Tuesday 8 October 2013

அவள் அபடித்தான்.. தொடர் 3

தொடர்-3

அடுத்து வந்த எறிகணை விழுந்து வெடித்த போது, அருகில் தான் விழுந்துவிட்டது என்று உள்ளுணர்வு உந்த பதைப்போடு நிமிர்ந்து பார்த்தவன் அதிர்ந்தான்....

புதியவன் படுத்திருந்த இடத்தில் புதிதாக ஒரு குழி மட்டும் தோன்றியிருந்தது. அருகிலிருந்த வீட்டுச் சுவரில் திட்டுத் துட்டாக தசைத்துண்டங்கள் ஒட்டிக் கிடந்தன. உண்மைதானா ... இது உண்மைதானா... என நம்பிக்கையின்றிக் கேட்டுக் கொண்டிருந்த அவனது அறிவுக்கு அடித்துச் சொல்வது போல.... அவன் தன் பக்கவாட்டில் இருந்த கையை அசைத்த போது கையில் அது தட்டுப் பட்டது....

“மச்சான்.... இஞ்ச பார்த்தியா.. அண்ணை பரிசு தந்த ‘மெமரிவோச்’... சாகும் வரைக்கும் இது இனி என்ர கையில தான்.....”

என்று புதியவன் அன்றொருநாள் முகம் நிறைய மகிழ்ச்சியோடு காட்டிய, தமிழீழத் தேசியத்தலைவரிடம் பரிசாகப் பெற்றுக் கொண்ட அந்த அழகிய கறுப்புக் கைக்கடிகாரம்... அவன் சொன்னது போலவே அவன் கையை விட்டுக் கழராமல்...மணிகட்டோடு அவன் கையருகில் புழுதுபடிந்து கிடந்தது...  என்ன நடந்துவிட்டது என்பதை ஊகித்துக் கொண்ட சுகிர்தனின் நினைவுகள், அதிர்ச்சியில் அலறக் கூட நேரமின்றி மெல்ல மங்கிச் சரிந்தன. எறிகணையின் சத்தம் ஓய்ந்திருந்தாலும் சுற்றிலும் கேட்டுக் கொண்டிருந்த மக்களின் அலறல் சத்தம் அங்கே இன்னும் பல உயிர்கள் காவுகொள்ளப் பட்டதைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது.

அவனது உயிர்த்தோழனின் தசைத் துண்டங்களைக்கூட பொறுக்கியெடுக்க முடியவில்லை. சுகிர்தனின் காலில் பலமான காயம் ஏற்பட்டிருந்தது. அன்றுதான் அவனுக்கும் புதியவனுக்குமான இறுதி உறவு.

************

இதன்பின்னர் எல்லாமே விரும்பத்தகாதவைதான் நடந்தேறி முடிந்தன. விடுதலைப்போர் ஓய்ந்து போக, ஓநாய்களின் வெறித்தனம் வெற்றி கொண்டது. முற்றுகையில் சரணடைந்த சுகிர்தன் இராணுவத்தால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டான். அவனது காலின் காயம் மாறியதும் சில மாதங்கள் சிறைவாசம்... அவனது வேதனைகளையும் துன்பங்களையும் அதிகப்படுத்தும் விசாரணைகளையும் சித்திரவதைகளையும் எதிர்கொண்டபோது புதியவன் கொடுத்து வைத்தவனோ... என எண்ணத் தோன்றியது. அதன் பின்னர் சில மாதங்கள் புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டான் சுகிர்தன். அவனது கால் காயம் மாறியிருந்தாலும் மாறாத வடுவாகத் தன் உயிர் நண்பனின் இழப்பு இருந்துகொண்டே தான் இருந்தது. இப்படியே இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட விடுதலை செய்யப்பட்டான்.

