Sunday, 17 March 2013

எழுத்துலகில் என் எண்ணச்சாரல்கள்..-1

தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டுக்களைப் பதிவு செய்ய இங்கே கிளிக்குங்க..

வணக்கம் என் இனிய உறவுகளே..
நலம் தானே...
ஒரு புதிய படியில் காலடி வைப்பதற்கு முன், என்னைப் பற்றியும், எழுத்துலகில் என் பின்னணி பற்றியும் சிறு அறிமுகம் செய்யலாம் என்பது தான் இந்தப் பதிவின் நோக்கம்.

என்னடா இது.. எல்லாருமே ஆரம்பத்தில் தானே அறிமுகம் செய்வார்கள்.. இடையில் வந்து இது என்ன ஒரு அலப்பறை.... என்று நீங்க முணு முணுக்கிறது எனக்கு நல்லாவே கேட்குது... நான் இனித்தான் எழுதவே ஆரம்பிக்கப் போறேனுங்க... அது தான் இந்த அறிமுகம்.

இது கொஞ்சம் நீண்ட பயணம் என்பதால் இரண்டு தொடராக பதிவு செய்யலாம் என எண்ணுகிறேன்.. எனவே இதை தொடர்ச்சியான சுய தம்பட்டம் என்று யாரும் எண்ணிடாதீங்க... இந்த வலைப்பூ என் உணர்வுகளின் சேமிப்பிடம். இந்த சில பதிவுகளினால், என்னைப் பற்றிய சில தகவல்களையும் சேமிக்கலாம் என நினைக்கின்றேன். எப்பொழுதாவது என் பிள்ளைகளுக்கோ அல்லது வேறு யாருக்கோ நான் யார்? எப்படி ஏன் எழுத ஆரம்பித்தேன் என்ற கேள்விகளுக்கு இது விடையாகலாம்...  (ஆமா.. பெரீய இவ... ஹீ..ஹீ..ஹீ..)
ம்ம்.. நம்ம மைண்ட் வாய்ஸே நம்மள விட மாட்டேங்குதே.. மற்றவங்களை எப்படிக் குற்றம் சொல்றது...

சரி வாங்க நண்பர்களே என் எண்ணச் சாரலில் நனையலாம்..
முதலில் என்னைப்பற்றிய ஒரு அறிமுகம்:
நான் பூங்கோதை... அதான் தெரியுமே..
இது என் தந்தை என் 17வது வயதில் எனக்கு சூட்டிய புனை பெயர். ஈழத்தில், வன்னியின் சில பகுதிகளில் நான் இந்தப் பெயரால் அறியப்பட்டவளாகவே இருக்கிறேன். அப்பா, அம்மா இரண்டு பேருடைய மூலவேர்களும் - மன்னார்தான். ஆனாலும் நான் பிறந்ததும், வளர்ந்ததில் பாதிக்காலமும் யாழ்ப்பாணம் தான். என் வாழ்வின் முக்கியமான மிகுதிப் பகுதியில்.. அதாவது நான் வளர்ந்த மீதிக் காலம் வன்னி. இடப்பெயர்வுகளால் வன்னியில் மல்லாவி, புதுக்குடியிருப்பு, ஆகிய இடங்களில் கல்வி கற்றிருந்தாலும், என் பாடசாலைக் காலத்தின் இறுதிப்பகுதி, நான் மிகவும் நேசிக்கும் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியே. இங்கு தான் நான் மாணவர்களிடையேயும் ஆசிரியர்களிடையேயும் ஓரளவு அறியப்பட்டவளாகவும் வாழ்ந்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் என்னைத் தேடாதீங்க.... இதில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கும் எனக்கும் இடையில் ஒரே பாடசாலையில் படித்திருக்கிறோம் என்பதைத் தவிர, வேற ஒரு சம்பந்தமும் கிடையாதுங்க.. என் பாடசாலை முகப்பில் இரு புறமும் அந்த அழகிய தேமா மரங்கள் பூத்துக்குலுங்கிய படியே நிழல் கொடுக்கும். அண்மையில் எடுத்த படங்களில் இந்த மரங்கள் காணாமல் போயிருக்கின்றன. அதனால தான் கூகிளில் தேடி யாரோ பழைய மாணவர்களின் படத்தைப் போட்டிருக்கிறேன்.
அம்மா அப்பா ஐந்து பெண்கள், ஒரு ஆண்பிள்ளை என  எட்டு அங்கத்தவர்கள் அடங்கிய ஒரு கலகலப்பான குடும்பத்தில் நான் ஐந்தாவதாகப் பிறந்தவள்.. இதனால் நல்ல பெற்றோர், வழிகாட்ட அக்காமார், நட்புக்கு அண்ணா, செல்லத்துக்கு தங்கை..என குதூகலமாக கட்டியெழுப்பப்பட்ட ஒரு குடும்பத்தில் இறைவன் என்னைத் தோற்றுவித்திருந்தான்.
இத்தனைக்கும் மேலால், என் குடும்பத்தில் நான் பெற்ற மிகப் பெரிய வரப்பிரசாதம் தான் இந்த எழுத்தாற்றல். என் தந்தை ஒரு கலைஞனாக, கவிஞனாக, எழுத்தாளானாக வாழ்ந்தவர். (நிச்சயம் என் இன்னொரு பதிவில் என் தந்தையைப் பற்றிய விரிவான வரலாறு ஒன்றைப் பதிவிட எண்ணுகிறேன்.) 

