Sunday, 10 March 2013

ஈழத்து அன்னையர்....இன்று அன்னையர் தினம்...
உலகெங்கும் அன்னையர் மகிழும் நாள்..
உதரத்தில் சுமந்தவரை போற்றும் நாள்...
உத்தமத் தாய்களின் நாளிதனில்
உண்மை மகிழ்வைத் தொலைத்துவிட்டு
உலகுக்காய் தினம் சிரிக்கும்- தாய்
உள்ளங்களை நினைக்கின்றேன்....தாம்
ஈன்ற பிள்ளைகளின் நிலையறியா
ஈழத்து அன்னையரை நினைக்கின்றேன்..

வருவேன் என்று சென்றவன் வரவில்லை...
யார் கொண்டு சென்றாரோ?....
பருவ மங்கையாய் பார்த்துப் பார்த்து வளர்க்க
பாதகர்கள் சீரழித்தாரே என் பாசக்கிளியை......
கைது செய்து கொண்டு சென்றார்
காலங்கள் கடந்தும் விடுதலை இல்லை..
குருதி வெளியேற, தண்ணீர் கேட்டு
கதறித் துடித்து என் மடியில் மரித்தானே.....
கண்மூடித் திறக்கும் முன்னே என்
கண்முன்னே சிதறிச் செத்தானே ....
களத்திலே வீரனாகி மடிந்தான்.. அவன்
கனவுகள் மெய்ப்படுமா இல்லையா.. – இன்னும்
ஓடித் திரிந்தவன் அங்கமிழந்து
ஓய்ந்து போனானே...

இப்படி
ஒரு போதும் ஆறாத வடுக்களோடு
இன்னும் தன் பிள்ளைகளை நினைத்தேங்கும்
ஈழத்துத் தாய்மாரை நினைக்கின்றேன்....
இவர்களும் மகிழும் ஒரு அன்னையர் தினம்
இனியும் வருமா? எப்போது?

17 comments:

 1. இந்த கொடுமைகள் விரைவில் மாற வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாக.. ஆனால் நிகழ்ந்து முடிந்தவை.. மாற்றமுடியாத வலிகள்..

   கருத்துக்கு மிக்க நன்றி

   Delete

 2. வணக்கம்!

  ஈழத்துத் தாய்மனம் எய்திய துன்பமாம்
  ஆழத்தை யாரிங்[கு] அளந்துரைப்பார்? - வாழ்வின்னல்
  மண்ணில் மறைந்திடுமோ? நெஞ்சம் மறந்திடுமோ?
  கண்ணில் எரியும் கனல்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா! தங்கள் வருகையையிட்டு என் வலைப்பூ பெருமையால் மலர்கிறது. தொடர்ந்தும் வருகை தந்து என் கவிக்கிறுக்கல்களை கண்டு செல்லுமாறு அழைக்கிறேன்.
   அழகிய கவி வரியால் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.. :))

   Delete
 3. மனம் கனக்கிறது சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்துக்கு நன்றி அண்ணா!

   Delete
 4. மனம் கனக்கும் பகிர்வு !நன்றி பகிர்வுக்கு

  ReplyDelete
 5. //களத்திலே வீரனாகி மடிந்தான்.. அவன்
  கனவுகள் மெய்ப்படுமா இல்லையா.. – இன்னும்
  ஓடித் திரிந்தவன் அங்கமிழந்து
  ஓய்ந்து போனானே...//

  பயம் , ஏக்கங்கள், இழப்புக்கள் , துன்பங்களோடு போராடும் ஈழ அன்னையர்களின் உள்ளப் பிரதிபலிப்பினை அருமையான வரிகளில் உணர்த்தி இருக்கின்றீர்கள் சகோதரி....பகிர்வுக்கு நன்றி...!!!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

   Delete
 6. //களத்திலே வீரனாகி மடிந்தான்.. அவன்
  கனவுகள் மெய்ப்படுமா இல்லையா.. – இன்னும்
  ஓடித் திரிந்தவன் அங்கமிழந்து
  ஓய்ந்து போனானே...//

  பயம் , ஏக்கங்கள், இழப்புக்கள் , துன்பங்களோடு போராடும் ஈழ அன்னையர்களின் உள்ளப் பிரதிபலிப்பினை அருமையான வரிகளில் உணர்த்தி இருக்கின்றீர்கள் சகோதரி....பகிர்வுக்கு நன்றி...!!!