விடுதலையா? இது தான் இனி வாழ்க்கையா? எப்படி வாழப்போகிறேன்? என அவனது உள்ளம் ஆயிரம் கேள்விகளைக் கேட்டுத் துளைத்தெடுத்தது. எல்லாம் வெறுமையாகவே அவனுக்குத் தோன்றியது. அந்த நிலையில் தான் தன் நண்பன் புதியவனின் தாயாரையாவது ஒருமுறை பார்க்கவேண்டுமென்று விரும்பினான்.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை... புதியவனின் தாயைப் பார்க்க புதுக்குடியிருப்புக்கு புறப்பட்டான். ஆங்காங்கே புதிதாக அமைக்கபட்ட கொட்டகைகளுக்குள் மக்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்... முனிருந்த புதியவனின் வீட்டை அடையாள்மே காணமுடியவில்லை... எல்லோரையும் போலவே புதியவனின் தாய் கனகமும் தனது வாழ்க்கையை முதலில் இருந்து ஆரம்பித்திருந்தாள்...



புதியவனின் வீட்டு வாசலில் காலை வைத்ததுமே அவனுக்குள் ஒருவித வேதனை நெஞ்சுக்குழியிலிருந்து தொண்டையை வந்து அடைத்துக் கொண்டது. எதேச்சையாக வாசல் பக்கம் திரும்பிய புதியவனின் தாய் கனகத்துக்கு சுகிர்தனைக் கண்டதும், ஒருகணம் மெய் சிலிர்த்தது.. கண்கள் விரிந்தன. பின்னர் அது தன் மகனின் நண்பன் தான் எனக்கண்டதும் ஓடிவந்து கட்டியணைத்து ஓலமிட்டு அழுதாள்.

“அப்பு... என்ர தங்கத்தைச்சு தொலைச்சு போட்டியோடா..... என்ர பூவுத்தங்கம் எங்கயடா.... உன்னோடை தானே சுத்திச் சுத்தி வந்தான்... ஹையோ... பெத்த வயிறு எரியுதேடா.... என்ர பூவு எங்கயடா.... “

என்று சொல்லிச் சொல்லி அழுத அந்தப் பெற்றவளின் வேதனைக் குரல் அருகில் இருந்தவர்களையும் ஒன்றுகூட்டியது.

“இந்தப் பெடியன் தானே பூவரசனோட ஒரே மோட்டசைக்கிள்ள வாறது…” என்று அருகில் நின்ற மூதாட்டியின் குரலுக்கு,

“ஓமணை… பெடி அப்பிடியே பூவரசனை மாதிரி இருக்கிறானணை.. அது தான் கனகக்காவால தாங்கேலாமல் அழுகுது போல…. அவ மனசார அழட்டும்.. எல்லாரும் போங்கோ..” என்று பதிலளித்துவிட்டு தானும் வெளியே நகர்ந்தாள் அந்த நடுத்தர வயதுப் பெண்.

சற்று நேரம் அவனையும் கனகத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மற்றவர்கள் எல்லோரும் மெல்ல மெல்ல விலகிபோயினர்.

சுகிர்தன் அந்தத் தாயின் அழுகை ஓயும் வரை அமைதியாக இருந்தாலும் அவன் கண்களில் இருந்து அணையுடைத்த நீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அதன்பின் கனகம் சுகிர்தனை அன்போடு உபசரித்தாள். சற்று நேரத்தில் தன் நண்பனின் தாயைப் பார்த்த மன நிறைவோடு வீட்டுக்குக் கிளம்பத் தயாரானவனை கனகத்தின் குரல் தடுத்தது.. “தம்பி, பக்கத்தில தான் பூவரசனின்ர அத்தை வீடு இருக்கு. அப்படியே என்ர பிள்ளை மாதிரி இருக்குற உன்னைப்பார்த்தால் அண்ணி சந்தோசப்படுவா. ஒருக்கால் போய் பார்ப்போமே...’’ என்றதும்.. உடனேயே சம்மதித்தான் சுகிர்தன்.

பூவரசனின் அத்தை வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்ததுமே எங்கிருந்தோ மின்னல் வேகத்தில் ஓடி வந்து சுகிர்தனைக் கட்டியணைத்தாள் அந்த இளம்பெண்.

