Thursday, 15 December 2011

அவர் கனவுகளைச் சுமந்து …..


தாயகக் கனவை நெஞ்சிலே தாங்கி
தம்மையே ஈந்த எம் தியாகதீபங்களுக்கும்…
தாயகப் போரிலே கொல்லப்பட்ட
பல்லாயிரம் பொதுமக்களுக்கும் என்
தலை சாய்த்து அஞ்சலிகள் செய்து…

தாயக வீரரை நினைவுகூர இங்கு
தாகத்தோடு வந்திருக்கும் -எம்
தமிழ் உறவுகட்கு என் மாலை வந்தனங்கள்
இந்த வேளையிலே எம் தாயக மண்ணிலே
இன்றய நாளிலே.. தம்
வீரக் குழந்தைகட்கு ஒரு
விளக்கேனும் ஏற்ற முடியாது
வெம்பி மனம் வெதும்பிக் கொண்டிருக்கும் எம்
பாசத் தமிழ் உறவுகளை ஒரு கணம் நினைவிலிருத்தி…
தொடர்கிறேன்…

அவர் கனவுகளைச் சுமந்து…..
யாரவர்கள்…
விண்ணில் புலிக் கொடியேந்தி நின்றவர்
மண்ணின் பெருமையைப் பேணி நின்றவர்
பெண்களும் புயலெனப் பொங்கி எழுந்தவர்
திண்ணிய தோள்களில் துப்பாக்கி சுமந்தவர்…
அவர் கனவுகளைச் சுமந்து….

விடுதலைத் தாகம் சுமந்து
விதையாகிப் போனவர்;..
தீரமும் தியாகமும் கொண்டு
தரணியில் தலை நிமிர்ந்து நின்றவர்..
குன்றா வீரமும் கொதிக்கும் மானமும்- இவர்
குருதி அணுக்களுள் ஊறிக்கிடந்ததே…
அவர் கனவுகளைச் சுமந்து…

எத்தனை கனவுகள்…எத்தனை தாகம்…
மக்களின் வாழ்வு.. மண்ணில் வீசும்
சுதந்திரக் காற்று…
தமிழரின் அரசு..தரணியே போற்றும்
தமிழ் மொழி பெருமை… என..
எத்தனை கனவுகள்….
புத்தனின் பேரரால் இரத்தச் சகதிக்குள்
புதையுண்டு போயினவோ…இல்லை இல்லை அவை
விதையாகிப் போயின…..
மீண்டும் துளிர;த்து அவை விழுதெறியும்…அது வரை
அவர் கனவுகளைச் சுமந்து..

இத்தனை கனவுகள் சுமந்தும் இவர் அமைதியானது எப்படி?
வேகமும் விவேகமும் தீரமும் தியாகமும் கொண்டு -நம்
வேங்கைகள் நடத்திய வேள்வி தணிந்து போனது எப்படி?

விதைத்த விடுதலை விதைகளிடையே சில
வீணாண நெருஞ்சிகள் முளைத்ததனால்…
கூடலாய் நின்ற விடுதலை விருட்சங்கள் நடுவே சில
கோடரிக் காம்புகள் முளைத்ததனால்…

காட்டிக் கொடுப்பினாலும் கடமை மறந்ததாலும்-சுடு
காடாய் மாற்றினாரே நம் தாயக மண்ணை…

எத்தனை தூரம் கண்ணீர் விட்டோம்…
பால்கேட்டு அழுத குழந்தைக்காக
பால் மா வாங்கப் போனவர்கள் தசைப்
பிண்டங்களாய் சிதறினாரே…கண்ணீர் விட்டோம்…

இருண்ட பதுங்கு குழிக்குள்ளே
பல நாளாய் இருந்த என்பிள்ளை -அம்மா
முற்றத்தில் நின்று எப்போ நான் விளையாடுவேன்
என்று கேட்ட என்பிள்ளையின் முகத்தின்
ஏக்கம் கண்டு கண்ணீர் விட்டேன்..
தமிழர்க்கேதையா முற்றம்…

