Thursday 7 March 2013

காட்டுப்புறக் காதல்....


எங்கள் ஊர்ப் பேச்சுவழக்கில் ஒரு கவிதை... சேர்ந்தே இரசிக்கலாம் வாங்க... :))

படம்: யாரோ எப்பொழுதோ முகநூலில் பகிர்ந்தது....


அப்பு:
காட்டுப்புறத்தாலே காலையில மேயவிட்ட
மாட்டைக் கட்ட வந்தவளே.. பிள்ள...
பாட்டு பிறக்குதடி உன் புன்சிரிப்பு பார்க்கயிலே
மீட்டி விட்டாயடி என் வாலிப வயதினையே

ஆச்சி:
புலவுக்குப் போகாம இங்கெதுக்கு வந்தீய..
குலராசா காத்திருப்பான் காவலுக்கு போக
புலம்பாம போங்க புது மாப்பிள போல- நமக்கு
குலவும் வயசும் போச்சுதுங்க

அப்பு: 
காட்டுப் பூ பறித்து என் கைகளில தாடி பிள்ள
வீட்டுப்புறத்தாலே கொல்லையிலே செருகிடுவேன்
காட்டாறு வெள்ளமாய் என் காதல் ஓடுதடி
காட்டாதே வெட்கமடி கொஞ்ச நேரம் பேசிடலாம்

ஆச்சி:
கண்ட சினிமா பார்த்துப் பார்த்து- உங்க
கண்கெட்டுப் போச்சுதுங்க சும்மா
காதல் கீதல் எண்டு கதைக்காதீய...ஆரும்
கண்டால் சிரிக்கப் போறாக..


அப்பு:
சிங்காரி நீ தானாம் சின்ன வயசில் என்று
உங்கம்மா சொன்னாக மெய்யாத்தான் பிள்ள
தங்கம் உனக்கு எழுபதாய்ப் போயும் நீ
மங்காத வெள்ளியடி மரகதம் நீதானடி

ஆச்சி:
பகட்டினது போதுமுங்க புட்டவிக்க வேணுமுங்க                              
பசுமாட்டைப் பிடியுங்க பொழுதுபடப் போகுதுங்க
பார்த்திருந்த மருமகளும் மங்காத்தா ஆடுவாங்க
பாதையைப் பார்த்து வாங்க பால் கோப்பி போடுறேன்க..


புலவு= வயல்
பிள்ள = பிள்ளை (எந்த வயதிலும், தம்மை விட வயதில் இளைய பெண்களை   இப்படி அழைப்பர்)
பகட்டுதல் = பொய்யாகப் பேசுதல் (புழுகுதல்)/ பெருமை பேசுதல்

19 comments:

  1. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் முடித்த விதம் மனதை தொடுகிறது

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. இன்றைக்குத் தம்பி தான் முதல் வரவா?... வாங்க... வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. :))

      Delete
  2. பாட்டும் படமும் மனதை கொள்ளை அடித்து விட்டது...

    ReplyDelete
    Replies
    1. வாங்க... கொள்ளை போனதற்காக நன்றி சகோ. :))

      Delete
  3. படமும் பாடலும்
    போட்டி போடுகின்றன சகோதரி...
    ...
    மற்றுமொரு """சிங்கார வேலனே தேவா..."""
    என்ற பாடல் கேட்டது போல...

    அழகான பாடல்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க அண்ணா, எனக்கு அதிகமாக சினிமாப் பாடல்கள் தெரியாது அண்ணா. என் காட்டுப்புறாக் காதலை இரசித்ததற்கு மிக்க நன்றி அண்ணா.

      Delete
  4. பாட்டிக்கு இன்னும் வெட்கம் போகலை முகத்தை மறைசுட்டாங்க.
    படமும் பாடலும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்.. பெண்மைக்குள் எந்த வயதானாலும் நாணம் இருக்கும் போல.. :))
      பாராட்டுக்கு மிக்க நன்றி...

      Delete
  5. Nice... I like it.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், கருத்திடலுக்கும் மிக்க நன்றி தோழி.. ஆனாலும் முகநூலில் வந்து கேள்வி கேட்டு திண்டாட வைத்து விட்டு, இங்கே இத்தனை சின்னதா பதில் சொல்லத் தேவையில்லாமல், ஒரு முத்துப் போல கருத்து.... :)) ரொம்ப நன்றிங்கோ....

