அறை எங்கும் சூழ்ந்திருந்த நிசப்தத்தை திடீரென இசைத்த கைத்தொலைபேசியின் ஒலி இரக்கமற்று விரட்டியது…சற்றே சினத்துடன் தொலைபேசியை எடுத்துப் பார்த்த நிரு, நரேன் என்ற பெயரைப் பார்த்ததும் “ப்சு..” என்றவாறே அதை அடக்கினாள். ஞாயிற்றுக் கிழமை என்பதால் அவள் அதிகாலையிலேயே வேலைக்குச் செல்ல வேண்டுமென்று அரக்கப் பரக்க எழுந்திருக்க வேண்டியதில்லை… விழித்தேயிருந்தாலும் கண்களை மூடிக் கொண்டு அப்படியே கட்டிலோடு மௌனித்திருந்தாள். அவள் நெஞ்சுக் கூட்டுக்குள் இருந்த கனத்தையும் சேர்த்து அந்தக் கட்டில் பெரும் சுமை தாங்கி போல தாங்கிக் கொண்டிருந்ததாலோ என்னவோ… அவ்வப்போது அவள் உடல் அசையும் போது மெல்ல அனுங்கித் தீர்த்தது… நாளாந்தம் அவள் உள்ளச் சுமையோடு சேர்த்து அவளையும் தாங்கும் இரண்டு சுமை தாங்கிகள்.. ஒன்று அவளது கட்டில், மற்றொன்று அவள் தினமும் வேலைக்குச் செல்லும் 031 இலக்கப் பேருந்து. இவற்றுக்கு சிந்திக்கவும் எழுதவும் தெரிந்திருப்பின் அவளது அந்தரங்க உணர்வுகளைப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியிருக்கும். உடலை நேராக வைத்திருந்தாலும் கால்களைப் பக்க வாட்டில் சரித்து கைகளைக் கோர்த்து தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு… அவள் ஒருக்களித்துப் படுத்திருந்த விதமே அவள் மனநிலையை படம்பிடித்துக் காட்டியது. கண்களைத் திறந்தால் மடை திறந்து பாயக் காத்திருக்கும் கண்ணீருக்கு முன் மழை வெள்ளம் தோற்று விடுமோ என அஞ்சுவது போல் கண்களை இறுக மூடியிருந்தாள். அவள் மனக் கண்களுக்கு முன்னே நினைவுச் சிலந்தி கடந்த காலங்களை இழுத்து இழுத்துப் பின்ன ஆரம்பித்திருந்தது.
“நிரு…நிரும்மா…” நிருத்திகா என்ற அவளுடைய பெயரை அவள் தாயார் பாசம் பொங்க அப்படித்தான் அழைப்பாள். அம்மாவுக்கு ஒரே பிள்ளையாகப் பிறந்த அவளுக்கு தன் எட்டாவது வயதிலிருந்து தாயே தான் உலகமாகத் தெரிந்தாள். விபத்து ஒன்றில் தந்தையை இழந்துவிட்ட நிரு தாயின் பாசத்தை மட்டுமே கண்டு வளர்ந்தவள். தாய்க்குத் தெரிந்திருந்த தையல்கலை அவளுக்கு வயிற்றுக்கு உணவையும் வாழ்க்கைக்கு கல்வியையும் கொடுத்தது.
அவளது 17வது வயதில்தான் அவள் வாழ்க்கையில் பெரும் திருப்பம் ஒன்று அவளைக் கதிகலங்க விட்டது. அம்மா தன் அழகு மகள் நிருவை இந்த உலகில் பாரமாக நிறுத்தி விட்டு பரமனடி சென்று விட்டாள். நடுத்தர வாழ்க்கையிலும் ஒரு ரம்மியமான அவளது வாழ்க்கை புயலில் அகப்பட்ட படகு போல எங்கெங்கோ மோதத் தொடங்கியது.
அலாரத்தின் அலரல் அந்த அறையின் நிசப்தத்தைக் குலைக்க திடுக்கிட்டு நிமிர்ந்த நிரு சற்றே எரிச்சலோடே கைத் தொலைபேசியை எடுத்து அலாரத்தை நிறுத்திவிட்டு எழுந்தாள். நேரம் காலை 8.00 மணி. எழும்பவே மனமில்லாமல் எழுந்து மெல்ல குளியலறைக்குள் நுழைந்தாள். பனிப் பொழிவின் குளிர் உடலைப் புல்லரிக்க வைத்தது… காலைக் கடன்களை முடித்துக் கொண்டு மீண்டும் அறைக்குள் வந்தாள். அறை எங்கும் போட்டது போட்டபடி…அலங்கோலமாக இருந்தது. வழக்கமாக ஞாயிறுகளில் தான் வீட்டைத் துப்பரவு செய்வது.. ஆனால் இன்று மனநிலை அந்த அறையை விட அலங்கோலமாகக் கிடந்ததால் அப்படியே அருகிலிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தாள்..
