Thursday 21 March 2013

எழுத்துலகில் என் எண்ணச்சாரல்கள்..-2




வணக்கம் என் இனிய நட்பு நெஞ்சங்களே..

வாங்க... இன்றும் என் எண்ணச்சாரலில் நனைந்து பயணிப்போம். இன்றோடு இந்தப் பயணத்தை சத்தியமா முடிவுக்கு கொண்டு வந்துவிடுவேன். அதனால, கொஞ்சூண்டு பொறுமையையும் கையில எடுத்துக் கொண்டு பயணத்தை ஆரம்பிங்க...

ம்ம்.. எங்கே விட்டேன்... ஆங்...... எழுத்துலகில் நான் தவழ ஆரம்பித்தது மட்டும் தான்... இதன் பின்னர் நான் தொண்டு நிறுவனங்களில் முழுநேரமாகப் பணியாற்றியமையாலும், திருமணமாகி மன்னாரில் குடியேறியமையாலும் என் முயற்சிகள் மீண்டும் தொய்வடையத் தொடங்கின. ஏன்..... சோம்பேறித்தனமும் காரணம்னு சொல்லவேண்டியது தானே...

இதன் பின் என் பணிமாற்றல் காரணமாக மீண்டும் வன்னி மண்ணில், கிளிநொச்சியில் வாழ ஆரம்பித்திருந்தேன். ஆனால் என் வேலை காரணமாக, இந்தத்தடவை நான் முன்னர் போல் எழுத்துத் துறையில் அதிகம் ஈடுபட முடியவில்லை.

ஆனால் இந்தக் காலகட்டத்தின் இறுதிப்பகுதியில் 2008ல் , செஞ்சோலை வளாகத்தில் விமானக்குண்டுவீச்சுக்கு இரையான மாணவிகளின் நினைவாக ‘குருதிச்சுவடிகள்’ என்ற ஒரு சிறிய கவிதை நூலை அவர்களது இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வில் வெளியிட்டேன். என் எழுத்துலகில் நூல் வடிவிலான முதல் பிரசவிப்பு அது. ஆனாலும் இடப்பெயர்வின் ஆரம்பக் காலம் என்பதால், கருவிலிருந்து புறப்பட்டு பூமியைப் பார்த்த மாத்திரத்திலேயே மூச்சடங்கிப் போன குழந்தையாகிப் போனது அந்த நூல். இடப்பெயர்வின் காரணமாக அதன் ஒரு பிரதியைக் கூட என்னால் காப்பாற்ற முடியாமல் போனது.....

இதே இறுதிக் கட்டத்தில் தான், என் அலுவலகத்தில் என்னோடு பணிபுரிந்த என் நண்பி ஒரு நாள்....
“இஞ்ச, உமக்கு கவிதைகள் வாசிக்க விருப்பம் எல்லோ. நான் ஒரு வெப்சைட் காட்டுறன், பாரும்...” என்று எனக்கு ஒரு வலைப்பூவை அறிமுகப்படுத்தினாள்.  அது சாத்வீகன் என்ற ஒரு பதிவருடைய வலைப்பூ. மிகவும் அழகாக, மனதைக் கவரும் விதமாக வடிவமைக்கப் பட்டிருந்தது. கவிதைகளும் கூட மனதைத் தொடுவனவாக அமைந்திருந்தன. மவுஸை கவிதைக்கு அருகில் நகர்த்தும்போது அதற்கேற்ற திரைப்படப்பாடல் ஒலிக்குமாறு அது வடிவமைக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்த போது, நானும் ஒரு வலைப்பதிவராவேன் எனத் துளியளவும் நினைக்கவில்லை. அந்தளவுக்கு தொழில்நுட்பம்.... நமக்கு இந்தத் தொழில்நுட்பமெல்லாம் ஜீரோங்க.... இப்பொழுதும் கூட பல வேளைகளில் எனக்கு தொழில்நுட்பம் தான் பெரும் சவாலாக  அமைந்து விடுகிறது. (சாத்வீகனின் வலைப்பூவை இடப்பெயர்வுக் காலத்தின் பின் எத்தனையோ தடவைகள் தேடினேன்.. அது இணையத்தில் இருப்பதாகவே தெரியவில்லை. எனினும், என் வலைப்பூ உருவாக ஏதோ ஒருவிதத்தில் காரணமாக இருந்த அந்த வலைப்பதிவருக்கு என் மானசீகமான நன்றிகள்.)