“பூஸ்.... பூஸ்... வந்துட்டியாடா? இவ்வளவு நாளும் எங்கயடா போன?....”

அதிர்ந்து போன சுகிர்தனால் அந்தப்பெண்ணின் அழுங்குப்பிடியை விட்டு சில நிமிடங்கள் விலக முடியவில்லை. அவளுக்கு பின்னாலேயே வேகமாக ஓடிவந்த அவளுடைய தாய் அவளைப்பிடித்து பலவந்தமாக இழுத்தாள்..

“ஏய் மீனு… என்னடி செய்ற… அது பூவரசன் இல்லையடி… விடு... விடடி….. “

என்று அழுகுரலோடு அந்தத்தாயோடு சேர்ந்து கனகமும் அவளைப் பிரித்து இழுத்துச் செல்ல, அவளோ பெருங்குரலெடுத்து ஓலமிட்டபடியே இழுபறிப்பட்டுக்கொண்டே உள்ளே சென்றாள். சிறிது நேரத்துக்கு சுகிர்தனால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை. உள்ளே அவள் தொடர்ச்சியாக அழும் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. கனகம் அழுத கண்களோடு திரும்பி வந்தாள்.

“தம்பி… குறை நினையாதேங்கோ… இது என்ர அண்ணையின்ர மகள். நல்லா இருந்த குடும்பம்… உந்த சண்டைக்குப் பிறகு எல்லா சந்தோசத்தையும் இழந்திட்டம்…. உந்த பிள்ளை மீனுவைத்தான் என்ர மகனுக்கு பேசி இருந்தனாங்கள்….  அவன் உயிரோட இல்லை எண்டதை பிளையால ஏற்றுக்கொள்ள ஏலாமல் இருக்கு போல…. கடைசிச் சண்டையில அவளும் தலையில காயப்பட்டு கன நாள் அறிவில்லாமல் இருந்தது…. இப்ப அநேகமா ஒண்டும் நினைவில்ல.. ஆனால் என்ர பிள்ளையை மட்டும் மறக்கேல்ல… ஒரே அவனைக் கேட்டு அழுகை…. பாவம் அண்ணி… அண்ணயும் செத்துப்போன பிறகு இந்தப்பிள்ளையை வைச்சு என்ன செய்யிறதெண்டு தெரியாமல் தவிக்குது” தழதழக்கும் அழுகைக்குரலோடு சொல்லி முடித்தாள் கனகம்….

சுகிர்தனுக்கு இப்பொழுது தான் புதியவன் தன் காதலைப்பற்றிச் சொன்னது மூளையில் உறைத்தது. அவன் நெஞ்சுக்குள் ஒரு பெரும் பரிதாப அலை எழுந்து மோதியது…. புதியவன் இப்படித்தான் நடக்கும் என்று எவ்வளாவு துல்லியமாக நம்பினான்.…. அதனால் தானே இவளுக்காக அத்தனை வேதனைப்பட்டான்… என்ன விதி இது.. எனத் தன் நண்பனுக்காக உள்ளம் கசிந்தான் சுகிர்தன். அதிக நேரம் அங்கு நிற்காமல் விடைபெற்றுக்கொண்ட அவன், மனதில் தீராத பெருஞ்சுமையொன்றைச் சுமந்தபடியே அங்கிருந்து வெளியேறினான்.

வீட்டுக்குப் போன பின்னும் கூட அவனால் மீனுவின் அந்த அழுத்தமான அணைப்பையும், அழுகுரலை மறக்க முடியவில்லை.. எப்படி இறுகப்பிடித்தாள்… இனி ஒருபோதும் அவனை இழந்து விடக்கூடாது என்றா?? புதியவன் நம்பியது போலவே மீனு அத்தனை பாசம் வைத்திருந்திருக்கிறாளே… என ஆயிரம் கேள்விகள் அவனைச் சிதறடித்துக் கொண்டிருந்தது. ஒரு வாரமாக அவன் மனம் தன் நண்பனுக்காக வருந்திக்கொண்டிருந்தது. அவனுக்காக ஏதாவது செய்ய முடியுமா எனத் தவித்தான் சுகிர்தன். கடைசியில் மீண்டும் மீனுவைப்போய் பார்க்க முடிவெடுத்தான்.

