Sunday 16 December 2012

உலகம் தானே.. அழிந்து போகட்டும் விட்டு விடு

உலகம் அழியப் போகிறதாம்..
ஊரெல்லாம் பேச்சு.. அன்பே
உனக்கு ஒன்றைச் சொல்லவா..
உலகம் தானே.. அழிந்து போகட்டும் விட்டு விடு
எமக்குத் தான் உருவங்கள் இல்லையே
நான் உனக்குள்ளும் நீ எனக்குள்ளும்
ஆத்மார்த்தமாக ஆழ்ந்த பின்
ஆதாரமற்ற இந்த உலகம் எதற்கு...
உடல்கள் பிரிந்தும் உணார்வுகள் சங்கமிப்பது
உனக்கும் எனக்கும் தானே தெரியும்.. அதை
அறிய முடியாத இந்த உலகம் எதற்கு?
இது இருந்தாலும் அழிந்தாலும்
நமக்குள்ளே உறைந்திருக்கும் அந்த
உருத்தெரியா காதல் அழிவதில்லையே...
அப்படியே அழிந்திட்டாலும்..
பால்வெளியின் பரந்த வெளியில்..
அந்தரத்தில் எங்கோ என்
அத்மா அலைந்து கொண்டிருக்கும் போது
உன்னை அடையாளம் காணாமல் போகலாம்..
கண்டாலும்.. நீண்ட இடைவெளியின் பின்
உன்னைக் கட்டித்தழுவ.. இல்லையில்லை
எப்போது நீதானே முந்திக் கொள்வாய்..
என்னை அந்தப் பாழாய்போன வெட்கம்
முந்திகொள்ளுமே.. அந்தக் கட்டியணைத்தல்கள்
சரீரமற்ற நமக்குள் சாத்தியமற்றுப் போகலாம்..
ஆனாலும் உன்
கறுத்த உதடுகளின் மெல்லிய ஒற்றடங்களின்
குளிர்ச்சியை பாதுகாக்கும் சருமம் தொலைந்திருந்தாலும்
அதன் நினைவுகள் அந்த அவாந்தர வெளியிலே
என்னை இன்னமும் ஆனந்தமாக மிதக்க வைக்குமே...
நம் குழந்தைகளுக்கு நடுவே
நானும் ஒரு குழந்தையாய்... உன் மடியில் சாய
அடம்பிடித்த போது.. அன்பாக அணைத்துக் கொண்டாயே
அந்த அணைப்பின் சூடு கூட என்னை சுழன்று
பறக்கவைக்கும் என்பதை நீ மட்டும் அறிவாய்..
அந்த நினைவுகளை எனக்குள் பொத்தி வைக்கிறேன்..
உலகம் முடியும் போதும் அது மட்டுமே
என் அரும்பெரும் பொக்கிசங்கள்...
என்னதான் யார் சொன்னாலும்
உனக்கென்றே சில உணர்வுகளைப் பூட்டி வைக்கிறேன்
அது உனக்கானது மட்டும்.. உலகம் முடிவதற்குள்
இணைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையில்.. ஆனாலும்
உனக்குள் நானும் எனக்குள் நீயும்
உருவின்றி வாழும் போது...
உலகம் தானே... அழிந்து போகட்டும் விட்டுவிடு..



இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

5 comments:

  1. நீங்கள் ஒரு சிறந்த கவிஞர் என்பதனை இந்தக் கவிதை சொல்கிறது ...
    ஒரு சிறந்த கவிஞரின் கவிதைகளை படிக்கும் போது இப்படி என்னால் என் எழுத முடிவதில்லை என்று வியக்கத் தோன்றும் எனக்கும் அவ்வாறே தோன்றிற்று ...

    ReplyDelete
  2. நன்றி ஆத்மா... ஏதோ எழுத வேண்டும் போல் உணரும் போது எழுதுகிறேன்.. அவ்வளவுதான். மற்றப்படி கவிஞர் என்ற அடைமொழிக்கெல்லாம் நான் தகுதியானவளா என்று தெரியவில்லை..
    உங்கள் வரவுக்கு நன்றிகள்

    ReplyDelete
  3. உங்களின் வாதம் சரியானதே, நேர்மையானதே நியாயமானதே உங்கள் என்களை தைரியமாக வெளிபடுத்தலாம்

    ReplyDelete
  4. எமக்குத் தான் உருவங்கள் இல்லையே நான் உனக்குள்ளும் நீ எனக்குள்ளும் ஆத்மார்த்தமாக ஆழ்ந்த பின் ஆதாரமற்ற இந்த உலகம் எதற்கு..

    ---மிக மிக மிக அருமையான் செதுக்கல்கள்.

    தந்தையும் , தாயும் குழந்தைகளாய் பேசி கொண்டு இருந்ததை கேட்டுகொண்டு இருந்த பிள்ளையின் உணர்வு எனக்கு .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வளவன்... அம்மா அப்பா பேசும்போது ஒட்டுக் கேட்கக் கூடாது.. :))

      Delete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!