Sunday 10 February 2013

இலட்சியப்பாதையில்.. தொடர் 3


இலட்சியப்பாதையில்.. தொடர் 3


எங்களுக்கு ஒரு விடிவு வரும்... அப்ப நானும் நீயும் இப்பிடியே இருந்தால் ஒன்று சேருவம்... அல்லது விதியின் படி மாற்றங்கள் வந்தால் அதையும் ஏற்றுக் கொள்ளுவம்.... இதுக்கு மேல நான் இதில நிண்டால் பார்க்கிறவ பிழையா நினைப்பினம்... நான் போறன்... சொல்லிவிட்டு விடுவிடென நடந்து கொண்டிருந்தவனை ராஜினி கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள்...

இதன் பிறகு சுமன் போராளியாக இணைந்து விட்டான் என ஊரில் எல்லோரும் பரபரப்பாக பேசிக் கொண்டார்கள்... சில நாட்களில் அந்தப் பரபரப்பும் அடங்கிட்டது... ஆனால் ராஜினி மட்டும் தனக்குள்ளேயே சுமந்து கொண்டிருந்த அந்த சோகத்தை இரவுகளின் மடியில் கண்ணீராய்க் கரைத்துக் கொண்டிருந்தாள்.... உப்புக் காற்றில் அவள் பெருமூச்சுக்களும் கலந்து கொண்டிருந்தன...

சில மாதங்கள் கடந்தன... சுமனைப் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் எதிலும் உறுதியான சுமன் நிச்சயம் போராட்டத்திலும் உறுதியாகவே இருப்பான் என்று நினைத்துக் கொள்வாள் ராஜினி. அடிக்கடி அவனுடைய நினைவுகள் அவளை வாட்டியெடுத்தன... ஆனால் அவனைப் புரிந்து கொண்டது போலவே அவனது இலட்சியத்தையும் புரிந்து கொண்டாள் ராஜினி. இனி அவனது காதலியான நான் என்ன செய்ய வேண்டும்... அவனை நேசித்தது உண்மையென்றால் அவனது இலட்சியத்தையும் நேசிக்க வேண்டுமல்லவா? அவனது பிரிவின் துயரிலிருந்து விடுபட்டு இந்த முடிவுக்கு வர பல மாதங்கள் எடுத்தது. ராஜினியும் போராளியானாள் தன் அன்புக் காதலனின் இலட்சியத்தையே தானும் சுமந்த படி... அங்கே அவள் தனக்கு இட்டுக் கொண்ட பெயர் தான் மகிழ்மதி...

பல வேளைகளில் நாம் எதிர்பாராமலே சிலரை சந்திக்கிறோம்.. ஆனால் இறுதிவரையும் வாழ்க்கையில் அவர்கள் மறக்க முடியாதவர்களாக முத்திரை பதித்து விடுகிறார்கள். அந்த வகையில் மகிழ்மதி தன் அடிப்படைப் பயிற்சிகள் முடிந்த பின் பணி புரிய ஆரம்பித்த போது, அவள் சந்தித்த இனிய தோழி தான் தமிழ்மதி... ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்டிருந்த படியாலோ, அல்லது இருவருக்கிடயேயான ஏதோ ஒரு ஒற்றுமையோ அவர்களை இணைபிரியா தோழிகளாக்கியது... இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் நன்கு புரிந்து கொண்டிருந்தனர். துக்கம், சந்தோசம் எல்லாவற்றையுமே ஒருவருக்கொருவர்  பகிர்ந்து கொண்டனர்.. அப்படிப்பட்ட ஒரு நல்ல நட்பு இருவரிடையேயும் நிலவியது. சுமார் இரண்டு வருடங்கள் இருவரும் ஒன்றாகவே பணி செய்தனர்.... அந்த இனிமையான நாட்களில் தான் ஒரு நாள்....

மாலைக் காற்று வெப்பம் குறைந்து இதமாக வீச ஆரம்பித்திருந்தது.
“மகிழ்... உதென்ன இவ்வளவு நேரமா தலையிழுத்துக் கொண்டு நிக்கிற.. வா.. நான் டக்கெண்டு பின்னி விடுறன்..”

