Sunday, 4 November 2012

நேற்றைய தினம் நடாத்தப் பட்ட புலம்பெயர் தமிழ் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை பற்றிய ஒரு பகிர்வு...நேற்று லண்டனில், ஹௌன்சிலோ என்ற இடத்தில் தமிழர் மேம்பாட்டுப் பேரவை- பிரித்தானியாவினால் நடாத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சிப் பட்டறையில் நானும் ஒரு தமிழ் ஆசிரியராகக் கலந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. காலை 9.௦௦ மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. இதனைத் தன் கண்ணீர் குரலில் திருமதி. நிவேதா உதயகுமார் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். இதன் பின்னர்  மழலையர் நிலையிலிருந்து பாலர் நிலை, வளர் தமிழ் 1 , வளர் தமிழ் 2 என உயர் வகுப்புகள் வரை கேட்டல், பேசல், வாசித்தல், எழுதுதல் எனப் பிரிவு பிரிவாகத் தெளிவுபடுத்தினார்கள்.  
350 க்கும் அதிகமான ஆசிரியர்களால் மண்டபம் நிறைந்திருந்தது. பல இளம் ஆசிரியர்கள் (இங்கேயே கல்வி கற்று, இப்பொழுது ஆசிரியர்களாக கடமையாற்றுபவர்கள்) பங்குபற்றியிருந்தது மிகவும் பெருமையாக இருந்தது. இளம் சமுதாயத்தினரால் எம் தமிழ் தொடர்ந்தும் காக்கப்படும் என்ற ஒரு நிம்மதிப் பெருமூச்சு என்னிடமிருந்து புறப்பட்டது.
எல்லாவற்றையும் சொல்வதானால் சொல்லிக் கொண்டே போகலாம்.  எனினும் குறிப்பிட்ட சில விடயங்களை மட்டும் சொல்வது பொருத்தமானதாகும். இதில் முதலாவதாக தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையைச் சேர்ந்த திருமதி. நகுலேஸ்வரி அரியரட்ணம் அவர்கள் தொடக்க உரை நிகழ்த்தியிருந்தார். தொடர்ந்து ஒவ்வொரு ஆசிரியர்களும் ஒவ்வொரு பிரிவாக கற்பித்தலை மேற்கொண்டனர். மழலையர் மற்றும் பாலர் நிலைக்கான கற்பித்தலை திருமதி. தங்கேஸ்வரி கெங்காதரன் அவர்களும் தொடர்ந்து மற்றைய ஆசிரியர்களும் தத்தமது அமர்வை அழகாக நடத்திச் சென்றனர்.
ஜெர்மன் தேசத்திலிருந்து வருகை தந்திருந்த திருமதி. ஜெயமதி ராஜேந்திரம்  அவர்களின் மிகத் தெளிவான விளக்கங்களும், விசேடமாக அவரிடம் கண்ட அவை அடக்கமும், ஒரு ஆசிரியருக்கு இருக்க வேண்டிய தகுதியான கணீரென்ற குரலும் என்னைக் கவர்ந்து கொண்டது. (இவர் ஒலிவாங்கியைப் பிடித்துக் கொண்டு கற்பிக்கும் சிரமத்தால் ஒலிவாங்கியைத் தூர வைத்து விட்டு பேசிக்கொண்டிருந்த போதும் அவரது குரல் எல்லோரையும் கட்டி வைத்திருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது...) இவர் தொடர்ச்சியாக ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பட்டறைகளில் ஒரு ஆசிரியராக இருக்கிறார் என அறிந்து கொண்டேன்.
பேசுதல் திறன் தொடர்பாகத் திருமதி. நர்மதா மனோகரதாஸ் அவர்களும், இலக்கணம் தொடர்பாக திருமதி. மாலதி பிரபாகரன் அவர்களும், இலக்கியம் தொடர்பாக திருமதி. உமா காந்தி அவர்களும் விளக்கமளித்தனர். இவர்களது அமர்வுகளையும் நான் மிகவும் ரசனையுடன் கற்றுக் கொண்டேன். இன்னும் மிக மிக ஆச்சரியமான உண்மை என்னவென்றால்.. என் வாழ்நாளில் முதன் முதலில் ஒரு வரலாற்றுப் பாடத்தை மிக மிக இரசனையோடு நான் கற்றுக் கொண்டது தான். இதை நெதர்லாந்து நாட்டிலிருந்து வருகை தந்திருந்த ஆசிரியர் திருவாளர். சிவக்கொழுந்து பரந்தாமன் அவர்கள் நடாத்தியிருந்தார். மாவம்சம் பற்றி மிகச் சுருக்கமாகக் கூறிய போதிலும் அதை சுவாரசியமான முறையில் தந்த விதம் மிக மிகப் பாராட்டுக்குரியது. இவரிடம் வரலாற்றுப் பாடத்தைக் கற்பவர்கள் ஒரு தெளிவான வரலாற்று அறிவுள்ளவர்களாக வருவார்கள் என்பது திண்ணம். நேரக் கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு வகையில் நன்மையானதாக இருந்தாலும் இலக்கணம், இலக்கியம், மற்றும வரலாற்றுப் பாடங்களுக்கு இந்நேரம் போதுமானதாக இருக்கவில்லை என்பது சற்று வருத்தமளித்தது.