மீண்டும் அந்த நினைவுச் சிலந்தி தன் வேலையை ஆரம்பித்தது... நேற்றுப் பார்த்த அந்த திரைப்படம் அவளைப் பாதித்திருந்தது. “த டேட்டி பிக்சர்” பட இயக்குனர் எப்படியாக அந்தக் கதையை கொண்டு நடத்தியிருக்கிறார்.. நிச்சயமாக அந்தப் படத்தின் கதாநாயகி பாத்திரத்தில் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியாது என்றாலும் அந்தப் பாத்திரத்துக்கும் தனக்கும் எங்கோ ஏதோ ஒரு நூலிழையில் தொடர்பு இருப்பது போன்ற ஒரு உணர்வு நிருவுக்கு நெஞ்சைப் பிசைந்தது.
அம்மாவின் இறப்பிற்குப் பின் உறவினர்களுடன் வேண்டாத பாரமாக வாழ நேர்ந்த போது தான் அவனைச் சந்தித்தான். சுந்தர்.. அழகிய உயர்ந்த உருவம். புருவத்தை உயர்த்தி அவன் சிரிக்கும் சிரிப்பு, சற்றே அரும்பிய மீசை.. இவையெல்லாம் சேர்த்து வந்து நின்ற அவனது காதல் அவளைக் கவர்ந்ததோ இல்லையோ.. அவனுக்குப் பின்னாக மலை போல நின்ற அவனது பணபலம் அவளை வெகுவாகக் கவர்ந்தது.. இந்தப் பணம் இருந்திருந்தால் என் அம்மாவை அந்தப் பொல்லாத நோய்க்குப் பலி கொடுத்திருக்கத் தேவையில்லையே... நான் கூட இப்பொழுது மற்றவர்களுக்குப் பாரமாக இருக்கத் தேவையில்லையே... இப்படிப் பல எண்ணங்கள் அவளைப் பணத்தை நோக்கி ஈர்க்க, அவளது முதிர்ச்சியற்ற தன்மை அவளது வாழ்க்கையில் எதிர்காலத்தை சிந்திக்க மறந்து விட்டது. அவளது திருமணம் சுந்தருடன் விமரிசையாக நடைபெற்றது. பணம், அழகு இன்னும் சில நல்ல குணங்களும் சுந்தரிடம் இருந்தாலும் அவனது செல்வச் செருக்கு அவனைச் சிறுவயதிலேயே குடிகாரனாக்கியிருந்தது. அது நிருவின் வாழ்க்கையைச் சீரழிக்கத் தொடங்கியிருந்தது. நாளும் பொழுதும் அடியும் ஆக்கினைகளும் அதிகரித்தது. அன்பென்ற வரம் அவளுக்குத் தாயோடு மறைந்து போனது.
இப்படியாக நகர்ந்து கொண்டிருந்த அவளது வாழ்க்கையில் பாலைவனத்தில் திடீரெனத் தோன்றிய சிறிய நீருற்றாக அவள் செல்ல மகள் அனு பிறந்தாள். அவளுக்காகவே நிரு வாழத் தொடங்கியிருந்தாள். ஆனாலும் வருடங்கள் கழியக் கழியத் தன் மகளின் எதிர்காலம் பற்றிய பயம் நிருவுக்கு ஏற்படத் தொடங்கியது. சுந்தரின் அன்பான அணைப்பு இல்லை என்பது மட்டுமன்றி அவனது விடாக் குடியால் சொத்தும் அழிந்து கொண்டே வந்தது. அந்த வேளையில் தான் அவளது பால்ய நண்பி நந்தா வெளிநாட்டிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். அன்று அவள் சொன்ன யோசனை சரியாகத்தான் பட்டது. வெளிநாட்டுக்குச் சென்று பணம் உழைத்து தன் மகளுக்காக சேர்த்து வைக்கலாம் என்பது மட்டுமன்றி பின்னர் தன் மகளைக் கூட தன்னிடம் அழைத்து அங்கேயே அவளைப் படிக்க வைக்கலாம் என கணக்குப் போட்டாள். வெளிநாட்டுக்குச் சென்று பணம் உழைப்பது என்றதுமே சுந்தர் சம்மதித்தான். அவளது விடாமுயற்சி வெற்றியளிக்கத் தன் குழந்தையின் பிஞ்சுக் கரங்களைப் பற்றி தன் கன்னங்களோடு அழுத்திப் பிடித்துக் கொண்டு விம்மினாள். அனுவோ தன் தாய் தன்னைவிட்டு வெகு தூரம் போகிறாள் என்று தெரியாமலே கன்னத்தில் மென்மையாகத் தன் ஈர இதழ்களைப் பதித்துக் கையசைத்தாள்.