எனறு அவ்வளவு நேரமும் கஸ்ரப்பட்டு தலைவாரிப் பின்னிக் கட்டிக் கொண்டிருந்த மகிழ்மதியின் பின்னலில் இருந்த ரிப்பனை உருவிக்கொண்டு ஓடிய தமிழ்மதியை துரத்திக்கொண்டு மகிழ்மதி ஓட.. அவள் அந்த வளாகம் முழுதும் சுற்றி ஓடிக்கொண்டிருக்க, தென்னைகள் நிறைந்த அடர்ந்த தோப்பின் நடுவே அமைந்திருந்த அந்தப் பெண் போராளிகளின் முகாம் இரண்டு நண்பிகளின் கலகலப்பால் நிறைந்து கொண்டிருந்தது.

பரந்த அந்த வளாகத்துள் ஆங்காங்கே சில சிறிய சிறிய கட்டடங்களும் கொட்டில்களுமாக தேவைக்கேற்ப அமைக்கப்பட்டிருந்தது. வாயில் கதவுக்கு சிறிது தூரத்தில் விருந்தினரை சந்திக்கும் `சந்திப்பிடம்`... அங்கிருந்து எழினி அக்கா குரல் கொடுத்தார். அவ தான் இந்த இரண்டு இணைபிரியா தோழிகளுக்கும் இன்னும் சில போராளிகளுக்கும் பொறுப்பாளர்..

தமிழ்... அண்ணாக்களின்ர `பேஸ்`ல குடுத்த பெரிய நீல பற்றியை ஒருக்கா கொண்டு வந்து தரச் சொல்லி விடுங்கோ... இந்த `பற்றி` எங்களுக்கு காணாது... அதையும் எடுத்து சார்ஜ் போட வேணும்.. அப்ப தான் சமாளிக்கலாம்....” என்ற பொறுப்பாளரின் குரலுக்கு தமிழ்மதி பதில் கொடுத்தாள்.. 
அக்கா... அது இப்ப ரெண்டு நாளா நாங்கள் `வோக்கில சொல்லிக் கொண்டிருக்கிறம்... அவயள் கொண்டு வருகினம் இல்லையக்கா...”

அது தான் சொல்லுறன் தமிழ்... மகிழ்மதியையும் கூட்டிக் கொண்டு நேர ஒருக்கா போய்ட்டு வாங்கோ.. பிரச்சனையை வடிவா பொறுப்பாளருக்கு சொல்லிட்டு வாங்கோ..” 

என்று மீண்டும் பொறுப்பாளர் சொல்லவே, வேகமாக தலையை பின்னிக் கட்டி முடித்துவிட்டு புறப்பட்டனர். அடுத்த 5வது நிமிடத்தில் எம்டி நைன்ரி மோட்டார் சைக்கிள் இருவரையும் சுமந்து கொண்டு அந்த ஆண் போராளிகளின் முகாம் வாசலில் நிறுத்தியது. மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டதும் ஒரு போராளி வந்து கேற்றைத் திறந்தான்... 

சொல்லுங்கோ அக்கா....”

அண்ணா நாங்கள் எழினி அக்கான்ர இடத்தில இருந்து வந்திருக்கிறம்... உங்கட பொறுப்பாளர் ஆர் அண்ணா... அவரை ஒருக்கா சந்திக்கோணும்..” என்றதும்...

... வாங்கோ... நிதன் அண்ணா தான் இப்ப பொறுப்பாளர்.. பயிற்சி குடுத்துக் கொண்டிருக்கிறார்... நான் சொல்லி விடுறன்... நீங்கள் அந்த வட்டக் கொட்டிலுக்க இருங்கோ...”

என்று அந்தப் போராளி சுட்டிக் காட்டி விட்டுப் போன சந்திப்பு இடத்தில் போய் இருவரும் அமர்ந்து கொண்டனர். மிகவும் நேர்த்தியாக அமைக்கப் பட்டிருந்த அந்த வட்டக் கொட்டிலை மாவீரர்களின் படங்களும் தேசியத் தலைவரின் சிந்தனைகளும் அலங்கரித்துக் கொண்டிருந்தன. தூரத்தில் ஒலித்துக் கொண்டிருந்த விசில் ஒலி.. அங்கே பயிற்சி நடந்து கொண்டிருப்பதைக் கூறிக் கொண்டிருந்தது... முகாமின் முன் பகுதி ஒரு தென்னஞ்சோலையாகவே காட்சியளித்தது. தென்னங்கீற்றுக்களைத் தழுவி வீசிக்கொண்டிருந்த குளிர்ந்த காற்று மனதுக்கு இதமாக இருப்பது போல் தோன்றியது.... சற்று நேரத்திலெல்லாம் கையில் விசிலைச் சுழற்றிக் கொண்டு வந்த பொறுப்பாளர் நிதனைக் கண்டதும் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போனது மகிழ்மதி மட்டுமல்ல நிதன் என்கின்ற சுமனும் தான்... ஆம் ... சுமன் தான் இப்போது அவள் முன்னே நிதனாக நின்று கொண்டிருந்தான்.