இதன் பின்னர் 'கேம்பிரிஜ் தமிழ்' இன் அவசியம் பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டது. அதுவும் பயனுள்ளதாக அமைந்தது.
மொத்தத்தில் இந்த அமர்வு ஆசிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. ஆடம்பரமற்ற மண்டபத்தில் ,ஆடம்பரமற்ற உணவு ஒழுங்குடன் இது ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது என்னைப் பொறுத்த வரையில் பாராட்டத் தக்கது. வீண் செலவின்றி ஒரு நிறைவான, பயன் மிக்க அமர்வை வழங்கியமைக்காக தமிழர் மேம்பாட்டுப் பேரவையினரை ஒரு புலம்பெயர் ஈழத் தமிழச்சி என்ற வகையில் பாராட்டுகிறேன்.  இருந்தாலும் ஒரு சின்ன சங்கடத்தை நான் எதிர் நோக்கினேன் இருக்கைகள் கூட மிகச் சாதாரணமாக அமைந்திருந்தது.
இதனால் எட்டு மணி நேரம் தொடர்ச்சியாக அமர்ந்திருந்து நாரி வலிக்கத் தொடங்கி விட்டது. அத்துடன் குறிப்புக்களை வைத்து எழுத முடியவில்லை. எதிர்காலத்தில் இத்தகைய அமர்வுகளை ஒழுங்கு செய்யும் போது, இருக்கைகள் மற்றும் வைத்து எழுதும் வசதிகளைக் கருத்தில் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
இந்த அமர்வுகளை நடாத்திய ஆசிரியர்கள் தேவை கருதி ஆங்கில சொற்களைப் பிரயோகித்த போதும், மிகவும் அழகுத்தமிழில் தங்கு தடையின்றி பேசினார். அதிலும் குமுகாயம், அணியம் செய்தல், பலுக்குதல் போன்ற அருந்தமிழ் சொற்களை மிக் சரளமாக உபயோகித்தமை என் மனத்தைக் கொள்ளை கொண்ட இன்னுமொரு விடயமாகும். ஈழ மண்ணில் ஒரு காலத்தில் நாம் வாழ்ந்த வாழ்க்கை மீண்டும் ஒருமுறை என் கண்முன் வந்து போனது. நாம் கொண்ட பிரயாசைகள் ஒரு போதும் வீண் போகாது என்ற மன உணர்வை இந்நிகழ்வு ஏற்படுத்தியது.
எத்தனையோ புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் எமது தமிழின அழிப்புக் கொடுமையை ஒரு பிரச்சாரமாக்கி, புலம்பெயர் அப்பாவித் தமிழர்களை உணர்ச்சிக் கொந்தளிப்புக்குள்ளாக்கி, நிதி திரட்டி அதை வீணாகவும் ஆடம்பரமாகவும் செலவு செய்துவரும் இந்தக் காலகட்டத்தில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் கல்விச் சேவை பாராட்டுக்குரியதே.
உலகெங்கும் பரந்திருக்கும் என் தாயக மக்களுக்கு நான் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால், புலம்பெயர் அமைப்புக்கள் சில தமது தவறான நடவடிக்கைகளால் எம் நம்பிக்கையீனத்தை சம்பாத்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நம் இனத்தின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளையும் புலம்பெயர் மக்கள் செய்கிறார்கள் என்பதையும்  ஏற்றுக் கொள்ளுங்கள் ... நாம் அழிந்து போன இனம் அல்ல. இன்னும் காலா காலத்துக்கும் வாழ்ந்திருக்கப் போகும் இனம். எனவே நம்பிக்கையோடு காத்திருங்கள். நம் தமிழ் வாழ்ந்திருக்கும். எனவே பிரித்தானியா - தமிழர் மேம்பாட்டுப் பேரவைக்கு மீண்டும் என் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!