Sunday, 4 November 2012

முடிவு...


’என்ன சொல்றாய் சுஜா? உனக்குப் பைத்தியமா?”
ஆங்கிலத்தில் அவன் அதிர்ந்து போய்க் கூவினாலும், சுஜாவைப் பொறுத்தவரையில் இந்த அதிர்ச்சி எதிர்பார்த்தது தான்.
”ம்.. சுதாகர்.. இதுக்கு மேல நான் சொல்றதுக்கு எதுவும் இல்ல..” என்று தன் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தவளாக எழுந்து நடக்கலானாள்.
குளிர்காலம் ஆரம்பமாகி விட்டதைக் கட்டியம் கூறுவது போல், மாலை ஆறு மணி இரவு எட்டு மணியைத் தாண்டி விட்டது போல் தோற்றமளித்தது. மயிர்க்கால்களூடே குளிர் ஊடுருவி சிலிர்க்க வைத்தது. சுஜா திரும்பிப் பார்க்கக் கூட மனமில்லாதவளாய் வேகமாக நடந்து சென்று, வீதிச் சமிக்ஞை விளக்குகளின் அழுத்தியை அழுத்தி விட்டு காத்திருக்க, உடனேயே சமிக்கை பச்சைக்கு மாறி கீக்... கீக் என்றது.  வீதியைக் கடந்து மறு வீதிக்குள் திரும்பினாள். இன்னும் இரண்டு வீடு தாண்டினால் சுஜாவின் வீடு வந்து விடும்.
“ஹாய் சுஜா...ஆ யூ ஓல்ரைற்?...” என்று என்று பரிவோடு வினவிய நீகே என்ற கறுப்பினப் பெண்மணியைப் பார்த்து சிரித்தவாறே தலையசைத்தாள்..
“யா.. ஐம் ஓல்ரைற்” சொல்லிய முழுப் பொய்யை அவள் கண்டுபிடிக்க முன்னதாகவே விருக்கென்று வீட்டுப் படியேறினாள்.
உள்ளே சென்று வீட்டுக் கதவைப் பூட்டியவளுக்கு உள்ளம் முழுக்க ஒரு படபடப்பு பரவியிருந்தது. முதன் முதலாக பெற்றோரை ஆலோசிக்காமல், அல்லது அவர்களுக்குத் தெரியாமல் அவள் எடுத்த  முடிவு... அவளைப் பொறுத்தவரையில் முடிவுகள் நிதானித்து எடுக்கப்பட வேண்டியவை ஆனால் உறுதியானவையும் கூட. காலநிலையோ அல்லது அவளது மனநிலையோ என்று கூறமுடியாதபடி உடல் மெல்ல நடுக்கமெடுப்பது போல் தோன்ற, கீற்றரை போட்டுவிட்டு சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தாள்.
மரகதத்தின், தம்பி மகளின் (மருமள்) பூப்பு விழாவைக் குடும்பமாக பிரான்ஸ் செல்ல முடிவெடுத்த போது சுஜா தன் முக்கியமான சில வகுப்புகளைக் காரணங்காட்டி மறுத்து விடவே, மகன் சுஜனை மட்டும் கூட்டிக் கொண்டு மரகதமும் ராமச்சந்திரனும் மனமின்றியே மகளை விட்டுச் சென்றனர். கடந்த ஒரு வாரமாக அவள் தனிமையில் தான் இருந்தாள். அவள் பார்வை வீட்டைச் சுற்றிலும் ஒருமுறை மேய்ந்தது.
