Thursday, 21 March 2013

எழுத்துலகில் என் எண்ணச்சாரல்கள்..-2
வணக்கம் என் இனிய நட்பு நெஞ்சங்களே..

வாங்க... இன்றும் என் எண்ணச்சாரலில் நனைந்து பயணிப்போம். இன்றோடு இந்தப் பயணத்தை சத்தியமா முடிவுக்கு கொண்டு வந்துவிடுவேன். அதனால, கொஞ்சூண்டு பொறுமையையும் கையில எடுத்துக் கொண்டு பயணத்தை ஆரம்பிங்க...

ம்ம்.. எங்கே விட்டேன்... ஆங்...... எழுத்துலகில் நான் தவழ ஆரம்பித்தது மட்டும் தான்... இதன் பின்னர் நான் தொண்டு நிறுவனங்களில் முழுநேரமாகப் பணியாற்றியமையாலும், திருமணமாகி மன்னாரில் குடியேறியமையாலும் என் முயற்சிகள் மீண்டும் தொய்வடையத் தொடங்கின. ஏன்..... சோம்பேறித்தனமும் காரணம்னு சொல்லவேண்டியது தானே...

இதன் பின் என் பணிமாற்றல் காரணமாக மீண்டும் வன்னி மண்ணில், கிளிநொச்சியில் வாழ ஆரம்பித்திருந்தேன். ஆனால் என் வேலை காரணமாக, இந்தத்தடவை நான் முன்னர் போல் எழுத்துத் துறையில் அதிகம் ஈடுபட முடியவில்லை.

ஆனால் இந்தக் காலகட்டத்தின் இறுதிப்பகுதியில் 2008ல் , செஞ்சோலை வளாகத்தில் விமானக்குண்டுவீச்சுக்கு இரையான மாணவிகளின் நினைவாக ‘குருதிச்சுவடிகள்’ என்ற ஒரு சிறிய கவிதை நூலை அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வில் வெளியிட்டேன். என் எழுத்துலகில் நூல் வடிவிலான முதல் பிரசவிப்பு அது. ஆனாலும் இடப்பெயர்வின் ஆரம்பக் காலம் என்பதால், கருவிலிருந்து புறப்பட்டு பூமியைப் பார்த்த மாத்திரத்திலேயே மூச்சடங்கிப் போன குழந்தையாகிப் போனது அந்த நூல். இடப்பெயர்வின் காரணமாக அதன் ஒரு பிரதியைக் கூட என்னால் காப்பாற்ற முடியாமல் போனது.....

இதே இறுதிக் கட்டத்தில் தான், என் அலுவலகத்தில் என்னோடு பணிபுரிந்த என் நண்பி ஒரு நாள்....
“இஞ்ச, உமக்கு கவிதைகள் வாசிக்க விருப்பம் எல்லோ. நான் ஒரு வெப்சைட் காட்டுறன், பாரும்...” என்று எனக்கு ஒரு வலைப்பூவை அறிமுகப்படுத்தினாள்.  அது சாத்வீகன் என்ற ஒரு பதிவருடைய வலைப்பூ. மிகவும் அழகாக, மனதைக் கவரும் விதமாக வடிவமைக்கப் பட்டிருந்தது. கவிதைகளும் கூட மனதைத் தொடுவனவாக அமைந்திருந்தன. மவுஸை கவிதைக்கு அருகில் நகர்த்தும்போது அதற்கேற்ற திரைப்படப்பாடல் ஒலிக்குமாறு அது வடிவமைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த போது, நானும் ஒரு வலைப்பதிவராவேன் எனத் துளியளவும் நினைக்கவில்லை. அந்தளவுக்கு தொழில்நுட்பம்.... நமக்கு இந்தத் தொழில்நுட்பமெல்லாம் ஜீரோங்க.... இப்பொழுதும் கூட பல வேளைகளில் எனக்கு தொழில்நுட்பம் தான் பெரும் சவாலாக  அமைந்து விடுகிறது. (சாத்வீகனின் வலைப்பூவை இடப்பெயர்வுக் காலத்தின் பின் எத்தனையோ தடவைகள் தேடினேன்.. அது இணையத்தில் இருப்பதாகவே தெரியவில்லை. எனினும், என் வலைப்பூ உருவாக ஏதோ ஒருவிதத்தில் காரணமாக இருந்த அந்த வலைப்பதிவருக்கு என் மானசீகமான நன்றிகள்.)

