Wednesday 27 February 2013

தலைசாய்த்தேன் தாய்மடியே.. தருகின்றேன் வாழ்த்துப் பல..


கருவில் என்னை உருவாக்கி
உருவமாய் உலகுக்குத் தந்தவள் இன்று
தரணியில் உதித்த நாள்..
தலைசாய்த்தேன் தாய்மடியே..
தருகின்றேன் வாழ்த்துப் பல..
உயிர் கொடுத்து ஊன் கொடுத்து
உலகில் உலவ விட்ட
தாய்மைக்கு என் வணக்கம்...

பெற்றவளே என் தாயே- என்னைப்
பெண்ணாக ஈன்றதனால் தான்
பெருமைமிகு தாய்மை உணர்ந்தேன்..
பிஞ்சு விரல்களைப் பற்றி நீ முத்தமிட்டிருப்பாய்
பால் வழியும் கடைவாயைத் துடைத்து
பதித்திருப்பாய் உன் பாச இதழ்..
பிறிதொருநாளில் இவையெல்லாம்
பழைய நினைவுகளாகிப் போம்...
பசுமையாய் நிற்பதுன் பாச நினைவுகள் மட்டுமே
கற்பனையில் என்னை மேதையாய்
கண்டிருப்பாய்.. நானோ உனக்கு
சான்றோள் எனும் உவகை தந்தேனில்லை- தாயே
நல்லதொரு சேயாய் இல்லையென்றாலும்
நல்லதொரு தாயாய் வாழ முனைகின்றேன்
தாய்மைக்கு என் சேய்களும் தலை வணங்குமாறே...
அதுவரை உன்னை எனக்குள்
அன்புச் சேயாக்கிக் கொண்டேன்...
தொடர்கின்ற வாழ்நாள் முழுதும்- எண்ணத்
தொட்டிலிலே நீயாட வேண்டும்
சோர்ந்து போய்விழும் வேளையிலெல்லாம்
சின்னச் சிரிப்பினால் உயிர்மீள வேண்டும்

-என்
வழி முழுதும் வண்ணமாக உன்
வாடாத பாதமலர்கள் வேண்டும்
என்னோடு கொஞ்சி மகிழும் உன்
இன்மழலை மொழி வேண்டும்...
என்னோடு நீ வேண்டும்..
எனக்குள்ளே நீ வேண்டும்..
என் தேவனிடம் மண்டியிட்டுக் கேட்டேன்
என் தேவதை நீ நீடு வாழ வேண்டும்..

அன்புடன்
உன் மகள் பூங்கோதை
 

10 comments:

  1. அம்மாவை வாழ்த்த வார்தகள்போதாது எப்போதும் நன்றியுடன் இருந்தாலே நல்லது

    ReplyDelete
  2. அழகான தமிழ் வார்த்தை பிரயோகங்கள். சூப்பர் அக்கா.

    ஜே.தா

    ReplyDelete
  3. அழகான தமிழ் வார்த்தை பிரயோகங்கள். சூப்பர் அக்கா.

    ஜே.தா

    ReplyDelete
  4. அன்புக்கோதை! உங்கள் அம்மாவிற்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!!

    பாசத்துடன் பொழிந்திட்ட நேசமழையின் தூறல் பட்டு நானும் சிலிர்த்தேன்... மனம்மிக மகிழ்ந்தேன் கோதை.
    அருமையாக படைத்திட்ட அழகிய பாமாலை... வாசம் மயக்குதம்மா. வாழ்த்துக்கள் உனக்கும்!

    ReplyDelete
  5. முதலில் உங்கள் அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பூங்கோதை! அவ, நோய் நொடி, கவலைகள் ஏதுமின்றி, நீண்டகாலம் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன்!

    அவவின் நினைவுகள் சுமந்து நீங்கள் எழுதிய கவிதை அருமை! முக்கியமாக, நீங்கள் பெண்கள் என்பதால், நீங்கள் தாய்மை அடையும் போதும், குழந்தைகள் பிரசவிக்கும் போதும், உங்கள் அன்னையின் முழுமையான உணர்வுகளைப் பெற்றிருபீர்கள்!

    இதனால், எம்மை ( ஆண்களை ) விட ஒரு படி மேலே சென்று ”அன்னையின் உன்னதத்தை” உங்களால் உணர முடிந்திருக்கும்!

    அந்த உணர்வின் வெளிப்பாடே இந்தக் கவிதை! மீண்டும் உங்கள் / எங்கள் அம்மாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. உங்கட அம்மாவுக்கு என் மனங்கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோதை. அவ நோய் துன்பமின்றி, மகிழ்வோடு பலகாலம் வாழ வாழ்த்துகிறேன்ன்..

    ReplyDelete
  7. அம்மாவுக்கு அழகாக கவி வடிச்சிட்டிங்க.. இதை அவ படிச்சால் அகமிக மகிழ்வா...

    ReplyDelete
  8. அம்மாவுக்கு என் வாழ்த்துனையும் தெரிவியுங்கள் தோழி!

    ReplyDelete
  9. கரு சுமந்து

    உரு கொடுத்த

    அன்னைக்கு அழகிய பாடல்...


    என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி....

    ReplyDelete
  10. அம்மா என்றாலே மனசு உருகிடுது பூ்ங்கோதை. ஆனா அந்த மனசை இப்படி கவிதையாககி பரிசா தர்றது எல்லோராலயும் முடியாது. அருமையா எழுதியிருக்கம்மா. சற்றே தாமதம்னாலும் அம்மாவுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவிச்சுக்கறேன்.

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!