இப்படி சில தடவைகள் அந்த வலைப்பூவைத் திறந்து அதிலுள்ள கவிதைகளை மட்டும் சுவைத்து வந்த நான் ஒரு நாள் அதன் முகவரியை மறந்துவிட்டதால், கூகிளில் Blog/Blogger என்று தேடப்போக Create your own blogger என்று ஒரு தலைப்பு வந்தது. அதைப் பார்த்ததும் சும்மா முயன்று பார்ப்போமே என நினைத்து அதற்குள் நுழைந்து எப்படியோ எனக்கு ஒரு வலைப்பூவை தயாரித்து விட்டேன். பொதுவா கணனியில் எதைப் பார்த்தாலும் நோண்ட ஆரம்பிக்கிறது.. இதனால் மாட்டிக் கொண்ட சந்தர்ப்பங்கள் நிறைய்ய்ய்ய...  இது தற்செயலாக நடந்தது தான். ஆனால் தமிழ் யுனிக்கோட் எழுத்து முறை எனக்கு நீண்டகாலமாகத் தெரியாது. அதனால் அதில் பாமினி எழுத்துருவில் தட்டச்சு செய்து ஒரு கவிதையைப் பதிவிட்டேன். எல்லாம் வெறும் பெட்டி பெட்டியாகத் தெரிந்தது. என்ன செய்யலாம் என்று இல்லாத மூளையைக் கசக்க ஆரம்பித்தேன். அப்பொழுது தான் என் அலுவலகத்தில் எங்கள் ஆலோசகராகப் பணிபுரிந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனக்குத் தெரிந்த முறையில் உதவ முன்வந்தார். அவருக்கும் அதிகம் தெரியாவிட்டாலும் என்னைவிடத் பல விடயம் தெரிந்திருந்தார்.

அவர் செய்தது என்னவென்றால் HTML ல் போய் எங்கெல்லாம் எழுத்துருவுக்கான இடம் வருகிறதோ அங்கெல்லாம் பாமினி என்று மாற்றி விட்டார். இப்பொழுது எனது கணனியில் நான் பதிவிட்டவை தமிழ் எழுத்தில் தெரிந்தது. இதன் பின் இடப்பெயர்வு.. அதிகம் பதிவு எழுதவில்லை. இடப்பெயர்வுக்குப் பின்னர் பல கவிதைகளை எழுதி அதே பாமினி எழுத்துருவிலேயே எனது பதிவுகளைப் போட்டேன். ஆனால் நீண்ட நாட்களின் பின் தான் ஒரு உண்மையைத் தெரிந்து கொண்டேன். எனது பதிவுகள் யாருடைய கணணியில் எல்லாம் பாமினி எழுத்துரு இருக்கிறதோ, அவர்களுக்கு மட்டுமே தமிழில் தெரியும். மற்றவர்களுக்கு வெறும் பெட்டி தான்......ஹீ...ஹீ.... J நான் என்ன தான் செய்ய முடியும்.. அப்படியே விட்டு விட்டேன்.

ஏனென்றால் நான் இந்த வலைப்பூவை ஒரு சேமிப்பிடமாக மட்டுமே கருதி வந்தேன். என் பழைய படைப்புகளைப் பார்த்தீர்களானால், பல கவிதைகளுக்கு பின்னூட்டங்களே இருக்காது. அந்தக் கவிதைகளை யாரும் வாசித்திருக்கக்கூட மாட்டார்கள். எனக்கு எப்போது என் உணர்வுகள் தூண்டப்பட்டுக் கவிதை பிறக்கிறதோ அப்போது அதை இங்கே பதிந்து வைப்பேன். அவ்வளவு தான். யாராவது படிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு என்னிடம் அதிகமாக இருக்கவில்லை.

