Monday 31 December 2012

புத்தாண்டு மகளே வாராய்....

இரண்டாயிரத்து பதின்மூன்றே இன்மகளே வாராய்...

இருவிழி மேல் ஓளியேற்றி வரவேற்றோம் வாராய்
செழுமையும் இனிமையும் எங்கள் வாழ்வில்
குளிர்மையோ  டிதமாய் நிறைய விரைந்து வாராய்

பட்டுத் தமிழ் புனைந்து சொட்டும் அமுது கலந்து -திசை
எட்டும் தெளித்திட்டோம் வான் மட்டும் முழங்கிட்டோம்
மொட்டாகி நிற்கும் புத்தாண்டு புது மலரே உனை
கொத்து மலர் கொண்டு வரவேற்றோம்.. எம்
கொட்டும் விழிநீர்க்கு அணை கட்டும் நிலை கொணர்வாய்..

பழமைகள் கழிந்து போகப் புதுமையைப் புனைய வாராய்...
இளமையோ கரைந்து போகா இன்தமிழ் போற்ற வாராய்..
மடமைகள் போக்கி நல்ல மனிதரை ஆக்க வாராய்...
கடனென வாழ்வைப் போக்கும் கயவரை மாற்ற வாராய்..

ஆண்டவனைத் தேடித் தேடி அலுத்துப் போனோம் -எம்மை
ஆண்ட வனையும் தேடித் தேடி அசதியானோம்...இனி
மாண்டவரை மனங்களிலே வாழ வைப்பாய்
மீண்டவரை மேதினியில் நிமிர வைப்பாய்...
வேண்டுமடி புதுமகளே உன் நல்வரவு.. புது
ஆண்டுமகளே அடியெடுத்து மெல்ல வாராய்...

மனிதத்தை இனியேனும் வாழ வைப்பாய்
கனிவான உளத்தோடு நாடவைப்பாய்
இனிவேண்டாம் நாம் பட்ட இன்னல்கள்..
இனிதான புது வாழ்வு வாழ வாராய்....

கலையோடு எழில் பொங்கும் திருநாடாய்...
களிப்போடு ஒரு தேசம் காண வைப்பாய்...
இணையற்ற தொரு தேசம் அது எங்கள்
ஈழமெனப் பறைசாற்ற வாகை தாராய்...

தமிழர்க்கோர் விடிவெள்ளி ஏந்தி வாராய்
தரணியிலே நிமிர்கின்ற தோள்கள் தாராய்...
புவி மீது பொற்பாதம் நாட்டி வாராய்...
புத்தாண்டே வரவேற்றோம் வாராய் வாராய்...


இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Saturday 29 December 2012

ஒரு மௌன யுத்தம்...

பேச்சடங்கிப் பலயுகம் போல் தோன்றுது...

பேசாத வார்த்தைகளை எனக்குள்ளே பேசிப் பேசி..
நாசி வரண்டு உன் சுவாசம் தேடுது...
ஓசையற்ற என் விசும்பலூடே
ஓராயிரம் முறை உன் சட்டை பிடித்து..
ஓங்கி உலுப்பிக் குலைகிறேன்...
அது கூடக் கற்பனையில் தான்...
உற்றவனைக் கூட தொட்டுணர முடியா தூரம்...
கற்பனை வாழ்க்கை தான் நான்
கண்ட மிச்சமானதோ...

பொசுக்குப் பொசுக்கெனக் கோபம் வரும்
பொசுங்கிவிடும் அதுவாகவே சில நிமிடத்தில்...
ஆண்மை குடிகொள்ளும் உன்
அடர்ந்த மீசைக்குள்
ஆணவத்தை.. தேடித் தேடி ...
அலுத்துப் போனேன்...
உன் மோகன விழிகளுக்குள்
மிதந்து கொண்டிருக்கும் காதலை
மூடி மறைக்கும் ஊடல்
என்னை விம்மி வெதும்ப வைக்கும்...
திருவிழாவில் தொலைந்து போய்
திக்கி நிற்கும் குழந்தை போல..
ஆனாலும்... என் வரட்டுப் பிடிவாதத்தால்
தண்டனையும் எனக்கே தான்...
என் மௌனம் உனக்குள் மோதியிருக்கும்...
ஏனென்றால்... நாம் பேசியதை விட
அகராதியற்ற நம்
மௌன மொழிகளே நமக்குள் அதிகம்....
ஊடறுத்துப் பாயும் உன்
ஊமைப் பார்வைக்குத் தான்
எத்தனை சக்தி....
கூடறுத்துக் குலையறுத்து என்
உயிர் பறந்து தவிக்கிறதே...
போதும் உன் பொய்க் கோபம்...
போட்டுடைத்து விடு... எனக்குப்
போராட சக்தியில்லை.. உன்னோடு அல்ல
உன் மௌன யுத்தத்தில்... 



இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Friday 28 December 2012

வெறுமை...


இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Thursday 27 December 2012

மௌனம்



மௌனம் உனக்குள் புகுந்தபின் தான்
அது அதன் வலிமை உணர்ந்தேன்...
அது என்னைத் தாக்கிய போது தான்
அதுவும் வலிக்கும் என உணர்ந்தேன்...
தாண்டமுடியவில்லை...
மதில்களையல்ல உன் மௌனத்தை...
தாங்க முடியவில்லை...
சுமைகளையல்ல.. இதயத்தை முட்களால் வருடும்
உன் மௌனத் தாக்குதல்களை..
தவறேதும் என்னில் இல்லைத் தான்...
ஆனால் உன் மௌனத்தைத்
தண்டனையாய் உணர்கிறேன்... எனக்கு
எதிராகவேனும் ஒரு வார்த்தை பேசிவிடு,,,
என் சிறையுடைப்பின் சுவாசத்தை
சுதந்திரமாய் உலவ விடு..






இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Monday 17 December 2012

பெண்ணியம்... எனது பார்வையில் பாகம் 2



பெண்ணியம்..... எனது பார்வையில் -பகுதி 1க்கு இங்கே சொடுக்குங்கள்...


சில பெண்கள் தமது தனிப்பட்ட அபிலாசைகளை (உரிமை வேறு, ஆசை வேறு எனப்புரியாதவர்கள்) பூர்த்தி செய்வதற்காக பெண்ணியம் என்ற போர்வையைப் போர்த்துக் கொள்வதாகவே எனக்குத் தோன்றுகிறது. அதாவது, தாம் விரும்பும் உடைகள் அணியவும், தம்மை அலங்கரித்துக் கொள்ளவும், களியாட்டங்களில் ஈடுபடவும் இன்னும் பல ஆடம்பரவிடயங்களில் ஈடுபடவும், தமது சில நடத்தைகளுக்காகவும்.... மற்றவர்கள் கருத்துச்சொல்லக்கூடாது என்பதற்காகவே, தாம் பெண்ணியம் பேசுவதாக எண்ணிக்கொண்டு `எமக்கு உரிமையுண்டு..,  ’ஆண்கள் செய்தால் தவறில்லை, நாங்கள் செய்தால் தவறா?` போன்ற கேள்விகளை எழுப்பும் போது மிகவும் பரிதாபமாகத்தான் தோன்றுகிறது. இன்னும் சில மோட்டுத்தனமான பெண்ணியவாதிகள் குடும்பம் அல்லது திருமணம் பற்றி மிகவும் ஆபத்தான கருத்தை வளர்ந்துவரும் சமூகத்தில் விதைக்கிறார்கள். திருமணம் என்பது அவசியம் இல்லாத ஒன்று. அது சமூகத்துக்காக செய்யப்படுவதே..என்கிறார்கள்... ஆனால் இவர்கள் இயற்கையான பாலுணர்வை ஏற்றுக் கொள்கிறார்கள். இப்பாலுணர்வின் நிறைவு எமது சமூகத்தை, கலாச்சாரத்தைப் பொறுத்தவரையில்  திருமணம் என்ற கட்டமைப்புக்குள் மாத்திரமே சாத்தியம் என்பது இவர்களுக்கு கலாச்சாரக் கொடுமையாகத் தெரிகிறது. அப்போ இவங்க என்னதான் சொல்ல வராங்க????
இப்படிப்பட்ட மட்டமான பெண்ணிய..... மன்னிக்கவும் இது பெண்ணியமே இல்லை.. எனவே இவர்களை நான் பெண்ணியவாதிகள் என்று குறிப்பிடாமலே விட்டுவிடுகிறேன். இத்தகையவர்கள் இன்னும் ஒரு பெரும் தவறைச் செய்கிறார்கள். இதையே தமது அல்லது தம்மைச் சூழ உள்ள பெண் குழந்தைகளுக்கும் திணித்து விடுகிறார்கள்... ஆரோக்கியமற்ற, சமூக்க் கட்டுப் பாடற்ற ஒரு சந்த்தியைத் தோற்றுவிக்கும் அபாயத்தை இவர்கள் உண்டுபண்ணுகிறார்கள்.
தான் விரும்பிய ஆடையைத் தெரிவு செய்து அணிவது என்பது அவளது சுதந்திரம்... ஆனால் அந்த ஆடையின் தன்மையை அல்லது வடிவமைப்பை அவள் தெரிவு செய்வது விருப்பத்தினாலேயே... (என்ன கொழப்புறேனோ...) நாகரீக மோகம் கொண்டு அரைகுறை ஆடைகள், அல்லது அங்கம் பிரித்துக் காட்டும் அதிக இறுக்கமான ஆடைகள் , அளவுக்கு மீறிய முக ஒப்பனை... எதுக்குங்க... சும்மா இருக்கிற ஆம்பிளைகளைக் கூட என்னைத் திரும்பிப் பார் என்று அழைக்கிறீங்க??? (”சும்மா இருக்கிற ஆம்பிளைகளை”... #பனைமரத்துக்கு சேலையைச் சுற்றிவிட்டாலும் அதைச் சுற்றிச் சுற்றி வரும் ஆண்களே... நீங்க இதில சேர மாட்டீங்க என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.... ) சிலர் இதற்கு ஆடை அணிவது எமது சுதந்திரம்என்கிறார்கள்... ஆடை அணிவது