திரும்பவும் அவன் புதியவனின் வீட்டுக்குச் சென்றபோது கனகம் வழக்கம் போலவே அவனை வரவேற்று உபசரித்தாள். ஆனால் மீனுவைப்பற்றி அவள் சொன்ன விடயம் மனதை உலுக்கியது.

 “தம்பி, நீங்கள் போனதடவை வந்து போன பிறகு  மீனுவின் நிலை மோசமாக இருக்குது... அடிக்கடி மயக்கம் போட்டு விழுகிறாள். சரியா சத்தம் போட்டு கத்துறா...” சொன்ன கனகத்தை கலக்கத்தோடு பார்த்தான்.

“அம்மா, இதுக்கு ஏதும் வழி இருக்கோ? மீனுவை சுகமாக்க ஏலாதோ?”

“என்ன வழி இருந்து என்ன தம்பி... அதுக்கு கையில காசு வேணுமே தம்பி. அண்ணி தனிய இருந்து என்ன செய்வா? எங்கட நிலமையும் இப்படியா கிடக்குது...”

“அம்மா, எனக்கு கொஞ்ச நண்பர்கள் வெளிநாட்டில இருக்கினம். அவங்கள் எனக்கு என்ன உதவி வேணுமெண்டாலும் செய்வம் எண்டு சொல்லியிருக்கிறாங்கள்..... நான் என்னாலான உதவியை புதியவனுக்காக செய்றன் அம்மா.. அவனுக்காக... அவனுக்காக ஏதாவது செய்ய வேணும் அம்மா...” சுகிர்தனின் வார்த்தைகள் தட்டுத்தடுமாறி வந்து விழுந்தன. வார்த்தைகளை விட வேகமாக கண்ணீர் துளிகள் வந்து விழுந்தன. கனகமும் அவனோடு சேர்ந்து தன் பிள்ளையை நினைத்து அழ ஆரம்பித்தாள். இதன் பின் இருவரும் மீனுவைப்பார்க்கப் போன போது மீனு தூங்கிக்கொண்டிருந்தாள். பூவரசனின் அத்தையோடு கொஞ்சம் மனம் விட்டுப்பேசினான் சுகிர்தன்.

“அம்மா, நான் இப்ப தான் புனர்வாழ்வில இருந்து வந்திருக்கிறன். இப்போதைக்கு எனக்கு வேலை ஒண்டும் இல்ல. ஆனால் எனக்கு போன கிழமை இங்க வந்திட்டு போனதில இருந்து மீனுவின்ர நிலையைப் பார்த்த பிறகு அமைதியா இருக்க முடியேல்ல. புதியவன்... அவன் தான்.... உங்கட பூவரசன்... எனக்கு மீனுவைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறான். தன்னுடைய சாவு இவளைப் பாதிக்கும் எண்டு அவன் முதலே அறிஞ்சிருக்கிறான். அதைப்பற்றி அவன் என்னட்ட சொல்லிக் கவலைப் பட்ட நேரத்தில் எல்லாம், நான் தான் அவனுக்கு இப்படி நடக்கும் என்று நம்பேல்ல.. அதனால அதைப்பற்றிக் கவலைப் படாதையெண்டு ஆறுதல் சொல்லுவன்... இப்ப அதுவே உண்மையாகிப்போச்சு... அவனுக்காக, நான் மீனுவைச் சுகமாக்க வேணும்... ஏதாவது முயற்சி செய்வம்..”  என்று நிறுத்தாது பேசியவனை நன்றியோடு நோக்கினாள் சுந்தரி, மீனுவின் தாய்.