இப்படியாக என் உணர்வுகளை மட்டுமே சேமித்து வந்த வலைப்பூவில், ஒரு சிறந்த பதிவரான தம்பி யாதவனின் (கவியழகன்) ‘பிளாக்கர் தொடங்கிய கதை’ மூலமாகவும் அவருடைய 100வது பதிவினூடாகவும் சில பதிவர்களின் காலடி பட ஆரம்பித்தது. அதில நம்ம பக்கம் கொஞ்சம் காற்று அடிச்சுவிட்டிருக்கிறார்.... அதே வேளை தம்பி யாதவன் இன்ட்லியில் இணைக்கும் முறையையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். தம்பி யாதவனுக்கு இந்த வேளையில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நான் தொடர்ச்சியாக பதிவிடுவதில்லை என்பதால் அதுவும் நாளடைவில் நின்று போனது.

என் புலப்பெயர்வின் பின், 2011ன் நடுப்பகுதியில் தான் எனக்கு யுனிக்கோட் எழுத்து முறையை ஒருவர் நல்ல மனதோடு அறிமுகப்படுத்தி வைத்தார். என் பதிவுலகில் ஒரு படி முன்னேற்றம் இது தான்.. அவர் வேறு யாருமில்லை. என் அன்புத்தம்பி பிரபல பதிவர் மதியோடை- மதிசுதா தான். அன்று அவர் சொல்லித்தராவிட்டால், ஒருவேளை இன்று வரையும் யுனிக்கோட் முறை தெரியாமலே இருந்திருக்குமோ என நான் நினைப்பதுண்டு. ஹ்ம்ம் இதனால நீண்ட நாட்களாக பாமினி எழுத்துரு தட்டச்சு முறை பழக்கத்தில் இல்லாமல் போனதால் அதை அறவே மறந்து போனேன் என்பது வேறு கதை...  இவர் தன்னுடைய வலைப்பூவிலும் என்னை அறிமுகப்படுத்தியிருந்தார். தம்பி சுதாவுக்கு இந்த வேளையில் என் அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதே வேளை, கடந்த கார்த்திகை மாதத்தில் இருந்து அவ்வப்போது என் படைப்புக்கள், நீண்டகாலத்தின் பின் மீண்டும் ஒலிவடிவம் பெற்று வானலையில் வலம் வர ஒரு நண்பர் காரணமாக இருக்கிறார். அவர் தான் பிரபல பதிவரும் புரட்சி வானொலியின் அறிவிப்பாளருமான ஆர் ஜே நிருபன். இதற்காக நண்பர் நிருபனுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்து...... அண்மைக் காலமாகத் தான் நான் அதிகம் முகநூலினூடாக என் பதிவுகளை பகிர ஆரம்பித்திருக்கிறேன். இதைவிடவும், என் பதிவுகளை சில வாரங்களாக பல புதிய பதிவர்கள் பார்வையிட இன்னுமொரு நண்பர் காரணமாக இருந்திருக்கிறார். அவர் தான் பிரபல பதிவர் நண்பர் மாத்தியோசி மணி அவர்கள். இவர் செய்த காரியம் என்னவென்றால், தமிழ்மணத்தில் என் பதிவுகளைப் பகிரும் முறையை அறிமுகப்படுத்தியது தான். தமிழ்மணம் பற்றிய இவருடைய அறிமுகப் பதிவின் தொடரும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த வேளையில் நண்பர் மணிக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்மணத்தில் அண்மையில் இணைந்து கொண்டமையால் ஓட்டுப் பட்டை சரியாக செயற்படவில்லை. இதற்கு என் வலைப்பூவின் தொழில்நுட்பக் கோளாறு ஏதாவது காரணமாக இருக்கலாம்... ஆனாலும், ஓட்டுப் பதிவிற்கான இணைப்பை என் பதிவுகளில் தொடுத்து வைத்திருக்கிறேன். அது வழக்கத்துக்கு மாறானது என்பதால், என் வலைத்தளத்துக்கு வரும் பதிவர்களின் கண்களில் அந்த இணைப்பு தவறுப்பட்டுப் போகிறது. இதனால், பதிவைப் படித்து இரசித்து, ஆக்கபூர்வமான பின்னூட்டங்களைக் கொடுப்பவர்கள் கூட எனக்கு ஓட்டுப் போடாமல் ஓடி விடுகிறார்கள்.... :(( இனிமேல் கவனியுங்கோ நண்பர்களே.... இனி ஒழுங்கா ஓட்டுப் போடுற ஆட்களுக்கு நான் குட்டிக் குட்டிப் பரிசுத்திட்டம் எல்லாம் கொண்டு வரப்போறன்...ஹீ..ஹீ..ஹீ...