சுதந்திரம் தான்... ஆனால் இப்படி ஆடை அணிந்து நீங்கள் வெளியே காட்டுவது உங்கள் அந்தரங்கம் அல்லவா?... அதை ஏன் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்? மற்றவர்கள் தம் பார்வையைத் திருத்திக்கொள்ளவேண்டும் என்பதை விட, நாம் நம்மை மாற்றுவது நல்லதல்லவா? ஆண்களைக் கவரும் அளவுகதிகமான உங்கள் ஒப்பனை இதோ உன் எதிர்ப்பாலினம் ஒன்று உனக்காக உன் கண்களுக்கு விருந்து கொடுக்கக் காத்திருக்கு என்று அழைப்பது போலல்லவா இருக்கு... இதன் மூலம் பெண்களை வெறும் மோகப் பொருளாகத் தோற்றுவிப்பதோடு, பெண்களின் பாதுகாப்பு கூட சில வேளைகளில் கேள்விக்குறியாகிவிடுகிறது.
சரி.. இந்தப் பெண்ணியம் பற்றிப் பேசுபவர்களைப் பற்றிய எனது பார்வையை நான் சற்று குறிப்பிட விரும்புகிறேன்.
இன்று உலகின் பல மூலைகளில் இருந்தும் பெண்ணியம் பேசும் குரல்கள் ஒலிக்கின்றன. அதற்கு ஆதரவான கரங்களும் நீள்கின்றன. அத்தனை பேரும் பெண்ணியம் பேசுகிறவர்கள் தானா, அல்லது நடைமுறைப்படுத்துபவர்களா என்ற கேள்வி எனக்குள் அடிக்கடி எழுகின்றது. பலர் இதைத் தற்காலத்தில் அதிகமாகப் பேசப்படும் ஒன்றாக இருப்பதனால் பேசுகிறார்கள்.. கைதட்டல்களையும் வாங்கிக்கொள்கிறார்கள். இதனால் இது இவர்களது நடைமுறை வாழ்க்கையில் இது கடைப்பிடிக்கப் படுவதில்லை. குறிப்பாக சில மேடைப்பேச்சாளர்களும், சில எழுத்தாளர்களும் இந்த வட்டத்துக்குள் இறங்கி விடுவதுண்டு. இவர்கள் பெண்ணியம் மட்டுமல்ல, சாதியம், அடக்குமுறை என்பனவற்றுக்கு எதிராகவும் பேசுவார்கள், ஆனால் அவர்கள் வாழ்க்கையில் எதுவும் இருக்காது. இன்னும் சிலர் இருக்கிறார்கள்... இவர்கள் பெண்ணியம் பேசுவதன் மூலமே பெண்களை இலகுவாக அணுக முடியும் என்ற வக்கிர புத்தி உள்ளவர்கள்.. ஏனென்றால் இக்காலத்தில் பெண்கள் ஓரளவு விழிப்படைந்து விட்டது இவர்களுக்கு பேரிழப்பாகவே இருக்கிறது. எனவே விழிப்படைந்து விட்டவர்களை இந்த முறையில் அணுகுவது கொஞ்சம் இலகுவாக இருக்கும் என நினைக்கிறார்கள்.
ஆனால் உண்மையிலேயே பெண்களுக்கு உரிமைகள் இருக்கின்றன, கருத்து சுதந்திரம் இருக்கிறது எனக் கருதுபவர்கள் இருக்கவே இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் பேசிக்கொண்டிருப்பதில்லை. செயலில் இறங்கி விடுவார்கள். அவர்கள் வாழ்க்கை இதற்கு ஒரு சாட்சி வாழ்க்கையாக இருக்கும். மேடைகளில் பெண்ணியம் பேசுவதலோ, அல்லது எழுதுவதாலோ மட்டும் சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்பதை இவர்கள் புரிந்து கொண்டவர்கள்.
முதலில் குடும்பத்திலும், பின்னர் உறவுகளிடையேயும், பின்னர் தன் கிராமத்திலும்...  என தொடர்ந்து பெண்ணியத்தை நடைமுறைப் படுத்துபவர்களாக இருப்பார்கள். இத்தகையவர்களைக் காண்பது அரிது.
பெண்ணியம் பேசும் பெண்களைப் பற்றி நான் சிந்திப்பதுண்டு. உண்மையிலேயே பெண்ணியம் பற்றிப் புரிந்து கொண்டு பேசும் பெண்களை காணும்போது எனக்கு அப்படித் தோன்றுகிறது. அவர்களிடம் நான் காணுவது முதலாவது, அவை அடக்கம்இது நான் மிகமிக வரவேற்கும் ஒரு விடயம். விதண்டாவாதம் பண்ணுவதும், பொது இடத்தில் நின்று எகிறிக் குதிப்பதும் பெண்ணியம் ஆகாது. உங்களிடம் இருக்கும் கருத்தை பொருத்தமான நேரத்தில் எடுத்து, நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் நச் என்று அடித்து விட்டு அமைதியாகி விடுங்கள். அந்தக் கருத்து தன்பாட்டுக்கு சமூகத்தில் வேலை செய்யும். இந்த புரட்சியை தமது ஆடைகளிலும், தமது ஆரோக்கியமற்ற நடத்தைகளிலும் வெளிக்காட்ட