Tuesday 26 November 2013

இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்தோமோ?? - அகவை 59




ஐயம் தகர்த்து அடிமை நிலையகற்ற
வையத்தில் தமிழினம் தலைநிமிர்ந்து நிற்க
மெய்யாய் ஒரு உதயம் தோன்றிய
ஐம்பத் தொன்பதாம் அகவை இன்று

பொய்யாத மானமும் பொங்கிடும் வீரமும்
கைவினைத் தீரமும் கொண்ட நம் தலைவன்
இங்கிவனை யாம் பெறவே
என்ன தவம் செய்தோமோ????
              ***
சோதனை ஆயிரம் சுமந்து நடந்தவன்
வேதனை தாங்கியே வேகமாய் நடந்தவன்..
போதனை செய்துமே பேதமை தகர்த்தவன்- நம்
சாதனைத் தலைவனாய் சரித்திரம் சமைத்தவன்
இங்கிவனை யாம் பெறவே
என்ன தவம் செய்தோமோ????
              ***
மானத்தின் பொருளுணர்த்தி நின்ற
மாதவத் தலைவன் இவன் – நாம்
போதிமரம் கண்டதில்லை இவன்
போதனைகள் கொண்டோம்
நாதியற்று அலைந்த தமிழர்க்கு
நானிலத்தில் முகவரி கொடுத்தவன்
இங்கிவனை யாம் பெறவே
என்ன தவம் செய்தோமோ???
              ***
வற்றிப் போன குளத்து மீன்களாய்
வானம் பார்த்து நிற்கின்றோம்
வருண தேவன் அவன் வருகை தேடி…
கொடுங்கோன்மை இருளினிலே
கடுந்தவமாய் காத்திருக்கின்றோம்
சூரியத் தலைவனின் எழுகை தேடி…

உலகத் தமிழருக்கே ஓர் தலைவனாய்
உயர்ந்த கலங்கரை விளக்கம்…
ஒப்பில்லாப் பெரும் சுடர் இவன்

அகவை ஐம்பத் தொன்பதில்
அகிலத்தில் ஒளிரும் ஆதவன்..
உவகை பெருகுதையா எம்
ஒற்றைத் தலைவன் இவன் என்றே
ஓங்கி ஒலிக்கும் போது…

தீரமும் தியாகமும் தீர்க்க தரிசனமும்
தீராத விடுதலைத் தாகமும் நெஞ்சில்
தீயாகச் சுமந்தவன்- எம்
தேசியத்தின் பெரும் தலைவன்..
ஊரார் பேசவில்லை இன்று
உலகம் பேசுதையா- இவன்
ஒப்பற்ற மேன்மையை…
              ***
விடுதலைத் தாகம் சுமந்து நம்மை
கடுகதியாய் இயங்க வைத்த சக்தி இவன்…
செந்தமிழன் வரலாற்றில்
சக்தியும் இவனே, இயக்கமும் இவனே…
சக்தியும் இயக்கமும் அழிந்து போகும்
சாத்தியம் இல்லை அறிவியலில்…

பெண்களை வெறும் பூக்களல்ல
புயல்களென்று உலகுக்குப்
புரிய வைத்தவனும் இவனே..
பெண்ணினமே பெருமை கொள்ளுது -எம்
பெரும் தலைவன் இவனென்று சொல்லுதற்கு..
              ***
வளர்த்த கடா மார்பில் முட்டும்
வேதனைகள் சுமந்தவன் – எனினும்
வீரத்தில் குன்றாது விவேகமாய் நடந்தவன்..நேற்று
முளைத்த அரசியல் காளான்கள்- இவன்
மகத்துவம் அறிவாரோ….
பிழைப்புக்காய் அடி வருடும் பித்தர்களுக்கு- இவன்
பெருமை புரியாது…
விலை போகமுடியாத விண்விளக்கு
தலை வணங்கா நம் தானைத் தலைவன்
              ***
தமிழ் வளர்க்கச் சங்கம் வளர்த்தார்
அன்றய மன்னவர்கள்.. இவன்
தமிழ் வளர்க்க உயிர்கொடுக்கும்
தனிப்படை வளர்த்த மன்னவன் இவன்..
தன் வாழ்வை முற்றிலுமாய்த்
தமிழுக்காய், தமிழர்க்காய் தானே ஈந்தவன்

மாதச் செல்வன்.. எம் சூரியத் தலைவன்
இங்கிவனை யாம் பெறவே
என்ன தவம் செய்தோமோ???

வாழ்வாங்கு வாழ்ந்த இவன்
வாழ்க என்றும் நம் தலைவனாய்!!!
              ***
      

5 comments:

  1. சிறப்பான வரிகள்... பாராட்டுக்கள்...

    மாவீரர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ..

      Delete
  2. அன்பு மகளே கோதை!

    எங்கள் அண்ணனை ஏற்றியொரு பாமாலை
    தங்கம் நிகர்த்த சிறப்போடு நீதந்தாய் - தமிழ்ச்
    சங்கம் பெற்றமகள் சாதனைத் திருமகள்
    மங்காப் புகழோடு மகளேநீ வாழ்ந்திடுக!

    அருமையான கதம்பமலர்க் கவிமாலை!
    உம் திறமைக்கு மெச்ச எனக்கு அறிவு போதது.

    ஆயினும் அன்பு மகளே வாழ்த்துகிறேன்!

    எங்கள் அண்ணனையும் உளமார
    உம்மோடிணைந்து வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா..

      Delete
  3. "உலகத் தமிழருக்கே ஓர் தலைவனாய்
    உயர்ந்த கலங்கரை விளக்கம்…
    ஒப்பில்லாப் பெரும் சுடர் இவன்" என்ற
    உண்மை வரிகளை வரவேற்கிறேன்!

    உலகெங்கும்
    தமிழரை அடையாளப்படுத்திய
    தலைவன் என்றும் வாழ்க!

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!