இந்நாள் வரைக்கும் என் பதிவுகளைப் படித்து கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்தி வந்த அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்..... எங்க கிளம்பிட்டீங்க.... கொஞ்சம் பொறுங்க... நன்றி சொல்லி விட்டேன் என்பதால் இது முடிவுரை இல்லை... ஆரம்ப உரை... அதனால் ஒவ்வொரு பதிவிலும் உங்கள் ஊக்குவிப்பு எனக்கு அவசியம்... எனவே தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களையும், மறக்க்க்க்காமல் தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டுக்களையும் போட்டு என்னை ஊக்குவிப்பீங்க என்று நம்புகிறேன்..
எல்லாவற்றிற்கும் மேலால், என் பெற்றோருக்குப் பின் என் எழுத்துப்பணியில் என் சுதந்திரத்துக்கு எந்தவித இடையூறுமின்றி, அதே வேளையில் தன் முழு ஊக்குவிப்பையும் கொடுத்தவரும் கொடுத்துக் கொண்டிருப்பவரும் என் கணவர் தான். என் அன்புக் கணவருக்கு இந்த வேளையில் என் இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.
இவ்வளவு தானுங்க என் எழுத்துலகப் பின்னணி... இரண்டு பதிவுகளில் ரொம்பவே அறுத்திட்டேன்... அப்படின்னு நீங்க நினைச்சால்.... மன்னிச்சிடுங்க... வைத்திய செலவுகள் பொறுப்பேற்கப்பட மாட்டாது..... :))
அடுத்த பதிவில், வலைப்பூவில் எனக்கு ஒரு கொண்டாட்டம்.. எல்லாரும் சேர்ந்து கொண்டாடுவோம்... காத்திருங்க...

27 comments:

  1. அடேங்கப்பா.. நீங்களு்ம் என்னைப் போலத்தான் இருந்திருக்கிறீங்க! நானும் தொழில்நுட்ப பூஜ்யமா இருந்து தடவித் தடவி, பலபேரைத் தொந்தரவு பண்ணிக் கத்துகிட்டு எழுதறவன்தான் பூங்கோதை! ஸேம் பிளட்! ஓட்டுப் பட்டைகள் வெக்கிறது ரொம்பவும் ஈஸிதான். சீக்கிரம் பண்ணிரலாம். தொடர்ந்து உங்களின் எண்ணச் சிதறல்கள் இங்கே சிதறி எங்களை மகிழ்விக்கட்டும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க.. வணக்கம் அண்ணா... ரெண்டு நாளைக்கு முதல் எங்கேயோ டூர் போனதா கேள்விப்பட்டேனே.. இனிமையா அமைஞ்சுதா...
      ஓட்டுப்பட்டை வைச்சாச்சு... ஆனால் இன்னும் வலைப்பூவில் சரியா செயற்படல்ல.. அதனால அந்த இணைப்பை பதிவில் 'தமிழ்மணம் ஓட்டுக்காக இங்கே சொடுக்குங்கள்' என்று போட்டு வைப்பேன்.. அது யாருக்கும் புரிய மாட்டேங்குதே.. :(

      கருத்திடலுக்கு நன்றி அண்ணா...