இப்படி சில தடவைகள் அந்த வலைப்பூவைத் திறந்து அதிலுள்ள கவிதைகளை மட்டும் சுவைத்து வந்த நான் ஒரு நாள் அதன் முகவரியை மறந்துவிட்டதால், கூகிளில் Blog/Blogger என்று தேடப்போக Create your own blogger என்று ஒரு தலைப்பு வந்தது. அதைப் பார்த்ததும் சும்மா முயன்று பார்ப்போமே என நினைத்து அதற்குள் நுழைந்து எப்படியோ எனக்கு ஒரு வலைப்பூவை தயாரித்து விட்டேன். பொதுவா கணனியில் எதைப் பார்த்தாலும் நோண்ட ஆரம்பிக்கிறது.. இதனால் மாட்டிக் கொண்ட சந்தர்ப்பங்கள் நிறைய்ய்ய்ய...  இது தற்செயலாக நடந்தது தான். ஆனால் தமிழ் யுனிக்கோட் எழுத்து முறை எனக்கு நீண்டகாலமாகத் தெரியாது. அதனால் அதில் பாமினி எழுத்துருவில் தட்டச்சு செய்து ஒரு கவிதையைப் பதிவிட்டேன். எல்லாம் வெறும் பெட்டி பெட்டியாகத் தெரிந்தது. என்ன செய்யலாம் என்று இல்லாத மூளையைக் கசக்க ஆரம்பித்தேன். அப்பொழுது தான் என் அலுவலகத்தில் எங்கள் ஆலோசகராகப் பணிபுரிந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனக்குத் தெரிந்த முறையில் உதவ முன்வந்தார். அவருக்கும் அதிகம் தெரியாவிட்டாலும் என்னைவிடத் பல விடயம் தெரிந்திருந்தார்.

அவர் செய்தது என்னவென்றால் HTML ல் போய் எங்கெல்லாம் எழுத்துருவுக்கான இடம் வருகிறதோ அங்கெல்லாம் பாமினி என்று மாற்றி விட்டார். இப்பொழுது எனது கணனியில் நான் பதிவிட்டவை தமிழ் எழுத்தில் தெரிந்தது. இதன் பின் இடப்பெயர்வு.. அதிகம் பதிவு எழுதவில்லை. இடப்பெயர்வுக்குப் பின்னர் பல கவிதைகளை எழுதி அதே பாமினி எழுத்துருவிலேயே எனது பதிவுகளைப் போட்டேன். ஆனால் நீண்ட நாட்களின் பின் தான் ஒரு உண்மையைத் தெரிந்து கொண்டேன். எனது பதிவுகள் யாருடைய கணணியில் எல்லாம் பாமினி எழுத்துரு இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே தமிழில் தெரியும். மற்றவர்களுக்கு வெறும் பெட்டி தான்......ஹீ...ஹீ.... J நான் என்ன தான் செய்ய முடியும்.. அப்படியே விட்டு விட்டேன்.

ஏனென்றால் நான் இந்த வலைப்பூவை ஒரு சேமிப்பிடமாக மட்டுமே கருதி வந்தேன். என் பழைய படைப்புகளைப் பார்த்தீர்களானால், பல கவிதைகளுக்கு பின்னூட்டங்களே இருக்காது. அந்தக் கவிதைகளை யாரும் வாசித்திருக்கக்கூட மாட்டார்கள். எனக்கு எப்போது என் உணர்வுகள் தூண்டப்பட்டுக் கவிதை பிறக்கிறதோ அப்போது அதை இங்கே பதிந்து வைப்பேன். அவ்வளவு தான். யாராவது படிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் அதிகமாக இருக்கவில்லை.

இப்படியாக என் உணர்வுகளை மட்டுமே சேமித்து வந்த வலைப்பூவில், ஒரு சிறந்த பதிவரான தம்பி யாதவனின் (கவியழகன்) ‘பிளாக்கர் தொடங்கிய கதை’ மூலமாகவும் அவருடைய 100வது பதிவினூடாகவும் சில பதிவர்களின் காலடி பட ஆரம்பித்தது. அதில நம்ம பக்கம் கொஞ்சம் காற்று அடிச்சுவிட்டிருக்கிறார்.... அதே வேளை தம்பி யாதவன் இன்ட்லியில் இணைக்கும் முறையையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். தம்பி யாதவனுக்கு இந்த வேளையில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நான் தொடர்ச்சியாக பதிவிடுவதில்லை என்பதால் அதுவும் நாளடைவில் நின்று போனது.

