Saturday, 9 February 2013

இலட்சியப்பாதையில்...... தொடர் 2


இலட்சியப்பாதையில் தொடர் 2


இப்படியாக இவர்கள் காதல் வளர்ந்து இரண்டு ஆண்டுகளைத் தாண்டியது.. சுமன்  போது ஒருநாள்...அது நடந்தது............

காலை வேளையில் ஊரார் பலரும் கடற்கரையில் பரபரப்பாக ஒன்றுகூடினர். நேற்று இரவு நடந்த `கன்போட்` தாக்குதல் தான் அந்தப் பரபரப்பிற்குக் காரணம்.. இரவு வலைபடுக்கச் சென்றவர்கள் சிலர் இன்னும் திரும்பி வரவில்லை. பயத்தோடும் கண்ணீரோடும் கரையில் காத்திருந்தவர்களுக்கு அந்தக் கடலலைகள் சொன்ன சேதி ... இரவு எட்டு மீனவர்களின் குருதியும், உயிரும் தன் மடியில் சங்கமித்துப் போயின என்பது தான்.. இதைக் கேள்விப்பட்டு இடிந்து போனவர்களில் சுமனும் ஒருவன்.... ஆம்.. சிங்களக் கடற்படையினரின் துப்பாக்கிகளின் கோரப்பசிக்கு இரையாகிப் போன அந்த எட்டுப் பேரில் சுமனின் உயிர் நண்பன் கீதனும் அடங்கினான்...


ஈழத்தைப் பொறுத்தவரையில் துப்பாகிகளின் சன்ன நாவுகள் ஏழைகளும் அப்பாவிகளுமான தமிழர்களின் உயிர்களைச் சுவைப்பதையே தம் இலக்காகக் கொண்டிருந்தன போலும்... தலையில் சன்னம் பாய்ந்த நிலையில், கண்கள் மேலே செருகியவண்ணம் கட்டுமரத்தோடு கரையொதுங்கிய தன் நண்பனின் தோற்றம் கண்டு கலங்கித்  துடித்தான் சுமன்.... சுமார் இரண்டு மூன்று வாரங்கள் அவன் நடைபிணமாகத்தான் திரிந்தான்.... நண்பனின் இழப்பை எப்படி ஈடு செய்வது, அவனது பெற்றோரின் வேதனையை எப்படி தீர்ப்பது... என இதே சிந்தனையாகவே அவனது உள்ளம் அலைந்தது.... பல நாட்கள் ராஜினியை சந்திக்கவே மனமின்றி இருந்தான். அந்தப் பருவ வயதில் எத்தனையோ வாலிபர்கள் தம் உயிரையும் உணர்வுகளையும் தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக இழந்து கொண்டிருக்கும் போது.... காதல், அதனால் ஏற்படும் சந்தோசம் எல்லாமே சாத்தியமற்ற ஒன்றாக, அவசியமற்ற ஒன்றாகத் தோன்றியது.


அவனது நிலையைக் கண்ட ராஜினியின் மனநிலையோ மிகவும் குழப்பத்துள் மூழ்கியது.... நண்பனின் இழப்பால் வருந்திக்கொண்டிருந்த சுமனின் நிலையை எண்ணி ராஜினி கவலைப்பட்டால்.... “இந்த சுமன் ஏன் இப்பிடி பேயறைஞ்ச மாதிரி இருக்கிறார்...” , “கீதனுக்கு ஏதோ போதாத காலம்... எல்லாம் நடந்து முடிஞ்சுது... இனி அதையே யோசிச்சு கொண்டிருந்து என்ன செய்து? சுமனை எப்படி இதில இருந்து மீட்கிறது?” என தனக்குள் எழுந்த பல கேள்விகளுக்கு விடை காணமுடியாமல் தவித்தாள்.... இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென நினைத்தவளாக அவனைத் தனியாக சந்திக்கும் தருணத்துக்காகக் காத்திருந்த போது... அது தானாகவே வந்தது...

ராஜினி வழக்கம் போல தான் அமர்ந்திருக்கும் அந்த உயர்ந்த பாறையின் மேல் அமர்ந்து கடலையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளது மனதுக்குள் பலவாறு ஓங்கி அடித்துக்கொண்டிருந்த எண்ண அலைகள்ராஜி...” என்ர அழைப்பில் அமைதியாகின. திடுக்குற்று திரும்பிய  அவளின் அருகில் சுமன் நின்று கொண்டிருந்தான்.... சோர்ந்து போன கண்கள் சோகத்தை நிறைத்துக் கொண்டிருந்தன... கலைந்து போய் கடற்காற்றில் ஆடும் கேசம் அந்த சோகத்தை இன்னும் அதிகப்படுத்திக் காட்டுவது போலிருந்தது... எதிர்பாராமல் கிடைத்த அந்த சந்திப்பு அவளுக்குள் இன்ப அலைகளை ஒரு கணம் தோற்றுவித்தாலும், அவனது உடைந்த நிலையைக் கண்டதும் அது செயலிழந்து போனது.