      Delete
  2. நல்ல அனுபவம்...

    உங்கள் தளத்தில் தமிழ்மண ஓட்டு போடுவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது...

    click செய்தால் வேறு ஏதோ tab திறந்து... அதை close செய்து... மறுபடியும் click செய்ய வேண்டும்... கவனிக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? நிச்சயமாகப் பார்க்கிறேன். அதைக் கிளிக் பண்ணித்தான் என் ஓட்டு போடுகிறேன்... இதோ இப்பவே பார்க்கிறேன்... யாரங்கே...எங்கே என் தொழில் நுட்பக்காரியதரிசி?.... ஹையோ.. யாருமே இல்லியே.. இனித்தான் யார் கைல கல்லயாவது விழனும்... ஹா..ஹா

      Delete
    2. தங்கள் அன்பான வருகைக்கும் கருத்திடலுக்கும் நன்றி... கோவிச்சுக்காம ரெண்டு தடவை கிளிக் பண்ணியெண்டாலும் ஓட்டை போட்டுடுங்கோ.. :))

      Delete
  3. அன்புமகளே கோதை... உமது எண்ணச்சாரலில் நனைந்து நெக்கிக் குளிரில் உறைகிறேனம்மா...:)

    எத்தனை எத்தனை அனுபவங்களை அழகாய்க் கோர்த்து பன்னீர்ச் சாரலாய் எம்மீது தெளிக்கின்றீர்கள். வாசனை எங்களை தாயகத்திற்கே கொண்டுபோய்விட்டது.
    அழகிய அனுபவப் பதிவு. அருமை. வாழ்த்துக்கள்!

    அடுத்த பதிவில் கொண்டாட்டமோ.... ம்... என்னவாயிருக்கும்???
    உமது பிறந்த நாள் சென்றமாதம் முடிந்துவிட்டது... ம்.. யோசிக்கிறேன்....:)))

    ஹாஆ.. கோதை.. வலைச்சரத்தில் இன்னும் சேரவில்லையோ. அங்கே சேருங்கள். கருத்துப்பகிர்வு செய்யுங்கள். அங்கும் பலபதிவர்களை அறிமுகம் செய்கின்றனர். உங்களையும் யாரும் அறிமுகம் செய்வார்கள் எதிர்காலத்தில். உமது நல்ல படைப்புக்கள் பல வாசகரை சென்றடையும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா... வருகைக்கும்கருத்திடலுக்கும் மிக்க நன்றி.. ஆங்.. வலைச்சரத்திலோ... நிச்சயம் வருவேன்... ஆனால் அதுக்கும் கூட கொஞ்சம் நாளெடுக்கும்.. (அவ்வளவு ஸ்பீடு நாம... )
      நிச்சயமாக வருவேன்... மீண்டும் நன்றிகள்... கொண்டாட்டம் இப்போ சொல்ல முடியாது ..அடுத்த பதிவு வரை காத்திருக்கவே வேணும்.. :)

      Delete
  4. பெரிய ஆள்தான் நீங்க பாராட்டுக்கள் அக்கா.
    நிரூபன்னா இல்லை என்றால் நான் எல்லாம் பதிவுலகில் யாருக்கும் தெரியாமலே போயிருப்பேன் பல பதிவர்களை பதிவுலகில் வளர்த்துவிட்ட பெருமை அவரையே சேரும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தம்பி...பெரிய ஆளோ...சுமார் 5 அடி 10 அங்குலத்துக்கு மேல இல்லப்பா...