நிறை மாதக் கர்ப்பிணியான என் தங்கை-வெறும்
அரிசிக் கஞ்சியை குடித்தும் குடிக்காமலும்
சுருண்டு கிடந்த போது என்
நெஞ்சு வெடிக்கக் கண்ணீர் விட்டேன்

அக்கா… சாப்பிட்டு நாளாச்சு
அம்மா வீட்டில.. நடக்க முடியல..
அரிசிக் கஞ்சி குடுக்கிற இடத்தில
அடிக்கிறான் செல் அதனால்
அது கூட கிடைக்கவில்லை..
அhpசி இல்லாட்டியும்.. கொஞ்சம்
சீனி தாங்கோ..அம்மாக்கு தேத்தண்ணி குடுக்க எண்டு
இரந்து நீட்டிய பிஞ்சுக் கரங்களின்
வரண்டுபோன விழிகள் பார்த்துக்
கண்ணீர் விட்டேன்...

பாதுகாப்பென்றெண்ணிப் பதுங்கு குழியிலிருந்தவர்கள்-அப்படியே
புதையுண்டு போனாரே.. அப்போது கண்ணீர் விட்டோம்..
கயவரின் குண்டுகளால் கர்ப்பிணிகள்
கருவிலிருந்த சிசுவும் கூட வயிறுபிளந்து
தரையைப் பார்த்ததே.. அப்போது கண்ணீர் விட்டோம்
இன்னும் எத்தனையோ எத்தனையோ..
நாய்களும் மாடுகளும் வீதியில்
நாறிக்கிடப்பதைக் கண்டிருப்பீர்..நாமோ
நம் உறவுகளின் சிதைந்த உடல்களைக்
கண்ணீரோடு கடந்து வந்தோமையா...

ஏன்… ஏன் இவை நடந்தன?...
துரோகக் காற்று எம் மண்ணில்
மோதியதால் நடந்தன..
அழுதோம் புரண்டோம் அலறினோம்…

அங்கே என்ன உண்டெமக்கு...
சுவாசிப்பது சுதந்திரக் காற்று அல்ல
வசிப்பது நிம்மதியான சூழல் அல்ல
காவிய நாயகரின் கல்லறைகள் இல்லை-எம்
வீரர்கள் வாழ்ந்ததாய் சுவடே இல்லை
கட்டிக் காத்து வந்த கலாச்சாரத்தின் மேல்
கட்டவிழ்த்து விடப்பட்டசீரழிவுகள்…
முப்பது வருடங்கள் பாடுபட்டு சேர்த்த பெருமை
மூன்றே வருடங்களில் முற்றிலும் மாறியதோ?...

என் இனிய தமிழ் உறவுகளே -உம்மிடம்
தாயக மக்களின் சார்பில்.. இந்தக்
கல்லறை வீரர் மேல் ஆணையிட்டுக் கேட்கின்றேன்

வீரம் உமக்கில்லையென்றால் விலகி நில்லும்
தன் மானம் இல்லையென்றால்
தனியே ஒதுங்கி நில்லும்…துரோகம் செய்யாதீர்
தாமாய் முன் வந்து உழைப்பவர்க்குத்
தடையாய் நில்லாதீர்..
வீணாய் நேரம் செலவிட்டு விமர்சனம் செய்யாதீர்.
புறம் படைத்த வீரரின் பெயர் சொல்லி
பணம் சுருட்ட முயலாதீர்.. தூய
பற்றுள்ள நெஞ்சங்களைப் பகடைக் காயாக்காதீர்..