முயல்கிறவர்களை பெண்ணியம் பேசுகிறவர்களாக நான் ஒரு போதும் ஏற்றுக் கொண்டதில்லை. இத்தகையவர்கள் தமது விருப்பு வெறுப்புக்காக பெண்ணியத்தை ஆயுதமாகக் கையில் எடுத்துக் கொள்பவர்கள். இது கூட ஒரு பலவீனம் என்றே நான் கருதுகிறேன். இவர்கள் பெண் சமத்துவம் பேசுகிறவர்களாக இருக்கும் அதே வேளை மேலைத்தேய நாகரீக விரும்பிகளாகவும் இருக்கிறார்கள். இரண்டுக்கும் முடிச்சு போட்டு பெண் சமூகத்தையே குழப்புகின்றவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு சிலர் ஆணாதிக்கம் பற்றிய கருத்துக்களை தமது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட காயங்களின் வலிகளாக வெளிப்படுத்துகிறார்கள். இது தவறல்ல. அனுபவமே ஆசான் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அது மட்டுமன்றி கருத்துக்கள் உணர்வுகளின் பிரசவிப்பே. ஆனால் அதனை மட்டுமே சுற்றிச் சுற்றி வருவது ஆபத்தை விளைவிக்கிறது.
இவர்கள் தம்மையறியாமலே தமது பாதிப்பைத்  சமூகத்துக்குள், முக்கியமாக தம் குடும்பத்திலுள்ள பெண் குழந்தைகளுக்குள் திணிக்க முயல்கிறார்கள். இதனால் இக்குழந்தைகள் சமூகம் பற்றிய அச்சம் உள்ளவர்களாகவோ அல்லது அவநம்பிக்கை உள்ளவர்களாகவோ வளரக் கூடிய சூழலை ஏற்படுத்தி விடுகிறோம். இவர்கள் வெளிப்படையாகவே ஆண்களை நம்பாதே என்று கூறி வருகிறார்கள். ஆண்கள் பற்றி விழிப்பாயிரு என்று கற்றுக் கொடுப்பது அவசியமானது தான். ஆனால் எப்போதும் அவர்களைச் சந்தேகக் கண்ணுடன் உலவும் இயந்திரங்களாக்கி விடாதீர்கள். என் சொந்த அனுபவத்தில் கூட நான் சந்தித்த ஆண்களில் 90 வீதமானவர்கள் தவறானவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்றால், அதற்காக மிகுதி 10 வீதத்தினரை புறம் தள்ளி விட நான் தயாராக இல்லை. அவர்களை இனம் காண வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது. அவர்கள் தான் இந்த சமூகத்தின் சீர் திருத்தத்திற்கு உதவக் கூடியவர்கள். அவர்கள் தான் அடக்குமுறையற்ற, நாம் எல்லோரும் எதிர்பார்க்கும் சமூகத்தை உருவாகத் தகுதியுள்ளவர்கள். இவர்களை இனம் காணுவதன் மூலம் அவர்களை இந்தவகையில்  நாம் ஊக்குவிக்க முயலலாம். இதற்கு இவர்கள் படிப்பறிவு உள்ளவர்களாகவோ அல்லது செல்வாக்கு உடையவர்களாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. (அங்கே தேடினால் ஒரு வேளை தோற்றுப் போவீர்கள். பாமர மக்களிடையே தான் அதிகமாக பெண்மையை, பெண்களை மதிக்கிறவர்கள் இருப்பார்கள்). எனவே சொந்த வாழ்வின் அனுபவங்களைக் கொண்டு ஆணாதிக்கம் பற்றிப் பேசும் சகோதரிகள் தம்மை ஆராய்ந்து நிதானிக்க வேண்டியவர்களாகிறார்கள்.
ஆக மொத்தம் இக்கட்டுரையினூடாக நான் வலியுறுத்த நினைத்தது,  பெண்ணியவாதிகள் தாம் பேசுவது இன்னதென்று அறிந்து பேசவேண்டும். அவர்கள் கூறும் கருத்துக்கள் சுய தேவையை, அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்கின்றதா, அல்லது சமூக அக்கறையில் பேசப்படுகிறதா? அவ்ர்களது வாழ்க்கை சாட்சியான வாழ்க்கையாக இருக்கிறதா என்பதை தாமே நிச்சயித்துக் கொள்ளவேண்டுமென்ற் எதிர்பார்க்கிறேன். அது மட்டுமன்றி, வளர்ந்து வரும் பெண் சமுதாயம் எப்படி வழிநடத்தப் படுகிறது... அவர்கள் பெண்ணியம் சமத்துவம் என்ற பெயர்களில், ஆபத்தான வழியில் நடத்தப்படுகிறார்களா என்பதை இந்த சமூகம் அவதானித்து நெறிப்படுத்த வேண்டிய கடப்பாடு உடையதாகிறது...
தோழிகளே... அனைவரும் இணைந்து பெண்ணியம் பேசுவோம்.. பெண்களின் பெருமையை உயர்த்தும் வழியில் மட்டும்....





இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Sunday 16 December 2012

உலகம் தானே.. அழிந்து போகட்டும் விட்டு விடு

உலகம் அழியப் போகிறதாம்..
ஊரெல்லாம் பேச்சு.. அன்பே
உனக்கு ஒன்றைச் சொல்லவா..
உலகம் தானே.. அழிந்து போகட்டும் விட்டு விடு
எமக்குத் தான் உருவங்கள் இல்லையே
நான் உனக்குள்ளும் நீ எனக்குள்ளும்
ஆத்மார்த்தமாக ஆழ்ந்த பின்
ஆதாரமற்ற இந்த உலகம் எதற்கு...
உடல்கள் பிரிந்தும் உணார்வுகள் சங்கமிப்பது
உனக்கும் எனக்கும் தானே தெரியும்.. அதை
அறிய முடியாத இந்த உலகம் எதற்கு?
இது இருந்தாலும் அழிந்தாலும்
நமக்குள்ளே உறைந்திருக்கும் அந்த
உருத்தெரியா காதல் அழிவதில்லையே...
அப்படியே அழிந்திட்டாலும்..
பால்வெளியின் பரந்த வெளியில்..
அந்தரத்தில் எங்கோ என்
அத்மா அலைந்து கொண்டிருக்கும் போது
உன்னை அடையாளம் காணாமல் போகலாம்..
கண்டாலும்.. நீண்ட இடைவெளியின் பின்
உன்னைக் கட்டித்தழுவ.. இல்லையில்லை
எப்போது நீதானே முந்திக் கொள்வாய்..
என்னை அந்தப் பாழாய்போன வெட்கம்
முந்திகொள்ளுமே.. அந்தக் கட்டியணைத்தல்கள்
சரீரமற்ற நமக்குள் சாத்தியமற்றுப் போகலாம்..
ஆனாலும் உன்
கறுத்த உதடுகளின் மெல்லிய ஒற்றடங்களின்
குளிர்ச்சியை பாதுகாக்கும் சருமம் தொலைந்திருந்தாலும்
அதன் நினைவுகள் அந்த அவாந்தர வெளியிலே
என்னை இன்னமும் ஆனந்தமாக மிதக்க வைக்குமே...
நம் குழந்தைகளுக்கு நடுவே
நானும் ஒரு குழந்தையாய்... உன் மடியில் சாய
அடம்பிடித்த போது.. அன்பாக அணைத்துக் கொண்டாயே
அந்த அணைப்பின் சூடு கூட என்னை சுழன்று
பறக்கவைக்கும் என்பதை நீ மட்டும் அறிவாய்..
அந்த நினைவுகளை எனக்குள் பொத்தி வைக்கிறேன்..
உலகம் முடியும் போதும் அது மட்டுமே
என் அரும்பெரும் பொக்கிசங்கள்...
என்னதான் யார் சொன்னாலும்
உனக்கென்றே சில உணர்வுகளைப் பூட்டி வைக்கிறேன்
அது உனக்கானது மட்டும்.. உலகம் முடிவதற்குள்
இணைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்.. ஆனாலும்
உனக்குள் நானும் எனக்குள் நீயும்
உருவின்றி வாழும் போது...
உலகம் தானே... அழிந்து போகட்டும் விட்டுவிடு..



இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Thursday 13 December 2012

உயிர்ப்பு...



உதிர்க்கும் சிரிப்பிதழின் பின்னே
உயிரற்ற இதயத்தின் ஊமை வலி
குதித்தோடும் எண்ணங்கள் உள்ளே
குற்றுயிராய் துடிக்கின்றதே..என்
இதயத்தின் உயிர்த்துடிப்பே...இனியவனே..
புதிதாய் என்னை
உயிர்ப்பிக்கும் மருந்து எதுவுமில்லை....
உன் புன்னகையைத் தவிர..