      ம்ம்.. நிருபனுக்கும், அவரைப் போன்றவர்களுக்கும் நாம் மிகவும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்... அது மட்டுமன்றி அவர்களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ளவும் வேண்டும்.. நம்மால் இயன்றவரை வளர்ந்து வருபவர்களை ஊக்குவித்து அவர்கள் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்..

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தம்பி..

      Delete
  5. கோதை... இப்ப மாலையில வந்து பாத்தப்ப ஓட்டுப்பட்டை சரியாகி நாலு பேர் ஓட்டுப் போட்டிருந்தாங்க. அஞ்சாவதா நானும் சந்தோஷமா என் வாக்கை பதிவு பண்ணிட்டேன்....!

    ReplyDelete
    Replies
    1. ஹையோ அண்ணா.. அது நீங்கள் செய்த உதவியால் தான் அண்ணா... நீங்க சொன்னபடி செய்தேன்.. உடனேயே அது சரியாகி இருந்துது. ஆனால் உங்களுக்கு சொல்றதுக்கு முன்னாடியே என் இணையம் துண்டிக்கப்பட்டிட்டுது... மன்னிக்கவும்.. :(
      ஆனாலும் உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.. :))எனது இந்தப் பதிவில் கடைசியாக நீங்களும் நன்றி லிஸ்ட்டில் சேர்ந்திட்டீங்கண்ணா..

      Delete
    2. யம்மா பூவு...! நன்றிக்குரியவர்கள் லிஸ்டில் எனக்கு இடம் வேண்டாம்மா. அன்புக்குரியவர்கள், நேசத்துக்குரியவர்கள்னு லிஸ்ட் வெச்சிருந்தா அதுல சேர்த்துக்கம்மா, ‌போதும்!

      Delete
    3. ஹா..ஹா.. நிச்சயமா அண்ணா.. நன்றிக்குரியவர்கள் அன்புக்குரிய லிஸ்ட்டில் இல்லாம போய்டுவாங்களா என்ன.... என் அன்புக்குரியவர்கள் லிஸ்ட்ல இவங்க கூட நீங்களும் முன்னணியில் இருக்கிறீங்கண்ணா... :))

      Delete
  6. அவை அடக்கமோ கோதை.இத்தனை திறமைகளா உங்களுக்குள்.வாழ்த்துகள் தோழி !

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா... வாங்கோ ஹேமா... கன நாளைக்குப் பிறகு காலடி வைச்சிருக்கிறீங்க மாதிரி இருக்கு.. வருகைக்கு சந்தோசம்..
      இப்படி என்னைப் பற்றிச் சொல்லுறது அவை அடக்கமோ ஹேமா...
      இதெல்லாம் பரம்பரையினூடாக கடத்தப் பட்டது. இங்கு எழுத்துலகில் எனது திறமைகள் பற்றி மட்டும் தான் குறிப்பிட்டிருக்கிறேன். வேறு சில விடயங்கள் இங்கே குறிப்பிடப் பொருத்தமில்லை என்பதால் குறிப்பிடவில்லை. ஆனால் இவற்றை எல்லாம் வளார்த்துக் கொண்டால் மட்டுமே இவை திறமை ஹேமா... நான் இதுவரைக்கும் எதையுமே வளர்த்துக் கொள்ளவில்லை.

      Delete
    2. அப்புறம்... உங்கள் வாழ்த்துக்களுக்கு என் இனிய நன்றிகள் தோழி!

      Delete
  7. நிறைய திறமை உங்களிடம் இருக்கு என்பதை இந்த இரு தொடர் காட்டி விட்டது!தொடர்ந்து எழுதுகள்! வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள் அண்ணா!