ஆனால் நிதன் கண நேரத்திலேயே தன்னைச் சுதாகரித்துக் கொண்டு தன் தொண்டையச் செருமிக் கொண்டு... தமிழ்மதியைப் பார்த்து..

சொல்லுங்கோ அக்கா.. என்ன விடயமா...” அவன் கூறி முடிக்க முன்பே 

அண்ணா... நாங்கள் எழினி அக்கான்ர இடத்தில இருந்து வாம்... எங்கட பெரிய `பற்றி` ஒண்டு அண்ணாக்களுக்கு அண்டைக்கு அவசரமா தேவையெண்டு குடுத்தனாங்கள்... எங்களுக்கு இப்ப அவசரமான வேலை நடந்துகொண்டிருக்கு... அது தான் அதை திருப்பித் தரச்சொல்லி அக்கா சொல்லி விட்டவா...” என்றாள் தமிழ்மதி.. அங்கே இரண்டு உள்ளங்களுக்கிடையே இனம்புரியாத உணர்வுகள் மோதிக்கொண்டிருப்பது புரியாமலே....

... பெடியங்கள் சொன்னவங்கள் தான்.. நான் இஞ்ச பொறுப்பா வந்து இப்ப ரெண்டு நாள் தான் ... அதால சில விசயங்களை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது.. அது தான்... உடன குடுத்து அனுப்பேல்லாமல் போய்ட்டுது.. இப்ப ரெண்டு மணித்தியாலத்துக்குள்ள அனுப்பி விடுறன்...”

மறுபுறம் திரும்பினின்று தன் முகபாவனையை மறைத்துக் கொண்டிருந்த மகிழ்மதியைப் பார்த்தவாறே பதிலளித்தான் நிதன்.

அண்ணா... எங்களுக்கு பற்றி இல்லாம சமாளிக்கேல்லாமல் இருக்கு... மறந்து போய்டாதீங்கோ” 

என்று கூறிக்கொண்டே தமிழ்மதி மகிழ்மதியைப் பார்க்க, அவள் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தாள்... 

“சரி நாங்கள் போய்ட்டு வாறம் அண்ணா..” என்றுவிட்டு வட்டக்கொட்டிலை விட்டு வெளியேறிய தமிழ்மதியைப் படபடக்கும் உள்ளத்தோடு மகிழ்மதியும் பின்தொடர்ந்தாள்... மாலை முழுவதும் அமைதியின்றித் தவித்துக் கொண்டிருந்த மகிழ்மதியைக் கவனித்த தமிழ்மதி, இரவு அவளது காவற்கடமைக்குச் செல்லுமுன் மகிழ்மதியைப் பிடித்துக் கொண்டாள்...

ஏய்...மகிழ்... என்னண்டு சொல்லு.. இண்டைக்கு அண்ணாக்களின்ர பேஸுக்கு போய் வந்ததில இருந்து ஒரு மாதிரியிருக்கிறாய்... என்ன பிரச்சனை....சொல்லடி...” 

அவளின் நச்சரிப்புத் தாங்காமல் மகிழ்மதி நிதன் தான் சுமன் என்று சொன்னதும்... “ஆஹா.... இப்பிடியும் நடக்குமா???? “ என்று துள்ளிக் குதித்தாள் தமிழ்...

சரி.. கொஞ்ச நாள் பொறு... நிதன் அண்ணாவின்ர நிலமை என்னண்டு பார்ப்பம்... அதுக்குப் பிறகு எழினி அக்காட்ட சொல்லலாம்..” என்று சொன்ன தமிழ்மதியை அவசரமாகத்தடுத்தாள்..

சே.. விசர்கதை கதைக்காத... அவர் உதெல்லாம் வேண்டாம் எண்டு தான் விட்டிட்டு இயக்கத்துக்கு வந்தவர்... இனி அப்படியெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது....” 

