Tuesday, 4 December 2012

நடத்தை கெட்டவளா? இப்படி சொல்லீட்டா எப்படிங்க....


வாழ்க்கையின் பல இடங்களிலும் அடிக்கடி அடி வாங்குபவள் பெண் தான். பெற்றோரின், உறவுகளின் கைக்குள் வளரும் அவள், திருமணம் என்ற சடங்கினுள் புகுத்தப்பட்டதும் பல விடயங்களில் கைவிடப்படுகிறாள்... அல்லது கவனிப்பாரற்று போகிறாள்.
கடந்த 7-11-2012 அன்று விஜய் தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை பார்த்ததிலிருந்து இந்த எண்ணம் என்னை உலுப்பிக் கொண்டே இருந்தது. தன் வாழ்க்கையில் தவறும் பெண்ணை நடத்தை கெட்டவள் என்று எத்தனை இலகுவாக கூறி விடுகிறார்கள்.... அவள் ஏன், எப்படி, யாரால் அப்படியானாள் என்பதைப் பற்றி யாரும் பேசத் தயாரில்லை. 
தன் கணவனிடமிருந்து கிடைக்காத அன்பும் அரவணைப்பும் இன்னொருவரிடம் கிடைக்கும் போது, அவர்கள் மனம் பாசத்தில் ஆரம்பித்து பின்னர் மெல்ல மெல்ல தடம் மாறிப் போவது இயல்பாகிறது. ஒரு பெண் அப்படி நடப்பது சரி என்று நான் வாதாடவில்லை. தவறு தவறு தான். ஆனால் அந்த நிலைமைக்குப் பெண்ணை இட்டுச் செல்வது யார்? 
ஒரு குடும்ப பெண் தவறுகிறாள் என்றால் அதற்கு முழு முதல் பொறுப்பு அவள் கணவன்தான். கணவன் முதலில் தன்னுடைய நடத்தை, அவளோடு கொண்டிருக்கும் உறவு என்பனவற்றில் சரியாக இருக்குமிடத்து, அவனது மனைவி தவறான பாதையில் போனால். அவளை நடத்தை கெட்டவள் என்று சொல்வதில் நியாயம் இருக்கிறது. கணவன் இருந்தும் பிள்ளைகள் இருந்தும், தன் குடும்பத்துக்குள்ளேயே உணர்வு ரீதியாக தனித்து விடப்படும் பெண்களின் நிலை என்ன?
பெண் மென்மையானவள் என்றும், இளகிய மனம் படைத்தவள் என்றும் கூறும் இந்த சமூகம், அதே காரணங்களை  தமக்கு சாதகமாக்கிக் கொள்ளும் ஆணை விட்டு விட்டு.. பெண்ணை நடத்தை கெட்டவள் என்று தீர்ப்புக் கூறி விடுகிறது...
இயல்பிலேயே மெல்லிய மனம் படைத்த பெண்களே மேலும் மேலும் பாதிக்கப்படுகிறார்கள். ......
அன்று விஜய் தொலைக்காட்சியின் ”சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சியைப் பார்த்த போது அந்த பெண்ணின் அப்பாவித்தனமும் அறியாமையும் என் மனதைத் தைத்தது. போலீஸ் ஸ்டேசனில் பலர் முன்னிலையில் வைத்து நடத்தை கெட்டவள் என்று சொன்னார்களே என்று பரிதவிக்கிற அவள், தொலைகாட்சி வரை வந்து, அதைப் பார்க்கும் கோடிக் கணக்கான தமிழர்களிடையே தன்னை நடத்தை கெட்டவள் என்ற பார்வையை தோற்றுவித்து சென்ற அவளின் அறியாமையை என்னவென்று சொல்வது... அந்தப் பெண்ணைப் பார்த்து நடுவர் (நிர்மலா பெரியசாமி அவர்கள்) “அது உண்மை தானே..” என்று திரும்ப திரும்ப கேட்ட போது... அவள் அந்த சங்கடத்திலிருந்து தப்புவதற்குக் காட்டிய அவசர உணர்வின் வெளிப்பாடு...