாக என் பதில் உங்களைத் திருப்தியடையச் செய்யுமா என்பதில் எனக்கு ஒரு தயக்கம் இருக்கவேசெய்கிறது. ஆனாலும், எடுத்த பொறுப்பை நான் நிறைவேற்றுவதாயின் என்னால் இயன்ற ஆலோசனையைத் தருகிறேன் (நான் தீர்வு சொல்வதில்லை... ஆலோசனை மட்டுமே.. J ).
பருவ வயதினருக்குள் காதல் பெரும்பாலும் ஒரு சிக்கலைத் தருவதாகவே இருக்கிறது. இந்த வயதில் காதல் மட்டும் தான் ஒரு மகிழ்ச்சியான வாழ்வு என்று நாம் எண்ணி விடுகிறோம். ஆனால், காதலைக் கடந்தும் சில விடயங்களை நாம் அவதானிக்க வேண்டும் என்பதை மறந்து விடுகிறோம்.
உங்கள் நண்பனுடைய காதல் 3 வருடங்கள் தொடர்வது எனக் கூறியிருக்கிறீர்கள். அப்படியாயின் ஆரம்பத்தில் இவர்கள் இதைப்பற்றி சிந்தித்திருக்கவில்லையா என் ஒரு கேள்வி எனக்குள் எழுகிறது. நிச்சயம் சில தடவைகளாவது இது பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்பொழுதெல்லாம் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதில் எல்லாம் இதற்குரிய முடிவு தங்கியுள்ளது.
பொதுவாகவே காதல் என்றால் அதில் இரண்டே முடிவுகள் தான். ஒன்று திருமணம் அல்லது பிரிவு. எடுத்த எடுப்பிலேயே இது தான் முடிவு என்று தீர்மானிக்காமல், பிரிவு - இணைவு  இரண்டையுமே நாம் ஆராய்வோம்.
உளரீதியாகப் பார்க்கும் போது பிரிவு கடினமானதாகவும், திருமணம் இலகுவானதாகவும் தோன்றும். ஆனால் செயன்முறையில் பார்க்கும் போது பிரிவு இலகுவானதாகவும் திருமணம் மிகவும் கடினமாகவும் பல சவால்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது. எனவே முதலில் இலகுவானதை ஆராய்வோம்.
சகோ. என்னைக் கேட்டால், காதலுக்கு இனம் மதம் சாதி எதுவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. அப்படி ஏற்படுத்தினால் அது பலமான காதல் இல்லை. ஆனால் இன்னொரு வகையில் பார்க்கும் போது, காதலுக்காக நீ உன் மதத்தை விட்டு வா என்று உங்கள் நண்பனோ அல்லது அவன் காதலியோ கேட்டால் அங்கேயும் உண்மைக் காதல் இல்லை என்றே கூறுவேன். அந்த இருவரில் ஒருவராக நான் இருந்திருந்தால், மதம் மாற்றும் காதல் தேவையே இல்லை என்று நிராகரித்திருப்பேன்.