மூடியிருந்த கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசிய கண்ணோரம் அரித்தது. நிருவைப் பொறுத்த வரையில் அது முட்டாள் தனமான முடிவு என்று இன்று வரையிலும் நியாயம் தீர்க்க முடியவில்லை. ஆனாலும் அதனால் எத்தனை வேதனையான வடுக்களைத் தாங்க வேண்டி வரும் என்று அப்பொழுது அவளால் உணர்ந்து கொள்ள முடியாததால் தன் மகளுக்காகத்தான் செய்யும் தியாகமாக எண்ணி எல்லாவற்றையும் தாங்க வேண்டியேற்பட்டது. நண்பி நந்தா மூலமாகத் தான் லண்டன் மாநகரத்துக்குள் நல்ல வேலை ஒன்றை எடுத்தாள் என்றாலும் அந்த வேலையில் மட்டுமல்ல அதன்பிறகு அவள் எடுத்த பல வேலைகளிலும் அவளால் நிலைத்திருக்க முடியவில்லை. காரணம் அவளது பிரம்மிக்கத் தக்க அழகு. சாதாரணமாகவே மற்றவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும் அவளுடைய தோற்றத்துக்கு மேலைத்தேய உடைகள் அதிக எடுப்பாக இருந்தது.
நமது நாட்டில் ஒரு பெண் தனியாக இருக்கிறாள் என்று தொpந்தாலே அவளை இம்சிக்கும் ஆண்கள் இங்கே அவள் “நான் தனிய தான் இருக்கிறேன்” என்று கூறிவிட்டாலே “படுக்கைக்குத் தாயார்” என பகிரங்கமாக அவள் அறிவித்துவிட்டதாக நினைத்து விடுகிறார்கள் போலும். சும்மாவேனும் சுரண்டிப் பார்க்காமல் விடுவதில்லை. அதில் பெண் பலமானவளாக இருந்தால் தப்பிப் பிழைக்கலாம். ஆனால் பலவீனமானவளாக இருந்து விட்டால்…
அவள் சந்தித்த பெரும்பாலான ஆண்கள் அவளைத் தவறாகத்தான் உபயோகிக்க முனைந்தார்கள். நிருவைப் பொறுத்த வரையில் பலவீனமானவள்தான் என்றாலும் காலப் போக்கில் அவளது சூழ்நிலை அவளை சிறிது தடுமாற வைத்தது. அன்புக்காக ஏங்கிக் கொண்ணடிருந்த அவளின் உள்ளம் தன் குழந்தையைப் பிரிந்திருந்து தாகத்தோடு காத்திருக்கும் போது அவ்வப்போது ஆறுதல் தேவைப்பட்டது என்னவோ உண்மைதான்.
அவள் தற்பொழுது பணிபுரியும் அந்த வங்கியில் முகாமையாளராக இருக்கும் நரேன் இந்த வேளையில் தான் அவள் வாழ்க்கையில் குறுக்கிட்டான். அவன் பார்ப்பதற்கு பெரிய ஆணழகன் இல்லையென்றாலும் அவனிடம் இருந்த தற்துணிவும் ஆறுதலான அவனது வார்த்தைகளும் ஏன் பணத்தின் செழுமையும் கூட அவளைக் கவர்ந்தது எனலாம். அவளது உள்ளத்தின் தேவைகளை உணர்ந்து ஆதரவு வார்த்தைகளை மட்டுமன்றி, தனியாக ஒரு பெண்ணாக உழைத்து சமாளிக்க முடியாத அவளது தேவைக்களுக்கான பணத்தையும் வாரி இறைத்தான். ஆனால் பதிலுக்கு ஒரு சராசரி ஆணாக அவன் அவளிடம் எதிர்பார்த்தது…
“நிரு…நீ தப்பா நினைக்கேல்ல எண்டால் நான் உன்னட்ட ஒண்டு கேட்கலாமா?..”