அழகிய வீடு, ஆடம்பரமான சகல இலத்திரனியல் உபகரணங்களும் அங்கங்கே பொருத்தமாக வைக்கப்பட்டிருந்தது. அவளைப் பொறுத்தவரையில் ஆடம்பர வாழ்க்கையெல்லாம் இனி வேண்டியதில்லை. கடந்த மாதம் அவள் ஆசையாக வாங்கிய அழகிய மீன் தொட்டிக்குள் குறு குறு என்று ஓயாமல் ஓடிக் கொண்டிருந்த மீன்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் மனதில் தானாகவே பாரம் குறைவது போல் இருக்கும். ஆனாலும் இப்பொழுது அவள் பார்வை தொடர்ச்சியாக அந்த மீன்களில் நிலைக்க மறுத்து, அவற்றையும் தாண்டி எங்கேயோ ஒரு சூனியத்தை வெறித்தது. மனமோ தாயகத்தில் தன் அத்தை மகனிடம் பயணித்தது.
”கோபு”.. இப்படித்தான் அவன் செல்லமாக அழைக்கப்பட்டான். அவனுடைய ஒவ்வொரு அசைவுக்காகவும் அவனைச் சூழ உள்ளவர்கள் அவனை மதித்தார்கள். அத்தனை கண்ணியம் மிக்கவன் தான் மதனகோபன். முல்லைத்தீவில் தான் மதனகோபன் தன் பெற்றோருடன் வாழ்ந்து வந்தான். ராமச்சந்திரன் தன் தங்கையின் மகன் மதனகோபனைத் தன் மகள் சுஜாவுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் ஆசை கொண்டிருந்தாலும் கோபுவின் இலட்சியங்கள் அந்த ஆசையைப் பிற்போட்டுக் கொண்டே வந்தன.
6 வருடங்களுக்கு முன்னர் ஒரு விடுமுறையையொட்டி ராமச்சந்திரன் குடும்பத்தினரோடு முல்லைத்தீவு சென்றிருந்தார். அத்தை வீட்டுக்குச் சென்ற பொழுது சுஜாவும் சுஜனும் கொஞ்சம் உற்சாகம் குன்றித்தான் போனார்கள். பயண அலுப்பும், காலநிலை மாற்றமும் சற்றுத் தடுமாற வைத்தது. சுஜனைப் பொறுத்தவரையில் எல்லாமே சங்கடமாக இருந்தது. மலசலகூடத்துக்குள் கால் வைக்கவே மறுத்தான்.
”உன் அத்தான் வந்து உன்னைப் பார்த்து சிரிக்கப் போகிறான்’’ என்று அத்தையும் மச்சாள்மாரும் கிண்டல் செய்தார்கள். அத்தை வாய் ஓயாமல் அத்தானைப் பற்றிப் பேசிய போதெல்லாம் சுஜா அவனைக் காணவேண்டும் என்ற ஆவல் மேலோங்கியது. அவன் விடுமுறை பெற்றுத் தான் வர வேண்டுமாம்... இரண்டு நாட்களின் பின் கோபு வந்தான்... கல கலவென்ற அவன் பேச்சும் சிரிப்பும்.. அப்பப்பா... வீடே திடீரெனத் திருவிழாக் கோலம் பூண்டது. அவன் தன் தாயகத்தின் மீது கொண்டிருந்த அன்பைக் கண்டு பிரமித்தாள் சுஜா... சுஜன் அத்தான்... அத்தான் என்று அவன் தோள்களில் தொங்கிக் கொண்டு திரிந்தான்.
இரண்டு வார விடுமுறையில் வந்த கோபு ஒருவாரத்துக்குள்ளேயே சுஜாவின் உள்ளத்துக்குள் ஊடுருவி அமர்ந்து... மெல்லிய காதல் உணர்வுகளை மீட்ட ஆரம்பித்துவிட்டான். அடுத்த ஒரு வாரமும் போன வேகம் தெரியாமல் போக.. மறுநாள் புறப்படுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். அத்தை தன் மகனுக்குக் கொடுத்து அனுப்புவதற்காகப் பலகாரங்கள் செய்வதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாள். அத்தைக்குப் பக்கத்திலிருந்து அவளுக்கு அவ்வப்போது தேவையான உதவிகளைச் செய்து கொண்டு, வாய் ஓயாமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்த சுஜா, கோபு கிணற்றடியிலிருந்து தலையைத் துவட்டியபடி அறைக்குள் நுழைவதைக் கண்டதும் அப்படியே மெல்லக் கழன்று அறையை நெருங்கினாள். அதற்குள் அவன் கதவை உள்ளே தாளிட்டுக் கொள்ள வெளியே காத்திருந்தாள்.