என் புலப்பெயர்வின் பின், 2011ன் நடுப்பகுதியில் தான் எனக்கு யுனிக்கோட் எழுத்து முறையை ஒருவர் நல்ல மனதோடு அறிமுகப்படுத்தி வைத்தார். என் பதிவுலகில் ஒரு படி முன்னேற்றம் இது தான்.. அவர் வேறு யாருமில்லை. என் அன்புத்தம்பி பிரபல பதிவர் மதியோடை- மதிசுதா தான். அன்று அவர் சொல்லித்தராவிட்டால், ஒருவேளை இன்று வரையும் யுனிக்கோட் முறை தெரியாமலே இருந்திருக்குமோ என நான் நினைப்பதுண்டு. ஹ்ம்ம் இதனால நீண்ட நாட்களாக பாமினி எழுத்துரு தட்டச்சு முறை பழக்கத்தில் இல்லாமல் போனதால் அதை அறவே மறந்து போனேன் என்பது வேறு கதை...  இவர் தன்னுடைய வலைப்பூவிலும் என்னை அறிமுகப்படுத்தியிருந்தார். தம்பி சுதாவுக்கு இந்த வேளையில் என் அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே வேளை, கடந்த கார்த்திகை மாதத்தில் இருந்து அவ்வப்போது என் படைப்புக்கள், நீண்டகாலத்தின் பின் மீண்டும் ஒலிவடிவம் பெற்று வானலையில் வலம் வர ஒரு நண்பர் காரணமாக இருக்கிறார். அவர் தான் பிரபல பதிவரும் புரட்சி வானொலியின் அறிவிப்பாளருமான ஆர் ஜே நிருபன். இதற்காக நண்பர் நிருபனுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து...... அண்மைக் காலமாகத் தான் நான் அதிகம் முகநூலினூடாக என் பதிவுகளை பகிர ஆரம்பித்திருக்கிறேன். இதைவிடவும், என் பதிவுகளை சில வாரங்களாக பல புதிய பதிவர்கள் பார்வையிட இன்னுமொரு நண்பர் காரணமாக இருந்திருக்கிறார். அவர் தான் பிரபல பதிவர் நண்பர் மாத்தியோசி மணி அவர்கள். இவர் செய்த காரியம் என்னவென்றால், தமிழ்மணத்தில் என் பதிவுகளைப் பகிரும் முறையை அறிமுகப்படுத்தியது தான். தமிழ்மணம் பற்றிய இவருடைய அறிமுகப் பதிவின் தொடரும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த வேளையில் நண்பர் மணிக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்மணத்தில் அண்மையில் இணைந்து கொண்டமையால் ஓட்டுப் பட்டை சரியாக செயற்படவில்லை. இதற்கு என் வலைப்பூவின் தொழில்நுட்பக் கோளாறு ஏதாவது காரணமாக இருக்கலாம்... ஆனாலும், ஓட்டுப் பதிவிற்கான இணைப்பை என் பதிவுகளில் தொடுத்து வைத்திருக்கிறேன். அது வழக்கத்துக்கு மாறானது என்பதால், என் வலைத்தளத்துக்கு வரும் பதிவர்களின் கண்களில் அந்த இணைப்பு தவறுப்பட்டுப் போகிறது. இதனால், பதிவைப் படித்து இரசித்து, ஆக்கபூர்வமான பின்னூட்டங்களைக் கொடுப்பவர்கள் கூட எனக்கு ஓட்டுப் போடாமல் ஓடி விடுகிறார்கள்.... :(( இனிமேல் கவனியுங்கோ நண்பர்களே.... இனி ஒழுங்கா ஓட்டுப் போடுற ஆட்களுக்கு நான் குட்டிக் குட்டிப் பரிசுத்திட்டம் எல்லாம் கொண்டு வரப்போறன்...ஹீ..ஹீ..ஹீ...

இந்நாள் வரைக்கும் என் பதிவுகளைப் படித்து கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்தி வந்த அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்..... எங்க கிளம்பிட்டீங்க.... கொஞ்சம் பொறுங்க... நன்றி சொல்லி விட்டேன் என்பதால் இது முடிவுரை இல்லை... ஆரம்ப உரை... அதனால் ஒவ்வொரு பதிவிலும் உங்கள் ஊக்குவிப்பு எனக்கு அவசியம்... எனவே தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களையும், மறக்க்க்க்காமல் தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டுக்களையும் போட்டு என்னை ஊக்குவிப்பீங்க என்று நம்புகிறேன்..
எல்லாவற்றிற்கும் மேலால், என் பெற்றோருக்குப் பின் என் எழுத்துப்பணியில் என் சுதந்திரத்துக்கு எந்தவித இடையூறுமின்றி, அதே வேளையில் தன் முழு ஊக்குவிப்பையும் கொடுத்தவரும் கொடுத்துக் கொண்டிருப்பவரும் என் கணவர் தான். என் அன்புக் கணவருக்கு இந்த வேளையில் என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
இவ்வளவு தானுங்க என் எழுத்துலகப் பின்னணி... இரண்டு பதிவுகளில் ரொம்பவே அறுத்திட்டேன்... அப்படின்னு நீங்க நினைச்சால்.... மன்னிச்சிடுங்க... வைத்திய செலவுகள் பொறுப்பேற்கப்பட மாட்டாது..... :))
அடுத்த பதிவில், வலைப்பூவில் எனக்கு ஒரு கொண்டாட்டம்.. எல்லாரும் சேர்ந்து கொண்டாடுவோம்... காத்திருங்க...

Sunday, 17 March 2013

எழுத்துலகில் என் எண்ணச்சாரல்கள்..-1

தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டுக்களைப் பதிவு செய்ய இங்கே கிளிக்குங்க..

வணக்கம் என் இனிய உறவுகளே..
நலம் தானே...
ஒரு புதிய படியில் காலடி வைப்பதற்கு முன், என்னைப் பற்றியும், எழுத்துலகில் என் பின்னணி பற்றியும் சிறு அறிமுகம் செய்யலாம் என்பது தான் இந்தப் பதிவின் நோக்கம்.

என்னடா இது.. எல்லாருமே ஆரம்பத்தில் தானே அறிமுகம் செய்வார்கள்.. இடையில் வந்து இது என்ன ஒரு அலப்பறை.... என்று நீங்க முணு முணுக்கிறது எனக்கு நல்லாவே கேட்குது... நான் இனித்தான் எழுதவே ஆரம்பிக்கப் போறேனுங்க... அது தான் இந்த அறிமுகம்.