அன்றொரு நாள் வேலை முடிந்த பின்னர் பேருந்துக்காக காத்திருந்த அவளிடம் நரேன் மெல்லப் பேச்சை ஆரம்பித்தான்.
“சொல்லுங்க நரேன்..”
“நான் உனக்கு நல்ல மனசோடதான் இவ்வளவு உதவியும் செய்யிறன் எண்டு நீ நம்பிறியா?
சற்றுக் குழப்பத்தோடு நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
“என்ன கேட்கிறீங்கள் எண்டு விளங்கேல்ல…”
“இல்ல நான் செய்யிறதெல்லாம் உம்மில இருக்கிற அன்பில தான் எண்டு உனக்கு விளங்குதா?..”
“அதில என்ன சந்தேகம் நரேன்? எங்கேயோ இருந்து வந்த எனக்கு உதவி செய்ய யாரும் இல்லாத இடத்தில, இப்பிடி நீங்க உதவியா இருக்கிறீங்கள் எண்டால் அது அன்பில்லாமல் வேற என்ன?”
அந்த “வேற என்ன” என்ற கேள்வி எதார்த்தமாக வாயிலிருந்து விழுந்தது என்றாலும், அது வரைக்கும் அவளுக்கு அப்படி ஒரு கேள்வி உள்ளே எழாமல் போனது அப்பொழுது தான் அவளுக்கு உறைத்து.
“உம்மைப் போலத்தான் நானும் இந்த நாட்டில யாரும் இல்லாதவன் தான். பணம் மட்டும் தான் எனக்கு ஆதரவா இருக்கு. ஆனால் இந்தப் பணத்தை வைச்சு அன்பை வாங்க முடியாது எண்டு எனக்குத் தெரியும்.. உனக்கு என்னில உண்மையாவே அன்பு இருக்கா?..”
நரேனின் இந்தக் கேள்வி தூக்கி வாரிப்போட்டது.. உண்மையிலேயே சொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயம் தான். ஆனாலு பதில் தாமதமாகினால் எதிரில் இருப்பவரை சந்தேகிக்கத் தூண்டுமே..
“ஏன் இப்பிடிக் கதைக்கிறீங்க நரேன்.. இண்டைக்கு என்ன நடந்தது உங்களுக்கு?”
“இல்ல… நீ என்னை புரிஞ்சு கொள்ள வேணும் எண்டு நினைக்கிறன்..பிளீஸ்..”
அவன் கண்ணில் மின்னிய ஏக்கம் அவள் பேருந்துக்குள் ஏறிய பின்னரும் அவளைக் கலக்கிக் கொண்டிருந்தது. எப்போதும் அவள் இரசித்த படியே செல்லும் லண்டன் நகரத்தில் நிரையாக ஒளிரும் வீதியோர மின் குமிழ்கள் அன்று ஏக்கத்தோடு ஒளிர்ந்த நரேனின் கண்கள் போல… சீ… எங்கே திரும்பினாலும் அவள் மனக்கண்ணில் நரேன் நின்று கொண்டிருந்தான். அவன் பணத்தை வாரியிறைத்து அவளை இக்கட்டுகளிலிருந்து காப்பாற்றிய சம்பவங்கள் தான் ஒன்றன்பின் ஒன்றாக ஓடிக்கொண்டிருந்தது.
மறுநாள் வேலை நேரத்தில் நரேனைக் காண முடியவில்லை. நிருவின் வேலை நேரம் முடிந்தபின் பேருந்துக்காக காத்திருக்கும் போது அவளை ஒட்டி நரேன் காரை நிறுத்தினான்.
“கெதியா ஏறு.. இதில கார் நிற்பாட்டக் கூடாது”
அவனது அவசரமான கட்டளையை உடனேயே ஏற்றுக் கொண்டு காருக்குள் ஏறினாள். கார் அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடிக்குள் தானும் ஒரு காரணியாக நகர்ந்து கொண்டே அவள் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
எத்தனையோ நாட்கள் நரேனுடன் காரில் பயணித்திருக்கிறாள். ஆனால் இன்று ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு.. அந்தத் தனிமை அவளுக்கு பெரும் சங்கடத்தைக் கொடுப்பது போல..