பூவோடு சேர்ந்து நாரும் கமழ்வது போல்-எம்
புண்ணியவீரர;கள் தமையீந்தபோது- தமிழன் என
பெயர் கொண்டதாலே சிலர்
பெருமை பெற்றனர் இங்கே..- இன்று
நாரோடு சேர்ந்ததாலே பூவும் நாறுதையா..
நமக்குள்ளே பிளவு பண்ணி எம்
நாயகரின் தியாகத்தை தூசிக்கிறார்கள்..
இதற்கும் பெயர் துரோகம் தான்.. எம்
இதயத்திதனுள் தூங்கும் கல்லறைக் வீரரின்
கனவைக் கலைக்கின்ற துரோகம்…

தேசப்பற்றோடும் தாகத்தோடும் காத்திருக்கும் எம்
தமிழ் நெஞ்சங்களிடம் தனிப்பட்ட முறையில் நான்
தயவாய்க் கேட்பது..

ஆயுதப் போர் எமக்கு வேண்டாம்…
ஆயுதப் போர் எமக்கு வேண்டாம்…
அநாதைகளாய் எம் குழந்தைகள் அலைய வேண்டாம்
அவர் கனவுகளைச் சுமந்து
அறிவுப் போர் தொடுப்போம்…

உன்னத வீரரின் கனவுகளை நெஞ்சில் சுமந்து
உலக அரங்கிலே நிமிர்ந்து நில்லுங்கள்…
உங்கள் குழந்தைகட்கும் அதையே உணவோடு ஊட்டுங்கள்
தமிழ் மானமும் வீரமும் எப்போதும் இருக்கட்டும்
தமிழரின் பொருளாதாரம் தரணியில் உயரட்டும்
நாடு மட்டும் தான் நமக்கில்லை..
நல்ல அறிவு வளமுண்டு
துப்பாக்கிசெய்யும் புரட்சியை விட- நீ
தூக்கும் பேனாவும் புத்தகமும்
பல புரட்சி செய்யும்.. எனவே
அவர் கனவுகளைச் சுமந்து…
அறிவுப் போர் தொடுப்போம்…

(27/11/2011 அன்று தனிப்பட்ட இடத்தில் மாவீரர் நினைவு நாளில் நான் வாசித்த கவிதை)

Thursday, 25 August 2011

பீற்றற் பெருமைபெருமூச்சொன்று பெரிதாகப் புறப்பட
புருவங்கள் சுழித்துச் சுருங்க..
இரு கண்கள் சோர்ந்து மூட..
இருக்கையிலே சாய்ந்து கொண்டேன்

சின்ன நகைப்பொலி நெஞ்சை வருட
பின்னே திரும்பினேன் அங்கே அவள்....
அவ்வப்போது எனக்குள் வந்து
சீண்டிப் பார்ப்பவள்....
கடுமையாய் கேள்வி கேட்டு
கடுப்பேற்றுபவள்...
மெல்லத் தொடங்கினாள்....
என்ன வேலை கனமோ..?
நிமிர்ந்து உட்கார்ந்து
தொண்டையைச் செருமினேன்
எனக்கென்ன குறை தோழி...?
அவசர உலகோடு நான்
அனுதினமும் போட்டியிடுகிறேன்
காலையை மாலையாக்கவும்
மாலையைக் காலையாக்கவும்
கற்றுக் கொண்டேன் தெரியுமா?
நித்திரா தேவியுடன் நான்
நித்தமும் போர் தொடுக்கிறேன் -மிகவும்
பொறுப்புள்ள தொழிலாளி நான்
சவரிலே குளிப்பு, சுவரிலே படம்
மெத்தையில் தூக்கம்இ மேசையில் சாப்பாடு
எத்தனை ஆடம்பரம் என் வாழ்வில்..
பித்தனைப்போல் பிதற்றியபடி
அவளைப் பார்த்தேன்... அதிர்ந்திட்டேன்
அத்தனை கேலி அவள் பார்வையில்...
இப்போது அவள் அந்த அர்த்தமுள்ள
நாட்டார் பாடலின் வரிகளை
மீட்டிவிட்டு மறைந்து போனாள்...