அப்பப்பா... கொடுமைங்க...  நடுவர் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது என்று தோன்றியது... அதைவிட தன் (பொருந்தா) காதலன் திருமணம் செய்து மனைவியோடு வாழ்ந்துகொண்டிருக்கும் போது அவன் எனக்கு வேண்டும் என்று குழந்தை போல் அடம்பிடிக்கும் செயல்.. பரிதாபம்... என் மாமா தான் வேண்டும் என்ற இன்னொரு இளம் பெண்ணின் கதறல்... ஆனால் இத்தனைக்கும் காரணமான அந்த இரண்டு ஆண்களுக்கும் (அவள் கணவன், காதலன்) என்ன பாதிப்பு.. அவர்களுக்கு இது இடையில் ஏற்பட்ட சிறு குழப்பமே.. பின்னர் ஜாலியான இன்னொரு திருமண வாழ்க்கை... என்னங்க இது... இதை கேட்க யாருமே இல்லியா?
இந்த சமூகத்தில் நடத்தை கெட்டவன் என்று முத்திரை குத்தப்பட்ட ஆண்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அது எப்படீங்க? ஒரு பெண் தனியாகவே விபச்சாரம் பண்ண முடியுமா? நாம் எப்போதுமே வில்லை விட்டுட்டு அம்பை நோகும் சமுதாயமாகவே இருக்கிறோமே...
இந்தத் தருணத்தில், சில நாட்களாக உலகத் தமிழினத்தை சற்று துடிக்க வைத்த ஈழத்து வித்தியா ராணியின் பேட்டி ஞாபகத்துக்கு வருகிறது... இதைக் கேட்ட என் நண்பன் ஒருவர்... “சிங்களவங்களை எல்லாம் வெட்டிக் கடலில் எறிந்தால் தான் என் மனம் ஆறும் என்று மீசை துடிக்க கர்ச்சித்தார்... அவரைப் போல உணர்ச்சியின் விழிம்பில் நிற்கும் என் அருமைத் தமிழ் சகோதரர்களுக்கும்,  இதை ஒரு அரசியல் பரப்புரைக்காக யாரேனும் பயன்படுத்த நினைத்தால் அவர்களுக்கும் என் நண்பருக்கு கூறிய என் கருத்தையே...கூற விரும்புகிறேன்.
இந்தக் கதை ஒரு வேளை உண்மையானால், வித்தியா ராணி என்ற பெண் விபச்சாரியாவதற்கு சிங்களவன் தானா முதல் காரணம்? அவளைத் தெரிந்தவர்கள் (தமிழர்) அவளை ஆதரிக்கவில்லை.. தொழில் கொடுக்கவில்லை... பயந்தார்களாம்.. இதை வித்யாராணியே தன் பேட்டியில் குறிப்பிடுகிறாள். சரி இதற்குப் பின் அவளை அந்தத் தொழிலுக்கு அழைத்தது யார்? (இங்கே அவளைக் கற்பழித்ததாகக் கூறப்படும் மிருகங்களை அல்ல.. இறுதியில் அவள் உடலுக்கு விலைபேசிய மிருகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறேன்... ) அவனும் ஒரு தமிழன் தான்.. இதில் வேடிக்கை என்னவென்றால்.. உணவு கொடுக்கப் பயந்தார்கள்... தொழில் கொடுக்கப் பயந்தார்கள்.. அவளோடு சயனிக்க மட்டும் பயப்படவில்லையா...? யாரை கேட்பது?