இப்படி அவள் கூறிவிட்டாலும்.... அந்த சில கணங்களுக்குள் நிதனின் கண்களில் தெரிந்த பிரிவின் தாகம், அதிர்ச்சி, காதல் எல்லாமே மகிழ்மதியின் நினைவில் திரும்பத் திரும்ப படமாகிக் கொண்டிருந்தது.. இப்போ சுமார் ஐந்து வருடம் கடந்திருக்குமா இவர்கள் காதலிக்கத் தொடங்கி.. ஆனாலும் பசுமையான காதல் அல்லவா??... அவனும் என்னைப் போலவே தவித்துக் கொண்டிருப்பானா???  பல கேள்விகளோடு அன்றைய இரவு கழிந்தது...

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை... எப்போதும் போலவே சாதாரணமாக விடிந்த பொழுதை தமிழ்மதியின் குரல் பரபரப்பாக்கியது.. 

“மகிழ்... ஏய்.. இஞ்ச ஓடி வா... எழினி அக்காவோட ஆர் கதைச்சுக் கொண்டிருக்கிறது எண்டு பார்...”
ஓடிப்போய் பார்த்த மகிழ்மதிக்கு ஒரே குழப்பம்...  நிதன்... எதற்கு வந்திருக்கிறான்...? ஏதும் நிர்வாக அலுவல்களா இருக்கும்.. என தனக்குத் தானே சமாதானம் செய்துகொண்டாள்.. சிறிது நேரத்தில் வேறு ஒரு போராளி ஓடி வந்தாள்.... “மகிழ் அக்கா.. உங்களை எழினி அக்கா வரட்டாம்.. உங்கட சொந்தக்காரர் யாரோ சந்திப்புக்கு வந்திருக்கினமாம்..” 
சொல்லிவிட்டு பதிலுக்காகக் காத்திருந்தவளிடம்

நீங்கள் போங்கோ கலை... நான் இப்ப வாறன்...”

என்று கூறியவள் உள்ளே சென்று தன் இடுப்புப் பட்டியச் சீராக்கி விட்டு தமிழ்மதியைப் பார்க்க... அவள் பார்வையில் தெரிந்த கிண்டலைக் கண்டதும்.. பொய்யாக முறத்து விட்டு வேகமாக சென்றாள்.. அவளைக் கண்டதும் எழினி அக்கா பேசிக்கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு வெளியே வந்தார்.  மகிழ்மதியை மிக நெருங்கி சற்றுத் தணிந்த குரலில்

மகிழ்... உங்கட மச்சானாம்.. நேற்று உங்களைக் கண்டவராம்....” ஆமென்று மெல்லத் தலையசைத்த மகிழ்மதியிடம் மீண்டும் அதே குரலில்.. 

சரி.. ஒரு 15, 20 நிமிசத்தில கதைச்சிட்டு அனுப்புங்கோ... தெரியும் தானே.. சொந்தமெண்டாலும் நாங்கள் அனுமதியில்லாமல் எல்லாரையும் சந்திக்க விட ஏலாது... நான் அவரிட்டையும் சொல்லியிருக்கிறன்.... எனக்கு  வெளியில கொஞ்சம் வேலையிருக்கு... போய்ட்டு வாறன்..”  என்று விட்டு அவசரமாக வெளியேறினார்.

மனம் படபடக்க நிதன் இருந்த இடத்தை நோக்கி மெல்ல நடந்து சென்றாள் மகிழ்மதி... அவனைப் பார்த்த மாத்திரத்தில் திரண்டுவந்த வேதனைக்குக் கட்டுப் போட்டாள்... ஆனாலும் மௌனமாக இருந்தாள்.. ஒரு வேளை அவள் பழைய ராஜினியாக இருந்திருந்தால் இப்பொழுது ஓவென்று அழுதிருப்பாள்... ஒரு வேளை துன்பமிகுதியால் அவன் தோளில் சாய்ந்து அழுதிருக்கக் கூடும்... ஆனால் ஒரு போராளியாக... தன் உணர்வுகளை அடக்கியாளக் கற்றுக் கொண்டிருந்த அவளுக்கு இரண்டாவது நபர் முன்னிலையில் அழுவது அசிங்கமாகப் படவே..மௌனமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்... அவளது அந்த மன நிலையைப் படித்த நிதன் சுவாரஷ்யமாகவே ஆரம்பித்தான்...

என்ன ராஜினி அக்கா... போராட்டத்துக்கு கிளம்பியாச்சு போல இருக்கு...நான் எதிர்பார்க்கவே இல்ல...” 

