Wednesday 14 March 2012

நாமும் வேலைத்தளமும்- 1


கஞ்சி குடிப்பதற்கிலார்...பகுதி 1
கஞ்சி குடிப்பதற்கிலார்-அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்

பாரதியின் இந்த வார்த்தைகள் என்னைச் சிந்திக்கத் தூண்டின.
நம்மில் பலர் துன்பங்களை எதிர்நோக்குகின்ற எந்த வேளையிலும் அதற்கான காரணங்களை சிந்திக்காதவர்களாக மீண்டும் மீண்டும் அதே பிரச்சனைக்குள் வீழ்ந்த்திருக்கிறோம். இங்கே எழுதப்படுபவை உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்தவை தான். எனவே ஏற்கெனவே தெரிந்திருந்தும் அதை எடுத்து மீட்டிப் பார்க்காமல் இருப்பவர்களுக்கும், எனக்கும் கூட உபயோகப்படுமே என்ற ஆர்வத்தில் அதை எடுத்து தூசு தட்டும் முயற்சியே இந்த ஆக்கம்...
       
பல வேளைகளில் நாம் நமது அன்றாட வாழ்வில் சில விடயங்களை பகுத்தறியாததினால் சிக்கல்களை எதிர் நோக்குகின்றோம். அவற்றில் ஒன்றாக எனது சிந்தனையைத் தொட்ட விடயத்தை எழுதி விட வேண்டுமென்ற ஆவல்.. எழுதி விடுகிறேன்..

நாம் தொழிலாளிகளாக இருக்கும் வரை மேலதிகாரிகளை புரிந்து கொள்ள மறுக்கிறோம். மேலதிகாரிகள் ஆகும் போது தொழிலாளிகளைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம். மாணவர்களாக இருக்கும் போது ஆசிரியர்களைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம்- ஆசிரியர்களாகும் போது மாணவர்களைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம். மருமகளாக இருக்கும் போது மாமியாரைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம்- மாமியாராகும் போது மருமகளைப் புரிந்து கொள்ள மறுக்கிறோம்.. இப்படி ஒவ்வொரு இடத்திலும் நாம் வகிக்கும் பாத்திரத்தில் அல்லது பதவியில் எதிர்த்தரப்பினரைப் புரிந்து கொள்ளாமையினால் நமது நிம்மதிக்கு நாங்களே குழி தோண்டி விடுகிறோம்.

பல வேளைகளில் நமக்கு கிடைக்கும் நெகிழ்வுத் தன்மையான விடயங்களை அல்லது சலுகைகளை நாம் துஸ்பிரயோகம் செய்து விடுகிறோம். அதுவே நமது முதலாவது தவறாகிறது.  உதாரணத்திற்கு ஒரு வேலைத்தளத்தில் ஒரே ஒரு விடயத்தை மட்டும் எடுத்து அலசிப் பார்ப்போம்...(இந்த உதாரணத்தில் இது போன்ற எமது வேறு செயற்பாடுகளையும் பொருத்திப் பார்க்கலாம்).

வேலைக்கு சமூகமளிக்கும் நேரம்... ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதே வேளை சில மேலதிகாரிகள் இவற்றில் நெகிழ்வுத் தன்மையை ஏற்றுக் கொள்பவர்களாக இருப்பர். போக்குவரத்து நெரிசல் அல்லது தவிர்க்க முடியாத ஏதாவது தடங்கல் ஏற்படும் போது சற்று தாமதமாக வேலைக்கு போனால், வேலை நேரம் முடிந்த பின்னர் இன்னும் கொஞ்ச நேரம் வேலை செய்து விட்டால் போதும் என்ற நிலை வேலைத்தளத்தில் இருந்தால் அது –சலுகை.

ஆனால் நம்மில் பலர் அதையே நாளாந்தம் பழக்கப்படுத்தி விடுவோம். தாமதமாகிப் போனால் பரவாயில்லை என்ற மன நிலை ஏற்பட்டு விட்டால் நாளடைவில் நம்மை அறியாமலே தொடர்ச்சியாக வேலைக்கு செல்லத் தயாராகும் போதே ஒவ்வொரு காரணிகளாக ஆரம்பிக்கும். அடிக்கடி தாமதமாக செல்ல ஆரம்பித்து விடுவோம். இப்போது மேலதிகாரியின் நிலை எப்படி இருக்கும்...??

 ஆரம்பத்தில் அதை விட்டுக் கொடுக்கும் மேலதிகாரி, பின்னர் சங்கடத்துக்குள்ளாகத் தொடங்குவார். நீங்கள் மேலதிகாரிக்குப் பிடித்த நபராக இருந்தால் அவருடைய நிலை இன்னும் மோசமாகும். உங்களைக் கண்டிக்காத வரை ஏனைய பணியாளர்களையும் கட்டுப்படுத்த முடியாதவராவார். இந்த நிலையில் தான் நீங்கள் பிரச்சனையை எதிர்நோக்க ஆரம்பிப்பீர்கள்...எப்படி???
சிந்தனைகள் தொடரும்...


1 comment:

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!