'இறகெல்லாம் பிடுங்கையிலே
இறகெல்லாம் பிடுங்கையிலே
என்னண்டு சொல்லிச்சாம் கோழிக் குஞ்சு.....
நான் 'ஹெயார் கட்”எடுக்கிறன் 'ஹெயார் கட்” எடுக்கிறன்
அப்பிடீன்னு சொல்லிச்சாம் கோழிக் குஞ்சு

எண்ணெயில பொரிக்கையில
எண்ணெயில பொரிக்கையில
என்னண்டு சொல்லிச்சாம் கோழிக் குஞ்சு.....
நான் 'ஒயில் பாத்” எடுக்கிறன் 'ஒயில் பாத்” எடுக்கிறன்
அப்பிடீன்னு சொல்லிச்சாம் கோழிக் குஞ்சு”

மூச்சடக்கி மௌனமாகிப்
போர்வைக்குள் புகுந்து கொண்டேன்

Friday, 19 August 2011

உத்தர வாதமில்லா வாழ்க்கை...


எத்தனை துன்பங்கள் நாம் கண்டோம்
அத்தனையும் போதாதென்று இன்று
சித்தம் கலங்கிய சிலாரின் மர்ம வேட்டை
செத்துப் பிழைத்த எங்களுக்கு
பித்தர்கள் புதுவிதமாய்
வித்தகம் காட்டுகிறார்... கிறீஸ் மனிதராம்
புத்தரின் புத்திரர் எப்போதும் என்ன
ரத்தப் பிரியரோ...
இத்தரையில் வாழும் வரை தமிழர்க்கு
உத்தர வாதமில்லா வாழ்க்கை...இன்னும்
எத்தனை காலம் தான் இது தொடரும்...

Wednesday, 10 August 2011

அய்யோடா....

என்ன கொடுமையடா நம்ம பிழைப்பு
அன்னை மண்ணில்தான்
குண்டு வெடிப்பு.. கந்தகப்புகை..
பஸ் நிறுத்தம்... போலீஸ் சுற்றி வளைப்பு...


உயிரைக் கையில் கொண்டு
ஓடி ஒழிந்து வந்து
அகதி நிலையினிலே அந்நிய நாடு வந்தால்...
இங்கேயும் கலவரமா....
பாவி போன இடம் எல்லாம்
பள்ளமும் திட்டியும் தானா...
மீண்டும் ஒரு முறை
கலவரம் உணர வைத்தார்
கறுப்பினச் சகோதரர்கள்...
அய்யோடா...

Wednesday, 3 August 2011

இந்தக் கடுகுதான் இத்தனை காரமா?....

அழகிய மொழிநடை..... அத்தனையும் தனிநடை
காரமான விடயங்கள்... காத்திரமான கருத்துக்கள்
அன்புடன் தம்பி..... இப்படித் தொடங்கியது தான் அந்த உறவு
எத்தனை பெரிய விடயத்தையும் இத்தனை
இலகுவாய் இனிக்கத் தருகிறானே...
சிற்பத்தை இரசித்த எனக்கு அந்த சிற்பியைக் காண ஆசை
எப்படியிருப்பான்... எழுத்தின் படியே கொஞ்சம்
எடுப்பாக.. கடுப்பாக... எப்படியோ.. அவனைக் காணவேண்டும்
அந்த எழுத்துக்காக... அதன் வலிமைக்காக....
மீண்டும் எழுதினேன்... அன்புடன் தம்பி...
ஊருக்கு வருகிறேன்... உன்னைக் காணலாமா....
பதிலில்லை... பரிதவித்துப் போனேன்...
பதிலைக் காணோமே... பயந்தாங்கொள்ளியோ...
பலவாறு எண்ணம் ஓட கொஞ்சம் கவலை...
எதிர்பாராத ஒரு நாளில் என் தொலைபேசியில் அவன்...
எங்கே நிற்கிறீர்கள்... இதோ வந்து கொண்டிருக்கிறேன்..
அடுத்த சில மணிகளிலே... வீட்டு வாசலிலே...மோட்டார் சைக்கிளிலே...
அடேயப்பா... இந்தக் கடுகா... அத்தனை காரம்.....
கடுகு உருவத்தில் மட்டும் தான்....
இந்தக் குழந்தைச் சிhpப்பு அதன் எழுத்துகளில்
இம்மியளவுகூட இல்லையே...
ஆனால் அந்தக் காத்திரமான கருத்துக்கள்
அவன் பேச்சிலும் கூட....
யாழ்மண்ணில் ஒளிர்கின்ற பிரமாண்ட மின்குமிழ்...
நிச்சயமாய் அவன் எதிர்காலம் நின்று ஜொலிக்கும்...
சமூகத்தை நேசிக்கும் அவன் சரித்திரத்தில் நிமிர்வான்...
தனக்குத் தொpந்ததை எல்லோருக்கும் கற்றுக் கொடுக்கும்
தாராள மனம் படைத்தவன்.....
அட.... யாரது என்று யோசிக்கிறீர்களா...
வேற யாரு... நம்ம சுதா... மதிசுதா தானுங்கோ....
அவன் பெயருக்கு முன்னால் அந்த மதி...
அவனுக்குப் பொருத்தமானதே...
வாழ்க நீ.... வளர்க உன் திறன்...
நீள்க உன் சேவை.... நிறைவோடு வாழ்க...
(யாராவது பொறாமைப்படாதீங்க.... எனக்கு காய்ச்சல் வந்திடும்!!!)