இது கொஞ்சம் நீண்ட பயணம் என்பதால் இரண்டு தொடராக பதிவு செய்யலாம் என எண்ணுகிறேன்.. எனவே இதை தொடர்ச்சியான சுய தம்பட்டம் என்று யாரும் எண்ணிடாதீங்க... இந்த வலைப்பூ என் உணர்வுகளின் சேமிப்பிடம். இந்த சில பதிவுகளினால், என்னைப் பற்றிய சில தகவல்களையும் சேமிக்கலாம் என நினைக்கின்றேன். எப்பொழுதாவது என் பிள்ளைகளுக்கோ அல்லது வேறு யாருக்கோ நான் யார்? எப்படி ஏன் எழுத ஆரம்பித்தேன் என்ற கேள்விகளுக்கு இது விடையாகலாம்...  (ஆமா.. பெரீய இவ... ஹீ..ஹீ..ஹீ..)
ம்ம்.. நம்ம மைண்ட் வாய்ஸே நம்மள விட மாட்டேங்குதே.. மற்றவங்களை எப்படிக் குற்றம் சொல்றது...

சரி வாங்க நண்பர்களே என் எண்ணச் சாரலில் நனையலாம்..
முதலில் என்னைப்பற்றிய ஒரு அறிமுகம்:
நான் பூங்கோதை... அதான் தெரியுமே..
இது என் தந்தை என் 17வது வயதில் எனக்கு சூட்டிய புனை பெயர். ஈழத்தில், வன்னியின் சில பகுதிகளில் நான் இந்தப் பெயரால் அறியப்பட்டவளாகவே இருக்கிறேன். அப்பா, அம்மா இரண்டு பேருடைய மூலவேர்களும் - மன்னார்தான். ஆனாலும் நான் பிறந்ததும், வளர்ந்ததில் பாதிக்காலமும் யாழ்ப்பாணம் தான். என் வாழ்வின் முக்கியமான மிகுதிப் பகுதியில்.. அதாவது நான் வளர்ந்த மீதிக் காலம் வன்னி. இடப்பெயர்வுகளால் வன்னியில் மல்லாவி, புதுக்குடியிருப்பு, ஆகிய இடங்களில் கல்வி கற்றிருந்தாலும், என் பாடசாலைக் காலத்தின் இறுதிப்பகுதி, நான் மிகவும் நேசிக்கும் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியே. இங்கு தான் நான் மாணவர்களிடையேயும் ஆசிரியர்களிடையேயும் ஓரளவு அறியப்பட்டவளாகவும் வாழ்ந்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் என்னைத் தேடாதீங்க.... இதில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கும் எனக்கும் இடையில் ஒரே பாடசாலையில் படித்திருக்கிறோம் என்பதைத் தவிர, வேற ஒரு சம்பந்தமும் கிடையாதுங்க.. என் பாடசாலை முகப்பில் இரு புறமும் அந்த அழகிய தேமா மரங்கள் பூத்துக்குலுங்கிய படியே நிழல் கொடுக்கும். அண்மையில் எடுத்த படங்களில் இந்த மரங்கள் காணாமல் போயிருக்கின்றன. அதனால தான் கூகிளில் தேடி யாரோ பழைய மாணவர்களின் படத்தைப் போட்டிருக்கிறேன்.
அம்மா அப்பா ஐந்து பெண்கள், ஒரு ஆண்பிள்ளை என  எட்டு அங்கத்தவர்கள் அடங்கிய ஒரு கலகலப்பான குடும்பத்தில் நான் ஐந்தாவதாகப் பிறந்தவள்.. இதனால் நல்ல பெற்றோர், வழிகாட்ட அக்காமார், நட்புக்கு அண்ணா, செல்லத்துக்கு தங்கை..என குதூகலமாக கட்டியெழுப்பப்பட்ட ஒரு குடும்பத்தில் இறைவன் என்னைத் தோற்றுவித்திருந்தான்.
இத்தனைக்கும் மேலால், என் குடும்பத்தில் நான் பெற்ற மிகப் பெரிய வரப்பிரசாதம் தான் இந்த எழுத்தாற்றல். என் தந்தை ஒரு கலைஞனாக, கவிஞனாக, எழுத்தாளானாக வாழ்ந்தவர். (நிச்சயம் என் இன்னொரு பதிவில் என் தந்தையைப் பற்றிய விரிவான வரலாறு ஒன்றைப் பதிவிட எண்ணுகிறேன்.) 

என் தந்தையிடம் பரம்பரையாகக் கடத்தப்பட்ட எழுத்தாற்றல் அவரது பிள்ளைகளுக்கும் கடத்தப்பட்டிருக்கும் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.
அந்த வகையில் எனக்குள் முளை விட்டது தான் இந்த ஆர்வம். ஆனாலும் என் முயற்சியின்மையால் இன்னும் வெறும் சாரலாக மட்டுமே தூவிக்கொண்டிருக்கிறது.

