Saturday, 4 December 2010

வெண்பனியே வெண்பனியே....

வெண்பனியே வெண்பனியே
வேதனை சொல்வேன் கேளாய்
பெண்ணின் நெஞ்சம் உன் குளிரில்
பகரும் துன்பம் கேளாய்

பனிக்கும் விழிகள் துடிக்கும் உதடு

பறையும் சேதி உனக்கு மட்டுமே
விறைத்துப் போன உந்தனுக்கு
விசனம் புரிய இயலுமோ

வாழ்க்கைப் பாதை துன்பம்
வாழும் விதங்கள் துன்பம்
வாழும் காலம் துன்பம் என
வாய்விட்டழுவது அறிவாயோ

உண்மை உறவெனக்கொண்டவர்
உண்மை முகத்தைக் கண்டு
கண்கள் சிவக்க நெஞ்சம் சிதற
கலங்கிப் போனதறிவாயோ

தனிமை நெஞ்சை  வாட்டுது
தாகம் அன்பைத் தேடுது
மழலைகள் முகத்தைத் தேடியே
மயங்குது சிந்தை கலங்குது

இறைவன் ஒருவனே வல்லவன்
இயங்கும் யாவும் அவனாலே
இன்னல்கள் யாவும் அவன் பாதம்
ஈந்தேன் அறிவாய் வெண்பனியே

Monday, 25 October 2010

செம்மொழி தாயாள்

தாயே தமிழணங்கே
தலை சாய்த்தேன் உன் பாதம்
கன்னித் தமிழ் புனைய
கனிந்து வரமருள்வாய்
உன்னைக் கனம் புரிய
உவந்து வரமருள்வாய்
நாணம் அச்சமின்றி என் கவியில்
நாவண்ணத் தமிழ் மணக்க
நல்ல தமிழ் நாயகியே
நயந்து அருள் புரிவாய்
சுந்தரத் தமிழ் புனைந்து
சுகந்தமாய் நீர் உணர
வந்தனங்களோடு வந்தேன்
தத்தி நடை பயின்று தவழ்ந்து திரிந்து
ஆங்காங்கே சிதறுண்ட
அழகிய தமிழ் பொறுக்கி
மெல்ல வாயிலிட்டு மென்று களிக்கின்ற
பச்சிளம் பாலகன் யான்
மாநாட்டில் கவிபாடும்
மாண்பெனக்கு கிட்டவில்லை
மனம் நொந்து வேதனையில்
மூழ்கிப் போகயிலே
எந்தையின் முன் தோன்றி அன்று
ஏடா எடடா ஏடடா
பட்டெனப் பாடடா பாட்டடா என்ற
பட்டொளித் தாயாள் என்முன்
பளிச்செனத் தோன்றினாள்
தமிழ் மகவே சோகமென்ன
தவிப்பதெல்லாம் தேவையில்லை
தாயைப் பாடுதற்கு உனக்கு
தனியரங்கம் எதற்கம்மா
உலகெல்லாம் என்மக்கள்
உவப்புடன் படித்தறிய
வலைப்பின்னல் வழியேறி
வனைவாய் உன்கவியென்றாள்…
அன்னைத் தழிழவளின் கட்டளையை
அகமதில் ஏற்று வந்தேன்
அவளைப் புகழைப் பாட
ஆசை அறைய ஓடிவந்தேன்
விசைப்பலகை மீதென்
விரல்கள் பாவின தன்னை
இசைப்பதற்கு வழியீந்த-என்
இனிய தமிழுக்கு நன்றிகள்

அன்னையை அலங்கரித்து அவள்
தொன்புகழ் பாடுதற்கு
மன்னார் மண்ணிலே மாபெரும்
செம்மொழி மாநாடு
என்ன புண்ணியம் செய்தனரோ
மன்னார் மண்ணும் மாந்தர்களும்
பென்னம் பெரிய விழாவினில்
பெருக்கெடுத்தோடும் தழிழுணர்வு