Wednesday 12 December 2012

பெண்ணியம்..... எனது பார்வையில் -பகுதி 1

பெண்ணியம் என்ற தலைப்பைப்  பார்த்ததும்  எதோ பெரிய அறிவாளி என்று எண்ணி விடாதீர்கள்.. பெண்ணியம் பற்றிப் பேசும் அளவுக்கு எனக்கு அறிவில்லை. இருந்தாலும் என் சிறு அறிவுக்குள் இது பற்றி என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றி எழுதலாம் என நினைத்தேன், எனவே என் சொந்த கருத்துக்கள் என்பதால் நண்பர்கள் யாரும் கருத்துப் பிழைகளை சுட்டிக் காட்டலாம். அது என்னை மேம்படுத்திக் கொள்ள உதவும் என நம்புகிறேன்.
பெண்களுக்கு இருக்கும் உரிமைகளை, சமத்துவத்தைப் நடைமுறைப்படுத்துவதற்கான சூழ்நிலையை முடுக்கி விடும் ஒரு ஆயுதம் தான் பெண்ணியம் என்ற வாதம்பலர் இந்த உரிமைகளை இன்னொருவரிடமிருந்து (ஆணாதிக்கவாதிகளிடமிருந்து) பெற்றுக்கொள்வது என்று நினைப்பதுண்டு.. இல்லை... உரிமைகள் நாம் பிறக்கும் போதே எம்முடன் பிறந்து விடுகின்றன. அதை சமுதாயத்தின் கட்டுப்பாடுகளுக்குள் மூச்சடக்க அமிழ்த்திவிடுகிறோம்...  ஆண்கள் மட்டுமன்றி பெண்களும்  கூட  இந்த ஆணாதிக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள். ”அந்தகாலத்தில் நாங்கள் இப்படியல்ல... என்னமா பேசுதுகள் இந்தக் காலத்துப் பொண்ணுங்க..” என்று அரம்பித்து...  ”பொம்பிளை சிரிச்சாப் போச்சு.. போயிலை (புகையிலை) விரிச்சா போச்சு..”  என்று முடிப்பார்கள். பாமர மக்களிடையே மட்டுமன்றி படித்த புத்தி ஜீவிகளும் கூட தம் பிள்ளைகளை முற்போக்காக வளர்க்கிறோம் என்பார்கள்... ஆனால் எங்கோ ஒரு இடத்தில் `பெண்` என்பதற்கு சமூகத்தால் எதிர்பார்க்கப்படும் வரைவிலக்கணத்தை எதிர்பார்க்கிறவர்களாகத் தான் இருக்கிறார்கள்... 
பெண்மை என்றால் ??...  பெண்ணின் இயல்புகளைப் பெண்மை என்கிறார்கள், அது போலவே ஆணின் இயல்புகளை ஆண்மை என்கிறார்கள். அதில் மென்மை, பெண்களின் பிரதான இயல்பாகவும், வீரம் ஆணின் இயல்பாகவும் சமூகத்தில் எதிபார்க்கப்படுகிறது. உளவியல் ரீதியாக இது சமூகத்தால் திணிக்கப்பட்டுவிடுகிறது. எப்படியெனில் ஒரு குழந்தை பிறந்ததும் அது தன் குடும்பத்தில், அல்லது சூழலில் எப்படி வளர்கிறது என்பதைப் பொறுத்து மென்மைத் தன்மையோ அல்லது வன்மைத்தன்மையோ அதற்குள் புகுந்து கொள்கிறது. இது இயற்கை எனினும் பெண் இந்த இயற்கையைப் பிற்காலத்தில் தன் அறிவுத் திறனுக்கும் அனுபவங்களுக்கும் ஏற்ப வெல்லவேண்டிய கடப்பாடு உடையவளாகிறாள். பெண்மையை மென்மையாகவே இலக்கியங்களில் படைக்கப்பட்டிருப்பதால் அதையே எம் சமூகம் பெண்ணிடம் எதிர்பார்க்கின்றது. அதே வேளை, அதைப் பயன் படுத்தியே அவர்களைப் பாலியல் ரீதியான சுரண்டல்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் தள்ளிவிடுகிறது.
மென்மையாக உள்ள பெண்கள்  (மென்மையான ஆண்களும் கூட..) பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். இதை பெற்றோர், சமூகத்தார் நன்கு அவதானிக்க வேண்டும். இவர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பதன் கருத்து அவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகளில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பதல்ல. பிரச்சனைகளை எதிர்நோக்கும் போது சோர்ந்து போகாமலும், மன அழுத்தங்களுக்கு உள்ளாகாமலும் பாதுக்காப்பதே. முக்கியமாக அவர்கள் உயிருக்கு பாதுகாப்பு கொடுங்கள். அவர்கள் சமூகத்தின் சவால்களுகூடாகப் பயணிக்கும் போது வெறுமனே சாய்ந்து கொள்ளத் தோள் கொடுத்தால் போதும். மற்றப்படி அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தான் இந்த சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், அதற்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொள்ளவும் கற்றுக்கொடுக்கும்.
மென்மை எப்போதும் அழகானது தான். அது பெண்ணிடம் மட்டுமல்ல ஆணிடமும் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பவள் நான். இதற்கும் வீரத்துக்கும் முடிச்சுப் போடத் தேவை இல்லை என்பது எனது எண்ணம். பெண்மையின் வீரம் கூட மிகவும் அழகானது தான். அதை எமது ஈழத்தமிழரின் விடுதலைப்போர் வெளிப்படுத்தி நின்றது என்பது யாரும் மறக்க முடியாத உண்மை.  ஆனால் நாம் மென்மை என்ற போர்வையில் பயம், கோழைத்தனம், போன்ற எதிர்மறையான உணர்வுகளையும், வீரம் என்ற போர்வையில் வன்மம், முரட்டுத்தனம் போன்றவற்றையும் திணித்து விடுகிறோம். இவை வரும் போது இயல்பாகவே இவர்கள் மென்மையானவர்களைக்  குறிவைத்துத் தாக்குபவர்களாக மாறி விடுகிறார்கள். அவர்களுக்குள்ள வக்கிர புத்தியால் மென்மையானவர்கள் துடிப்பதை இரசிக்கிறார்கள். இதற்கெல்லாம் விதை சிறு வயதிலேயே பெற்றோர்களாலும் உறவுகளாலும் போடப்படுகிறது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. இதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்லுகிறேன்.. பெண் குழந்தை பெரியவர்களிடம் தன் கருத்தை சொல்ல முனையும் போது, அல்லது அதிக குறும்புத்தனம் செய்பவளாக இருக்கும் போது, பெண் பிள்ளையாக அடக்க ஒடுக்கமாக இரு என்று அவளை அடக்குவதும், பாடசாலையில் சக மாணவனிடம் இருந்து அடி வாங்கி அழுது கொண்டு வரும் பையனைப் பார்த்து, நீ ஆண்பிள்ளையா இப்படி அடிவாங்கிக் கொண்டு வாற .. திருப்பி அடிக்க வேண்டியது தானே என உசுப்பி விடும் பெற்றோரும் இருக்கிறார்கள். இன்னும் ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்க.. நினைத்துப்பார்க்கும் போது கொஞ்சம் வினோதமாக்க் கூடத் தோன்றும். ஒரு குழந்தை தவறிக் கீழே விழும் போது பலர் அந்தக் குழந்தையின் அழுகையை நிறுத்த ஓடிப்போய்.. ”இந்த நிலமோ பிள்ளையை அடிச்சது??? அடி...அடி... இனி பிள்ளைக்கு அடிப்பியா? அடிப்பியா?” என்று நிலத்துக்கு உதைந்து அடித்த்தும் பிள்ளை சிரிக்கும்... எமக்குத் தெரியாமலே பிள்ளைக்குள் வன்முறையை வளர்க்கிறோம். இந்தப்பிள்ளை வளர்ந்து வரும் போது தன் சகோதரர்களோடு சண்டையிடும் போதும் தன் சகோதரன் தண்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பான். இப்படியே அடுத்தவர் துன்பத்தைக் கண்டு சிரிக்கும் சமுதாயத்தை நாம் உருவாக்கி விடுகின்றோம். இதற்குப் பிறகு இயல்பிலேயே மென்மையாக இருக்கும் பெண்களைப்பற்றி சொல்லவா வேண்டும்...