எனக்குத் தெரிந்து முதன் முதலாக நான் எனது 13 வது வயதில் லெப். கேணல் திலீபனின் நினைவு நாளில் “பார்த்தீபா.. பார்” என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதினேன். இது என் பாடசாலையில் மாணவர் நிகழ்வில் வாசித்தேன். எப்போதும் சிறுவர்கள் பாடசாலையில் கவிதை வாசித்தால், அது பெரியவர்கள் எழுதிக் கொடுத்தது என்று தான் நினைப்பார்கள். அதனால் யாரும் கண்டு கொள்ளவில்லை. நானும் நான் எழுதிய கவிதையை சில மாணவிகள் முன் வாசித்துவிட்ட சந்தோசத்தால், மற்றவர்களின் பாராட்டைப் பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

ஆனால் அதை என் தந்தையிடம் காட்டிய போது என்னை மிகவும் பாராட்டினார். அன்றே “நீ கொஞ்சம் கவிதைகள் எழுதித்தா.. ஒரு நூல் வெளியிடுவோம்” என்றார். ஆனால் அதற்குப் பின் நான் எழுதிய மிகச்சில கவிதைகளைக் கூட சேமித்து வைத்ததில்லை. ஆங்காங்கே தேவைக்காக எழுதுவேன்.. பின்னர் அது எப்படியோ தொலைந்து போய்விடும். என்னுடைய இந்த அலட்சியப் போக்கால் என் வாழ்வில் தொலைத்தவை ஏராளம். ஆனால் ‘நான்’ தொலைந்து போகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற வரையில் சந்தோசமே....

இடையில் சில கால மாற்றங்களால்.. குடும்பத்தினருடன் வாழமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எழுத்துத் துறையில் என் முயற்சி குன்றிப் போனதற்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். மீண்டும் என் 17 வது வயதில் தான் என் பெற்றோருடன் இணைந்து வாழும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்பொழுது நான் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் மாணவியாக இருந்தேன்.

இந்தக் காலத்தில் என் தந்தையோடு இணைந்து சில கவியரங்கங்களிலும், வானொலி நிகழ்வுகளிலும் என் கவிதைகளை அரங்கேற்றினேன். எனக்கு ஓரளவு குரல் வளம் இருந்தமையால் வானொலியில் ஏனைய நிகழ்ச்சிகளிலும் குரல் கொடுக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இதுவே எனக்குள் நான் ஒரு அறிவிப்பாளராக வேண்டும் என்ற கனவைத் தோற்றுவித்தது எனலாம். ஆனாலும் அது கால மாற்றங்களால் கைகூடாமல் போனது மட்டுமன்றி, இப்பொழுது அது காலங் கடந்துவிட்ட கனவாகவும் ஆகிவிட்டது.

அதே வேளை வானொலியில் எனது சில சிறுகதைகளும் கூட ஒலிபரப்பப்பட்டன.
சிறுகதை பற்றி நான் பேச விழையும் போது என் ஞாபகத்தில் நின்று சிரிப்பவர்... நான் என்றும் மதிக்கும், நேசிக்கும் என் தமிழ் ஆசிரியர்... திரு. விஜயன் ஆசிரியர் அவர்களே. என் பாடசாலையில் அவர் எனக்கு தமிழாசிரியராகவும், பாடசாலைக்கு வெளியே பல வழிகளிலும் நல்ல வழிகாட்டியாகவும், ஆலோசகராகவும் இருந்து என்னை வழிநடத்தியவர். இவர் ஒரு எழுத்தாளாரும் கூட. ஒரு கண்டிப்பான ஆசானாக மட்டுமன்றி ஒரு தோழமையோடும் என்னை அணுகிய ஒரே ஆசிரியர் இவர் தான் என்றால் அதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை. என் தந்தைக்கு அடுத்ததாக என் எழுத்து துறையில் என்னை ஊக்குவித்தவர் விஜயன் ஆசிரியரே. குறிப்பாக என்னிடம் சிறுகதை எழுதும் ஆற்றலும் இருக்கிறது என என் தந்தைக்கு முன்பதாக இனங்கண்டவர் இவர்தான். ஏனென்றால், பாடசாலையில் அனைத்து தமிழ் பரீட்சையிலும் கட்டுரைக்குப் பதிலாக சிறுகதை தான் தேர்ந்தெடுத்து எழுதுவேன். இன்று எனக்கும் திரு.விஜயன் ஆசிரியருக்குமான தொடர்புகள் என் புலப்பெயர்வால் துண்டிக்கப்பட்டிருந்தாலும், எங்கோ ஒரு தொலைவில் இருந்து அவருடைய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறேன் என்றே நம்புகிறேன்.

என் வாழ்வில் நான் பெற்ற மிகப்பெரும் பாக்கியம் என் தந்தையோடும், என் ஆசிரியரோடும் ஒரு சித்திரைப் புத்தாண்டில், ஒரே மேடையில் கவியரங்கம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது தான். அதுவும் இந்த நிகழ்வு நான் படித்துக் கொண்டிருந்த பாடசாலை மைதானத்திலேயே நடந்தது.
இப்படித்தான் என் எழுத்துலகில் நான் தவழ ஆரம்பித்திருந்தேன்...