பக்கத்திலிருந்த சின்னப் பாறைக் கல்லின் மீது அமர்ந்து கொண்டான். தொண்டை அடைத்தாற்போல எதுவும் பேச வராமல் தலை கவிழ்ந்து மணல் தரையைப் பார்க்க... ராஜினி தான் அந்த அமைதியைக் கலைத்தாள்...
சுமன்... ஏன் இப்பிடி இருக்கிறீங்கள்... நீங்கள் எல்லாரையுமெல்லோ கவலைப்படுத்துறீங்க...?”
ம்..... ” வெறும் ஒற்றை ஒலி மட்டுமே அவனிடமிருந்து பதிலாக வந்தது.
என்ன..... நான் சொல்றது விளங்கேல்லையா? என்னைப் பற்றிக் கொஞ்சமாவது யோசிக்க மாட்டீங்களா?... நீங்க கவலையா இருந்தால் நான் எப்பிடி சந்தோசமா இருக்கிறது?....” என்று புலம்பியவளை சுமன் நிமிர்ந்து பார்த்தான்....

எனக்கு விளங்குது ராஜி... ஆனால் என்னால கீதனை மறக்க முடியேல்ல... அவனைக் கடைசியாப் பார்த்த அந்தத் தோற்றம்.... அதை எப்பிடி.. எப்பிடி மறக்கிறது????” அவன் குரல் தழுதழுக்க கண்கள் உடைப்பெடுத்தன...

அதுக்கு என்ன செய்ய முடியும் சுமன்... எல்லாரும் சாகிறது தானே... சுமனுக்கு ஏதோ போதாத காலம்..... அவன்.......” 
ராஜி சொல்லி முடிப்பதற்குள்ராஜி....” என்ற அதட்டல் அவளைத் திகைக்க வைத்தது.

ராஜி... நீ யோசிச்சு தான் கதைக்கிறியா?....’’ 

இப்பொழுது கலங்கியிருந்த அவனது கண்கள் சிவந்து நெருப்புப் பொறி பறப்பது போல் பயமூட்டியது....

இது இயற்கையான சாவு எண்டால் நீ சொல்லுறத ஏற்றுக் கொள்ளலாம்... ஆனால் இது தமிழனுக்கே போதாத காலம் என்று தான் எடுத்துக் கொள்ள வேணும்.... எங்கட கடல்ல நாங்கள் சுதந்திரமா திரிய ஏலாது எண்டதைத் தான் கீதன்ர சாவு எனக்கு சொல்லுது....”....
அவன் மூச்சின் வெப்பம் கடற்காற்றில் கரைந்து கொண்டிருந்த்து....

நீங்கள் சொல்றது உண்மை தான்... ஆனால் அதுக்கு கோப்பட்டு என்ன செய்யேலும் சுமன்... எங்களால என்ன செய்ய முடியும்.... அதுக்குத் தானே இவ்வளவு போராட்டம் நடக்குது...” என்றாள் ராஜினி...

“ம்ம்... அதைத்தான் நானும் யோசிச்சுக் கொண்டிருக்கிறன்... நாங்கள் என்ன செய்ய முடியும்... இதுக்கு மேலயும்... ஒண்டும் செய்யாமல் இருக்கக் கூடாது... ஏதாவது செய்ய வேணும்...” 

 சுமன் என்ன சொல்ல வருகிறான் என்பதைப் புரிந்தும் புரியாமலும்... குழப்பமாக சுமனைப் பார்த்தாள் ராஜினி....

போராட்டம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்குது... நாங்கள் ஒரு பக்கம் எங்கட தனிப்பட்ட வாழ்க்கையை சந்தோசமா அனுபவிக்கிறதைப் பற்றி மட்டும் யோசிச்சுக் கொண்டிருக்கிறம்..... ராஜினி... நீ என்னைப் புரிஞ்சு கொள்ளுவாய் எண்டு நான் நம்புறன்.... உன்னை நான் நேசித்தது எவ்வளவு உண்மையோ அவ்வளவுக்கவ்வளவு... கீதனை.... இந்தக் கடற்கரையை... நான் வாழ்ற இந்த மண்ணை நேசிக்கிறன் எண்டதை எனக்கு இப்ப தான் உணர முடியுது.....” 