சரி இந்த நிலையில் இருந்து எப்படி மீள்றது?
இதற்கான பல முயற்சிகள் நடந்து கொண்டிருந்தாலும் சில நல்ல முன்னுதாரணங்களாகத் திகழ்ந்தாலும், பலர் தவறான வழிகாட்டிகளாகவே இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. பெண்களின் கல்வி முன்னேற்றம், தொழில் செய்வதற்கான சூழ்நிலையை உருவாக்கல், கருத்துச்சுதந்திரம், சுய விருப்பு வெறுப்பு போன்ற பல விடயங்களிலே இந்தப் பெண்ணியவாதங்கள் முனைப்புறுத்தப்படுகின்றன. இவை நல்ல விடயங்களாகவே நானும் கருதுகிறேன்.
பிடித்த மணமகனை
தேர்வு செய்ய
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்
என்ற தத்துவத்தை உடைத்தெறிந்து
பிடிக்கவில்லை என்றால் நீ புல்லுதான்!
என்று விவாகரத்து செய்ய சுதந்திரம்!
திருமணத்தின் சுதந்திரமாக!
தந்தை சொத்தில் உரிமை!
கணவன் சொத்தில் உரிமை!
மகன் சொத்தில் உரிமை!
இப்படி பெண்களுக்கு
வழங்கியுள்ள சுதந்திரம் ஏராளம்!
-veerakrish கவிதையில் இருந்து சுட்டது.....  http://tamilnanbargal.com/node/45118
இவற்றோடு கல்வி கற்கும் சுதந்திரம், வேலை செய்யும் சுதந்திரம்,கருத்துச் சுதந்திரம் என்று படிப்படியாக பெண் சுதந்திரம் வழங்கப்பட்டு சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டே வருகின்றது.
ஆனாலும் இதையும் மீறி சில சந்தர்ப்பங்களில் முட்டாள்த்தனமான பெண்ணியவாதங்கள் மனதை நெருடுகின்றனவாக இருக்கின்றன. “பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் புவி பேணி வளர்த்திடும் ஈசன், மண்ணுக்குள்ளே சில மூடர் அந்த மாதர் அறிவைக் கெடுத்தார்என்று பாடிய பாரதிக்கு, பிற்காலத்தில் பெண்ணியம் என்ற பெயரிலும் கூட பலர் மாதர் அறிவைக் கெடுப்பார்கள் என்று தெரியாதிருந்திருக்குமோ என்னவோ...
அப்படி என்ன தான் செய்கிறார்கள் என்கிறீர்களா? அதைத் தொடர்ந்து வரும் பதிவில் சொல்லுகிறேனே...
-என் பார்வை தொடரும்..
-என் பார்வை தொடரும்..இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Monday 10 December 2012

இரவுகள் இரப்பதெவை?....

உயிரின் தாகம் தீர்க்கும்
உறவின் நாதத்தை...
உலர்ந்த விழிகரைந்து
உவர்க்கும் சோகத்தை...
உச்சி வான் வெளியின்
உறைந்த இருள் நீக்கும்
உயிர்ப்பின் ஒளியதனை...
உடுக்கள் மிளிர்கின்ற
உயர்ந்த வானத்தை...
உணர்வின் வலி போக்கும்
உரத்த நிவாரணியை...
எதுவும் இல்லையெனிலும்
எப்படியோ கழிகின்றன
எனக்கு வேண்டாத இரவுகள்..
எப்படியும் மறுநாள்
எழுந்திடுவேன் என்ற நம்பிக்கையில்...

