Saturday, 3 March 2012

காதலைப் பாடு..


கவியெழுத வேண்டுமென்று கையில் கோலெடுத்தேன்
கவித் தளங்கள் எங்கும் காதல் மணக்கிறதே!!!..
எனக்கும் ஒரு ஆசை....எழுத வேண்டும் காதல் கவிதை...
எத்தனை முயன்றாலும் எண்ணியது நடக்கவில்லை...
எரிச்சலுற்று எழுதுகோலை எட்ட வீசினேன்....
எண்ணும் கணத்தினிலே என்முன்னே அந்த
எழில் வதனன் மன்மதன் தோன்றினான்...

ஆகா அழகு... காதல் அழகு
அற்புத அழகு.. ஆனந்தக் களிப்பு
அப்படியே கிறங்கிப் போய்
அடுக்க முனைந்தேன் வரிகளை
அணுகுண்டாய் அதிர்ந்தான்..

நிறுத்து!!!...

பருவ வயதின் பாலினக் கவர்ச்சியாம்- காதலை
பாடி புகழத் தான் எத்தனைபேர்...
இருமனம் சேருவதும்.. இன்பக் கவி பாடுவதும்..
இதயங்கள் உணர்கின்ற பொதுவான காதல்..-அதைப்
பாடாது விட்டாலும்.. பள்ளி மாணவர் முதல்
பல் விழுந்த, பழுத்த பெரியோர் வரை
பலரும் உணர்ந்திடுவர்...எனவே
பேசாமல் விட்டுவிடு பெண்ணே...என்றான்

பின்னே எதைப் பாட??
பின்னின வார்த்தைகள்....

பெண்ணே பாடு... காதல் பாடு...
மண்ணில் கொண்ட காதலைப் பாடு..
மானம் மீதினில் காதலைப் பாடு...
உண்மை உணர்வு உள்ளத்தில் கொண்டு
உரமாய் வீழ்ந்தவர் காதலைப் பாடு...
எண்ணிய இலட்சியப் பாதையில் கொண்ட
எண்ணி லடங்கா காதலைப் பாடு..
விண்ணக இறைவன் காதலைப் பாடு..
விரிந்த மலர் மேல் காதலைப் பாடு...

பஞ்சு நாய்க் குட்டியின் மேல்
பிஞ்சுக் குழந்தையின் காதலைப் பாடு..
நெஞ்சம் கவர்ந்த மெல்லிசை மீது
கொஞ்சமும் மாறாக் காதலைப் பாடு...
செய்யும் தொழிலில் காதலைப் பாடு..
சிறந்த கல்வியில் காதலைப் பாடு...
பெய்யும் மழை மேல் காதலைப் பாடு...
புதுமைப் புரட்சியில் காதலைப் பாடு...

பாரினில் இத்தனை காதல் இருக்க..
பாலினக் காதல் மட்டும் தான் சுவைக்குமோ??..அவன்
வேகமாய் வீசிய ஏளன வார்த்தையால்
வெட்கி மெல்லத் தலை குனிந்திட்டேன்...


7 comments:

  1. உண்மையான வரிகள் சகோ...!! யாருமே இதனை புரிந்து கொள்வதில்லை. அப்படி புரிந்து கொண்டு அன்பு செலுத்தும் நல் உள்ளங்களையும் தவறான பார்வையில் பார்க்கும் சமூகத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் சகோ...!!

    //உண்மை உணர்வு உள்ளத்தில் கொண்டு
    உரமாய் வீழ்ந்தவர் காதலைப் பாடு...
    எண்ணிய இலட்சியப் பாதையில் கொண்ட
    எண்ணி லடங்கா காதலைப் பாடு..
    விண்ணக இறைவன் காதலைப் பாடு..
    விரிந்த மலர் மேல் காதலைப் பாடு...
    //
    ..அருமையான வரிகள்...!!!

    ReplyDelete
  2. வணக்கம்

    இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள் அருமையா உள்ளது பதிவு
    பார்வைக்கு இங்கே http://blogintamil.blogspot.com/2013/04/blog-post_24.html

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. கவிதையில் இத்தனை காதலை பாடமுடியுமா?, என்று இன்று சிந்திக்கின்றேன்.

    ReplyDelete
  4. மீண்டும் வலையில் சந்திப்பது மகிழ்ச்சி!

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!