      Delete
  6. அடடா... கோதை! அப்பு ஆச்சியின் காதலையும் விட்டுவைக்கவில்லை நீங்கள்...:)
    அழகான வார்த்தயாடல்.அருமையாக இருக்கிறது. ரொம்பவே ரசித்தேன்.

    உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்கோம்மா.. வாங்கோ...
      ///அப்பு ஆச்சியின் காதலையும் விட்டுவைக்கவில்லை நீங்கள்...:)/// உவையள் காட்டுக்குள்ள நிண்டு காதலிச்சாலளொருதருக்கும் தெரியாதெண்டு நினைச்சிட்டினம்.... எங்களுக்கும் தெரியும் எண்டு காட்டத்தான்.. :))
      வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

      Delete
  7. ஆஆஆஆ... ஆச்சியும் அப்புவும் அழகா லவ் பண்ணீனம்... பாவம் அவயளுக்கும் லவ் பண்ண ஆசை இருக்கும்தானே..:) சனம் பேசும் என அடக்கொடுக்கமா இருக்கினம்... காதலுக்கு வயதேது...

    ReplyDelete
    Replies
    1. வாம்மா மின்னல்...
      ////ஆஆஆஆ... ஆச்சியும் அப்புவும் அழகா லவ் பண்ணீனம்... //// ஆஆஆஆ... சிலர் வயசு போன காதலையும் கண்படுத்தினம்....

      /// சனம் பேசும் என அடக்கொடுக்கமா இருக்கினம்... ///
      அப்பு காட்டுக்குள்ள அடிக்கிற லூட்டி உங்களுக்கு அடக்க ஒடுக்கமா தெரியுதோ... :))

      Delete
  8. அழகாக நாட்டுப்புறப் பாடல் ஸ்டைலில் எழுதியிருப்பது மிக நன்றாக இருக்கு கோதை. அனைத்தையும் தாண்டி... பொருத்தமான படம் சூப்பர்ர்... நேக்கொரு சந்தேகம்....:)

    படம் பார்த்து பாட்டு வந்ததா...? இல்ல பாட்டை எழுதியதும் படம் நினைவு வந்ததா?:))..

    லேட்டா வந்ததும் இல்லாமல் குவெஷ்ஷன்ஸ்ஸ்ஸ்ஸ் வேற எனக் கேட்கிறீங்களோ... நோ அது நான் கேட்கேல்லை.. இளமதி கேட்கச் சொன்னவ மீ எஸ்கேப்ப்ப்ப்ப்:))

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. பாராட்டுக்கு நன்றி அதிரா...
      ///நேக்கொரு சந்தேகம்....:)////

      அதானே பார்த்தன் .. பூஸாருக்கு சந்தேகம் ஏதும் வரல்லயே என்று...
      படம் ஒரு உறவுக்கார தம்பி "இதுக்கொரு கவிதை எழுதுங்கோ" என்று முகநூலில் யாரோ பகிர்ந்ததைத் தந்தார்..
      நேக்கும் ஒரு டவுட்டு... நீங்க ஓட்டு போட்டுட்டு கேள்வி கேட்கிறீங்களோ, அல்லது கேள்வி கேட்டுட்டு தான் ஓட்டுப் போடுவீங்களோ..??? அவ்வ்வ் :))

      Delete
  9. எளிமையான வரிகள்ல மனசைக் கவர்ந்துடுச்சும்மா இந்த நாட்டுப்புறப் பாடல்! இதுமாதிரி வேற பாடல்கள் இருந்தாலும் அப்பப்ப பகிர்ந்துக்கம்மா. ரொம்ப ரசிச்சுப் படிச்சேன் நான்!

    ReplyDelete
  10. நன்றாக இருக்கிறது பூங்கா. மிகவும் ரசித்தேன். காலம் கடந்தாலும் கூந்தல் நரைத்தாலும் மாறாத காதல் எல்லோராலும் சரியாகப் புரிந்து கொள்ளப் படுமோ? "கட்டையில போற வயதிலும் கண்டறியாத காதல்" இது தான் எங்கள் மத்தியில் வயது முதிர்ந்தோரின் அன்புக்குக் கிடக்கும் அங்கீகாரம். அப்பப்பாவின் முகம் அப்பம்மாவை நோக்கி இருந்திருந்தால் இன்னும் இயற்கையாக இருந்திருக்கும்.

    ReplyDelete
  11. என்னாச்சு பூங்கோதை? ப்ரொபைல் படம் மாறிடுச்சு? முன்ன இருந்ததே அழகா இருந்துச்சு!

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!