Friday, 7 December 2012

சிங்கள மக்களைத் தமிழ் மக்கள் எதிரியாக நினைப்பது சரியா?


சிங்கள மக்களைத் தமிழ் மக்கள் எதிரியாக நினைப்பது சரியா?
இந்தக்கேள்விக்கு என் தமிழகத்து நண்பர்கள் சிலருடனும் எனக்கு அடிக்கடி தர்க்கம் ஏற்பட்டுள்ளது.. இன்னும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது... அதனால் குறிப்பாக தமிழக நண்பர்களுக்கு இதை கூற விழைகிறேன்.
மக்கள் எப்பொழுதும் மக்கள் தான். அவர்களைத் தலைமை தாங்கும் அரசாங்கத்தைக்கொண்டு அல்லது சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நாம் எண்ணிக்கொள்ளும் சில குழுக்களைக்கொண்டும் அந்த மக்களைக் கணிப்பது முற்றிலும் தவறாகிறது. கால காலமாக நாம் பட்டு வந்த துன்பங்களுக்கெல்லாம் காரணம் சிங்கள பேரினவாத அரசாங்கமே தவிர மக்கள் அல்ல. எல்லா இனத்தவர்களிடையேயும் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று இருக்கத்தான் செய்கிறார்கள். அது தமிழர்களிடத்திலும் கூட இருக்கிறது மறுக்க முடியாத உண்மை. இப்படியிருக்க சில துவேசம் கொண்ட சிங்களக் குழுக்கள் பாமர மக்களைத் தூண்டி விடுகின்றனவாக இருக்கின்றன.
ஒருகாலமும் விடுதலைப்புலிகளைக் காணாத சில சிங்கள மக்கள், ஒப்பந்த காலப்பகுதியில் அவர்களைக் காண நேர்ந்த போது பெரும் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். ஏனென்றால் அவர்கள் பயங்கரவாதிகள் என்று விடுதலைப்புலிகளைப்பற்றிய சிங்கள அரசினதும் பேரினவாதக் குழுக்களினதும் பிரச்சாரங்களை கேட்டுப்பழகிய சிங்கள மக்கள், விடுதலைப் புலிகள் சாதாரண மனிதர்களைப் போன்று கூட இருக்க மாட்டார்கள், காட்டுவாசிகளைப்போலத் தான் இருப்பார்கள் எனத் தாமாகவே அவர்களைப்பற்றிய ஒரு கற்பனையை வளர்த்துக் கொண்டவர்கள் (கிராமப்புறத்து பாமர மக்கள்) நேரில் கண்டபோது... அவர்களின் பண்பாடும், கம்பீரமும், நற்பழக்க வழக்கமும் திகைக்க வைத்திருந்தது. இப்படித்தான் மக்கள்.... இன்னும் கூட பிரச்சாரங்களையும், மகாவம்சத்தின் கட்டுக்கதைகளையும் நம்பிக்கொண்டு தமிழர்களையே பயங்கரவாதிகள் என எண்ணும் மக்கள் கூட்டம் இருக்கவே செய்கிறார்கள். அறியாமையினால் இந்த அப்பாவி மக்கள் செய்யும் இதே தவறை நாம் செய்யலாமா? 
அவர்களுக்குப் புரிய வைப்பது நமது கடமை... அதை செய்ய முடியவில்லை என்றால் அவர்களை எதிரிகளாக எண்ணாமல், நாமும் அதே துவேச மனப்பான்மையுடன் நடந்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வது நல்லது. 
சிங்கள மக்களிடையேயும் தமிழ் மக்களின் போராட்டத்தை ஆதரித்தவர்களும் உயிர்த்தியாகம் செய்தவர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதுவே நமது முஸ்லிம் சகோதரர்களும் கூட போராளிகளாக இருந்து மாவீரர்களாகியிருக்கின்றனர் என்பதை நாம் நெஞ்சில் இருத்திக் கொள்ள வேண்டும். அதே வேளை, கூட இருந்து ஒரே கோப்பையில் உண்டு குடித்துவிட்டு கோடரிக்காம்புகளான தமிழர்கள் எமது வரலாற்றில் அதிகம். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் கூட `எமது போராட்டம் அரசுக்கெதிரான போராட்டமேயன்றி, சிங்கள மக்களுக்கெதிரான போராட்டம் அல்ல என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். அதையாவது நாம் ஏற்றுக்கொள்ள வேண்டாமா?