என்று கண்களில் கேலியுடன் கேட்டவனைப் பார்த்த்தும் அவளுக்குள் இருந்த பதட்டம் சட்டென விலகிப் போனது...

ஏன் .... உங்களால மட்டும் தானா போராட ஏலும்... நாங்களும் துணிஞ்ச ஆக்கள் தான்...” பொய்க்கோபத்தோடு சொன்ன மகிழ்மதியிடம்..

ஹப்பா.... ஏற்கெனவே பொல்லாத வாயாடி... இப்ப இன்னும் டபிள் மடங்காகியிருக்கும்...”

என்று அவன் பயந்தது போலப் பேச, அவளும் சிரித்தாள்... அவனும் சிரித்தான்... சில நிமிடங்களுக்குள் தாம் போராட்டத்தில் இணைந்த அன்றைய சம்பவங்கள்.. ஊர் நிலைமை எல்லாம் பேசினர். கடைசியாக நிதன் சிறிது நேரம் மௌனமானான்...

என்ன திடீரெண்டு சத்தத்தைக் காணேல்ல...” கேட்ட மகிழ்மதியை நிமிர்ந்து பார்த்தான் நிதன்..

ராஜி... உண்மையா.. இப்ப உன்ர மனசில பழைய விசயங்கள் ஒண்டும் இல்லையோ...அ..அது.. நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் விரும்பின காலத்தைப் பற்றிக் கேட்கிறன்........”


-இலட்சியத்தின் பாதையில் தொடரும்....


முன்னய தொடர் படிக்காதவர்களுக்காக.............................




இலட்சியப்பாதையில் தொடர்  2 இற்கு இங்கே கிளிக்குக



இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

4 comments:

  1. கோதை... எழுதுவதற்கு என்னை நிதானிக்க நேரம் தேவைப்படுகிறது...

    சிறிது நேரத்தில் வருகிறேன்...

    ReplyDelete
  2. கோதை.. எங்கடை பிள்ளைகள் அங்கை காம்பில இருந்ததும் போராட்டக்காலங்களில் பட்ட துயரையும் நேரில் பார்த்திருக்காவிட்டாலும் அந்த நேரம் இங்கை கிடைச்ச செய்திகளில் அதை அறிஞ்சிருக்கிறன். அப்பவே என் மனசில் மிகுந்த வலி, கஷ்டம் அவைகளை நினைச்சு இருந்தது. பிறகு எல்லாம் கனவா போக மெல்லமெல்ல அந்த நினைவுகள் மனசில அடித்தளத்தில போய் படிஞ்சிருந்தது.

    இன்று இந்த உங்கள் கதைத் தொடரில் அதைப்பற்றி நீங்கள் விபரித்துக்கொண்டு போனவிதம் எனக்கு மீண்டும் அந்த துயில் கொண்டிருந்த நினைவுகளை தட்டி எழுப்பிவிட்டிட்டுது. அந்தப் பிஞ்சுகளில் மிஞ்சினது இப்ப எத்தினையோ... இல்லையோ...
    அவைகளுக்கும் எத்தினை எத்தினை கற்பனைகள் மனசில இருந்திச்சோ.... ம்ஹும்...

    ReplyDelete
    Replies
    1. உண்மை இளமதி..தம் பருவ வயதில் வரக்கூடிய அனைத்து உணர்வுகளாஇயும் தியாகம் செய்தவர்கள் தான் அந்த மெழுகுவர்த்திகள்..
      மிக்க நன்றி

      Delete
  3. இன்றைய தொடர் நல்லா இருக்கு. அருமையாக கதையை நகர்த்திக் கொண்டு போறீங்கள். எழுதியவிதம் காட்சிகள் கண்ணில் படமாக விரிகின்றது கோதை.

    கைதேர்ந்த எழுத்தாளர்தான் நீங்கள். படிச்சு முடிய அடுத்து என்ன நடக்கப்போகுதோ என மனசுக்குள் கொஞ்சநேரம் அதிர்வாக இருந்தது. அப்படி நல்ல ஒரு விறுவிறுப்பாக அடுத்த தொடர் எப்ப என எதிர்பார்க்க வைக்கும் வண்ணம் கொண்டந்து விட்டிருக்கிறீங்கள்.

    அருமை..தொடருங்கோ..அடுத்தது எப்ப??????

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!