Monday, 13 June 2011

ஊருக்குப் போறேன்...

ஊருக்குப் போறேன்...
ஊருக்குப் போறேன்..
விட்டு வந்த உயிரோடு மீண்டும்
ஒட்டி உறவாட
தொட்டிலிலே விட்டவளைக்
கட்டி அணைத்தாட
பார்த்து விழி பு+த்திருக்கும் பிஞ்சுகளில்
பாசம் பொழிவதற்கு... இன்னும்...
எத்தனையோ... எத்தனையோ....
எண்ணிலடங்கா ஏக்கங்கள்..
எப்படி இருக்கும் எங்களூர்...
இருபுறமும் அலைந்தாடும் உப்பு நீரிடையே
இப்போது திறந்த புதிய பாலம்...
நாகரீகம் புகுந்தும் புகாமலுமான
நடுத்தரப் பட்டினம்....
சிறிய ஓலைக் குடிசை..
சூழவுள்ள உறவுகள்....
கிணற்றடியில் நின்ற நிழல் மரவள்ளி....
வீட்டைச் சுற்றி நிற்கும் மாதுளை..
பரந்து விரிந்த மணற்றரை....
நான் உட்கார்ந்து மகிழும் திண்ணை....
நீண்ட தொடுகடல்....
ஆனாலும்... இன்னமும் அந்த..
சுடு குழல்களின் முன்னால்
சுதந்திரத்துக்காக கரமேந்தியபடி...

Friday, 20 May 2011

வீழ்ச்சியும் மகிழ்ச்சியும்!!!

கனவுகள் வாட
விழி மழை பொழிய
சந்தோச மேகங்கள் கறுத்துப் போக
மின்னலும் இடியுமாய்
நெஞ்சு தவிக்க....
ஓ... சில மயில்களின் 
சந்தோச நடனம்
சூரியன் விழுந்தால் தான்
நிலவின் மகிழ்ச்சி...


Monday, 2 May 2011

குருதி தோய்ந்த நிலவு

தோழி... 
நினைவுச் சுழலுக்குள் அவ்வப்போது
நுழைந்து கொள்கிறாய்....
நிர்மூலமாக்கப்பட்ட என் கனவுகளில்
நிலவாக இடையிடையே....
கன்னக் குழி விழக் கதைகள் சொன்னதும்- உன்
மென்னகைக்குள் என் இரசனைச் சிறகுகள்
மெல்லப் புதைந்ததும்....
சின்னாபின்னமாய்ப் போன நினைவுகள்....
சின்ன இதயத்தை சிறுகச் சிறுகக் கொல்லும்
கிராதகர்கள்... எப்படி முடிந்தது உன்
சிவந்த மேனியைக் குதறித் தள்ள...
சட்டித் தொப்பிக்குள் சாக்கடையின் உறைவிடம்
தட்டிக் கேட்க நாதியின்றி நாணிக் குறுகி
தலை குனிகிறேன்... தணலாக
தகிக்கிறது குருதி தோய்ந்த நிலவு...Friday, 18 February 2011