சிறிது நேரத்தில் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த கோபு சுஜாவைக் கண்டதும் “ம்.. வெளிநாட்டு சென்ற் வாசனை நல்லாத் தான் இருக்கு..” என்றதும் சுஜா வாயைப் பொத்திக் கொண்டு விழுந்து விழுந்து சிரிக்க ஆச்சரியமாகப் பார்த்தான்.
”ஐயோ கோபு.. அது லேடீஸ் போடுற சென்ற்... உன்னோட சென்ற் அங்க சுஜன் வைச்சிருக்கிறான் என்று அவள் சொல்ல இருவரும் சேர்ந்து சிரித்தனர். என்னமோ போங்கடி. நீங்க தான் வாசனையையும் ஆண்களுக்கானது, பெண்களுக்கானது என்று... எதில பார்த்தாலும் வேறுபாடு... பிறகு நாங்க தான் உங்களை வேறுபடுத்துறம் எண்டு சொல்றது.. என்றபடி வீட்டின் பின் வளவுக்குள் இருந்த மாமரத்தை நோக்கிச் செல்ல சுஜாவும் பின் தொடர்ந்தாள். அந்த மாமரத்துக்கு இப்பொழுது சுஜனின் வயதிருக்குமாம்... அது தான் அவன் வீட்டுக்கு வரும் போதெல்லாம் விரும்பி உட்காரும் இடம்.
அங்கிருந்த ஒரு பிளாஸ்ரிக் நாற்காலியில் இருவரும் அமர்ந்தனர். மாலை நேரத்தில் மணற்தரையில் மாமர நிழலில் மெல்லிய காற்றை அனுபவிக்கும் சுகமோ தனி...  சுஜா அந்த வேளையில் தான் மெல்ல ஆரம்பித்தாள்..
”கோபு நீ நாளைக்குப் போயிருவியா?”... “ம்..”
”என்னடா.. இன்னும் இரண்டு நாள் நிற்கலாமே...”
”இல்ல சுஜா.. எனக்கு நிறைய வேலை இருக்கு.. அது தான் இரண்டு கிழமை நிண்டேனே...”
“எனக்கு உன்னோடயே நிற்க வேணும் போல இருக்கு...”
கொஞ்சம் ஆச்சரியமாகப் பார்த்தான்... “ஏய்.. நீ தான் அடுத்த கிழமை லண்டனுக்குப் போய்டுவியே..”
”கோபு... நீ சொல்லு... நான் போகாமல் இங்கயே நிக்கட்டா?”
இப்பொழுது உள்மனது அலாரம் அடிக்க கோபு சுதாகரித்துக் கொண்டான்... “சுஜா... சுத்திவளைக்காம சொல்லு...என்ன பிரச்சனை...”
இப்பொழுது சுஜா தலையக் குனிந்து கொண்டாள். மௌனம் சூழலை இறுக்கியது. சுஜாவின் நாடியைப் பிடித்து நிமிர்த்திய கோபு சுஜாவின் கண்கள் பனித்திருந்ததைப் பார்த்ததும் பதறினான்.
“என்னம்மா?”
”கோபு.. நான் உன்னோடதான் வாழ வேணும் எண்டு ஆசைப் படுறேன்...”