கன்னித்தமிழ் தாயே எம்
காயங்கள் ஆறவில்லை எனினும்
கனிமொழிக்கு விழா எடுக்கும்
கடமை எமதம்மா

இன் நகை பூக்கும்
இளநங்கை நம் தமிழாள்
செம்மொழி யென்று
சீர் பெற்ற செந்தமிழாள்
வாசமலர்கூட வாடி வதங்கிவிடும்
வண்ணத்தமிழ் வாடிடுமோ

ஆறைந்து வருடங்கள்
உயிரீந்து காத்த தமிழ்
ஆடி அடங்கிடுமோ
பொங்கிப் பிரவகித்து
பூரித்து மகிழ்ந்த தமிழ்
மங்கிப் போய்விடுமோ

ஆரத் தமிழணிந்து
ஆதிர நடைபோட்டு
வாழ்க தமிழென்று
ஆர்ப்பரித்து வாழ்ந்திட்ட
வீரத் தமிழ் இனியும்
வீழ்ந்து போயிடுமோ

தமிழ் காத்த மன்னர்கள்
தளர்ந்து போகலாம்
தமிழன்னை தளர்வாளோ
தமிழ் வாழ்ந்த மண்ணுக்கு
தங்க நகை அடகு மீட்க
சிலவாரம் முன் சென்றேன்
தரமிழந்து களையிழந்த பூமிகண்டு
தவிதவித்துப் போனேன்-ஆனால்
தடவிக் கொடுத்தது ஒரு விடயம்
தமிழ் இன்னும் சாகவில்லை
பெயர்ந்து நாம் போனாலும்
பெயர்ப் பலகைகள் இன்னும்
பேணிக் காக்கின்றன தமிழை
வேற்று மொழி இடைச்சொருகல்
இருக்கத்தான் செய்கின்றன-ஆனால்
இனிய தமிழ் இறக்கவில்லை
இறக்கக் கூடாது… இறக்கக் கூடாது…
முடிசூடிக் காத்த தமிழ்
முகவரியிழக்கக் கூடாது
இன்னல் இடர் வரினும்
இறப்பே தாம் வரினும்
இனிக்கத் தமிழ் இயன்ற எம்
நாவு சோராது
அழகுத் தமிழ் பாடி
அவனி தனில் மேவி
அதிரப் புகழ் பாடி
என்றும் வாழ்ந்திருப்போம்

தமிழர் நம் வாழ்வு
தவிதவித்துப் போச்சு
தரணியில் எமது நிலை
தலைகீழாய் ஆச்சு
தாயே உன் மக்கள்
தளர்வுற்றுப் போனரம்மா
….    ….    ….
வித்தாகிப் போனவரைத் தம் வயிற்றில் சுமந்தவர்
முத்தான தம் அவயம் முற்றாக இழந்தவர்
சொத்தோடு சுகமெல்லாம் தாமிழந்து போனவரென
நித்தமும் நீள் கண்ணீர் வடிப்பவர்க்கு
புத்தாண்டு புதுப் பொங்கல் சித்திரை வருடமெல்லாம்
எந்தாண்டில் மகிழ்வு தரும்
வித்தகத் தமிழ் தாயே விரைந்து விடை பகராயோ

சங்கத் தமிழ் உடுத்து சந்தனமாய் கமழ்பவளே
இங்கு தமிழுயிர்கள் பதைப்பதறிவாயோ
சொந்த மண்ணிலேயே சொல்லொணாத் துயரம்மா
வெந்து போகின்றோம் வேதனைகள் அறிவாயோ

நீண்ட சரித்திரமாய் உனைநிறுத்த வேண்டுமென
வேண்டி உழைத்தவர்கள் வீரம் சோர்ந்ததுவோ
மாண்டு போயினரோ உன் மானம் காத்தவர்
ஆண்டுகள் போயிடினும் எம் அழுகுரல் ஓய்ந்திடுமோ