என் தந்தையிடம் பரம்பரையாகக் கடத்தப்பட்ட எழுத்தாற்றல் அவரது பிள்ளைகளுக்கும் கடத்தப்பட்டிருக்கும் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.
அந்த வகையில் எனக்குள் முளை விட்டது தான் இந்த ஆர்வம். ஆனாலும் என் முயற்சியின்மையால் இன்னும் வெறும் சாரலாக மட்டுமே தூவிக்கொண்டிருக்கிறது.

எனக்குத் தெரிந்து முதன் முதலாக நான் எனது 13 வது வயதில் லெப். கேணல் திலீபனின் நினைவு நாளில் “பார்த்தீபா.. பார்” என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதினேன். இது என் பாடசாலையில் மாணவர் நிகழ்வில் வாசித்தேன். எப்போதும் சிறுவர்கள் பாடசாலையில் கவிதை வாசித்தால், அது பெரியவர்கள் எழுதிக் கொடுத்தது என்று தான் நினைப்பார்கள். அதனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. நானும் நான் எழுதிய கவிதையை சில மாணவிகள் முன் வாசித்துவிட்ட சந்தோசத்தால், மற்றவர்களின் பாராட்டைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் அதை என் தந்தையிடம் காட்டிய போது என்னை மிகவும் பாராட்டினார். அன்றே “நீ கொஞ்சம் கவிதைகள் எழுதித்தா.. ஒரு நூல் வெளியிடுவோம்” என்றார். ஆனால் அதற்குப் பின் நான் எழுதிய மிகச்சில கவிதைகளைக் கூட சேமித்து வைத்ததில்லை. ஆங்காங்கே தேவைக்காக எழுதுவேன்.. பின்னர் அது எப்படியோ தொலைந்து போய்விடும். என்னுடைய இந்த அலட்சியப் போக்கால் என் வாழ்வில் தொலைத்தவை ஏராளம். ஆனால் ‘நான்’ தொலைந்து போகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற வரையில் சந்தோசமே....

இடையில் சில கால மாற்றங்களால்.. குடும்பத்தினருடன் வாழமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எழுத்துத் துறையில் என் முயற்சி குன்றிப் போனதற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். மீண்டும் என் 17 வது வயதில் தான் என் பெற்றோருடன் இணைந்து வாழும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்பொழுது நான் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் மாணவியாக இருந்தேன்.

இந்தக் காலத்தில் என் தந்தையோடு இணைந்து சில கவியரங்கங்களிலும், வானொலி நிகழ்வுகளிலும் என் கவிதைகளை அரங்கேற்றினேன். எனக்கு ஓரளவு குரல் வளம் இருந்தமையால் வானொலியில் ஏனைய நிகழ்ச்சிகளிலும் குரல் கொடுக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இதுவே எனக்குள் நான் ஒரு அறிவிப்பாளராக வேண்டும் என்ற கனவைத் தோற்றுவித்தது எனலாம். ஆனாலும் அது கால மாற்றங்களால் கைகூடாமல் போனது மட்டுமன்றி, இப்பொழுது அது காலங் கடந்துவிட்ட கனவாகவும் ஆகிவிட்டது.