அன்றைய தினம் மீனு தூக்கத்தில் இருந்து எழுவதற்கு முன்பாகவே அவளை அமைதியாகப் பார்த்துவிட்டு புறப்பட்டு விட்டான். அன்றிலிருந்து அவன் மேற்கொண்ட முயற்சிகளின் பலன் ஒரு மாதத்துக்குள் எல்லாம் அமைந்து வந்தன. சில நண்பர்கள் அவனுக்கு மனப்பூர்வமாக உதவ முன்வந்தார்கள் அவர்களின் துணையோடு கேரளாவில் ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுக  முடிவுசெய்தான்.

செய்தியை அறிந்ததும் கனகமும் சுந்தரியும் சம்மதிக்கவில்லை. அவ்வளவு தூரம் போய் எப்படி..... என்ற தயக்கத்தை போக்க நிறைய பேசினான் சுகிர்தன். கடைசியில் சுந்தரி, சரி, முயன்றுதான் பார்ப்போமே என்று பல குழப்பங்களுக்கு மத்தியில் முடிவெடுத்தான்.  ஆனால் சுகிர்தன் பெரிதும் போராட வேண்டியிருந்தது தன்னுடைய பெற்றோருடன் தான்.

“ஆர் எப்படிப்போனால் என்ன... இப்ப எத்தனை பேர் இந்த நிலமைல இருக்கினம் எல்லாருக்குமா உதவி செய்ய போறாய்?” என்று அவனுடைய அப்பா வானுக்கும் பூமிக்கும் துள்ளினார்.

“ஆரும் எண்டால் நான் பேசாமல் இருக்கலாம். ஆனால் அவன் என்ர உயிர் நண்பன் அப்பா. இதை செய்யாட்டில் நான் நிம்மதியா இருக்க மாட்டன். மருத்துவம் செய்யத்தானே உதவப் போறன்.... நானும் அவையோட இந்தியாவுக்குப் போனால் எனக்கும் கொஞ்ச நாளைக்குப் பாதுகாப்பு”

 என்று பாதுகாப்பைக் காரணம் காட்டி ஒருவாறு அவர்களை அமைதிப்படுத்தினான். அவனது அந்தப் பயணம்... புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியே வரும் போது இனி என்ன வாழ்க்கை என்று நினைத்ததற்கு மாறாக, தன் வாழ்க்கையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துவதற்கானதாக அமைந்தது என்பதை அப்பொழுது அவன் அறிந்திருக்கவில்லை......



தொடரும்......

4 comments:

  1. //“இந்தப் பெடியன் தானே பூவரசனோட ஒரே மோட்டசைக்கிள்ள வாறது…” என்று அருகில் நின்ற மூதாட்டியின் குரலுக்கு,

    “ஓமணை… பெடி அப்பிடியே பூவரசனை மாதிரி இருக்கிறானணை.. அது தான் கனகக்காவால தாங்கேலாமல் அழுகுது போல…. அவ மனசார அழட்டும்.. எல்லாரும் போங்கோ..” என்று பதிலளித்துவிட்டு தானும் வெளியே நகர்ந்தாள் அந்த நடுத்தர வயதுப் பெண்.// மிக யாதார்த்தமாக .
    பூஸ் மீனு சந்திப்பு எதிர்பார்க்காத விதமாக அமைத்துவிட்டீங்க.நன்றாக கதையை
    எழுதிவருறீங்க. பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள் கோதை.

    ReplyDelete
  2. Nal ladthanpookuthu
    Pookaddum pookaddum
    Valthukkal

    ReplyDelete
  3. என்ன செய்வது எல்லாரும் தம் வாழ்க்கையை பார்க்க வேண்டிய சூழல் ஆச்சே!ம்ம்

    ReplyDelete
  4. ஓமணை… பெடி அப்பிடியே பூவரசனை மாதிரி இருக்கிறானணை.. அது தான் கனகக்காவால தாங்கேலாமல் அழுகுது போல…. அவ மனசார அழட்டும்.. எல்லாரும் போங்கோ..” என்று பதிலளித்துவிட்டு தானும் வெளியே நகர்ந்தாள் அந்த நடுத்தர வயதுப் பெண்.//இங்கு இன்னும் கற்பனை தீர்ந்தது ஏனோ!ம்ம்

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!