சே.. சுந்தர் அருகில் இருந்தால் நல்லது போல உணர்ந்தாள்..
“என்ன நிரு.. யோசனை?..” அவன் பார்வை இடையிடையே அவளை ஊடுருவியது. “ஊர்ல சுந்தரோட, மகளோட கதைச்சியா? எப்பிடி இருக்கிறாங்க?..”
“இருக்கிறாங்க… மகள் தான் கொஞ்சம் கவலைப்படுறாள்…எப்ப அம்மா வருவீங்கள் எண்டு கேட்கிறாள்…” அவள் கண்கள் மெல்லக் கலங்கத் தன் பற்களால் இதழ்களை வருத்தினாள். அவள் உள்ளத்தை ஏதோ ஒரு வித சோகம் மூடிக்கொண்டது. வீட்டின் முன் கார் நிறுத்திவிட்டு நிருவோடு நரேனும் இறங்கினான். அமைதியாக நடந்த அவளிடம் “வரலாமோ? என்று கேட்டவன் நிரு “வாங்கோ..” என்று சொல்லி முடிய முன்பே வீட்டு வாசலில் நின்றான்.
வீட்டுக்குள்ளே நுழைந்த நிரு அவனை விருந்தினர் அறையில்; இருக்கச் சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்தாள். மனதைக் கவ்வியிருந்த இனம் புரியாத வேதனை அப்படியே எரிமலையாக வெடிக்க முகத்தைத் துவாலையால் மூடிக் கொண்டு விம்மி அழுதாள். சாத்தியிருந்த அவளது அறைக்கதவு மெல்லத் தட்டப்பட்டு பின் திறந்தது. கண்களில் பரிவோடு நரேன் நின்று கொண்டிருந்தான். “நிரு…நிரும்மா.?” அவனது மிருதுவான ஆதரவான அழைப்பு.. அப்படியே அம்மாவை நினைவூட்ட, விம்மி விம்மி அழுதாள். அவனது கரம் அவளது முகத்தைத் தூக்கித் தன் பக்கம் திருப்பியது.
“எதுக்கும்மா அழுற? அது தான் நான் இருக்கிறேனே..?”
என்றபடி அவனது கரம் அவள் கண்களைத் துடைத்து விட.. அவனது இதழ்கள் அவளது இதழ்களில் ஒற்றின. அவள் அதை எதிர்பார்க்கவில்லை என்றாலும் அதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாமலே.. அவள் அதை விரும்பினாளா இல்லையா என்று புரியாமலே.. அந்தக்கணத்தில் அவள் இரத்த நாளங்களும் நாடிகளும் பலவீனப்பட்டுப் போக.. அப்படியே அவன் மார்பில் சாய்ந்தாள். அதன்பின் என்னென்னவோ எல்லாம் நடந்து முடிந்து விட்டது. ஆக மொத்தம் அவன் செய்த உதவிகளுக்கெல்லாம் அவன் அவளிடமிருந்து பெற்றுக் கொண்டது அதைத்தான். அன்று அந்த சம்பவத்தின் பின் அவன் போன பின்னர் ஓவென்று அழுதாள். சுந்தரிடம் கிடைக்காமல் போன அன்பு அவளை இத்தனை தூரம் சீரழித்து விட்டதா…கலாச்சாரத்தை நேசித்த எனக்கு எதற்கு இப்படி ஒரு சோதனை வர வேண்டும்..?
இதன் பின் நரேன் மிகவும் மகிழ்ச்சியாகத் தான் இருந்தான். தேவைப்பட்ட போதெல்லாம் அவளோடு உறவாடினான். அவன் அவளுக்குத் தான் செய்கிற உதவிகளோடு, இதையும் கூட ஒரு உதவி என்று எண்ணிக் கொண்டானோ என்னவோ… மிகவும் தாராளமாக நடந்து கொண்டான். ஒரு பெண்ணிடம் தன் அந்தரங்கம் சரணடைந்து விட்டதை ஏற்றுக் கொள்ள முடியாத பெரும்பாலான ஆண்களுக்கேயுரிய ஆணவம் அவனுக்குள்ளும் இருந்தது.