இன்னும் வரும் என் எண்ணச்சாரல்கள்.... அடுத்த பதிவில் சந்திப்போம்....Saturday, 16 March 2013

வாராதே வான் மகளே....
நீலவண்ண ஆடை பூண்டு
நிலவுப் பூச்சூடி
நின் அழகு காட்டும் வான்மகளே
நித்தமும் உன்னைப் பார்த்து நான்
ஏங்கிட வைப்பது தகுமோ.. உன்
பாதம் பற்றியழ என்
பக்கத்தில் நீ இல்லையடி..
பார்த்து விழி நீர் சொரிந்தேன்
பாதகம் செய்திடாதே...

போரென்று எம் வாழ்வு
போயாச்சு சீர் குலைஞ்சு.. வேறு
போக்கின்றி உனை நம்பி உன்
பொன்மடியில் கால் வைத்தோம்..
பொழிந்திடாதே காலம் தப்பி
பொறுத்திடுவாய்

கண்ணே மணியே என்றழைத்தால்
கடுகளவும் இரக்கமின்றி
திரும்பிப்பார்க்க மறுக்கின்றாய்...
வாவென்றால் வாராயாம்
வாராதே என இரந்தால்
வாசலில் வந்து நின்று
வந்தனம் சொல்லுகிறாய் ....
வேடிக்கை முழக்கம் போட்டு
வேண்டாத மின்னல் அழகு காட்டி
வெம்பியழ வைக்கின்றாய்

கால் வயிற்றுக் கஞ்சியுண்டு
கலப்பை பிடித்துழுது
வரப்பு வெட்டி நித்தமும்
வியர்வை சிந்தி நீர்பாய்ச்சும் போது
வாராயோ நீயென்று ஏங்கி நிற்பேன்...
வருவாய் போவாய் ...
வராமலும் போவாய்...

நிச்சயமற்ற உன் வரவால்
நெடுநாளாய் வாடிக் கிடப்பேன்..
கட்டியவள் தாலி அடகு வைத்து
களைகொல்லி உரங்களென்று
வகை வகையாய் செலவு செய்து
கடினமாய் உழைத்துப் பயிர் வளர்த்து
கதிர் முற்றி அசையக் கண்ட போது என்
கண்களில் மின்னும் கனவுகள்..

அரிவு வெட்டி விட்டால் வீட்டில்
அடுக்களையும் சிரிக்கும்- என் மனைவி
அஞ்சலையும் காதில் ஐந்து கல்லுத் தோட்டோடு
அடுக்கடி நினைவில் வந்து சிரிப்பாள்
கட்டம்போட்ட பட்டுப் பாவாடையோடு
கடைக்குட்டி காட்டி நிற்பாள் தன் அழகு
ஆசிரியரிடம் இனிமேலும்
திட்டு வாங்கத் தேவையில்லை- என
ஆசையாய் வாங்கிய சப்பாத்தை
அடிக்கடி பார்க்கும் மகனும் வருவான்
ஆனாலும் வான் மகளே.. என்
கனவுத் தீ அவிந்து கண்கள் கசியும்படி
கேலிப் புன்னகை மின்ன...
பெரு முழக்கம் காட்டி
பெண்ணே நீ பொழிவதேனோ..
பேதையாய் நெஞ்சு தவிக்குதடி.. என்
குஞ்சுகளுக்கிரை கொடுக்கும்
கடமையெனக்குள்ளதடி.. அவர்
கஞ்சியையும் பறித்திடாதே
கரம் கூப்பி வேண்டுகிறேன்...
வேண்டிய போது வந்துவிடு தாயே..என்
வேண்டாதவளாய் மட்டும் வந்திடாதே...

Sunday, 10 March 2013

ஈழத்து அன்னையர்....இன்று அன்னையர் தினம்...
உலகெங்கும் அன்னையர் மகிழும் நாள்..
உதரத்தில் சுமந்தவரை போற்றும் நாள்...
உத்தமத் தாய்களின் நாளிதனில்
உண்மை மகிழ்வைத் தொலைத்துவிட்டு
உலகுக்காய் தினம் சிரிக்கும்- தாய்
உள்ளங்களை நினைக்கின்றேன்....தாம்
ஈன்ற பிள்ளைகளின் நிலையறியா
ஈழத்து அன்னையரை நினைக்கின்றேன்..

வருவேன் என்று சென்றவன் வரவில்லை...
யார் கொண்டு சென்றாரோ?....
பருவ மங்கையாய் பார்த்துப் பார்த்து வளர்க்க
பாதகர்கள் சீரழித்தாரே என் பாசக்கிளியை......
கைது செய்து கொண்டு சென்றார்
காலங்கள் கடந்தும் விடுதலை இல்லை..
குருதி வெளியேற, தண்ணீர் கேட்டு
கதறித் துடித்து என் மடியில் மரித்தானே.....
கண்மூடித் திறக்கும் முன்னே என்
கண்முன்னே சிதறிச் செத்தானே ....
களத்திலே வீரனாகி மடிந்தான்.. அவன்
கனவுகள் மெய்ப்படுமா இல்லையா.. – இன்னும்
ஓடித் திரிந்தவன் அங்கமிழந்து
ஓய்ந்து போனானே...