”நீ சின்னப் பிள்ளை இல்ல சுஜா... நான் சொன்னா புரிஞ்சு கொள்ளுவாய் எண்டு நினைக்கிறேன். என்ற கொள்கை நான் தாயகத்தை விட்டுப் போக மாட்டேன் என்பது தான். என்ற திருமண வாழ்க்கை என்ற இலட்சியத்துக்கு குறுக்க நிற்கக் கூடாது என்பது தான்... மற்றப்படி உன்னைக் கலியாணம் செய்றதில எனக்கு எந்த மறுப்பும் இல்லம்மா..” இன்னும் எதேதோ எல்லாம் சொன்னான்.
கனிவாகப் பேசிய அவனது வார்த்தைகள் நியாயமாகப் பட்டன. ”அதனால தான் நான் இங்கயே நிற்கிறன் எண்டு சொல்றன்..” என்றவளைப் பாசத்தோடு பார்த்தான். “சுஜா... இப்ப ஒண்டுக்கும் அவசரப்பட்டு முடிவெடுக்காத... நான் எங்கே போகப் போறன். உனக்கு நான் கொஞ்சம் அவகாசம் தாறேன். நீ லண்டனுக்குப் போ... படிப்பை முடி.. அதுக்குள்ள, உனக்கு இந்த நாட்டில திரும்பவும் வந்து வாழ முடியுமா எண்டு நல்லா யோசி.. அதுக்குப் பிறகும் நீ என்னோட வாழ விரும்பினா... அம்மா அப்பாவோட பேசுவோம்.. மாமா உன்னை இஞ்ச விட சம்மதிச்சால் எல்லாம் சந்தோசமாக நடக்கும்...” என்ற அவனுடைய உறுதியான வார்த்தைகள் அவளை திடப்படுத்தியது.
 இதன் பின் அவள் லண்டனுக்கு வந்த பின்னும் ஒரு வருடமாக கடிதங்கள் மூலமாகவும், அவ்வப்போது தொலைபேசி மூலமாகவும் அவள் தன் காதலை வளர்த்துக் கொண்டிருந்தாள் என்றே சொல்லலாம். ஆனாலும் யுத்த அரக்கனின் கொடிய கரங்கள் அத்தொடர்பை அடுத்து வந்த வருடங்களில் அறுத்தெறிய நிலைதளர்ந்தாள் சுஜா.. என்ன ஆகியிருக்கும்... அவனுடைய குடும்பத்தினர் என்ன ஆனார்கள் என்று கலங்கிப் போயிருந்தனர். ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் தெரிந்தவர்கள் மூலம் முல்லைத்தீவில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு கோபுவைப் பற்றி அறிந்தனர். கோபுவின் குடும்பமே போரில் அழிக்கப்பட்டு விட்டது என்றும் கோபு ஒரு காலையும் ஒரு கண்ணையும் இழந்தவனாக காயங்களோடு தப்பியிருப்பதாகவும் அறிந்தபோது சுஜா துடித்துப் போனாள். ஏற்கெனவே சுஜாவின் காதலை அறிந்திருந்த பெற்றோர் இப்பொழுது வேறு வரனை அவசர அவசரமாகத் தேடத் தொடங்கினர்... அப்படித் தேடிய வரன் தான் சுதாகர். அவன் லண்டனிலேயே பிறந்து வளர்ந்தவன்.
சுஜாவைப் பொறுத்தவரையில் சுதாகர் எல்லா விதத்திலும் தகுதியானவன்தான் என்றாலும், கோபுவை எந்த விதத்திலும் தகுதிக் குறைவானவனாக எண்ண முடியவில்லை. அவனிடம் இருந்த தேசப்பற்றுத்தான் அவளைக் காதலிக்கத் தூண்டியது. அது அவனிடமிருந்து இம்மியளவும் குறைந்திருக்காது என்பது அவளது அசையாத நம்பிக்கை. அவள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அம்மா மரகதம் கடுமையாக எதிர்ந்தாள். இப்படி ஒரு நிலையில் இருப்பவனுக்குக் கட்டிக் கொடுக்கவா நான் இவ்வளவு கஸ்ரப்பட்டு வளர்த்தேன். இத்தனை குறைபாடுகளோடு இருப்பவனோடு நீ எப்படி சந்தோசமாகக் குடும்பம் நடத்த முடியும்” என்று வாதிட்டாள்.