நிருவைப் பொறுத்த வரையில் ஆரம்பத்தில் அவளது பலவீனம் காரணமாக இருந்தாலும் காலப்போக்கில் அவனிடம் தான் பெற்றுக் கொள்ளும் பணத்துக்கும் சலுகைகளுக்குமாக தன்னை இழந்து கொண்டிருந்தாள். இப்பொழுதெல்லாம் அவளுக்கு உணர்வுகளே மரத்துப்போனது போல… உலகத்தில் எல்லாமே பணத்துக்காக மட்டும் இயங்குவது போல…பணம் பணம் என்றே அவளது சிந்தனை தொடர்ந்ததேயொழிய, செத்துப்பிழைக்கும் அவள் உணர்வுகளை உயிரோடு புதைக்க முயன்றாள்.... பிடிக்காத பாடத்தைக் கற்றேயாக வேண்டும் என்று தன் விருப்பு வெறுப்புகளைத் தாண்டிப் போராடும் மாணவியாக வாழ்ந்து கொண்டிருந்தாள்...
உணர்வுகள் மேலோங்கும் போது மக்கராகும் அவளது வாழ்க்கை வண்டியை பணம் என்ற வண்டி தொடுகயிறு போட்டு இழுத்துக் கொண்டிருக்கும் போது தான்... சென்றவாரம் அவள் கணவன் சுந்தர் தொலைபேசியில் பேசியது அவளைக் கலங்கடித்தது.
எப்போதாவது ஒரு தடவை பேசும் அவனது குரல் ஒருபோதும் இல்லாதவாறு சோர்ந்து போய் இருந்தது.
“நிரு...உனக்கு ஊருக்கு வர வேணும் போல இல்லையா?..”
“வர வேணும் போலத் தான் இருக்கு... ஆனா.. இங்க வேலையை விட்டிட்டு இப்ப வந்தா பிறகு வேலை எடுக்க முடியாது... இல்லையெண்டால் வந்து ஒருக்கா அனுவைப் பார்த்திட்டு வந்திடுவன்...”
“அப்ப... என்னைப் பார்க்க வரமாட்டியா?.. நீ என்னில வெறுப்பா இருக்கிறதில ஒரு பிழையும் இல்ல.. நான் உன்ன நல்லா வைச்சுப் பார்க்கேல்ல தான்... ஆனா.. எனக்கு உன்னில அன்பு இருக்கு..”
அவனது குரல் கம்மிப் போயிற்று... இது என்ன புதிய சோதனை... திடீரென வெளிப்பட்ட கணவனின் ஏக்கம் நிறைந்த வார்த்தைகள் அவளை திகைப்படையச் செய்ததுமின்றி, தொடர்ந்து அவன் பேசிய வார்த்தைகளால் அவள் குற்ற உணர்வில் குறுகிப் போனாள்.
“நீ எவ்வளவு பொறுமைசாலி... ஒரு பொம்பிளையா இருந்தாலும் பொறுப்புணர்வோட தனியா கஸ்டப்பட்டு உழைச்சு அனுப்பிறாய்... நான் தான் உன்ன நிம்மதியா வாழ விடேல்ல.. நான் செய்த கொடுமைகளுக்கு நீ என்னை விவாகரத்துப் பண்ணி விட்டு வேறு கலியாணம் செய்யாமல்.. இண்டைக்கு வரைக்கும் என்னையோ புருசனா மதிச்சு.. ஒழுக்கத்துல நெருப்பா வாழ்ந்திட்டிருக்கிறதப் பார்த்தா நான் உன்னை எப்படி உள்ளங்கையில தாங்கி வைச்சிருக்க வேணும்... இதுக்கு மேல நீ அங்க இருந்து கஸ்டப்பட வேண்டாம்... நான் உன்னப் பிhpஞ்சிருந்த இந்த இரண்டு வருசத்தில.. நல்லா உணர்ந்திட்டன்...இனி உன்னை நான் கஸ்டப்படுத்த மாட்டன்.. நான் உன்னோட சேர்ந்து வாழவேணும் எண்டு விரும்பிறன்... வந்திடம்மா...” இன்னும் என்னென்னவோ துக்கத்தில் பிதற்றினான்.. சேர்ந்து வாழ முதல் செத்து விடுவேனோ என்று துடித்தான்.