புத்த‌ம் புதிதாய் மீண்டும் நீ எழுவாய்

வாழ்வில் மகிழ்ச்சி பலமுறை வந்திடும்
தாழ்ந்து போகையில் வாழ்க்கையே வெறுத்திடும்
தாழ்விலும் மனிதா சிந்தனை செய்திடு‍ _நீ
தாண்டி வந்திட்ட மகிழ்ச்சியின் கணங்களை

சின்ன‌க் குழந்தையாய் தாயின் முலையிலே
சுரந்த‌ பாலினைக் குடித்த‌து ம‌கிழ்ச்சி
க‌ன்ன‌ம் ந‌னைந்திட‌ பெற்ற‌வ‌ள் நித்த‌மும்
தந்த‌ முத்த‌ங்க‌ள் தித்திக்கும் ம‌கிழ்ச்சி

ப‌ள்ளிப் ப‌ருவ‌த்தில் ப‌ற‌ந்து திரிந்த‌தும்
புள்ளி மான்க‌ளாய் பாய்ந்து திரிந்த‌தும்
ப‌ண்ணிய‌ குறும்புக‌ள் ஆயிர‌ம் ஆயிர‌ம்
எண்ணிப் பார‌டா எத்த‌னை ம‌கிழ்ச்சி

ப‌ருவ‌ வ‌ய‌திலே ம‌ங்கையாய் க‌ளையாய்
பாடித் திரிந்த‌தை ஆடி ம‌கிழ்ந்த‌தை
ந‌ட்புக்க‌ள் சூழ‌ வாழ்ந்த‌தை எண்ணு
நிச்ச‌ய‌ம் அதுவே ம‌கிழ்ச்சி என்பாய்

க‌ன்னிய‌ர் த‌மைக் க‌ண்ட‌தும் அவ‌ர்
க‌டைக்க‌ண் பார்வை ப‌ட்ட‌து ம‌கிழ்ச்சி
சின்ன‌தாய் புன்ன‌கை சிந்தினால் போதும்
ஐயகோ ஐய‌கோ ம‌கிழ்ச்சி மேல் ம‌கிழ்ச்சி

வ‌ண்ண‌க் க‌ன‌வுக‌ள் க‌ண்டு திழைத்த‌தும்
வாழ்க்கையில் இல‌ட்சிய‌ம் கொண்டு ந‌ட‌ந்த‌தும்
திண்ணிய‌ முடிவுக‌ள் ந‌ட‌த்தி முடித்த‌தும்
எண்ணிப்பார் ம‌கிழ்ச்சியில் எப்ப‌டி மூழ்கினாய்

எத்த‌னை ப‌சுமை நினைவுக‌ள் நெஞ்சில்
இத்த‌னை போதும் உன்னை நீ மீட்க‌
எத்த‌னை இட‌ர்க‌ள் வந்த‌ போதிலும்
புத்த‌ம் புதிதாய் மீண்டும் நீ எழுவாய்


Thursday, 10 February 2011

எப்போது முடிவுறும்

பச்சரிசிப் பல்லிரண்டு எட்டிப் பார்க்கயிலே‍ மகளே
பக்கமிருந்து அதை பார்த்து மகிழ‌வில்லை
எட்டி அடியெடுத்து வைக்கயிலே மகளே உன்
குட்டிக் க்ரம் பிடித்து தாங்கவில்லை
சுட்டித்தனம் பார்க்கத் தவிக்குதடி மனது உன்
பட்டுக்கன்னமதில் மெல்ல முத்தமிட‌த் துடிக்குதடி