அப்பாவும் அதற்குத் தலையாட்டினார். ஆனால் மண்ணுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தார்களே... அவர்கள் வாழ வேண்டாமா? அவர்களும் ஆதரவாய் சாய்ந்து கொள்ள ஒரு தோள் வேண்டாமா?.. அவனுடைய குறைபாடுகளைப் பார்த்து ஒதுங்கிக் கொள்வதென்றால்.. தன்னுடைய காதலுக்கு என்ன அர்த்தம்? இப்படிப் பலவாறான கேள்வி அவளைத் துளைக்கவே, அவள் உறுதியான முடிவெடுத்தாள்...
பெற்றோருக்கு சொல்லாமல் எடுத்த முடிவு தான்.. ஆனாலும் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருந்தபடியால், அதை சுதாகருக்கே தெரியப்படுத்தினால், அது பெற்றோருக்குத் தெரிய வரும் என்பதனால்தான் சுதாகரை அழைத்து எல்லாவற்றையும் கொட்டி விட்டாள்.
தொலைபேசி இசைக்க, சிந்தனையிலிருந்து விடுபட்டவளாய் தொலைபேசியை அழுத்தினாள். ரக்ஸி ட்ரைவர் தான் அழைத்திருந்தான். ஓடிப் போய் அறைக்குள் தயாராய் வைத்திருந்த சூட்கேசை எடுத்துக் கொண்டு வந்தவள், தன் கைப் பையைத் திறந்து மீண்டும் ஒரு தடவை விமானப் பயணச் சீட்டு மற்றும் ஏனைய ஆவணங்களைச் சரி பார்த்துவிட்டு வீட்டுத்திறப்பைப் பூட்டியெடுத்துக் கொண்டு பக்கத்து வீட்டுப் போலந்து நாட்டுக்காரியின் வீட்டுக் கதவின் அழைப்பு மணியை அழுத்தினாள்.
மலர்ந்த முகத்தோடு வந்து கதவைத் திறந்தவளிடம் “நாளை மறுநாள் என்னுடைய அம்மா, அப்பா வருவார்கள், இந்த திறப்பைக் கொடுத்திடு, நான் கொஞ்சம் தூரப் போகிறேன்.” என்று ஆங்கிலத்தில் கூறிச் சிரித்தபடி விடைபெற்றுக் கொண்டாள். வெளியில் நின்ற ரக்ஸியில் ஏறிய சுஜாவிடமிருந்து ஒரு பெரிய பெருமூச்சு அவளுக்கு முன்னே புறப்பட்டது...
தாயகத்தின் மைந்தனைத் தன் துணைவனாகக் கொள்ளும் கற்பனைகளோடும் முதன் முதலாகத் தனியாகத் தாயகத்தை நோக்கிச் செல்லும் பதட்டத்தோடும் அமர்ந்திருந்த சுஜாவைச் சுமந்தபடி அந்த ரக்ஸி சாலைகளின் தடைகளைத் தாண்டி இருளைக் கிழித்துக் கொண்டு விமான நிலையத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தது... சுஜாவைப் போலவே....
-முற்றும்-
 

(இந்தச் சிறுகதை தமிழ் நண்பர்கள் தளத்தில் என்னால் பதிவு செய்யப்பட்டு, புரட்டாசி மாத போட்டிப் பதிவில் அவர்களது நிபந்தனகளுக்கமைவாக மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது என்பதை வாசகர்களுக்குத் தெரியப் படுத்துகிறேன்.)

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

2 comments:

  1. வாழ்த்துக்கள் தொடருங்கள்

    ReplyDelete
  2. நன்றி சந்த்ரு

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!