மூச்சு விடாமல் பேசி நிறுத்தினான் சுமன்.
மனதில் ஏதோ விபரீத உணர்வு மேலிட ராஜினியின் வார்த்தைகள் திக்கித் திணறி வெளி வந்தன....

சுமன்.. நீங்க.... என்ன சொல்றீங்க... நீங்கள் கதைக்கிறதைப் பார்த்தால் எனக்கு பயமா இருக்கு....” 

ராஜினியின் வார்த்தைகளைக் கேட்டதும் மெல்ல நகைத்தான் சுமன்...  இப்பொழுது அவனது குரலில் ஒரு தெளிவு வந்தது....

ராஜி.. நீ நினைக்கிறது சரிதான்.. இப்ப தான் நான் ஒரு தெளிவான முடிவு எடுத்திருக்கிறன்... அதை உன்னட்ட சொல்லிட்டுப் போகத்தான் வந்தனான்.... நான் இயக்கத்துக்கு போகப்போறன்... அது தான் நான் கீதனுக்காகவும், அவனைப்போல ஒவ்வொரு நாளும் கொல்லப்படுற அப்பாவிப் பொது மக்களுக்காகவும் நான் செய்யக் கூடிய ஒரு நல்ல விசயம்...அதுக்காக நான் நேசித்த உன்னைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கு....” 

அந்த வார்த்தைகள் ராஜினியின் காதுகளில் விழுந்த மாத்திரத்திலேயே.. அவளிடமிருந்து விசும்பல் ஒலி புறப்பட்டது...

சுமன்... சுமன்... அப்ப நீங்கள் என்னை விட்டிட்டு போகப் போறீங்களோ... அப்ப நீங்கள் என்னை ’லவ்’ பண்ணினது பொய்யோ...ஏன்...ஏன் இப்பிடி சொல்றீங்கள்....”
சுமன் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அவள் நாடியைப் பிடித்து முகத்தை நிமிர்த்தி கண்களைத்  துடைத்தான்....

“ராஜி... பிளீஸ்... என்னை புரிஞ்சு கொள்... என்ர காதல் உண்மையானது... ஆனால்.. இந்த நிலமையில என்னால சுயநலமா யோசிக்க முடியேல்ல... நான் உன்னை ஏமாத்தேல்ல.... போராட்டத்துக்காக என்ர காதலைத் தியாகம் செய்றன்.... கெதியில எங்களுக்கு ஒரு விடிவு வரும்... அப்ப நானும் நீயும் இப்பிடியே இருந்தால் ஒன்று சேருவம்... அல்லது விதியின் படி மாற்றங்கள் வந்தால் அதையும் ஏற்றுக் கொள்ளுவம்.... இதுக்கு மேல நான் இதில நிண்டால் பார்க்கிறவ பிழையா நினைப்பினம்... நான் போறன்... சொல்லிவிட்டு விடுவிடென நடந்து கொண்டிருந்தவனை ராஜினி கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள்...-இலட்சியத்தின் பாதையில் தொடரும்....


முன்னய தொடர் படிக்காதவர்களுக்காக.............................


இலட்சியப்பாதையில் தொடர் 1 இற்கு இங்கே கிளிக்குக


இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

2 comments:

 1. இலட்சியம் ஒவ்வொருதருக்கும் ஒவ்வொருவிதமா இருக்கும் சிலருக்கு ஒன்றுமே இல்லாத ஏனோதானோ என்னும் வாழ்வு. இங்கு சுமனின் இலட்சியம் உன்னதமானது. அதற்காக ராஜியின் நிலை புரியாமல் இல்லை. காதலா அல்லது இப்படி அடிமைத்தனத்தை எதிர்க்கும் முடிவா என்னும் போது இரண்டாவதுதான் முடிவு. அதுவே இயல்பு.

  நல்ல வசன அமைப்பு, இயல்பான உரை நடை எழுத்து. நன்றாக இருக்கிறது.

  வண்ணமயமான காட்சிகள் கண்ணில் தோன்ற இன்னும் கொஞ்சம் இயற்கையை வர்ணித்து எழுதுங்கள் ...

  தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ இளமதி...மிக்க நன்றி..
   உங்கள் கருத்துக்கள் எனக்கு ஆர்வமூட்டுது... முக்கியமா நீங்கள் தரும் ஆலோசனை அடுத்த தொடரை மேம்படுத்த உதவும்..
   ///வண்ணமயமான காட்சிகள் கண்ணில் தோன்ற இன்னும் கொஞ்சம் இயற்கையை வர்ணித்து எழுதுங்கள் ... /// நிச்சயமாய் இதைக் கருத்தில் எடுக்கிறேன்...

   Delete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!