தனியொருவனுக்கு உணவில்லையேல் இந்த செகத்தினை அழித்திடுவோம் என்று பாடிய பாரதி இப்போது யாழ் மண்ணில் இருந்திருந்தால் வித்யாராணி விலை போயிருக்க முடியாது... ஆனாலும் இந்தப் பேட்டி கொஞ்சம் சஞ்சலத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது... இத்தகைய அவலம் ஈழ மண்ணில் நடக்கும் சாத்தியக்கூறு இருக்கிறது எனினும்... ஒரு ஒழுக்கம் கட்டுப்பாட்டுடன் நெருப்பாகி நிமிர்ந்த ஒரு போராளியினால் இதை ஒரு தொழிலாக செய்ய முடியுமா?... என என் மனம் திரும்பத் திரும்ப ஓலமிடுகிறது.... இவர்களை எல்லாம் இத்தகைய வழிகளில் தெரிந்தோ தெரியாமலோ தள்ளிவிட்டுவிட்டு அவர்களை நடத்தை கெட்டவர்கள் என்று முடிசூட்டுதல் வேறு....
சில கணவர்கள் சொல்வார்கள்.. நான் அவளுக்கு என்ன குறை வைத்தேன்... அவள் கேட்டதெல்லாம் வேண்டிக் கொடுத்தேனே... நகைகள் எல்லாம் கொடுத்தேனே... பட்டுச்சேலை வாங்கிகி கொடுத்தேனே.. கணவர்களே உங்கள் மனைவி மாற்றனிடம் உடுபுடவையும் நகையுமா கேட்டுப் போகிறாள்.. நீங்கள் கொடுக்கத் தவறியதைத் தானே தேடிப் போகிறாள்.. எனவே இத்தகைய சப்புக்கட்டலை விட்டு விட்டு.. நீங்கள் கொடுக்கத் தவறுகிறது என்ன என்று அவதானியுங்கள்... உங்கள் அன்பையும் ஆதரவையும் வேறு யாரும் கொடுக்க முடியாத அளவுக்கு கொடுத்துப் பாருங்கள்.. அவள் உங்களைச் சுற்றிச் சுற்றி வருவதை...
அப்பாவிக் கணவர்கள் என்னை முறைக்கிறது புரியுது... இதோ உங்க பக்கம் வந்துட்டேங்க...
அப்பாவிக் கணவர்களைப் பின்னி எடுக்கிற அரியாத்தைகளுக்கு.. (மேன்மை பொருந்திய அரியாத்தை அவர்களே.. மன்னிச்சுடுங்க...இந்த பொண்ணுங்க எல்லாம் தங்களை அப்படித்தான் நினைக்கிறாங்க.. அதனால உங்க பெயரைப் பயன்படுத்த வேண்டி வந்துட்டுது... ) எத்தனையோ பெண்கள் தங்கள் கணவர்கள் தங்களை மதிப்பதே இல்லை என்று ஏங்கிக் கொண்டிருக்க.. நீங்களோ உங்கள் கணவர்களை  மதிக்காமல், அன்பு காட்டாமல் நடப்பது கூட அவர்கள் உங்களை விட்டு விலகி விடும் அபாயத்தை ஏற்படுத்துகிறீர்கள்... ஆகமொத்தம்.. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவரவர் வாழ்க்கைத்துணைக்கு அளவற்ற அன்பு செலுத்தவேண்டியவர்களே... அடுத்தவரை குற்றம் சாட்டுவதை விடுத்து, கணவனோ மனைவியோ குடும்பத்தை விட்டு நெறி பிறழாமல் வாழ வாழ்க்கைத் துணையே பலமாக இருக்க வேண்டும்... என்னங்க... வீட்டுக்கு கிளம்பீட்டீங்களா... அப்படியே அன்பை அள்ளிட்டு போங்க....  


இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

2 comments:

  1. பாராட்டு க்கள் உங்கள் ஆக்கத்துக்கு .. நீங்கள் யாழுக்கு கிடைத்த ஒரு முத்து ..தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு நன்றி நிலாமதி..

      Delete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!