      Delete
  8. பதிவுலகில் படிக்காத தனிமரத்தின் இன்னொரு ஆலோசனையும் உங்களிடம் பகிர்கின்றேன் திரட்டிக்காகவும் குழுக்கழுக்காகவும் .,நட்புக்காக உங்கள் திறமைகளை மட்டுப்படுத்தி உங்கள் வீச்சினை சுருக்கி விடாதீர்கள் நான் எல்லாம் ஒரு படிக்காதவன் கோபிக்க வேண்டாம் நாகரிகம் தெரியாதவன்!ம்ம் விரும்பினால் இந்த பின்னூட்டத்தை வெளியிடலாம் இல்லை மற்றவர்கள் போல அங்கே கொட்டி விடுங்கள்§ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆலோசனைக்கு நன்றிகள் நேசன் அண்ணா! என் எழுத்துக்கள் எப்பொழுதும் ஒரே வீச்சில் தான் இருக்கும் என்பது என் நம்பிக்கை. அதற்கு யாரும், அல்லது எதுவும் தடையாக இருக்க முடியாது. அதற்கு நான் இடம்கொடுக்கவும் மாட்டேன். எதிர்காலத்தில் ஒருவேளை எனக்குத் தெரியாமலே என் வீச்சில் மாற்றம் ஏற்பட்டால் அதை நீங்கள் சுட்டிக்காட்ட வேண்டும் என்று தயவாக கேட்டுக் கொள்கிறேன்.

      Delete
  9. முடிந்தால் உங்கள் இந்த வடிகட்டும் முறையையும் தூக்கி விடுங்கள் வலையில் வரும் வாசகர்கள் எல்லாம் எல்லா நேரமும் சிலைரப்போல இணையத்தில் தொழில் புரியும் மருத்துவர்கள் அல்ல என்பதும் சாமானியன் என் கருத்து அக்காள்!

    ReplyDelete
    Replies
    1. வடி கட்டும் முறை என்று எதைச் சொல்லுகிறீர்கள் நேசன் அண்ணா? மொடரேஷன் வைத்திருப்பதையா? புரியவில்லையே எனக்கு?

      Delete
  10. வோட்டுப்போட்டுட்டேன்.. அப்புறம்...ம்ம்ம்.. வாசிக்க சுவராஸ்யமாக இருந்தது.

    ReplyDelete
  11. வடி கட்டும் முறை என்று எதைச் சொல்லுகிறீர்கள் நேசன் அண்ணா? மொடரேஷன் வைத்திருப்பதையா? புரியவில்லையே எனக்கு?

    // வலைப்பதிவாளரின் உரிமை பெற்ற பின் தான் கருத்துரை தளத்தில் தோன்றும் என்பதைத்தான் சொல்லி இருந்தேன் தோழி!பாராட்டுரை மற்றும் எதிர்க்கருத்துக்கள் இதனால் பலருக்கு தெரியாமல் போய் விடும் லங்கா புவத்தும் அப்படித்தானே !!அந்த தேசத்தில் இருந்து வந்த நாம் கருத்துச்சுதந்திரத்தைப்பேணுவோம்! கருத்து பிழை என்றால் மன்னிக்கவும்!

    ReplyDelete
    Replies
    1. கருத்து சுதந்திரத்திற்கு நான் மதிப்பளிக்கிறேன் அண்ணா எதிர்க்கருத்துக்களுக்கு நான் பயப்படுவதும் இல்லை. ஆனால் இங்கே யாரும் வந்து கருத்திடும் வகையில் வைத்திருக்கிறேன். அதனால் சிலர் பெண்களின் வலைப்பூ என்பதால், முகமற்றவர்களாய் வந்து அசிங்கமாக கருத்திடுகிறார்கள். நான் எல்லா வேளையிலும் இணையத்தில் இருப்பதில்லை. அதனால் அவ்வப்போது பார்த்து அத்தகைய கருத்துக்களை அழிக்க முடிவதில்லை. அதனால் பலர் பார்க்க முதல் நான் பார்த்துவிடலாமே என்பதால் தான் மொடரேஷன் வைத்திருந்தேன்... புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்...

      Delete
  12. நன்றி கருத்தினை புரிந்து வலையுலகில் கரம் கோர்ப்பதுக்கு!

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!