இப்படி
ஒரு போதும் ஆறாத வடுக்களோடு
இன்னும் தன் பிள்ளைகளை நினைத்தேங்கும்
ஈழத்துத் தாய்மாரை நினைக்கின்றேன்....
இவர்களும் மகிழும் ஒரு அன்னையர் தினம்
இனியும் வருமா? எப்போது?

Saturday, 9 March 2013

பெண்ணே குரல் கொடு...

தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டுக்களைப் பதிவிட இங்கே கிளிக்குங்க

International Women's Day -2013

பாதுகாப்பும் சுதந்திரமும் இருக்குதென்றே
பேசாது மௌனியாய் இருக்கும்
பெண்ணே...
பாமரப் பெண்ணுக்கு அவள்
படுக்கையும் அடுக்களையும் சொல்லும்
அடக்குமுறை என்னவென்று....
படித்த பெண்ணுக்கு அவள்
பணியிடம் சொல்லும் அடக்குமுறை...

ஆகாரம் ஆக்கவும் உண்ணவுமன்றி
ஆகாது அவள் வாய் திறத்தல்..
மாமியார் என்றொரு அதிகாரம் கொண்டு
மருமகளை ஆட்டுவிக்கும் அடக்குமுறை
உயரதிகாரி முதல் அத்தனை பேரிடமும்
உதைபட்டுப் பந்தாகும் இழி வாழ்க்கை...
பெண்களே போர்க் கைதிகள் என்றால்
புணர்வதே தண்டனை என வழங்கும்
புல்லர்கள் வாழும் பொல்லாத உலகு..
திராவகம் வீசும் இழிசெயலும்
திரைமறைவில் தாக்குவதும்
தீச்செயல்கள் செய்வதுவும் உன்
தங்கைகளுகெதிராய் என்றுணர்வாய்

பெண்ணே..
காயம் உனக்கில்லை என்றாலும்
காமம் கொண்டலையும் நீசர்மேல்
காறி உமிழ்ந்து விடு
காப்பாற்று உன் சோதரியை..
கடமை உனக்கு அது..
பூவைக்குள் மென்மை மட்டுமல்ல
பூகம்பமும் பூக்கும் எனக்காட்டு
நெஞ்சில் நெருப்பேந்து
கொஞ்சம் விழியில் சினமேந்து
மஞ்சம் உந்தன் தனி வாழ்வை
மட்டுறுத்தும் நிலை மாற்று-விழி
ஈரம் தனைத் துடைத்து – உள
வீரம் தனைப் போர்த்து
பெண்ணாய் பூவுலகில் பிறந்தது உன்
பெருமை என்றே எண்ணம் கொள் -பிற
பெண்களுக்காகக் குரல் உயர்த்து
பெருமை பெறும் உன் பிறப்பு

சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய மகளீர் தின நல்வாழ்த்துக்கள்!!!

Thursday, 7 March 2013

காட்டுப்புறக் காதல்....


எங்கள் ஊர்ப் பேச்சுவழக்கில் ஒரு கவிதை... சேர்ந்தே இரசிக்கலாம் வாங்க... :))

படம்: யாரோ எப்பொழுதோ முகநூலில் பகிர்ந்தது....


அப்பு:
காட்டுப்புறத்தாலே காலையில மேயவிட்ட
மாட்டைக் கட்ட வந்தவளே.. பிள்ள...
பாட்டு பிறக்குதடி உன் புன்சிரிப்பு பார்க்கயிலே
மீட்டி விட்டாயடி என் வாலிப வயதினையே

ஆச்சி:
புலவுக்குப் போகாம இங்கெதுக்கு வந்தீய..
குலராசா காத்திருப்பான் காவலுக்கு போக
புலம்பாம போங்க புது மாப்பிள போல- நமக்கு
குலவும் வயசும் போச்சுதுங்க

அப்பு: 
காட்டுப் பூ பறித்து என் கைகளில தாடி பிள்ள
வீட்டுப்புறத்தாலே கொல்லையிலே செருகிடுவேன்
காட்டாறு வெள்ளமாய் என் காதல் ஓடுதடி
காட்டாதே வெட்கமடி கொஞ்ச நேரம் பேசிடலாம்

ஆச்சி:
கண்ட சினிமா பார்த்துப் பார்த்து- உங்க
கண்கெட்டுப் போச்சுதுங்க சும்மா
காதல் கீதல் எண்டு கதைக்காதீய...ஆரும்
கண்டால் சிரிக்கப் போறாக..