அவள் வாழ்க்கையில் கணவன் என்ற அத்தியாயம் இது வரையில் எங்கோ துண்டிக்கப் பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக உணர்ந்தாள். அவனது அன்பு புதிது போல் பட்டாலும் அது உண்மையில் இருந்தது தானே.. அவன் அவளைக் காதலித்துத்தானே கைப்பிடித்தான்... அவன் அவளில் கொண்ட அன்பின் சின்னமாக... ஏன் அவனும் ஒரு ஆணாக.. பாலியல் இன்பங்களைப் பகிர்ந்ததால் தானே அனு என்ற ஒரு உயிர் அவளுக்குள் துளிர்த்தது... அவளுக்கே தன் கணவனைப் பற்றி தான் சி;ந்திக்கும் விதம் வினோதமாகப் பட்டது. அப்படியிருக்க... எப்படி.. ஓ.. அந்த சீர் கெட்ட குடியினால் தானே அவன் மனிதனாக நடக்காமல் போனான். இப்பொழுது திருந்தி விட்டானாம்.. அவன் நல்லவனாக மாறியது மட்டுமல்லாமல், அவள் மேல் இத்தனை அசையாத நம்பிக்கை வைத்திருக்கிறான் என்பதே அவளை அவளுக்குள் சுக்கு நூறாக உடைத்துப் போட்டது.
அவளது இந்த நிலையை அறிந்த போது அவளது நண்பி நந்தா துடித்துப் போனாள். இவள் இப்படிப் போனதற்கு அவளை வெளிநாட்டுக்கு வா என்று அழைத்ததும் ஒரு காரணமோ என்று வேதனைப் பட்டாள்.. நிருவுக்கு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவள் சொன்னது...
எனக்குப் பணம் வேணும்... இதை விட அதிகமாக சம்பாதிக்கக் கூடிய வேலை எடுக்க முடிந்தால் சொல்லு ...விட்டு விடுகிறேன்.. என்றாள். ஆனாலும் தினமும் தொலைபேசியில் நந்தாவிடம் புலம்பினால். “என்னால முடியலடி நந்தா... நான் என்ன செய்ய... இப்பவெல்லாம் நரேனை கண்டாலே குலை நடுங்குதுடி... ஆனா வெளியில அவனோட பாசமா இருக்கிறது போல நடிக்க வேண்டியிருக்கு...” என்று புலம்பினாளே தவிர, அதை விட்டு விடுவதைப்பற்றி துளியளவேனும் சிந்தித்தாளில்லை. அவளுக்கு உதவ யார் முன்வருவார்கள்?.. அப்படி யாராவது இருந்தாலும் எப்படி உதவ முடியும்? பணம் தான் வாழ்க்கை என்று நினைக்கும் அவளை எப்படி மாற்றுவது?
இந்த மனக் குழப்பங்களோடு அவள் போராடிக் கொண்டிருந்த வேளையில் தான், நேற்றய தினம் அவள் பார்த்த அந்த படம் “டேட்டி பிக்சர்” அவளை சோகத்துக்குள் புதைத்து திக்கு முக்காட வைத்தது. அந்தக் கதாபாத்திரத்தில் வரும் அவள் நடிப்புத்துறையில் இடம்பிடிக்க வேண்டும் என்ற அவளது ஆசை அவளை எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்ற நிலைக்குக் கொண்டு சென்றது. நிருவோ பணம் வேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் வாழலாம்.. தனக்குப் பிடிக்காததைக்கூட பணத்துக்காக ஏற்றுக் கொள்கிறாளே... அந்தக் கதாபாத்திரத்தின் அவலமான முடிவு அவளைச் சுட்டுப் போட்டது. அவளை அன்பு செய்கின்ற, மதிக்கின்ற யாரும் அவளது உண்மை நிலையை அறிந்தால் அவளை அன்பு செய்வார்களா? உண்மையாக மதிப்பார்களா? ஏன்.. அவளை மனதில் ஒரு உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் அவளது கணவன் சுந்தர் கூட அவளை ஒரு இழிவான பொருள் போல எண்ணமாட்டானா? சாதாரணமாகவே முன்னே ஒன்று பேசி, பின்னே இகழும் இந்த சமூகம் அவளைக் காறி உமிழாதா?.. பணத்தை விட மற்றவர்களிடம் பெறும் இதையெல்லாம் உணர முயாத அளவுக்கு அவள் படிப்பறிவு இல்லாதவள் இல்லையே.. எல்லாவற்றையும் அறியும் அறிவு அவளுக்கு இருந்தாலும் அவளது சிந்திக்கும் ஆற்றலை பணம் என்ற ஒன்று மறைக்கிறதே...