அதே வேளை வானொலியில் எனது சில சிறுகதைகளும் கூட ஒலிபரப்பப்பட்டன.
சிறுகதை பற்றி நான் பேச விழையும் போது என் ஞாபகத்தில் நின்று சிரிப்பவர்... நான் என்றும் மதிக்கும், நேசிக்கும் என் தமிழ் ஆசிரியர்... திரு. விஜயன் ஆசிரியர் அவர்களே. என் பாடசாலையில் அவர் எனக்கு தமிழாசிரியராகவும், பாடசாலைக்கு வெளியே பல வழிகளிலும் நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்து என்னை வழிநடத்தியவர். இவர் ஒரு எழுத்தாளாரும் கூட. ஒரு கண்டிப்பான ஆசானாக மட்டுமன்றி ஒரு தோழமையோடும் என்னை அணுகிய ஒரே ஆசிரியர் இவர் தான் என்றால் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. என் தந்தைக்கு அடுத்ததாக என் எழுத்து துறையில் என்னை ஊக்குவித்தவர் விஜயன் ஆசிரியரே. குறிப்பாக என்னிடம் சிறுகதை எழுதும் ஆற்றலும் இருக்கிறது என என் தந்தைக்கு முன்பதாக இனங்கண்டவர் இவர்தான். ஏனென்றால், பாடசாலையில் அனைத்து தமிழ் பரீட்சையிலும் கட்டுரைக்குப் பதிலாக சிறுகதை தான் தேர்ந்தெடுத்து எழுதுவேன். இன்று எனக்கும் திரு.விஜயன் ஆசிரியருக்குமான தொடர்புகள் என் புலப்பெயர்வால் துண்டிக்கப்பட்டிருந்தாலும், எங்கோ ஒரு தொலைவில் இருந்து அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன் என்றே நம்புகிறேன்.

என் வாழ்வில் நான் பெற்ற மிகப்பெரும் பாக்கியம் என் தந்தையோடும், என் ஆசிரியரோடும் ஒரு சித்திரைப் புத்தாண்டில், ஒரே மேடையில் கவியரங்கம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது தான். அதுவும் இந்த நிகழ்வு நான் படித்துக் கொண்டிருந்த பாடசாலை மைதானத்திலேயே நடந்தது.
இப்படித்தான் என் எழுத்துலகில் நான் தவழ ஆரம்பித்திருந்தேன்...

இன்னும் வரும் என் எண்ணச்சாரல்கள்.... அடுத்த பதிவில் சந்திப்போம்....14 comments:

 1. "மைண்ட் வாய்ஸ்" எப்போ பேச ஆரம்பித்து விட்டதோ, அப்போதே உண்மையும் சுவாரஸ்யமும் எழுத வந்துவிடும்...

  தமிழ் ஆசிரியர் திரு. விஜயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ. என் ஆசிரியரையும் வாழ்த்தியிருக்கிறீங்க.. அவர் சார்பிலும் நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.... நன்றி...நன்றி...நன்றி.. :)

   Delete
 2. நல்ல ஆரம்பம்... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரி.. தொடர்ந்தும் நனையுங்கள்...

   Delete
 3. கோதை... சாரலில் நனைந்தேன். ஆரம்பமே அசத்தலாய் அழகாய் அருமையாய்.....
  நல்ல பலமான அத்திவாரம்தான்.
  தொடரட்டும். வாழ்த்துக்கள் மகளே!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அம்மா.. தொடர்ந்தும் நனையுங்கள்... :)

   Delete
 4. ம்ம் தொடருங்கோ !!/!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி நேசன் அண்ணா... தொடர்ந்தும் என்னோடு பயணியுங்கள்.. :)

   Delete
 5. தங்களைப்பற்றிய தொடர் வாசிக்க சுவராஸ்யமாக உள்ளது.. நானும் புகைப்படத்தில் உங்களைத்தேடினேன். அப்புறம்தான் கீழே வாசித்தேன். ஏமாற்றிவிட்டீர்கள்.. தொடர் நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க விச்சு அண்ணா... மிக்க நன்றி அண்ணா.. :)

   Delete
 6. உங்கள் எழுத்துலக பயணம் பிரமிப்பாக இருக்கு தொடருங்கள் ஆவலுடன் அடுத்த பகுதியை வாசிக்க காத்திருக்கின்றேன்

  ReplyDelete
 7. தவறவிடப்பட்ட சந்தர்ப்பங்களை மறந்துவிடுங்கள். இனி வரும் சந்தர்ப்பங்களை இறுக பற்றிவிடுங்கள். காலத்தை சுமக்கும் விழுதுகளில் நீங்களும் ஒருவராகிவிடலாம். வாழ்த்துக்கள் உங்கள் இலக்கிய உலகின் பயணத்துக்கு...........

  ReplyDelete
 8. சிறுகதைகளை இப்போது இங்கேயும் தொடரலாமே பூங்கோதை! இளவயது ஞாபகங்களை இப்போ அசைபோடுவதும் சுகந்தான்! தொடரட்டும் எண்ணச் சிதறல்கள்!

  ReplyDelete
 9. அருமை பூங்கோதை

  ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!