அப்பு:
சிங்காரி நீ தானாம் சின்ன வயசில் என்று
உங்கம்மா சொன்னாக மெய்யாத்தான் பிள்ள
தங்கம் உனக்கு எழுபதாய்ப் போயும் நீ
மங்காத வெள்ளியடி மரகதம் நீதானடி

ஆச்சி:
பகட்டினது போதுமுங்க புட்டவிக்க வேணுமுங்க                              
பசுமாட்டைப் பிடியுங்க பொழுதுபடப் போகுதுங்க
பார்த்திருந்த மருமகளும் மங்காத்தா ஆடுவாங்க
பாதையைப் பார்த்து வாங்க பால் கோப்பி போடுறேன்க..


புலவு= வயல்
பிள்ள = பிள்ளை (எந்த வயதிலும், தம்மை விட வயதில் இளைய பெண்களை   இப்படி அழைப்பர்)
பகட்டுதல் = பொய்யாகப் பேசுதல் (புழுகுதல்)/ பெருமை பேசுதல்

Tuesday, 5 March 2013

சண்டியனுக்கோர் சாபம்……குண்டரும் காடையரும்  கோலோச்சும்
சண்டியன் அரசுக்கோர் சாபம்
தொண்டை வரண்டு கதறிய போதிலும்
குண்டு மழை பொழிந்து அன்று
துண்டங்களான நம் தமிழ் மக்களின்
முண்டங்கள் மீது எழுந்து நின்றொரு
கண்டியக் கூத்து ஆடினையோ- எம்
மண்டையோட்டினைக் கொண்டு புவியிது
கண்டிடா மகுடம் தரித்தனையோ....

சுண்டைக் காய்களா நாமுனக்கு??
சண்டைக்கு அஞ்சி ஓடும்
சுண்டெலிகளாய் எண்ணினயோ??
அண்டை நாட்டின் அடிவருடிக்
கொண்டு வந்து வென்றவன் நீ-எனினும்
பண்டைத் தமிழ் பெரு வீரன் அன்றும்
மண்டியிடவில்லை உன் மடியில்- அவன்

கண்ட கடைக் குட்டியின் மார்பை
உண்ட உணவது செரிக்கும் முன் –உன்
குண்டுகள் துளைத்ததால் சாபம் பெற்றனை-இனி
வண்டமிழ் இனம் வாழும் வீரத்
தண்டமிழ் ஓர்மமாய் எழுந்து- வான்
மண்டலம் வரை ஓங்கும் - நீயோ

துண்டைத் துணியைத் தேடி அலைந்திட
முண்டாசுக் காரரும் கைவிட்டுப் போக
உண்ட உணவும்  பிரைக்கேற - உன்
சுண்டு விரல் கூட பீதியில் நடுங்கும்
திண்டாட்டம் ஆரம்பமாகும் - அதைக்
கொண்டாடக் காத்துள்ளோம்
சண்டித்தனம் காட்டும் அரசே… நீ சாபம் பெற்றிட்டாய்

Saturday, 2 March 2013

என் ஆத்மாவின் கதறலாக இந்தப் பாடல்....


இவை பாடல்வரிகள் தான்... ஆனால் இன்றைய நாட்களில் எனக்குள் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டிருக்கும் என் ஆத்மாவின் குரலாக இருக்கின்றது. என் உணர்வுகளின் சேமிப்பிடமான இந்த வலைப்பூ இதையும் சுமக்கட்டுமே எனப் பதிவு செய்கிறேன்....

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேதம் கேட்டேன்
ரகசியம் இல்லா உள்ளம் கேட்டேன்

உயிரைக் கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக்  கண்ணீர் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தை கேட்டேன்
வயதுக்கு சரியான வாழ்க்கை கேட்டேன்

இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத போகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்

புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
பூவின் மடியில் படுக்கை கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்

நிலவில் நனையும் சோலை கேட்டேன்
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருளப் புல்வெளிகேட்டேன்
தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப் பரிக்க விண் மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்

பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக் கெல்லாம் தாய் மொழி கேட்டேன்

உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும் போதே சொர்க்கம் கேட்டேன்

எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
எரியும் தீயாய்க் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
 
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந் தலைமேல் மழையைக் கேட்டேன்
உள்ளங் காலில் நதியைக் கேட்டேன்

பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவைக் கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்
நடுங்க விடாத செல்வம் கேட்டேன்

மலரில் ஒருநாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்க்க் கேட்டேன்
நிலவின் நதியில் குளிக்க்க் கேட்டேன்
நினைவில் சந்தணம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல்போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்

ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜ ராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக்  கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாட்சி கிளியைக் கேட்டேன்

சொந்த உழைப்பில் சோற்றைக் கேட்டேன்
தொட்டுக் கொள்ளப் பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற தூய்மை கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்
புயலைப் போனற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் தோள்கள் கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்
தொலைந்து விடாத பொறுமை கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேதம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்

காலம் கடக்கும் கால்கள் கேட்டேன்
சின்னச் சின்னத் தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்

தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்
சாகும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய் மடி கேட்டேன்
கூட்டுக் கிளி போல் வாழக் கேட்டேன்
குறைந்த பட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாம் என்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்

படம்: அமர்க்களம்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சுஜாதா
வரிகள்: வைரமுத்து
இசை: பரத்வாஜ்

படங்கள்: கூகிள் தேடல்