மீண்டும் தொலைபேசி கிணுகிணுக்க அவளது சிந்தனைச் சிலந்தி பதறிக் கலைந்தது... நரேன் தான்.. மனதில் பாரம் அழுத்த... பதிலளிக்க விரும்பாமல் அப்படியே போட்டு விட்டு துணிகளை எடுத்துக் கொண்டு குளியலறையில் நுழைந்தாள்... அவளது உடலைக் கழுவும் அந்த ஷவர் அவளது உள்ளத்தைக் கழுவுமா என்ன?
மன்னிக்க வேண்டும் வாசகர்களே.. நிரு தனது உள்ளக் கதவைப் போலவே தனது குளியலறைக் கதவையும் அடித்துச் சாத்திவிட்டாள்.. இதற்கு மேல் அவளைத் தொடர முடியாது..
ஆனால் ஒரு உதவி செய்யுங்களேன்... அவள் வெளியில் வந்த பின்பு நீங்க அவளுக்கு மட்டுமல்ல... அவளைப் போலவே வாழ்ந்து கொண்டிருக்கும் இன்னும் எத்தனையோ நிருத்திகாக்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீங்க..? அப்புறம் ஒரு முக்கியமான விசயம்... அவள் ஏற்கெனவே நொந்து போயிருக்கிறாள்... அதனால அவளைக் காயப்படுத்தாம ஏதாவது சொல்ல விரும்பினா மட்டும் சொல்லுங்க பிளீஸ்...
முற்றும்
Tweet | |||
அற்புதமான எழுத்து நடை. ஏன் நீங்கள் தொடர்ந்து எழுதக்கூடாது? மனம் கனத்தது!
ReplyDeleteநன்றி சுகி. தொடர்ந்து எழுதத் தான் விருப்பம். ஆனால் எப்பொழுதும் எழுதக் கூடிய சூழ்நிலை இல்லை..முயற்சி செய்கிறேன்...
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதங்களது படைப்பு மிகவும் வரவேர்க்க தக்கது.அனால் இவை எல்லாம் கற்பனையில் மட்டுமே ரசிக்ககககூடியது நிய வாழ்கையில் அல்ல ஏன் என்றால் நிரு தனது கணவருக்கு செய்யும் துரோகத்தை விட யாருக்காக பணம் சேர்க்க வந்த்தாவோ அந்த அனுவிற்கு தனது அம்மா இந்த்த வழியில் தான் பணம் உழைத்தார் என தெரிந்தால் அதன் பின் அவர் உழைப்புக்கும் அவவின் பிரிவுக்கும் என்ன பலன். என்னதான் மனக்கதவை மூடினாலும் (தனது கணவன்) நிரு என்றோ ஒரு நாள் நல்ல நீரில் கால் நனைக்கும் போதும் தான் மிதித்த சாக்கடை தான் நினைவில் வரும் இந்த குற்ற உணர்வே நிருவை வாழ விடாது.............மன்னிக்கவும் இப்படி எழுதியதிற்கு தங்களின் படைப்பு எட்ட முடியாத சிகரம் ஆனால் எந்த ஒரு பெண்ணிற்கும் இந்த ஒரு நிலை வரகூடாது (நான் பெண் என குறிப்பிட்டது அணு என்னும் மகளை )மீண்டும் நான் எழுதியது தவறாக இருந்தால் மன்னிக்கவும் .................த.த.ர
This comment has been removed by the author.
ReplyDelete@ pavi-kobi உண்மை தான் சகோ. இந்த விடயத்தை நிருவும் அவளைப் போன்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான் என் பிரார்த்தனை..
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நன்றிகள்..தொடர்ந்தும் என் படைப்புகளைப் பாருங்கள்.. கருத்துக்களை எழுதுங்கள்..
சகோதரி உங்கள் படைப்புகள் அனத்தும் உண்மை சம்பவங்களாக இருப்பது நான் அறிந்ததே. நிருவுக்கு தன்னுடைய திறமையின் மீது நம்பிக்கை இருந்தாலே போதும் இத்தகைய வழியில் உழைக்காமல் நேர்மையான வழியில் உழைக்கலாம். எத்தனையோ ஊனமுற்றவர்கள் தன்னம்பிக்கையினால் முன்னேறும் போது எல்லாவகையிலும் சிறந்திருக்கும் இவள் இந்த வழியைத் தெரிந்தெடுத்திருப்பது மிகவும் வருந்த தக்கது. இதை நிருவைப் போன்ற ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொள்ள வேண்டும்.
ReplyDelete