காந்தள் விரல்களுக்கு நகப்பூச்சு வேண்டும்
கண்ணாடி வளையல்கள் பல நிறத்தில் வேண்டும்
கால் கொலுசும் கல்லட்டியலும் கனமாக வேண்டுமென
வண்ணக் கனவுகளில் மூழ்கிய காலமெல்லாம்
வட்டுவாகலோடு வழிமாறிப் போச்சு

எத்தனை முயன்றாலும் என்னால் முடியவில்லை
எதையாவது பற்றி என்கவியில் பாட
அத்தனை துயர்கண்ட ஆறாத எந் நெஞ்சு
சத்தியமாய் மீளவில்லை மீளவும் முடியவில்லை

சிந்தனைக்குள் முழுவதும் சிற்பமாகிப் போச்சு
சித்திரவதைகளும் சிதைவடைந்த வரலாறும்
சந்ததிகள் அறிவாரோ சாவோடு தமிழினம்
சங்கமித்து வாழ்ந்த சரித்திரம் கொண்டதென்று

தமிழணங்கே உந்தனுக்கு விழாக்காண வந்தோம்
தனயர் எம் வாழ்வின் தரமதனை அறிவாயோ
நாய்கூடப் பாராது நாறிப் போனதம்மா
நாதியற்ற வாழ்வு நமதாகிப் போனதம்மா

நடைபிணங்களாக நமது நிலையாச்சு
தடைகளும் தோல்விகளும் உறவுகளாய் ஆச்சு
உடை மாறிப் போச்சு உளம் மாறிப் போச்சு
உடைந்திட்ட உணர்வோடு நாள் செல்லலாச்சு

இத்தனைக்கும் பின்னாலே இன்னும் சில தமிழர்
எத்தர்களாய் வாழ்கின்ற இழிநிலை கேளாயோ
எத்தனை நடந்தாலும் எமக்கில்லை துன்பமென
பித்தர்களாய் வாழும் பேரவலம் காண்பாயோ

கலாச்சாரம் எம் மண்ணில் சீரழிஞ்சு போச்சு
காலையிலே வணக்கம் ’குட்மோனிங்’ ஆச்சு
கலையோடு கைவண்ணம் அரிதாகிப் போச்சு
கலைகின்ற கனவாக தமிழ் மானமாச்சு

விருந்தோம்பல் வரவேற்பு வழிமாறிப் போச்சு
விருப்போடு தமிழ் பேசல் விதியாகிப் போச்சு
செருக்கோடு நிமிர்ந்த நடை சிதைவாகிப் போச்சு
செருப்பாகிப் பிற மொழிக்குள் சிலாகித்தலாச்சு

ஈழத் தமிழன் இனியும் பிழைப்பானோ
ஈனக் குரல் நெஞ்சில் ஓலமிடலாச்சு
ஈகைத்திறன் இவர்க்குள் அழிந்தொழிந்து போச்சு
இஃதே வாழ்க்கையென்று இவர் வாழலாச்சு

சேய் உதைத்து மிதிப்பதெல்லாம்
தாய்க்கு வலிப்பதில்லை அவளைக்
காயமுற வைத்த போதும்
கனிவோடு அணைத்திடுவாள்
தாயே தமிழ் மாதா உன்
தனயர் பிழை பொறுத்திடம்மா
நீயே பெரிதென்று அவர்
நினைந்து வரும் நாள் அருகில்
வேதனை வேண்டாம் தாயே
வேறு வழி விரைவில் வரும்
சோதனைகள் நீங்கும் உன்
சுந்தரத் தமிழ் கமழும்
…. …. ….. …..

Friday, 22 October 2010

அன்புக் கரம்....