ஓடிவந்து மடி வீழ்ந்து ஏறி மிதித்து உதைந்து
என் பெரிய மகள் விளையாட‌
அணைத்து முத்தமிட்டு என் ஆசை தீர்ப்பேனே
என் வயிறு தலையணை போல்
எப்போதும் இருக்குதெண்டு செல்லமாய் குத்தி
மெல்ல வயிற்றில் தலை சாய்த்து
இடுப்பை வளைத்து அணைப்பான் என் மகன்

வாசலையே பார்த்திருந்து வேலைவிட்டு வந்தவுடன்
வேணுமென்றே கோபம் கொண்டு
விளையாட்டாய் சண்டை போட்டு
காதலுடன் ஊடலுமாய்
கணவனோடு வாழ்ந்தேனே

எப்படிப் பிரிந்து வந்தேன்.. ஏனிந்த பிரிவுத்துயர்
எப்போது முடிவுறும் என் ஏக்கமும் வேதனையும்
இதற்கு மேல் முடியாது இறைவா என்
இதயத்திற்கு சக்தி கொடு...

Saturday, 22 January 2011

இயந்திர இதயங்கள்

சுந்தர பூமியென்று 
சுற்றிப் பார்க்கையிலே அதன்
அந்தரங்கம் கண்டு
அந்தரித்துப் போனேன்
விந்தையான மனிதர்கள்
சிந்தையெங்கும்  சின்னத்தனம்
நிந்தித்து மற்றவரை
நித்தமும் மகிழ்பவர்கள்
முதுகெலும்பு உள்ளதனை
முற்றிலும் மறந்தவர்கள்
பசுத்தோலைப் போர்த்திக் கொண்ட‌
பயங்கரமான நரிகள்
Add caption
அந்தரிக்கும் வேளையிலும்
அடைக்கலம் கொடுக்க‌
அகம் இல்லா உறவுகள்....
இன்னும் எத்தனையோ....
மூச்சு இரைக்குக்குதடா இவர்
மதியின்மை எண்ணுகையில்....
இதை சுவர்க்க பூமியென எண்ணி 
இன்னமும் எம் மண்ணில் காத்திருக்கும்
சகோதரனே சகோதரியே ...
அங்கு இருக்கும் வரையில் தான்
இங்கிருக்கும் உந்தன்
அண்ணனுக்கும் மாமனுக்கும் சித்தப்பனுக்கும்
அன்பான உறவு நீ...
அதையே பெரிதாக நம்பி
இங்கு வந்து விட்டால்....
நடுத்தெருவில் நின்றாலும் உன்னை
ஏனென்று கேட்க யாரும் வரார் 
ஏனென்றால்... அவர்கள் வாழ்க்கை மட்டுமல்ல‌
அவர்களும் கூட‌ இங்கே
இயந்திரங்கள் தான்...

Monday, 17 January 2011

பொங்கும் உணர்வு

தை திருநாள் வருமென்று காத்திருந்த போது‍_நெஞ்சை
தைக்கின்ற சேதி... நம் மண்ணில் அங்கே
பொங்கிப் பெருகுதையா மழை வெள்ளம்
பொசுங்கிப் போனதையா என் உள்ளம்

Christian aid agencies respond to global flood crises
இன்னும் ஏனோ துன்பமையா..
இனியும் நீழுமோ தொடர் கதையாய்
இறைவன் என்னினம் மீது
இரக்கம் பேண மறந்தானோ

ஆழிப்பேரலை அவலங்கள்
அதன் பின் வன்னித் துயரங்கள்
அடுத்து வெள்ளம் தொடர்கதையோ
அடுக்காய் துன்பம் நம்மவர்க்கோ

விடுப்பேன் இயற்கையே சவால் உனக்கு
விழுந்த போதெல்லாம் அழுதோம் தான்_ஆனால்
எழாமல் போனதில்லை.. உறைந்து போனதில்லை
எழுவோம் இனியும் புதுப் பொலிவாய்

பொங்கி எழுவது எம் உணர்வே
மங்கிப் போயிடும் பய உணர்வு
எங்கள் இனத்தை எது வந்து தாக்கிடினும்_மறு
திங்களில் எழுவோம் மறுபடி ஜொலிப்போம்