Sunday 9 December 2012

என் செல்ல வாயாடி...



என் இரண்டாவது பெண் யாகவி...

அவளுடைய சுட்டித்தனங்கள் என்று சொல்வதை விட.. அவர்கள் பேசும் பெரிய விசயங்கள் இருக்கே.. கொஞ்சம் அதிகமாவே தெரிந்தாலும் நான் வாயில் விரலை வைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். இதுவரையும் பல விடயங்களை மறந்துட்டேன்.. ஆனால் இன்னைக்கிருந்து அவ பேசுற இந்த வாயாடித்தனமான பேச்சுக்களைப் பதிவு செய்யப் போறன்... எதுக்கு என்று கேட்கிறீங்களா? இந்த குழந்தைத் தனம் அவர்கள் வளர்ந்த பின்னர் அவர்களுக்கே இரசிக்கும்படியா இருக்கும்... அப்போ அவங்க படுற வெட்கத்தை நாங்களும் கண்டு இரசிக்கலாமில்ல...

இண்டைக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஸ்கைப்பில் தொடர்பு கொண்டேன்...

புது ட்ரெஸ் எடுத்திருக்கா..அதையெல்லாம் என்னட்ட காட்டினா. அதோட கலர் பற்றி பேசினோம்.. என்ன கலர் பிடிக்கும்  என்று கேட்டேன்.. எல்லாம் லைற் கலரா சொன்னா..

பிங்க் பிடிக்கும், வெளிர் நீலம், மெல்லிய பச்சை.. என்று சொல்லிட்டே போனா..

சரி எந்தக் கலர் பிடிகாது என்றதுக்கு படக்கென கருப்பு நிறம் பிடிக்காது என்றா.. 

உடனே நான் சொன்னேன் வளர்ந்ததும் கருப்பு மாப்பிளையைத்தான் கட்டித் தருவேன் என்று..

உடனே சொன்னா பாருங்க...

எனக்கு கருப்பு மாப்பிளையும் வேணாம் ஒண்ணும் வேணாம் என் அத்தான் `சாம்`ஐக் தான் 

கட்டித் தாங்க எண்டாள்...

சிரிப்பு அடக்கமுடியாமல் அடக்கிக் கொண்டே கேட்டேன்..’’ 
அதுக்கு அத்தை ஓம் எண்டு சொல்ல வேணுமே.. ஓமெண்டுவாவா?” என்று கேட்டேன்..
 5 வயசுப் பொண்ணுங்க... என்ன சொல்லுச்சுன்னு தெரியுமா?

அது எனக்குத் தெரியுமா? நீங்க தான் கதைக்க வேணும்... இப்ப நீங்க முடிவெடுக்கிறீங்களா இல்ல 

நான் முடிவெடுக்கவாண்ணு... ஹையோ.. ஹையொ... இதுக்கு மேல என்னால அடக்க முடியாம 

சிரிச்சு சிரிச்சு களைச்சிட்டேன்...

அப்படி ஒரு வாயாடிங்க..ஆனால் என் சிரிப்பைக் கண்டு அவ வெட்கப்படல்ல... தன் அத்தானைப் 

பற்றிப் பேசும் போது நான் சிரிச்சுட்டேன் என்று என்னுடன் கோபித்துக் கொண்டு எழுந்து 

போய்ட்டா.. பிறகு அவளை சமாதானப்படுத்தி கூப்பிட 5 நிமிசமாச்சு...


இதுங்களையெல்லாம் எப்படி வளர்க்கப்போறேனோ ஆண்டவா.....

 ****

அதற்கு முந்திய வாரம் (இரண்டு வாரங்களுக்கு முன்) பேசிய போது என்ன பேசினான்னா...

அவளது அக்கா முறையான பிள்ளை எங்கள் வீட்டில் பரீச்சைக்காக வந்து நின்று படிக்கிறாள். 

அவள் என் மகளை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போயிருக்கிறா.. அப்படிப் போகும்போது யாரோ 

இரண்டு பையன்கள் சைக்கிளில் பின் கரியரில் இருந்த என் மகளைப் பார்த்து (சின்னப் பெண்ணை 

சீண்டலாம் என் நினைத்துப் போல...) கண் அடித்திருக்கிறார்கள்.


உடனே அக்காவிடம் சொல்லியிருக்கிறாள்... ”நான் இனிமேல் சைக்கிள்ல வரமாட்டேன்.. இந்தப் 


பெடியங்கள் கண் அடிக்கிறாங்கள்..” என்று.. அக்கா அதைப் பற்றிக் கேட்க அவள் 

சொல்லியிருக்கிறாள்... ”எனக்கு அவங்களைத் தெரியும்... ஒருத்தன் கறுப்பு மற்றவன் வெள்ளை... 

நான் இப்பவே பொலீசில போய் சொல்லப் போறன் எண்டு..”.


அப்பாடா.. என் பொண்ணு பொழைச்சிக்குவா... என்ன சொல்றீங்க?? J



இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?...