நீண்ட காலமாகப் போரினால் பாதிக்கப்பட்ட மனநிலையில், இழப்புகளும் கொடூரங்களும் எமது கோபத்தை ஒரு திசை நோக்கிச் சாய்ப்பது இயல்பு என்பதால், ஈழத் தமிழர்கள் சிங்கள மக்களை எதிரிகளாகச் சாடுவதைக்கூட ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். ஏனென்றால் அது வலியின் வெளிப்பாடு. ஆனால் அது கூட காலப் போக்கில் மாறிப்போக வேண்டும். தமிழர்களிடம் வீரம், மானம் மட்டுமல்ல மனித நேயமும் அவர்களிடம் தான் இருக்கிறது என்று இந்த உலகிற்குக் காட்ட வேண்டும் என்பதே எனது அவா. ஆனால் தமிழகத்தில் இருந்தும் தமிழ் மக்கள் சிங்கள மக்களைப் பெரும் எதிரிகளாகப் பார்ப்பதும் விமர்சிப்பதும் மிகவும் வருத்தத்திற்குரியது. அரசியல்வாதிகள் தமது அரசியல் லாபங்களுக்காக மக்களை உசுப்பேத்தி விடுவதும், மக்கள் உணர்ச்சி வேகத்துக்குட்பட்டவர்களாக என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் வாய்க்கு வந்தபடி கொட்டித் தீர்க்கிறார்கள்.
மீனவர்களின் பிரச்சனையை இந்த இடத்தில் சிலர் முணுமுணுப்பது புரிகிறது. இது தொழில் ரீதியான பிணக்கு. இன்று இதே இடத்தில் இலங்கைத் தமிழன் ஆட்சி நடத்தினால் இதே மீனவர்களின் பிரச்சனை இலங்கைத் தமிழ் மீனவர்களுக்கும், இந்தியத்தமிழ் மீனவர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். இலங்கையிலேயே கூட இத்தகைய தொழில் ரீதியான பிணக்குகள் இரு வேறு கிராமங்களுக்குள்ளேயே அப்பப்போ நடக்குமே... 
இனம் என்பதைத் தாண்டி நாம் எல்லோரும் மனிதர்கள் என்ற மன நிலையை ஏன் குழிதோண்டிப் புதைத்து விடுகிறோம்? மனிதர்களை மனிதர்களாக மதிக்க மறுக்கிறோம்.. சிங்கள அரசாங்கம் செய்வதற்கெல்லாம் வாய் மூடி மௌனித்திருப்பதால் சிங்கள அப்பாவிப் பொது மக்களும் தமிழர்களுக்கு எதிரிகள் என்றால், தாய்த் தமிழக நெஞ்சங்களும் ஒரு காலப்பகுதியில் இப்படி மௌனித்து இருந்தார்களே அதை மறந்து விடலாமா?. 
`வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு
...
எத்தனை எத்தனை இங்கு நடந்திட எங்களின் சோதரர் தூக்கமெல்லோ..`
என்று உங்களை நோக்கியும் நாங்கள் அழுது புலம்பினோமே... அப்பொழுது நீங்கள் விழித்துக் கொள்ளவில்லை... எல்லாம் முடிந்த பின்னர் விழித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும் எங்கள் சகோதரர்களாக நாங்கள் ஏற்றுக்கொள்கிறோமே.. அது தொப்புள் கொடி உறவு என்கிறீர்களா? அப்படியானால், அந்த நேரத்தில் தொப்புள் கொடி உறவுகளாலேயெ எமக்கு கைகொடுக்க முடியவில்லை என்றால்... எதிர்த்து நிற்கும் அரசிற்கு கீழ்ப்பட்ட இந்த சிங்களப் பொது மக்கள் என்ன செய்வார்கள். அரசியல்வாதிகளால் இவர்கள் அறியாமைக்குள் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதை எப்பொழுது நாம் புரிந்து கொள்ளப்படுகிறோம்? அதே நிலையில் தான் இன்று சிங்கள மக்களும் இருக்கிறார்கள். அவர்களும் என்றோ ஒரு நாள் விழித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையோடு முயற்சி செய்வோம்.
மனித நேயத்துடன் நடப்போம்... மனிதர்களை இனம், மதம் என்ற கண்ணாடிகளைக் கழற்றி விட்டு... மனிதர்களாகவே பார்ப்போம்... மனிதர்களாகவே நடப்போம்....


இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

1 comment:

  1. நல்ல ஒரு விடயமும் நல்ல சந்தர்பவும்

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!