உண்மையில் உங்கள் நண்பன், அல்லது அவர் காதலி தன் மதத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருந்தால் இந்தக் காதலை முறித்துக் கொள்வதே சிறந்தது என்றே நான் கூறுவேன். ஏனென்றால், இவர்கள் உண்மையில் மிகுந்த மதப்பற்றுள்ளவர்களாக இருந்தால், காதலுக்காக மதத்தை தியாகம் செய்து திருமணத்தில் இணைந்து கொண்டாலும் அவர்களது வாழ்க்கையில் இந்த உறுத்தல் இருந்து கொண்டே இருக்கும். அது நிம்மதியற்ற வாழ்க்கையையே உருவாக்கும். பல கருத்து முரண்பாடுகளை உருவாக்கும். எனவே எதிர்கால நலனைக் கருத்தில் கொள்வதாயின் ஒவ்வாத சேர்க்கையை விட, வேதனை கொடுக்கும் பிரிவு நன்மை தரும். வாழ்க்கை ரோஜாப்படுக்கை என்றால் அதில் முட்களின் உறுத்தல்களையும் ஏற்றுக் கொள்ளவே வேண்டியிருக்கிறது. காதலர்கள் இருவருமே துன்பப்படுவதை விட, பிரிவதால் அடுத்தவருக்கு நல்ல வாழ்க்கை அமையும் என நினைத்தால் அதை செய்ய முன்வர வேண்டும். அது தான் உண்மையான நேசிப்பின் அடையாளமும் கூட.
உங்கள் நண்பர் ///இனி மேல் நாம் காதலர்களாக பேசிக்கொள்ளவோ பழகவோ வேண்டாம் என்றும் சொல்லிவிட்டான்/// என்று கூறுகிறீர்கள். ஆனால் இப்பொழுதும் பேசிக் கொண்டிருக்கிறார் என்கிறீர்கள். உங்கள் நண்பன் உண்மையில் அப்படி முடிவெடுத்திருந்தால் அவர் பேசுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏனென்றால், நாம் காதலர்களாக பேசவேண்டாம், இனி நண்பர்களாக இருப்போம் என்று சொல்லிவிட்டு, எல்லாவற்றையும் மறந்து, தொடர்ந்து பழகுவதற்கு இது சினிமா அல்ல. வாழ்க்கை. அதுவும் அந்தப் பெண் அதை ஏற்றுக் கொள்ளாதபட்சத்தில், உங்கள் நண்பர் அப்படி தொடர்ந்து அவளை சந்திப்பதும் பேசுவதும் பொருத்தமற்றதாகவே தோன்றுகிறது. அந்தப் பெண்ணை பார்ப்பதையும் பேசுவதையும் தவிர்ப்பதால், பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் அந்தப் பெண் தன்னைப் பிரிவுக்கு தயார் செய்ய சந்தர்ப்பம் கொடுக்க முடியும். அது அந்தப் பெண் பிரிவை ஏற்றுக் கொள்ளும் அல்லது தாங்கிக்கொள்ளும் பக்குவத்தைக் கொடுக்கும். எனவே தன் காதலிக்கு நன்மை செய்வதாக எண்ணினால் உங்கள் நண்பர் அவளை சந்திப்பதை நிறுத்தும்படியான அறிவுரைகளை உங்கள் நண்பனுக்கு கொடுங்கள். இதற்கு உங்கள் நண்பன், சிறிது காலம் ஊரை விட்டு சற்று தூரத்தில் எங்காவது போய் ஏதாவது கல்வியைத் தொடரவோ, அல்லது தொழில் ஏதாவது செய்யவோ அல்லது சும்மாவேனும் நண்பர்கள் அல்லது உறவினர்களின் வீட்டில் தங்கிவிட்டோ வரலாம். இது மிகச் சிறந்த முறையாக எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அவருக்கு இது சாத்தியமற்ற ஒன்றாக இருந்தால், அதாவது இப்பொழுது அவர் ஊரில் தொழில் செய்து கொண்டிருப்பவராக இருந்தால் அவர் வேலையை விட்டு அப்படிப் புறப்பட முடியாது. எனவே அவர் அத்தகைய நிலையில் இருந்தால், மனம் அலைபாய்வதைத் தடுக்க, அவருடைய நேரத்தை முடிந்த வரையில் ஏதாவது பிரயோசனமான வழியில் செலவழிக்கலாம். அது உங்கள் ஊருக்கும் உங்கள் நண்பனுக்கும் பொருத்தமானதாக நீங்கள் தான் தெரிவு செய்ய வேண்டும்.
மேற்கூறிய அனைத்துமே, அந்தப் பெண்ணுக்கும் நான் கொடுக்கும் ஆலோசனைதான். அந்தப் பெண்ணுக்கு இந்தப் பதிவைப் படிக்க சந்தர்ப்பம் இல்லையென்றால், அந்தப் பெண்ணின் தோழிகள் மூலமாக இந்த ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கூற முயற்சிக்கலாம்.
நண்பர்களே, இதுவரையும் பிரிவதைப் பற்றி ஆராய்ந்த நாம் அடுத்த பதிவில் இணைவதைப்  பற்றியும் அதன் சாதக பாதகங்களைப் பற்றியும் ஆராயலாம். அடுத்த பதிவு இதன் தொடர்ச்சி என்பதால், ஒரு வாரம் வரை நீடிக்காமல் இரண்டு நாள் இடைவெளியின் பின்னரே பதிவிடலாம் என நினைக்கிறேன். அந்த இரண்டு நாட்களுக்குள் மேற்குறிப்பிட்ட 'பிரிதல்' தொடர்பான உங்கள் காத்திரமான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
இது பற்றி வாசகர்களின் கருத்துக்களை வரவேற்கிறேன். எனது ஆலோசனையில் உள்ள தவறுகளையும் சுட்டிக் காட்டுங்கள். அத்துடன், இங்கு ஆலோசனை கேட்டு வருபவர்களின் மனம் புண்படாதவாறு உங்கள் ஆலோசனைகளைக் கொடுக்கும்படி பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்..
நீங்களும் உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் எழுதி கீழ்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்:
இதன் அடுத்த தொடர்ச்சியோடு இந்த சிநேகிதியை எதிர்பார்த்திருங்கள் நட்பு நெஞ்சங்களே....

Monday 28 April 2014


உலர்ந்து போன நினைவுகள்
உயிரூட்டபட்டுக் கொண்டிருக்கின்றன
ஈர விழிகளின் இரவுப்பொழுதுகளால்...
பூச்சூட எண்ணுகையில்
கடந்து போகும் வசந்தகாலம்
கார்கால மேகங்களாய்..
தீ பரவும் நரம்புகளைத் தீண்ட நினைத்து
தோற்றுப் போகும் ஈரக்காற்றையும்
தொட்டுப் பார்க்க எண்ணும்
நிஜங்களைத் தொலைத்த உள்ளம்..

Tuesday 15 April 2014

சதுரங்க வாழ்க்கை

பற்றியிருந்த கரங்கள் பார்த்திருக்க விலகும்...
எதிர்காலம் தெரியா இருண்ட வழி நெடுக
இடறிச் செல்லும் பாதங்கள்
ஓய்வுக்காய் ஏங்கும்...
ஓய நினைக்கும் போது ஏந்துகிறார்
ஓட நினைக்கும் போது மோதுகிறார்
பாயவும் விடாமல் படுக்கவும் விடாமல்
பந்தாடும் நியாயம் என்ன?
பாசத்திற்குப் பலவழியில் ’செக்’ வைக்கும்
பொல்லாத சதுரங்க வாழ்வு..அதில்
எதையும் தாண்டி வந்து மோத நிற்கும்
விதியென்ற குதிரைப்படை..
நேசக்கரம் நீட்டும் நல்லவரெல்லாம்...
நூல் கட்டி ஆடும் பதுமைகளாய்....
முடிவு யார் கையிலோ........