தாரை தாரையாய் வடியும் விழி நீர்
தரையே சகதியாகிறது...
நிமிர்ந்து பார்க்கிறேன்
உலகம் சிரித்துக் கொண்டிருக்கிறது..!!!
தன் கால்களுக்கடியில் நான்
தளர்ந்து கிடப்பது தெரியாமல்...
மீண்டும் கவிழ்ந்து போகிறேன்
விம்மலும் வேதனையும்
நெஞ்சைப் பிளக்க..
மீண்டும் விழி நீர் திரள ...
உச்சியின் கேசங்களை ஊடறுக்கும் மெல்லிய வருடல்...
மயிர்த்துளைக் குழாய்களுடே...
மெல்லிய அன்பு அலைகளைப் பரவ....
உறவின் மேன்மையை உணர்த்தும்
உன்னத வருடல்...
மீண்டும் நிமிர்கிறேன்
ஓ... விழி நீர் துடைக்க விளையும் விசித்திரக் கரங்கள்...
பசித்திருந்தவனுக்கு பால் சோறு போல...
ஆதவனின் சில கதிர்கள் இப்போது
அவசரமாய் என் மீது படர்கிறது...
அன்பு செய்ய ... அரவணைக்க...
என் கண்களுக்கு நீ இன்னுமொரு அன்னை திரேசாவாக....

Tuesday, 19 October 2010

அன்றும் இன்றும்....

அப்பொழுது நான் இறந்து போயிருந்தேன்
அவன் பார்வை எனக்குள் ஊடுருவும் வரை
அது கடந்து போன சுடுகாட்டு வாழ்க்கை
இறந்து பல வருடம்
புழுத்துப் போன எனக்குள்
ஊடுருவிய அவன் பார்வை
மாயக் கதிர் அலைகளாக
உயிரீந்து உணர்வீந்து உறவாடியது...
சுடுகாட்டின் காற்று தென்றலாகியது
மீண்டும் விதியின் விளையாட்டு
இப்பொழுது நான் இறந்து கொண்டிருக்கிறேன்..
அவனும் என்னோடு கூட
எதிர்கால சுடுகாட்டின் பயணம்...
எனக்கும் அவனுக்குமிடையே அந்தப் பிஞ்சு விரல்கள்....
பறந்து கொண்டிருக்கும் எம் உயிரின்
நுனியைப் பற்றியபடி....???

Monday, 18 October 2010

ஆட்டோ இல்லையேல்....

அடுத்த நாள் சோற்றுக்கு ஆன வழி தேடயிலே
அழுகின்றாள் பிள்ளை.. அப்பா.. ஐஸ் கிறீம்
அரவணைத்து அவளைத் தேற்றி அடக்கையிலே
அலறி அடிக்கிறது தொலைபேசி
அதை எடுத்துக் காதில் பொருத்துகையில்
அண்ணை குறை நினையாத...
அண்டைக்கு வாங்கின காச-எதையும்
அடகு வைச்செண்டாலும் தா...
அழுங்குப் பிடியைப் பேசி தளர்த்துகையில்
அடிக்கின்றான் தபால் காரன் சைக்கிள் மணி
அவசர எச்சரிக்கைக் கடிதம்
அடகு நகை மீட்க வங்கியிலிருந்து
அலுத்துப் போய் கடிதத்தை விட்டெறிந்தேன்
அடுத்து வரும் ஆட்டோ லீசிங் கடிதம்
ஆட்டோவும் இல்லையென்றால்-என் குடும்ப
போட்டோவுக்கு பூ மாலைதான்

Tuesday, 28 September 2010

தன்னலம்

அன்பைப் பெறுபவர்க்கு கொஞ்சம்
அரவணைக்க நெஞ்சமில்லை
அதிகம் உழைப்பவர்க்கு கொஞ்சம்
அமர்ந்திருக்கும் ஆசையில்லை
உச்சியில் நிற்பவர்க்கு கொஞ்சம்
ஏற்றிவிடும் சிந்தையில்லை
உறவாய் வந்தவர்க்கு கொஞ்சம்
உதவி செய்ய உள்ளமில்லை
தன்னை மட்டும் சிந்திக்கும்
தன்னலம் கொண்ட மனிதர்
மற்றவரை எண்ணி விட
மனமற்ற மாந்தர்