Thursday, 25 August 2011

பீற்றற் பெருமை



பெருமூச்சொன்று பெரிதாகப் புறப்பட
புருவங்கள் சுழித்துச் சுருங்க..
இரு கண்கள் சோர்ந்து மூட..
இருக்கையிலே சாய்ந்து கொண்டேன்

சின்ன நகைப்பொலி நெஞ்சை வருட
பின்னே திரும்பினேன் அங்கே அவள்....
அவ்வப்போது எனக்குள் வந்து
சீண்டிப் பார்ப்பவள்....
கடுமையாய் கேள்வி கேட்டு
கடுப்பேற்றுபவள்...
மெல்லத் தொடங்கினாள்....
என்ன வேலை கனமோ..?
நிமிர்ந்து உட்கார்ந்து
தொண்டையைச் செருமினேன்
எனக்கென்ன குறை தோழி...?
அவசர உலகோடு நான்
அனுதினமும் போட்டியிடுகிறேன்
காலையை மாலையாக்கவும்
மாலையைக் காலையாக்கவும்
கற்றுக் கொண்டேன் தெரியுமா?
நித்திரா தேவியுடன் நான்
நித்தமும் போர் தொடுக்கிறேன் -மிகவும்
பொறுப்புள்ள தொழிலாளி நான்
சவரிலே குளிப்பு, சுவரிலே படம்
மெத்தையில் தூக்கம்இ மேசையில் சாப்பாடு
எத்தனை ஆடம்பரம் என் வாழ்வில்..
பித்தனைப்போல் பிதற்றியபடி
அவளைப் பார்த்தேன்... அதிர்ந்திட்டேன்
அத்தனை கேலி அவள் பார்வையில்...
இப்போது அவள் அந்த அர்த்தமுள்ள
நாட்டார் பாடலின் வரிகளை
மீட்டிவிட்டு மறைந்து போனாள்...

'இறகெல்லாம் பிடுங்கையிலே
இறகெல்லாம் பிடுங்கையிலே
என்னண்டு சொல்லிச்சாம் கோழிக் குஞ்சு.....
நான் 'ஹெயார் கட்”எடுக்கிறன் 'ஹெயார் கட்” எடுக்கிறன்
அப்பிடீன்னு சொல்லிச்சாம் கோழிக் குஞ்சு

எண்ணெயில பொரிக்கையில
எண்ணெயில பொரிக்கையில
என்னண்டு சொல்லிச்சாம் கோழிக் குஞ்சு.....
நான் 'ஒயில் பாத்” எடுக்கிறன் 'ஒயில் பாத்” எடுக்கிறன்
அப்பிடீன்னு சொல்லிச்சாம் கோழிக் குஞ்சு”

மூச்சடக்கி மௌனமாகிப்
போர்வைக்குள் புகுந்து கொண்டேன்

4 comments:

  1. விழுந்தும் மீசையில மண் குத்தல

    ReplyDelete
  2. அருமையா சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள்...!!!

    ReplyDelete
  3. அருமை.. இன்றுதான் உங்கள் வலைப்பூ அறிமுகம் கிடைத்தது அக்கா. நன்றாக இருக்கிறது உங்கள் எழுத்துக்கள். ரசித்தேன். தொடர்வேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!