  ReplyDelete
 7. கோதை...

  வதைபடும் எம் மாதர் கதை கொண்ட கவிதை!
  சிதைகிறது நெஞ்சம்... வலி நிறைந்த வரிகள் தந்தாய் மகளே...

  அன்னையர்க்கு ஒருதினமாம் அவனியிலே எதிரி
  அங்குஎம் பெண்மையைக் கொல்கிறான் தமிழீழத்திலே
  சிந்தனை சிறிதேனும் இல்லாமல் வெளிநாட்டில் சிலமாந்தர்
  வெந்ததை உண்டு வீணாகிப்போவதென்ன...

  ReplyDelete

 8. வலிதந்த வார்த்தைகள்! கல்லில் செதுக்கும்
  உளிகுத்தும் நற்கருத்து! உண்மை - பளிங்குமன
  ஆழத்தில் வீழ்ந்தவலி போகுமோ! ஆறுதல்கள்
  ஈழத்து அன்னையர்க்கு ஏது?

  -

  ReplyDelete
  Replies
  1. கவியாலே கருத்து சொன்னீங்க... மிக்க நன்றி சகோ.

   Delete
 9. ஆம்... மனதைக் கனக்க வைத்து விட்டது பூங்கோதையின் எழுத்து! இந்நிலை மாற வேண்டுமென்று துடிக்கும் எண்ணற்ற தமிழ் மக்களின் முயற்சிகள் வீணாக, இதை வைத்து பணமும், பெயரும் பெற விரும்பி அரசியல் செய்பவர்களால் நிலைமை இன்னும் மோசமாகவே இருப்பதைக் கண்டு மனம் பொருமுகிறது! வயிறு எரிகிறது! ஆறுதல் சொல்ல வார்த்தைகளில்லைம்மா என்னிடம்!

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் அண்ணா, அவர்களின் அவலங்களை வைத்து இலாபம் சம்பாதிப்பவர்கள் தான் அதிகம்.. எது எப்படியிருந்தாலும்.. இந்தத்தாய்மாரின் வேதனைகளைக் காலத்தாலும் மாற்ற இயலாது அண்ணா.. பின்னூட்டத்துக்கு நன்றி அண்ணா...

   Delete
 10. ஈழத்து அன்னையரின் உண்மை நிலையினை, எடுத்துக் காட்டியது தங்கள் கவிதை.... உண்மையில் மகனின் நிலை தெரியாது தவிக்கும் தாயாரின் நிலை மிகவும் பரிதாபமானது........

  ஈழத்தின் விடுதலைக்காய் தங்கள் பிள்ளைகளை தியாகம் செய்த‌ அன்னையரின் தியாகத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை.... ஈழத்தில் கண்ணீரோடும், கவலையோடும் இருக்கும் ஒவ்வொரு அன்னையருக்கும் என் சிரம் தாழ்ந்த‌ வணக்கங்கள்....

  ReplyDelete
 11. ஈழத்து அன்னையரின் உண்மை நிலையினை, எடுத்துக் காட்டியது தங்கள் கவிதை.... உண்மையில் மகனின் நிலை தெரியாது தவிக்கும் தாயாரின் நிலை மிகவும் பரிதாபமானது........

  ஈழத்தின் விடுதலைக்காய் தங்கள் பிள்ளைகளை தியாகம் செய்த‌ அன்னையரின் தியாகத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை.... ஈழத்தில் கண்ணீரோடும், கவலையோடும் இருக்கும் ஒவ்வொரு அன்னையருக்கும் என் சிரம் தாழ்ந்த‌ வணக்கங்கள்....

  ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!